ஹலோ with காம்கேர் – 365
December 30, 2020
கேள்வி: சங்கடங்கள் பலவிதம், அதில் இதுவும் ஒருவிதம். என்ன அது?
நேற்று காலை ஒரு பெண் என்னிடம் தொடர்புகொண்டு ஜனவரி 2021 பொங்கலுக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுவதற்காக என்னால் நேரம் ஒதுக்க முடியுமா என கேட்டிருந்தார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. அவருக்கும் என் குறித்து தெரியாது அல்லது தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது அவர் பேசுவதில் இருந்தே புரிந்தது. வேறொருவர் மூலம் என்னை அறிந்துகொண்டதாகச் சொன்னார்.
போனில் ‘ஹலோ’ சொன்னதில் இருந்து முடிப்பதற்கு சற்று முன் வரை ‘சொல்லுங்கமா’என்றும், ‘சொல்லுபா’ என்றும், ‘சொல்லுமா’ என்றும் என்னை அழைப்பதில் அவர் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகங்கள் மாறிக்கொண்டே வந்தது.
பேசியவரின் தொணி அவர் என்னைவிட 10 வயது பெரியவர் என்பதைப் போல ஓர் ஆளுமை இருந்தது.
அவர் பேசிய 15 நிமிடங்களில் 10 நிமிடமும் அவருடைய நிகழ்ச்சி சம்மந்தமாகவே.
கடைசி 5 நிமிடத்தில் நான் என்னைப் பற்றி சொல்லட்டுமா? என கேட்டு என்னை முறையாக அறிமுகம் செய்துகொண்டு என் 28 வருட சர்வீஸ் அனுபவங்களை ‘மினியேச்சர் சுயசரிதையாக’ சொல்லி முடித்தேன்.
அப்போது அவர் வாயடைத்துப் போனார்.
என்னைப் பற்றி தெரிந்துகொண்டதால் அல்ல. ஏன் வாயடைத்துப் போனார் என்று நீங்களே தெரிந்துகொள்ளுங்களேன் அடுத்து அவர் சொன்ன விஷயங்களில் இருந்து.
‘மேடம், சாரி… உங்களை வாட்ஸ் அப் புரொஃபைல் புகைப்படத்தில் பார்த்து வயதில் சிறியவர் என நினைத்திருந்தேன். எத்தனை அனுபவங்கள். எத்தனை வருட சர்வீஸ். எவ்வளவு படித்துள்ளீர்கள்…’ என சொல்லிவிட்டு திரும்பத் திரும்ப சாரி, சாரி என சொல்லிக்கொண்டே இருந்தார்.
‘மேடம் என் வயது இவ்வளவு… உங்கள் வயதை தெரிந்துகொள்ளலாமா?’ என்றார்.
நான் சொன்னதும் ‘என்னைவிட 7 வருடங்கள் பெரியவராக இருந்தாலும் என்னைவிட 10 வயது சிறியவர் போல இருக்கிறீர்கள்… எப்படி மேடம்…’ என்று கேட்டார்.
எப்படி இப்படி வாழ்க்கையில் உயர்ந்தீர்கள்… எப்படி சாதனை செய்தீர்கள் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். எப்படி வயதில் குறைந்தவராக தெரிகிறீர்கள் என கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது?
நன்றி சொல்லி போனை வைத்தேன்.
நன்கு அறிமுகம் ஆகி பரஸ்பரம் நட்பாவதற்கு முன்பு வரை ‘சார்’, ‘மேடம்’ போட்டு அழைப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்றுதான் தெரியவில்லை.
ஒருவரை ‘அம்மா’ என்றழைப்பது மரியாதை கொடுப்பதற்கு சமம். ‘மா’ போட்டு அழைப்பது வயதில் சிறியவர்களை குறிப்பிடுவதற்கு சமம்.
எதிராளியின் வயது அனுபவம் எதுவுமே தெரியாத பட்சத்தில் (தெரிந்தாலுமே கூட) சார், மேடம் என மரியாதையுடன் அழைத்தால் பல சிக்கல்களைத் தவிர்க்கலாமே!
இந்த நிகழ்வில் அவர் சொன்ன மற்றொரு விஷயமும் என்னை எரிச்சல் அடையச் செய்தது.
‘மேடம், நாம் மதுரையில் வசிப்பதால் சென்னையில் வசிக்கும் தங்களைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளவில்லை… சாரி மேம்…’ என்றபோது என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
என் புத்தகங்களும், எங்கள் நிறுவன தயாரிப்புகளும் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் என பிரத்யோகமாகவா தயாராகின்றன? உலகளாவி பரவி பயன்பட்டுக்கொண்டிருக்கும் எங்கள் தயாரிப்புகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டாம், குறைந்தபட்சம் யாரிடம் பேசப் போகிறாரோ அல்லது யாரை அவர்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப் போகிறாரோ அவர் குறித்தாவது கொஞ்சம் கூகுள் செய்து தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?
ஒருசில பிரபலங்கள் தங்களைப் பெயர் சொல்லி அழைக்கலாம் என பெருந்தன்மையாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த பெருந்தன்மை எல்லாம், ‘எப்படி சார் இத்தனை பெரியவரை பெயர் சொல்லி அழைப்பது?’, ‘எப்படி சார் இத்தனை பெரிய பிரபலமான தங்களை பெயர் சொல்லி அழைப்பது?’, ‘எப்படி சார் இத்தனை சாதனை செய்த தங்களை பெயர் சொல்லி அழைப்பது?’ என்று எதிராளி அவரை உச்சாணி கொம்பில் வைத்துக்கொண்டாடும் வரை மட்டுமே.
எதிராளி அந்த பிரபலத்தின் மனம் கோணும்படி நடந்துகொண்டுவிட்டாலோ அல்லது தன் கொள்கையில் பிடிப்பாக பேசி தன் கருத்தை ஆழமாக எடுத்துரைத்தால் போச்சு. அவ்வளவுதான் பிரபலத்தின் பெருந்தன்மை காற்றில் பறக்கும். அந்த பிரபலமே எதிராளியைப் பார்த்து ‘என்ன சார்?’ என கோபமாக அழைத்து கடுமையாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்துவிடுவார். நிறைய கவனித்த பிறகே இதனை பொதுவில் பகிர்கிறேன். அப்படி எல்லாம் கிடையாது என யாரும் கொடி பிடித்துக்கொண்டு வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேசிய ஒரு நபர் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்தபோது என் குறித்து சில விஷயங்களை தெரிந்து வைத்துக்கொண்டே அழைத்தார். ஆனால் அவர் இடையிடையே சொன்ன விஷயங்கள் எனக்கு மட்டுமல்ல யாருக்குமே எரிச்சலைத்தான் தரும். என்னவென்று சொல்கிறேன்.
‘பெண்கள் பொதுவெளியில் அதிகம் இயங்கத் தொடங்காத அந்த நாட்களிலேயே நான் முதல் தலைமுறை பிசினஸ் பெண்மணியாக இருந்ததால்…. ‘ என நான் சொல்ல ஆரம்பித்தபோதே இடைமறித்து ‘என் மனைவியும் அந்த நாளிலேயே…’ என சொல்லி ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு அதில் மேனஜராக இருந்தார் என்று சொல்லி அவர் மனைவியின் பிரஸ்தாபங்களை அடுக்கிக்கொண்டே போனார். அடுத்து அவரது மனைவியின் சகோதரி ஏதோ உயர் பதவியில் இருந்ததையும் மிக விரிவாக கதைபோல சொல்ல ஆரம்பித்தார். சுருக்கமாகச் சொன்னாலாவது காதுகொடுத்துக் கேட்கலாம். பாராட்டலாம்.
இதற்குள் நான் என்ன சொல்ல வந்தேனோ அது என் மனதில் இருந்து நழுவி இருந்தது.
‘அப்படியா சார்… நிகழ்ச்சிக்கான நேரத்தை முன்கூட்டியே சொல்லுங்கள்… அப்போதுதான் நான் ஏற்பாடு செய்துகொள்ள வசதியாக இருக்கும்…’ என சொல்லி போனை வைத்தேன்.
அவர் பேசிய தொனியில் என் இடத்தில் வேறு யாராக இருந்தாலும் ‘அப்படியா உன் மனைவியையும் மச்சினியையுமே நிகழ்ச்சிக்கு அழைத்துக்கொள்ளுங்களேன். என்னை எதற்காக அழைக்கிறீர்கள்?’ என நக்கலாகவோ அல்லது கோபமாகவோ அல்லது நகைச்சுவையாக அவரை இடித்துரைத்தோ சொல்லி இருப்பார்கள்.
இப்படித்தான் பலருக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களை அழைக்கும்போது எப்படி பேசுவது என தெரிவதில்லை.
அவரவர்கள் மீடியாவில் பேட்டி எடுக்கும்போதே நம்மைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு பேசுவதில்லை என உங்களில் சிலரது ‘மைண்ட் வாய்ஸ்’ எனக்குத் தெளிவாக கேட்கிறது.
என்ன செய்வது… இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். முடிந்தவரை நான் எப்படி எதிர்பார்க்கிறேனோ அப்படியே பிறரிடம் நடந்துகொள்கிறேன். இதுதான் என்னால் செய்ய முடிந்தது.
மாற்ற முயற்சித்தால் ‘கோபக்கார பெண்’, ‘ஈகோ உள்ள பெண்’ என்ற பட்டங்களை தாராளமாக அள்ளிக் கொடுப்பார்கள். அப்போதுக்கூட அவர்களின் தவறு அவர்களுக்குப் புரியப் போவதில்லை. புரிந்தாலும் மாறப் போவதில்லை.
சங்கடங்கள் பலவிதம், அதில் இதுவும் ஒருவிதம். அவ்வளவுதான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#ஹலோ_காம்கேர் #Hello_Compcare