ஹலோ with காம்கேர் – 359
December 24, 2020
கேள்வி: வேரின் பலம் வேருக்குத்தான் தெரியும் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒருவரது சாதனைப் பயணத்தை பொதுவெளியில் வெளியிடும்போது அவர்களின் சாதனைகளை மட்டும்தான் வெளியில் தெரியும். அவர்கள் இயங்கும் துறையில் அவர்கள் என்ன சாதனை செய்தார், அவருடைய சாதனைகள் மூலம் அவர் மட்டுமில்லாமல் அவர் சார்ந்த இந்த சமுதாயத்துக்கு என்ன செய்தார் என்பதுபோன்ற விஷயங்கள்தானே பிரதானப்படுத்தப்படும்.
அவர் அந்த சாதனையை எட்டிப் பிடிப்பதற்கு, வாழ்க்கையின் அந்த உச்சத்தை எட்டுவதற்கு, வெற்றிக் கனியை சுவைப்பதற்கு எப்படி எல்லாம் கடுமையாக உழைத்தார், என்னனென்ன தியாகங்களை எல்லாம் செய்தார், எப்பேற்பட்ட சிக்கல்களையும் சவால்களையும் சாதுர்யமாக எப்படி கையாண்டார், தோல்விகள் கொடுத்த மன அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொண்டார், எப்படிப்பட்ட ரிஸ்க்குகளை எடுத்தார் என்பதுடன் எப்படிப்பட்ட மன உறுதியுடன் இருந்திருந்தால் தோல்விகளும், எதிர்ப்புகளும், சிக்கல்களும், சவால்களும் கொடுத்த அழுத்தத்தை ஒழுக்கத்துடன் நேர்மையாக எதிர்கொண்டு அதில் இருந்து மீண்டு தன் பாதையில் கம்பீரமாக பீடுநடை போட முடியும் என்பதை அவரையும் அவரது குடும்பத்தினரையும் தவிர மற்றவர்கள் அறிய முடியாது.
ஒரு மரம் நன்றாக பசுமையாக செழிப்பாக வளர்ந்து காய் கனிகளைக் கொடுத்து மக்களுக்குப் பயனுள்ளதாக கம்பீரமாக நிற்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த மரத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் வேரின் சக்தியே. அந்த வேர் நன்றாக வேரூன்ற, வேருக்குக் காரணமான விதைக்குத் தரமான மண், தேவையான அளவு தண்ணீர், பூச்சி அரித்து பாழடித்துவிடாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு இப்படி பல விஷயங்கள் தேவையாக இருந்திருக்கும். ஓரிரு நாட்களோ அல்லது நினைத்தபோது கவனிப்பு என்ற அளவில் இருந்திருந்திருந்தால் மரம் என்றோ செடி அளவிலேயே அழிந்து காய்ந்து போயிருக்கலாம். தொடர் கவனிப்பும் அர்பணிப்பும் இருந்தால் மட்டுமே நாம் விதைக்கும் சிறு விதை கூட செழிப்பான மரமாகும்.
இதே லாஜிக்தான் வாழ்க்கைக்கும், சாதனைக்கும், வெற்றிக்கும்.
வெற்றி என்பது வெளியில் தெரியும் மரம் போல. அதனை எட்ட எடுத்திருக்கும் முயற்சிகள் அந்த மரத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் வேர்போல. வேர் ஆழமாக தன்னை இந்த மண்ணில் வேரூன்றிக்கொள்ள அது எடுத்திருக்கும் பிரயத்தனங்கள் அதற்கு மட்டுமே தெரியும்.
வேர் எவ்வளவு அழகாக இருக்கிறது. எப்படி இவ்வளவு பெரிய மரத்தை தாங்கிப் பிடிக்கிறது என்று யாரும் வேரை பாராட்டுவதில்லை. மரம் மட்டுமே பாராட்டைப் பெறுகிறது. அதுபோல் தான் ஒருவரது சாதனைகள்தான் பேசப்படும். அதற்கு அவர் எடுத்திருக்கும் நேர்மையான முயற்சிகள் வேர்களைப் போல அமைதியாக தன்னடக்கத்துடன் அந்த வெற்றியை வேடிக்கைப் பார்க்கும்.
இதுவெல்லாம் தெரியாமல், ஒருவரது வெற்றியை சகித்துக்கொள்ள முடியாமல், ‘அவருக்கு அந்த வசதி இருந்ததால் இந்த நிலைக்கு வர முடிந்தது, இவருக்கு இந்த செல்வாக்கு இருந்ததால் அந்த உயரத்துக்குச் செல்ல முடிந்தது, அவருக்கு என்ன கவலை, இவருடைய பின்னணியே பிரமாண்டம் கேட்கவா வேண்டும் உச்சத்துக்கு வர…’ என்பது போன்ற கருத்துக்களை அள்ளி வீச காத்திருக்கும் ஒரு சிலர் அவர்களின் வாழ்நாளை இதுபோல பேசிப் பேசியே வீணடித்துக்கொள்கிறார்கள்.
நேற்று எங்கள் காம்கேர் குறித்து சின்ன சின்னதாய் 15 குறிப்புகளை போட்டிருந்தேன். அது பலருக்கு உத்வேகம் கொடுப்பதாய் இருந்தாலும் ஒருசிலருக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டு செய்தது என்பதை தனித்தகவலில் எனக்கு அவர்கள் கொடுத்திருந்த தகவல் மூலம் அறிய முடிந்தது.
‘நீங்கள் அதிர்ஷ்டசாலி… வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்துவிட்டீர்கள். நான் தோற்கப் பிறந்தவன். என்னைவிட திறமை குறைந்தவர்கள் கூட நல்ல நிலமையில் இருக்கிறார்கள். ஆனால் என்னால் முடியவில்லை…’ என்பது போன்ற தாழ்வு மனப்பான்மை கருத்துக்களை படித்ததால் உண்டான சிந்தனையின் விளைவே இன்றைய பதிவு.
வாழ்க்கையில் ஏதேனும் ஒரு குறிக்கோளுடன் வாழ்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். முயற்சி செய்வதும், கடுமையாக உழைப்பதும், நேர்மையாக வாழ்வதும் மட்டுமே நம்மால் செய்ய முடிந்தது. அதனால் கிடைக்கும் பலன்கள் நம் கைகளில் இல்லை. நம் கைகளில் இல்லாத ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு பேசுவதில் பயன் இல்லை. நம்மால் முடிந்ததில் மேலும் மேலும் கவனத்தைக் கூட்டுவோம். வெற்றி தோல்வி என்பதைவிட நம் ஆத்ம திருப்தி என்பது அமோகமான நிறைவைக் கொடுக்கும். அந்த நிறைவில் திரும்பத் திரும்ப முயற்சிக்கும் உத்வேகம் உண்டாகும்.
முயற்சியுங்களேன்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 31, 2020 வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/