ஹலோ With காம்கேர் -366: ஆட்டோகிராஃப் போடறீங்களா?

ஹலோ with காம்கேர் – 366
December 31, 2020

கேள்வி: ஆட்டோகிராஃப் போடறீங்களா?

அன்புள்ள வாசகர்களே,

நலம். நலம் காண அவா. இன்று மூன்று விஷயங்களை உங்களுடம் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

முதல் விஷயம்…

2020 – ல் கொரோனாவினால் நீங்கள் எவ்வளவு அவதிப்பட்டீர்களோ அப்படியே நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

தனிப்பட்ட முறையில் மட்டுமில்லாமல் நிர்வாகத்திலும் ஏகப்பட்ட மாற்றங்கள். எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்களையும் மனதளவில் தயார்படுத்தி, வேலை நேரத்தில் மாற்றங்கள் செய்து,  வீட்டில் இருந்தே பணிபுரியும் நுட்பத்துக்கு அவர்கள் மனதை தயார்படுத்தி என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

இடையில் கொரோனாவால் இறந்த என் உறவினர்கள், குடும்ப நண்பர்களினால் ஏற்பட்ட மனச்சோர்வு. அச்சம்.

வீட்டுக்குள்ளேயே நான்கு சுவரை பார்த்துக்கொண்டு 24 மணி நேரமும் வெவ்வேறு வேலைகளை செய்வதால் ஒருவித மன அழுத்தம். எப்போதும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி விருந்தினர்களையும் நண்பர்களையும் அழைத்து விருந்து உபசரிக்கும் என் பெற்றோருக்கு யாரையுமே வீட்டுக்கு அழைக்க முடியாததால் மன இறுக்கம்.

நினைத்துக்கொண்டால் காரை எடுத்துக்கொண்டு ஏதேனும் ஒரு கோயில் நகரத்துக்கு பிரயாணம் செய்யும் நாங்கள் வீட்டை விட்டுக் கிளம்ப முடியாமல் மனதை கட்டிப்போட்டு கொரோனா கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.

இப்போது இத்துடன் சேர்ந்து மற்றொரு விஷயமும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கடைகளிலும் பொது இடங்களிலும் ஒருசிலர் மாஸ்க் போடாமல் வருவதுடன் நம்மிடம் நெருங்கி வந்து இயல்பாக பேசுகிறார்கள். எடுத்துச் சொன்னால் எரிச்சலாய் பார்க்கிறார்கள். கொரோனா இன்னும் முழுமையாக விலகவில்லை என்பதை புரிந்துகொள்ளாமல் செயல்படுபவர்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு நாம் எதிரியாகிறோம்.

கொரோனா எத்தனை வெர்ஷன்கள் எடுக்கப் போகிறதோ தெரியவில்லை. நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள், சுத்தமாக இருங்கள். இது ஒன்றுதான் நம் அளவில் நாம் செய்யக் கூடியது.

உங்கள் பாதுகாப்பு இந்த சமுதாயத்தின் பாதுகாப்பு. கவனம்!

இரண்டாவது விஷயம்…

2019 ஜனவரி முதல் தேதியில் இருந்து விடியற்காலை 6 மணிக்கு தினம் ஒரு செய்தியை பதிவிட்டு வருகிறேன். சென்ற வருடம் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் 365 நாட்களாக எழுதி வந்தேன்.

2020 ஜனவரி முதல் தேதியில் இருந்து இதோ இந்த வருட கடைசி நாளான இன்று வரை எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்றுடன் 731 நாட்கள் முடிவடைந்து விட்டன.

நாளை முதல் என் விடியற்காலை பதிவுகளின் எண்ணிக்கை 732-ல் இருந்து தொடங்கும். எப்படி கொடுக்கப் போகிறேன் என்பது சஸ்பென்ஸ். நாளை காலை வரை பொறுத்திருங்கள்.

நான் எழுதுவது எனக்குப் பிடித்துள்ளது, என் மனதுக்குப் புத்துணர்வு கொடுக்கிறது. அதைப் பகிரும்போது படிக்கும் உங்களுக்குள்ளும் அதே உணர்வு ஆக்கிரமித்துக்கொள்வதை நீங்கள் அவ்வப்பொழுது பின்னூடத்தில் சொல்வதால் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

எப்படி ஒருவரின் நேர்மறை சிந்தனைகள் அவர்களைச் சுற்றி இயங்கும் மற்றவர்களையும் தானாகவே தொற்றிக்கொள்கிறதோ அப்படித்தான் நீங்கள் பின்னூட்டம் எழுதும்போதும் உங்கள் சிந்தனைகள் என்னை மட்டுமில்லாமல் அதைப் படிப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும்.

எனவே பின்னூட்டம் எழுதும்போது நான் எழுதும் விஷயங்கள் குறித்து நான் சொல்லி இருக்கும் கோணத்தில் மட்டும் புரிந்துகொண்டு பின்னூட்டமிடுங்கள். ஒரு விஷயத்துக்கு 360 டிகிரி கோணம் இருக்கும். நான் நித்தம் எழுதும் 360 வரி பதிவில் 360 டிகிரி கோணத்தில் அலசி புரிய வைக்க முடியாதல்லவா? அத்துடன் ஒவ்வொரு நாள் பதிவும் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு கனமான கான்செப்ட்டை உள்ளடக்கியது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் அறிந்தவை எல்லாவற்றையும், உங்களுக்குப் புரிந்த அனைத்தையும், உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அத்தனையையும் ஒன்றாகக் கலந்து எனக்கும் புரியாமல் படிப்பவர்களுக்கும் புரியாமல் எழுதி பதிவிட்டு குழப்ப வேண்டாமே!

நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் உங்களை முன்னிருத்துகின்றன. உங்கள் சுபாவத்தை பேசுகின்றன. உங்கள் குணத்தை விமர்சிக்கின்றன. எனவே பின்னூட்டமிடும்போது கவனம்.

அதுபோல பின்னூட்டமிடும்போது பயன்படுத்தும் வார்த்தைகள் யாரையும் புண்படுத்துவிடாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் வயதில் பெரியவராக இருந்தால் ‘இந்தக் காலத்து இளைஞர்களே இப்படித்தான்’ எனவும், வயதில் சிறியவராக இருந்தால் ‘இந்த வயசானவங்களே இப்படித்தான்’ எனவும், சமையல் குறித்து எழுதும்போதெல்லாம் ‘இந்தக் காலத்து பெண்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது’ என்றும் வார்த்தை பிரயோகங்களை தவிர்க்கலாமே!

எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த நாளில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோருமே ஒரே நேர்கோட்டில்தான் பயணிக்கிறார்கள். என் அனுபவத்தில் நான் பார்த்துக்கொண்டிருக்கும் என்னைச் சுற்றிய உலகில் நான் கவனித்த வரை குணம், பழக்க வழக்கம் எல்லாமே வயது வித்தியாசம் இன்றி அனைவருக்குள்ளும் ஒன்றுபோல் உரு ஏறிவிட்டதுதான் ஆச்சர்யம். இது சரியா தவறா என்றெல்லாம் நான் விவாதிக்கவில்லை. நடப்பை சொல்கிறேன். அவ்வளவுதான்.

அதுபோல சமையல் என்பது பெண்களுக்கானது மட்டுமில்லை. எனவே ‘இந்தக் காலத்துப் பெண்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது?’ என்ற வார்த்தைப் பிரயோகம் என்னைப் பொருத்தவரை அபத்தமானதே.

எங்கள் குடும்பத்தில் என் கொள்ளு தாத்தா, தாத்தா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, முதற்கொண்டு இன்றைய இளைய தலைமுறையினர் வரை சமையலில் எக்ஸ்பர்ட். சமையல் மட்டுமல்ல சமையல் அறை வேலைகளிலும். சமையல் என்பது சமைப்பது மட்டுமல்ல. சமையலுக்குத் தேவையானதை வாங்குவதில் இருந்து சமையல் செய்வது முதல் சமைத்து முடித்து சமையல் அறையை சுத்தம் செய்து பாத்திரங்களை அலம்பி வைப்பது வரை சமையல் வேலையில்தான் அடங்கும். அத்தனையையும் எங்கள் குடும்பங்களில் ஆண், பெண் என அனைவருமே செய்வோம்.

இதுபோல நிறைய குடும்பங்களில் இருக்கிறார்கள். எனவே, சமைப்பது என்பது பெண்களுக்கு மட்டுமே பட்டா போட்டு கொடுத்த வேலையாகக் கருதி வார்த்தைகளில் வன்மம் சேர்க்க வேண்டாம். பெண்களுக்கு எரிச்சல் கொடுக்கும் விஷயங்களில் அதுவும் ஒன்று.

படித்தால் அது பிடித்தால் லைக் போட்டு அமைதியாகச் செல்லும் பலரை என் பதிவின் வாசகர்களாகப் பெற்றிருப்பது நான் பெற்ற வரம்.

படித்தால் பின்னூட்டம் இட்டே ஆக வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. நேரம் இருந்தால் பின்னூட்டமிடலாம். பின்னூட்டமிட நேரம் இல்லாதவர்கள் குற்ற உணர்வில் தனித்தகவலில் வந்து ‘சாரி, நேரம் இல்லை..’ என்றெல்லாம் சொல்வது அவர்கள் மீது மரியாதையை கூட்டுகிறது. எனவே அந்த குற்ற உணர்வே தேவையில்லை. என் பதிவுகள் பிடித்தால் படித்தவுடன் லைக் போட்டு கடக்கலாம். தவறே இல்லை. ஏனெனில் லைக் போட்டாலே அது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய அங்கீகாரம்.

உங்களுக்கு ஏதேனும் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றிருந்தால் பின்னூட்டத்தில் #ask_CKB என்ற ஹேஷ் டேக் மூலம் உங்கள் கேள்விகளை பதிவு செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது பதில் அளிப்பேன்.

அதுபோல உங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்பட்டிருந்தால் அதை நான்தான் செய்திருப்பேன் என எண்ண வேண்டாம். கமெண்ட்டுகளை மாடரேட் செய்து வைத்துள்ளேன். சில வார்த்தைகள், சில குறிப்புகள் இடம்பெற்றால் அந்த பின்னூட்டம் தானாகவே நீங்கிவிடும். எனவே அதையும் புரிந்துகொள்ளுங்கள்.

என் பின்னூட்டத்தில் உங்கள் தயாரிப்புகள் உங்கள் நிறுவன விளம்பர வார்த்தைகள் இடம் பெற்றாலும் அவை தானாகவே நீக்கப்பட்டு விடும். நானும் நீக்குவேன்.

நாகரிகமற்ற, புரிதல் அற்ற, எதிர்வினை ஆற்றும் பின்னூட்டங்கள் நீக்கப்படும். நீக்குவேன்.

நான் எழுதுவது விவாதக்களத்தில் விவாதிக்கும் நோக்கத்தில் அல்ல. நல்ல விஷயங்களைப் பகிர்கிறேன். பிடித்தால் படிக்கலாம். பாரட்டலாம். எழுதும் ஒரு விஷயத்துக்கு முன்னாலும் பின்னாலும் ஆயிரம் விஷயங்கள் நடந்திருக்கும் அத்தனையையும் 360 வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எனவே ‘நீங்கள் அப்படி செய்திருக்கலாமே’, ‘நீங்கள் இப்படி நடந்துகொண்டிருக்கலாமே’ என்ற அறிவுரைகளை தவிர்க்கலாம்.

நேரம் வீணாகாது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும்தான்.

மூன்றாவது விஷயம்…

இந்த நாள் இனிய நாளாகப் பிறந்து ஹலோ வித் காம்கேராக வளர்ந்து இரண்டாம் ஆண்டு நிறைவை எட்டி இருக்கும் எனது விடியற்காலை பதிவிற்கு உங்கள் ஆட்டோகிராஃபை பதிவு செய்யுங்களேன். முதல் கமெண்ட்டில் நானே எனக்கு எழுதிய ஆட்டோகிராஃபை பதிவிட்டுள்ளேன்.

வழக்கம்போல் என் பதிவுகளைப் படியுங்கள். நீங்கள் படிப்பது எனக்கு எழுதுவதற்கு ஊக்கமளிக்கும்.  அனைவருக்கும் நன்றி!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#ஹலோ_காம்கேர் #Hello_Compcare

 

கமலா முரளி அவர்களின்  ஆட்டோகிராஃப்: http://compcarebhuvaneswari.com/?p=7748
உதயபாபு அவர்களின் ஆட்டோகிராஃப்: http://compcarebhuvaneswari.com/?p=7790

(Visited 34 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon