ஹலோ With காம்கேர் -358: எங்கள் காம்கேர் நிறுவனத்துக்கு முதன் முதலில் நாங்கள் சூட்ட நினைத்த பெயர் என்ன தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 358
December 23, 2020

கேள்வி: எங்கள் காம்கேர் நிறுவனத்துக்கு முதன் முதலில் நாங்கள் சூட்ட நினைத்த பெயர் என்ன தெரியுமா?

1.எங்கள் நிறுவனத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது ஆஞ்சநேயர் மீதுள்ள பக்தியினால் முதன்முதலில் மனதுக்குள் தோன்றிய பெயர் ’ஸ்ரீமாருதி கம்ப்யூட்டர் சர்வீஸஸ்’. ஆனால் அந்தப் பெயரை முடிவு செய்யவில்லை. ஆஞ்சநேயர் வழிநடத்த கடைசியில் முடிவான பெயரே  ‘காம்கேர் சாஃப்ட்வேர்’.

2.எங்கள் நிறுவனத்தில் என் டேபிளில் ஒரு சிறிய (உள்ளங்கை அளவு) பிள்ளையார் சிலை வைத்திருப்பேன். அதை பார்க்கும்போதெல்லாம் ஆள் உயர பிள்ளையார் சிலை வாங்கி அலுவலகத்திலேயே ஒரு பூஜை அறையில் வைக்க வேண்டும் என நினைப்பு மேலோங்கிக்கொண்டே இருக்கும். சொந்த கட்டிடத்தில் நிறுவனம் இயங்க ஆரம்பித்தபோது அந்த ஆசை நிறைவேறியது. ஒயிட் மெட்டலில் 4 அடி உயரத்தில் பிள்ளையார் சிலை வந்தமர்ந்தது. அதற்கு நம்பிக்கைப் பிள்ளையார் என பெயர் சூட்டினோம். அதுவே எங்கள் அனைவரின் தன்னம்பிக்கைப் பிள்ளையாராகவும் ஆனது. அவரிடம் பிரார்த்தனை செய்துகொண்டு ஒரு வேலையைத் தொடங்கி கடுமையாக உழைக்க ஆரம்பித்தால் நினைத்தது நடக்கும் என்பது எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவர்களின் நம்பிக்கையானது. அந்த நம்பிக்கையை அவர் இன்றுவரை ஏமாற்றவில்லை.

3.பெண்களை மட்டுமே வைத்து, பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, குழந்தைகள் உள்ள பணியாளர்களின் குழந்தைகளை அவர்கள் பணியில் இருக்கும் நேரங்களில் பராமரிப்பதற்காக நிறுவனத்திலேயே ‘குழந்தைகள் காப்பகம்’ ஒன்றையும் நடத்த வேண்டும் என்ற ஆழமான விருப்பம் இருந்தது. நான் காம்கேர் நிறுவனம் தொடங்கிய 1992-களில் பெண்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருப்பதே அரிதாக இருந்தது. அதுவும் கம்ப்யூட்டர் துறையும் அது சார்ந்த பணிகளும் நம் நாட்டுக்குப் புதிதாக இருந்ததால் பெண்களை வேலைக்கு அமர்த்துவதில் நிறைய சிக்கல்கள். அதனால் நடைமுறையில் பெண்களை மட்டுமே வைத்து நடத்துவது சாத்தியம் இல்லாமல் போனதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

4.நான் படித்து முடித்ததுமே மிக இளம் வயதிலேயே நிறுவனம் தொடங்கி விட்டதால் எனக்கு அறிமுகம் ஆகாத புதிதாக சந்திக்கும்  நிறைய பேர் எங்கள் நிறுவனத்தை என் அப்பாதான் நடத்தி வந்தார் என்றும் நான் படித்து முடித்ததும் அதன் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொண்டேன் எனவும் நினைத்திருந்தார்கள். அப்படி என்னிடம் கேட்பவர்களிடம் ‘ஏன் இப்படி கேட்கிறீர்கள்?’ என எதிர்கேள்வி கேட்பேன். அதற்கு அவர்கள், புதிதாக ஆரம்பித்த நிறுவனம் போல தெரியவில்லை. ஒவ்வொரு செயல்பாட்டிலும் கைதேர்ந்த அனுபவம்மிக்கவரின் நேர்த்தி இருப்பதாக சொல்வார்கள்.

5.எங்கள் நிறுவனத்துக்கு முதலில் செல்வது நான்தான். காலையில் 6 மணிக்கே ஆஜராகிவிடுவேன். அப்போதெல்லாம் மூன்று ஷிஃப்ட்டுகளில் பணிகள் நடந்து வந்தன.  காலை 7 மணிக்கு முதல் ஷிஃப்ட் தொடங்கும். நான் முதலில் ஆஜராகிவிடுவதால் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் தாமதமாக வருவதற்கே கூச்சப்படுவார்கள். தாமதமாக வந்தால் என் அறையை தாண்டி உள்ளே செல்ல சங்கடப்படுவார்கள்.

6.நான் ஆரம்பத்தில் சைக்கிளில்தான் அலுவலகம் வந்துகொண்டிருந்தேன். அதன்பின்னர் டிவிஎஸ் சேம்ப்பில். பிறகு கைனடிக் ஹோண்டாவில். 2000-ல் வெள்ளை வெளேரென வெண்மையான மாருதி 800 கார். பின்னர் ஐந்தாறு ஆண்டுகளுக்கு ஒருமுறை காரில் அடுத்தடுத்த வெர்ஷன்கள்.

7.நான் வசித்து வந்த தெருவில் உள்ளவர்கள் என்னுடைய டிவிஎஸ் சாம்பின் சப்தத்தை வைத்தே நேரத்தை கணிக்கும் அளவுக்கு இருக்கும் என் நேரம் தவறாமை. காலை 5.45-க்கு டிவிஎஸ் சேம்பின் சப்தத்தை கேட்டு ‘பாரு… உன் வயசில் அவ எப்படி சுறுசுறுப்பா இருக்கா… நீ இன்னும் தூங்கிண்டு இருக்கியே…’ என அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் திட்டு வாங்குவதற்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன். என் பெற்றோரிடம் அவர்கள் அந்த விஷயங்களை பகிர்ந்துகொண்டதால் எனக்கும் தெரிந்தது.

8.மிக இளம் வயதிலேயே நிறுவனம் தொடங்கிவிட்டதால் என்னிடம் பணி செய்பவர்களும் என் வயதை ஒத்தவர்களகாவே இருப்பார்கள். ஆரம்பத்தில் அவர்களுக்குள் சின்ன சின்ன ஈகோக்கள் ஏற்பட்டன. நம் வயதுதானே, நம்மைப் போல நம் வயதில் உள்ள ஒரு பெண் தலைமையில் பணி செய்வதா என்பதுபோன்ற உணர்வுப் போராட்டங்கள் இருந்தன. அவர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு பணியிலும் நானும் ஐக்கியமாகி வேலை செய்வதை பார்த்த பிறகு அவர்களுக்குள் இருந்த ஈகோ தவிடு பொடியாகி மரியாதையாக உருமாற்றம் ஆகத் தொடங்கியது. என் அறையில் நான் அமர்ந்திருப்பதே மிக சொற்பமான நேரம்தான். இன்றும் என் நிறுவனத்தின் ஒவ்வொரு பணியிலும் என் பங்களிப்பு அடிநாதமாக இருக்கும்.

9.என் வேகத்துக்கும் சுறுசுறுப்புக்கும் ஈடு கொடுக்க முடியாமல் வேலையை விட்டு நின்றவர்களும் இருக்கிறார்கள். பொறுமையாக பணி செய்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வெளியில் சென்றவர்கள் தாங்களாகவே ஒரு நிறுவனம் தொடங்கும் அளவுக்கான அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். அப்படி தொழில்முனைவோராக ஆன ஒருசிலரும் இருக்கிறார்கள்.

10.இன்று பிரபலமாகி இருக்கும் Work From Home நுட்பத்தை 1992-களிலேயே நாங்கள் அறிமுகப்படுத்தினோம். பணியில் மட்டுமில்லாமல் கம்ப்யூட்டரிலும் பயிற்சி கொடுத்து பெண்களின் வீடுகளில் கம்ப்யூட்டரை (டெஸ்க்டாப்) கொண்டு வைத்து அவர்களை தொழில்நுட்பத்துக்குள் கொண்டு வந்தோம். வீட்டில் இருந்தே பணி செய்து சம்பாதிக்கும் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது எங்கள் காம்கேர் நிறுவனமாகத்தான் இருக்கும்.

11.என் நிறுவனத்தில் நடைபெறும் பணிகளில் நான் எடுக்கும் ப்ராஜெக்ட்டுகளில் பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பத்தில் எனக்கு முழுமையான தெளிவான அறிவு கிடைத்த பிறகே அந்த பணியை முழுமனதுடன் எடுத்துக்கொள்வேன். சுருங்கச் சொன்னால் எனக்குத் தெரியாத பணிகளை எடுப்பதே இல்லை. இதனால் பணியாளர்கள் ‘இதெல்லாம் செய்ய முடியாது மேடம், இதெல்லாம் இந்த சாஃப்ட்வேரில் செய்ய முடியாது’ என்பதுபோன்ற வார்த்தைகளை சொல்லவே முடியாது. அது போட்டோஷாப், ஃபாளாஷ், மாயா போன்ற அனிமேஷனாக இருக்கலாம், டாட் நெட், ஜாவா, சி ஷார்ப் போன்ற மொழிகளாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் நான் முழுமையாக அந்த தொழில்நுட்பத்தை உள்வாங்கிய பிறகே ப்ராஜெக்ட்டை எடுப்பேன்.

12.தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டிய துறை என்பதால் படித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம். இன்னும் நான் ஒரு மாணவியாகவே இருக்கும் மனோநிலை. மனதளவில் அப்படி இருப்பதால் உடலளவிலும் சுறுசுறுப்பாகவே இருக்க முடிகிறது.

13.என்னுடைய நிறுவனத்தில் ஒவ்வொரு ஷிஃப்ட்டிலும் ஏதேனும் ஒரு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பெரியவர் ஒருவரை மேனேஜராக அமர்த்தி இருப்பேன். அவர்களுக்கு எந்த முக்கியமான பணியும் இருக்காது. 8 மணி நேரம் அவர்கள் இருக்கையில் இருக்க வேண்டும். பணியாளர்களின் அட்டெண்டன்ஸ் புக்கை பராமரிப்பது, அவர்களின் தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை என் கவனத்துக்குக் கொண்டு வருவது என எளிமையான பணிகளே. அவர்கள் இருப்பது பணியாளர்களுக்கு ஒரு மாரல் சப்போர்ட் அவ்வளவுதான். சிசிடிவி கேமிரா எல்லாம் இல்லாத அந்த காலங்களில் பணியாளர்களுக்கு பாதுகாப்பாப்பு கொடுக்கவும், அவர்கள் தவறுகள் செய்யாமல் இருக்கவும், நான் அலுவலகத்தில் இல்லாத நேரங்களில் மனதளவில் அவர்களுக்கு சப்போர்ட்டாக இருக்கவும் இந்த ஏற்பாடு. வீடுகளில் அப்பா அம்மா, மாமனார் மாமியார் என பெரியவர்கள் இருந்தால் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்குமோ அப்படியான ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் முயற்சி அது. மிக சரியாக வேலை செய்தது அந்த ஏற்பாடு.

14.நான் தமிழில் எழுதிய முதல் தொழில்நுட்பப் புத்தகம் ‘இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஓர் அறிமுகம்’. ‘இது உலகம் உன் கையில்’ என்ற தலைப்பில் மங்கையர் மலரில் தொடராக வெளிவந்தது. 1996-ல் மங்கையர் மலருக்கு நானே ஐடியா கொடுத்து போஸ் கார்டில் தகவல் அனுப்பினேன். அதன் அடிப்படையில் அவர்கள் என்னை அழைத்துப் பேசி என்னையே தலைப்பு வைக்கச் சொல்லி எழுதச் சொன்னார்கள். முதலில் எழுதிய ஆங்கிலப் புத்தகம் ‘An Easy way to learn C Language’. இரண்டுமே பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமானது பெரும் சிறப்பு. அப்போது என் வயது 25.

இதுவரை வெளியான புத்தகங்களின் எண்ணிக்கை 125 க்குமேல்.

15.முதன் முதலில் வெளியான பத்திரிகை நேர்காணல் தினமலர். முதன் முதலில் வெளியான தொலைக்காட்சி நேர்காணல் ஜெயா டிவி. அப்போது என் வயது 23.

இதுவரை வெளியான நேர்காணல்களை கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. கணக்கிட முடியாத அளவுக்கு என் திறமையை கண்டுகொண்டு என்னைக் கொண்டாடிய, கொண்டாடி வரும்  பத்திரிகை தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து மீடியாக்களுக்கும் நன்றி.

இதுபோல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் இதுபோதும் இப்போதைக்கு.

முக்கிய குறிப்பு: நிறுவனம் தொடங்க பிள்ளையார் சுழி போட்டு ஐடியா கொடுத்த என் அம்மாவுக்கும், அதற்கு பாதை அமைத்துக்கொடுத்து இன்றளவும் என் ஒவ்வொரு அசைவிலும் பங்கெடுக்கும் என் அப்பாவுக்கும், எனக்கு மனதளவில் உற்ற துணையாய் இருக்கும் என் சகோதரி சகோதரனுக்கும்,  என்னுடன் இணைந்து பணியாற்றிய, பணியாற்றி வரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் நன்றி என சொல்வது மிக செயற்கையாக இருக்கும் என்பதாலும், ‘நான்’ என்பதும்  ‘காம்கேர்’ என்பதும்  ‘நான் மட்டும் அல்ல’  என்பதாலும் என் அத்தனை வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் இவர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 41 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon