ஹலோ with காம்கேர் – 352
December 17, 2020
கேள்வி: இந்த வருடம் 2020 முடிந்து 2021 பிறக்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்ளலாமா?
ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை நான் எழுதிய கேள்வி பதில்களில் இருந்து சில வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு!
Jan-1: தன் சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா?
நிச்சயமாக ஜெயிக்க முடியும். தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு அது சாத்தியமே.
Jan-2: துரோகம் செய்தவர்களை மறப்பது எப்படி?
துரோகம் சின்னதோ பெரியதோ அதனால் ஏற்பட்ட வலி அவ்வப்பொழுது எட்டிப் பார்த்துக்கொண்டேதான் இருக்கும். ஏனென்றால் நாமெல்லாம் உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட மனிதர்கள்தானே.
அப்படி வலிகள் எப்போதெல்லாம் எட்டிப் பார்க்கிறதோ அப்போதெல்லாம் அவை நம்மை பாதிக்காமல் இருக்க வேறு ஏதேனும் ஒரு நிகழ்வை, சூழலை, கனவை நம் மனதுக்குள் கொண்டுவரலாம்.
சாப்பிட மறுக்கும் குழந்தையை போக்குக் காட்டி சாப்பாடு ஊட்டும் நுட்பம்தான் இது.
Jan-3: நல்ல திறமை இருந்தும் நம்மைவிட திறமையில் குறைந்தவர்கள் புகழிலும் பணத்திலும் முன்னணியில் இருக்கிறார்களே?
திறமையை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள், எங்கு பயன்படுத்துகிறீர்கள், எதை நோக்கிப் பயணிக்கிறீர்கள், எதையெல்லாம் தியாகம் செய்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் வளர்ச்சி இருக்கிறது.
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் வளர்ச்சி என்பது பணமும் புகழும் மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கைக்கு உந்துசக்தியாக இருக்கும் ஆத்மதிருப்தி போதுமான அளவு தொடர்ச்சியாகக் கிடைப்பதுகூட வளர்ச்சிதான்.
Jan-4: இறைசக்திக்கும் இயற்கைக்கும் என்ன வித்தியாசம்?
நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது. அதுவே இறைசக்தி. நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நம் உழைப்புக்கு ஏற்ப அமையவும் வெற்றி கிடைக்கவும் ஆத்ம திருப்தி உண்டாகவும் இறைசக்தி வேண்டும்.
நம்முடைய முயற்சிகள் அனைத்தையும் தொய்வின்றி செய்வதற்கு நம் உடல் நலனும் மன நலனும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா. அதற்கு உதவுவது இயற்கை.
Jan-5: மேடையில் நான்கு பேருக்கு முன்னால் மைக்கில் பேச வேண்டும் என்றால் கைகால் உதறல் எடுக்கிறதே?
Stage Fear உள்ளவர்கள் மேடையில் பேச நேரிட்டால் அரங்கில் இருப்பவர்கள் உங்களை கவனிக்கிறார்கள் என்ற உணர்வை தூக்கி எறிந்துவிட்டு வெற்று அரங்கைப் பார்த்துப் பேசுவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். தயக்கம் நிச்சயம் விலகும்.
Jan-6: உங்கள் காதல் அனுபவங்களை எந்த வயதில் உங்கள் பிள்ளைகளிடம் சொல்லலாம்?
நாம் நம் பிள்ளைகளிடம் நண்பர்களாக இருக்க வேண்டியதுதான். ஏற்கெனவே மாணவர்களை திசை திருப்ப சமுதாயம், சினிமா, சமூக வலைதளங்கள் என ஆயிரம் காரணிகள் இருக்கும்போது பெற்றோரின் காதல் கதைகள் அவர்களை திசை திருப்ப ஆயிரத்து ஒன்றாவது காரணியாகிவிடுகிறது.
எனவே ஜாக்கிரதை. உங்கள் பிள்ளைகளிடம் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய வயதில் சொல்லுங்கள். நீங்கள் சாதித்த விஷயங்களை அவர்களின் சின்ன வயதில் இருந்தே பெருமை பொங்க பூரிப்புடன் சொல்லத் தொடங்குங்கள்.
காதல் செய்வதும் திருமணம் செய்வதும் சாதனைகள் அல்ல. அவை எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்ற சாதாரண விஷயம்.
Jan-7: எந்த வேலையானாலும் நானே செய்தால்தான் திருப்தியாக இருக்கிறது. அதனால் என்னால் நிறைய வேலைகளை செய்ய முடிவதில்லையே. என்ன செய்வது?
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களைச் சார்ந்தவர்களையும் தங்களுடன் அரவணைத்துக் கொண்டு தங்கள் செயல்பாடுகளை செய்யும்போது அதனால் கிடைக்கும் பலன்கள் பலமடங்காக பல்கிப் பெருகுவது நிச்சயம்.
அந்தத் தலைமை வீடாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம், நாடாக இருக்கலாம்.
Jan-8: நடைமுறையில் உண்மையைவிட போலித்தனம் ஜெயிப்பது ஏன்?
உண்மையாக இருப்பதற்கு நிறைய பயிற்சி வேண்டும். உறுதியான மனப்பான்மை வேண்டும். திடமான கொள்கைப் பிடிப்பு வேண்டும். பொய்யாய் வாழ்வதற்கு முதலில் சொன்ன பொய்யையே தொடர்ச்சியாக திரும்பத் திரும்பச் சொல்கின்ற திறன் இருந்துவிட்டால்போதும்.
முன்னதைவிட பின்னது சுலபமாக இருப்பதால் உண்மையைவிட போலிகள் முந்திச் செல்கின்றன.
Jan-9: எல்லோர் மனதையும் படிக்கிறீர்கள், சிறப்பாக ஆலோசனைகளும் சொல்கிறீர்கள். சைக்காலஜி படித்துள்ளீர்களா?
என்னைப் பொருத்தவரை என்னிடம் ஆலோசனை கேட்பவர்களிடம் நான் பின்பற்றுவது இதுதான்.
என்னுடைய நேரடி அனுபவங்கள்…
உலகையும் மனிதர்களையும் உற்று நோக்குவதால் கிடைக்கும் அனுபவங்கள்…
நான் பங்கேற்கும் மேடை நிகழ்ச்சிகளின் வாயிலாக குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர்கள் என வயது வித்தியாசம் இன்றி பலரையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பதால் அவர்களால் கிடைக்கும் அனுபவங்கள்…
27 வருடங்களாக தொழில்துறையில் சாஃப்ட்வேர் நிறுவன நிர்வாகியாகவும் பயணிப்பதால் கிடைக்கும் அனுபவங்கள்…
நிறைய வாசிப்பதால் கிடைக்கும் அனுபவங்கள்…
என் பெற்றோர் எங்களுடன் பகிர்ந்துகொண்ட அவர்களின் அனுபவங்கள்…
என் பெற்றோரின் பெற்றோர்களின் அனுபவங்கள்…
இப்படி பல்வேறு அனுபவங்களை வாழ்க்கைப் பாடமாக படித்துள்ளதால் நான் இயங்குவது தொழில்நுட்பமாக இருந்தாலும் உளவியல் துறைக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் பட்டம் பெறாமலேயே கற்று வைத்துள்ளேன்.
Jan-10: முகமூடி மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியுமா?
இயற்கையில் நமக்கு ஒரு முகம். அவரவர்களின் இயல்புக்கும் செளகர்யத்துக்கும் ஏற்ப வெர்ச்சுவலாக பல முகங்களை உருவாக்கிக்கொள்கிறோம். ஒவ்வொரு முகத்துக்குள்ளும் ஆயிரமாயிரம் உணர்வுகள். பச்சோந்திபோல முகத்தை சட்சட்டென மாற்றும்போது அந்தந்த முகத்துக்கேற்ற குணாதிசயங்கள் நம்மை வடிவமைக்கும்.
சூழலுக்கேற்ப முகத்தை மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டியுள்ளதால் அதற்கேற்ப உணர்வின் மாற்றங்களை நம் மனதிலும், உடலிலும் ஏற்படுத்தும்.
விளைவு இளம் வயது மரணங்களும், அழையா விருந்தாளியாய் நோய்களும்.
முகமூடியே தேவையில்லை என சொல்ல மாட்டேன். முகமூடிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாமே என்றுதான் சொல்கிறேன்.
Jan-11: ஆண்கள் சமைப்பது பெருமைப்படும் விஷயமா?
வீட்டு வேலைகள் செய்வது என்பது இயல்பாக வர வேண்டிய குணம். ஊருக்கு உழைக்க வேண்டாம், தங்கள் குடும்பத்துக்கு தங்கள் வீட்டுக்கு தங்கள் உறவுகளுக்குத் தேவையானதை மட்டுமாவது செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
நம் வீட்டுக்கு நாம் வேலை செய்வது பெருமைப்படும் விஷயமும் அல்ல. சிறுமைப்படும் சமாச்சாரமும் அல்ல. நம் ஒவ்வொருவரின் கடமை. அவ்வளவே.
Jan-12: சமீபத்தில் இலக்கியம், சின்னத்திரை, வெப்சீரிஸ் இவற்றில் என் இதயத்தைத் தொட்ட காட்சிகளை சொல்லட்டுமா?
கலர்ஸ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா நடத்தும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் நெஞ்சை உருக்கும் ஒரு காட்சி.
பிழைப்பிற்காக முதுகில் சாட்டையால் அடித்து தொழில் செய்யும் குடும்பத்தில் இருந்து ஈஸ்வரி என்ற பெண் கலந்துகொண்டு 12,50,000 ரூபாய் ஜெயித்தார்.
அவரிடம் ராதிகா ஒரு கேள்வி கேட்டார்.
‘முதுகில் சாட்டையால் அடித்துக்கொள்ளும்போது வலிக்காதா?’
அதற்கு அந்த பெண், ‘முதன் முதலில் அடித்துக்கொள்ளும்போதுதான் மேடம் வலிக்கும். தினமும் அதையே செய்து வருவதால் மரத்துப்போய்விடும். வலியே தெரியாது…’ என்று கூறி அனைவரது மனதையும் உருக வைத்தார்.
Jan-13: நம் குறித்த பாராட்டுகள் நம்மை என்னவெல்லாம் செய்யும்?
நம்மிடம் இல்லாத நல்ல குணங்களை ஒருவர் பாராட்டிச் சொல்லும்போது நம் மனம் அதெல்லாம் பொய்தான் என தெரிந்தாலும் ஒருவித கிளர்ச்சியில் குதூகலம் அடையும். உண்மையிலேயே நாம் நல்ல குணநலன்களுடன் பண்புடன் இருந்துவிட்டால் அந்த உணர்வு எத்தனை புத்துணர்வையும் ஊக்கத்தையும் நம் உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் புகுந்து நம்மை நல்வழிப்படுத்திச் செல்லும்.
Jan-14: யாருடனாவது மனஸ்தாபம் வந்தால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு விரக்தியடைந்து விடுகிறேன். நிம்மதியாக இருக்க முடியவில்லையே?
ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லோரும் எல்லோருக்கும் நல்லவர்களாக இருந்துவிட முடியாது. பிடித்தமானவர்களாகவும் வாழ்ந்துவிடவும் சாத்தியமில்லை.
நாம் ஒருவருக்கு 1000 நன்மைகள் செய்திருப்போம். ஆனால் ஏதேனும் ஒரு விஷயத்தில் நமக்குப் பிடிக்காததை அவர்கள் செய்யும்போது நாம் அதை அவர்களிடம் வலியுறுத்திச் சொன்னால், நாம் செய்த 1000 நன்மைகளும் அவர்கள் மனதில் இருந்து மேஜிக் போல மறந்துவிடும்.
அவர்களால் நமக்கு ஏற்பட்ட அசெளகர்யத்துக்காக நாம் சுட்டிக் காட்டிய கருத்துக்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு நம்மை பகைத்துக்கொள்வார்கள்.
இதுபோன்ற சூழலில் நமக்கு மனம் வேதனை அடைவதை தவிர்க்க முடியாது. ஆனால் முடிந்தவரை நம் நிலையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். புரிந்துகொள்ளும் மனநிலையை அவர்கள் கடந்து சென்றிருந்தால் நம் அன்புக்கும் மரியாதைக்கும் தகுதியானவர் அவரில்லை என்பதை உணர்ந்து விலகி இருப்பதே உத்தமம்.
Jan-15: எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்வி, எனது சமீபத்தைய மிகப் பெரிய சந்தோஷம் என்ன?
ஆங்கிலப் புத்தாண்டு 2020 ஜனவரி முதல் தேதியில் இருந்து அரசு பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் நாங்கள் தொடங்கியுள்ள ‘அறம் வளர்ப்போம்’ வாட்ஸ் குழுவில் தினமும் காலையில் 6 மணிக்கு பதிவிடும் அறநெறி கருத்துக்களுக்கான ஸ்கிரிப்ட்டுக்களே எனது சமீபத்தைய சந்தோஷம்.
கார்ட்டூனில் கந்தர் சஷ்டி கவசம், தினம் ஒரு பழம், தாத்தா பாட்டி கதைகள், பேரன் பேத்தி பாடல்கள், தமிழ் கற்றுக்கொடுக்கும் சிடி என எங்கள் காம்கேரில் குழந்தைகளுக்காக நாங்கள் தயாரித்த ஏராளமான அனிமேஷன் படைப்புகளுக்கு நான் ஸ்கிரிப்ட் எழுதி இருந்தாலும், தினந்தோறும் நான் எழுதும் அறம் சார்ந்த ஸ்க்ரிப்ட்டை சுடச் சுட குழந்தைகள் குரலில் வீடியோவில் பார்ப்பதும் கேட்பதும் புதுவிதமான அனுபவமாக உள்ளது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software