ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 19
ஜனவரி 19, 2021
நானேதான் எல்லா வேலைகளையும் செய்வேன் என அடம்பிடிப்பவரா நீங்கள்?
நானேதான் எல்லா வேலைகளையும் செய்வேன் என அடம்பிடிப்பவரா நீங்கள்?
ஒரு நிறுவன நேர்காணல் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு அறையில் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள். பலரும் டென்ஷனாக மிக சீரியஸான முகபாவத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு பெண் அருகில் அமர்ந்திருந்த இளைஞனிடம் ‘ஏன் இவ்வளவு டென்ஷன்… ரிலாக்ஸ்’ என்று சிரித்தபடி சொல்கிறார்.
அந்த இளைஞனோ அழமாட்டாத குறையாக ‘இப்போது இருக்கும் என் வீட்டு சூழலுக்கு இந்த வேலை கிடைத்தால்தான் மீள முடியும். இதுவரை பத்து இன்டர்வியூவுக்கு சென்றுவிட்டேன். எதிலும் தேர்வாகவில்லை. அதனால்தான் பதட்டமாக இருக்கிறது…’ என்றான்.
அந்தப் பெண் ‘இப்படி டென்ஷனாகவே இருந்தால் நேர்காணலில் உங்கள் பதட்டமே உங்களை சரியாக இயங்க வைக்காது… பதில்களை தாறுமாறாகவே சொல்வீர்கள்… எனவே இயல்பாக இருங்கள்…’ என்று தைரியம் சொல்கிறாள்.
அந்த இளைஞன் அப்போதைக்கு சிரித்தாலும் கை நகத்தைக் கடிப்பது, வராத முக வியர்வையை கர்சீப்பால் அழுந்தத் துடைத்துக்கொள்வது என செய்துகொண்டே இருக்கிறான்.
அந்தப் பெண் மீண்டும், ‘வீட்டுப் பிரச்சனை யாருக்குத்தான் இல்லை… எல்லோருக்கும் இருக்கிறது. அதை மனதில் சுமந்து கொண்டு எல்லா இடங்களுக்கும் வந்தால் இந்த இன்டர்வியூ மட்டுமல்ல, நீங்கள் செய்கின்ற எந்த செயலுமே வெற்றி பெறாது… உங்களால் உங்கள் மூச்சுக் காற்றைக் கூட இயல்பாக சுவாசிக்க இயலாது… பாருங்கள் எப்படி பெருமூச்சு விடுகிறீர்கள்… நீங்கள் சுவாசிப்பது எனக்குக் கேட்கிறது…’ என தைரியம் சொன்னாள்.
அவள் வயதுக்கு அந்த பேச்சு அவளுடைய மனமுதிர்ச்சியையே காண்பித்தது.
ஒரு கட்டத்தில் அந்த ஹால் பரபரப்பானது. படபடப்பாக இருந்த அந்த இளைஞன் வேகமாக நடந்து நேர்காணல் நடக்கும் அறைக்குள் சென்றான்.
அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்யம். யாருமே வந்து யார் பெயரையும் அழைக்கவில்லை. ‘பின் எப்படி அந்த இளைஞன் அந்த அறைக்குள் சென்றான்?’ என்ற கேள்விக்குறி முகத்தில்.
ஒரு இளம்பெண் நேராக வந்து அந்த படபடப்பாக இருந்த இளைஞனிடம் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் வந்து ‘சார் உங்களை அழைக்கிறார்’ என சொல்ல அவள் நேர்காணல் அறைக்குள் செல்கிறாள்.
அங்கு அவளுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது.
அவளுடன் படப்படப்பாக பேசிக்கொண்டிருந்த இளைஞன்தான் எம்.டி என பெயரிடப்பட்டிருந்த கேபினில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அருகில் CEO என்ற பெயரிடப்பட்டிருந்த கேபினில் ஒரு பெரியவர்.
‘உங்களை இந்த போஸ்ட்டுக்கு தேர்ந்தெடுத்துவிட்டோம்…’ என்று சொன்னார் அந்த பெரியவர்.
‘இன்டர்வியூவே செய்யவில்லையே சார்’ என சொல்லி தன் ஃபைலை நீட்ட அந்த பெரியவர் ‘தேவையே இல்லை. உங்களை நாங்கள் வெளியிலேயே நேர்காணல் செய்துவிட்டோம்… என் மகன் எம்.டி என தெரியாமலேயே அவரது படபடப்பையும், டென்ஷனையும் உங்கள் பேச்சால் குறைத்தீர்கள் அல்லவா, அந்த குவாலிட்டிதான் இந்த போஸ்ட்டுக்குத் தேவை…’ என சொல்லி வாழ்த்தினார்.
அவரே தொடர்ந்தார்.
‘ஆமாம், நீங்கள் பணிபுரியப் போவது பி.ஆர்.ஓ வேலை. பணியாளர்களுக்கும் நிர்வாகத் தலைமைக்கும் பாலமாக இருக்க வேண்டிய முக்கியமான பணி. இந்தப் பணிக்கு தன்னைச் சார்ந்தவர்களின் குணநலன்களை படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு சூழலை புரிய வைக்கத் தெரிந்திருக்க வேண்டும். அனுசரணையாக அரவணைத்துச் செல்லத் தெரிந்திருக்க வேண்டும். தன் வேலைகளை பங்கீடு செய்து கொடுத்து மற்றவர்களிடம் வேலை வாங்கவும் அறிந்திருக்க வேண்டும்… இவை அத்தனையும் உங்களிடம் இருந்ததால் நாங்கள் உங்களை தேர்ந்தெடுத்துவிட்டோம்…’
நேர்காணலுக்கு வந்திருந்த பெண் மகிழ்ச்சியுடன் கம்பீரமாக அவர்களை வணங்கி விடைபெற்று அவர்களிடம் இருந்து அப்பாயின்மெண்ட் ஆர்டரை பெறுகிறாள்.
இத்துடன் இந்த காட்சி நிறைவடைகிறது.
இது ஒரு குறும்படத்துக்கான கான்செப்ட். நேரம் கிடைத்தால் விரைவில் இயக்கி வெளியிடுவேன்.
‘எந்த வேலையானாலும் நானே செய்தால்தான் திருப்தியாக இருக்கிறது. அதனால் என்னால் நிறைய வேலைகளை செய்ய முடிவதில்லை’
ஒருசிலருக்கு இந்த குணம் உண்டு. எந்த வேலையானாலும் அதை தாங்களே தங்கள் கைகளால் செய்ய வேண்டும், அப்போதுதான் அது நேர்த்தியாக இருக்கும் என்று நினைப்பார்கள். வேறு யாரேனும் உதவி செய்தாலும் அதில் ஆயிரத்தெட்டு குற்றங்களை கண்டுபிடிப்பார்கள். அதோடு அவர்களும் ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவார்கள்.
இது வீட்டுக்குக்கூட ஒத்துவராத லாஜிக். சமையல் வேலை, வீட்டை ஒழுங்குபடுத்துவது, பாத்ரூம் சுத்தம் செய்வது என எல்லா வேலைகளையும் பெண்களே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள்.
சில வேலைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களை செய்யப் பழக்கலாம். ஒருசில பெண்கள் கணவனுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது என்று சொல்லியே அவர்களை எதையும் செய்ய விடுவதில்லை. குழந்தைகளாகட்டும், கணவனாகட்டும் செய்து பழகட்டும் என்று நினைப்பதில்லை. பின்னர் யாருமே எனக்கு உதவி செய்வதில்லை. நானே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது என புலம்பும் பல பெண்கள் இருக்கிறார்கள்.
‘நானேதான் எல்லா வேலைகளையும் செய்வேன்’ – வீட்டுக்குக்கூட ஒத்து வராத இந்த குணம் அலுவலகங்களுக்குப் பொருந்துமா. பொருந்தாது அல்லவா?
நானேதான் பார்சலை தயார் செய்வேன். நானேதான் கடிதங்களை கவரில் வைத்து ஒட்டுவேன், நானேதான் என் டேபிளை சுத்தம் செய்வேன் என தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருசிலர் தாங்களே பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். இந்த குணம் தலைமைப்பண்புக்கு ஒத்து வராத குணம்.
நாம் பார்சல் தயார் செய்வதில் திறமை பெற்றவராக இருக்கலாம், கடிதங்களை கவரில் வைத்து அழகாக பேக் செய்வதில் வல்லவராக இருக்கலாம். அலுவலகத்தை சுத்தம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். படிப்பறிவே இல்லாதவர்களால்கூட செய்ய முடியும்.
ஆனால் ஒரு புது ப்ராஜெக்ட் குறித்து சிந்திக்கவும், அதுகுறித்த தேடலுக்கு முனைப்பு காட்டவும், துறைசார்ந்த வல்லுநர்களை சந்திக்கவும், ப்ராஜெக்ட்டை செய்வதற்கான ஆட்களைத் தேர்ந்தெடுக்கவும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.
இந்த லாஜிக் நாட்டை ஆள்பவர்களுக்கும் பொருந்தும்.
மொத்தத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ள அனைவருக்கும் மிக அவசியமான குணம் இது.
இதையேதான் திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இந்தச் செயலை இதன்பொருட்டு இவரால் செய்யமுடியுமா என்று ஆய்ந்து அதனை அவரிடத்தில் கொடுக்க வேண்டும்.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களைச் சார்ந்தவர்களையும் தங்களுடன் அரவணைத்துக் கொண்டு தங்கள் செயல்பாடுகளை செய்யும்போது அதனால் கிடைக்கும் பலன்கள் பலமடங்காக பல்கிப் பெருகுவது நிச்சயம்.
அந்தத் தலைமை வீடாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம், நாடாக இருக்கலாம்.
இந்த கான்செப்ட்டைத்தான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் குறும்பட கான்செப்டாக்கி உள்ளேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP