ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 20
ஜனவரி 20, 2021
தீர்வே இல்லாத பிரச்சனை என்று ஒன்று இல்லவே இல்லை!
பிரச்சனை என ஒரு விஷயம் இருக்குமேயானால் அதற்கானத் தீர்வும் இருக்கத்தான் செய்யும். அது எப்படிப்பட்டத் தீர்வு என்பதில்தான் சிக்கல் ஆரம்பம்.
ஆம். பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான தீர்வு என்பது நமக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும் என நம்மில் பெரும்பாலானோர் நினைப்பதில்தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.
என்ன இது ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கும் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும் பைத்தியக்கார டாக்டருக்கே பைத்தியம் பிடித்தால் அந்த பைத்தியக்கார டாக்டர் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கும் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கும் பைத்தியக்கார டாக்டரிடம் தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்துப்பார்…’ என்ற விசுவின் திரைப்பட வசனம் போல் இருக்கிறதே என வியக்கிறீர்களா?
பல நேரங்களில் பிரச்சனைக்கான தீர்வை கண்டறிவதே பிரச்சனைக்குக் காரணமாவதுண்டு.
சில பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு காண முடியும். ஒரு சில பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விட்டால் நாளடைவில் தீர்வு தானாகவே உண்டாகலாம். இன்னும் ஒருசில பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது தீர்வை எதிர்பார்க்காமல் அதை அப்படியே தூக்கி எறிந்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் கடந்து சென்றுவிடுவதாக இருக்கலாம். இதெல்லாம் நாம் சந்திக்கும் பிரச்சனையின் தீவிரத்தைப் பொருத்ததாக இருக்கும்.
நாம் நம்மை அறியாமலேயே பிரச்சனைகளை இரண்டு விதமாக எதிர்கொள்கிறோம். ஓன்று சிந்தனைகளால், மற்றொன்று உணர்வு ரீதியாக.
சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் அடிப்படையில் ஒரே ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது.
மனதால் புரிந்து கொள்ளப்படும் சிந்தனைகள் வெகு வேகமாக வேலை செய்யும். சூழலை புரிந்துகொள்ளும். ஆனால் இதயத்தால் உணரப்படும் உணர்வுகள் அத்தனை வேகமாக வேலை செய்யாது. மெதுவாகவே வேலை செய்யும். சூழலை புரிந்துகொண்டு தன்னை மாற்றிக்கொள்ள நேரம் எடுத்துக்கொள்ளும். தவறு என தெரிந்தாலும் சரி செய்துகொள்ளவும் விட்டுத் தள்ளவும் அடம்பிடிக்கும்.
காதலையே எடுத்துக்கொள்ளுங்களேன். தன் காதலை ஏற்காவிட்டால் கூட ஆசிட் வீச்சு, அறுவாள் வெட்டு, அடித்தே கொலை செய்தல் என வன்முறைகள் பெருகிவிட்டன. இதுபோன்ற வன்முறைகள் செய்பவர்களுக்குத் தெரியும் தாங்கள் செய்வது மாபெரும் தவறு என்பது. ஆனால், அவர்கள் மனம் தவறு என எடுத்துரைப்பதை உணர்வுகள் அத்தனை சீக்கிரம் ஏற்றுக்கொள்வதில்லை. உணர்வு ரீதியாக சரி தவறை ஆராய நேரம் எடுக்கும். மனம் அறிவுறுத்துவதை இதயம் ஏற்றுக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியில் பல தவறுகள் அரங்கேறிவிடுகின்றன.
சரி, நம் பிரச்சனைக்கு வருவோம்… நாம் இங்கு நமக்கான இலக்கை தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை குறித்து பார்க்கப் போகிறோம்.
‘உங்கள் இலக்கை எந்த வயதில் நிர்ணயித்தீர்கள்?’ என பல நேர்காணல்களில் கேட்டிருக்கிறார்கள்.
என்னைப் பொருத்தவரை கிரியேட்டிவிட்டி தான் என் திறமை. ஆனால் நான் படித்ததோ கம்ப்யூட்டர் சயின்ஸ். அடுத்தடுத்து ஆய்வு செய்து டாக்டரேட் செய்வதுதான் முதலில் எனக்கான இலக்காக இருந்தது.
ஆனால்…
கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை பட்டம் பெற்று சுயமாக பிசினஸ் தொடங்கியவுடன் அந்தத் துறையில் இந்த சமுதாயத்துக்குத் தேவையான பல விஷயங்கள் இருப்பது தெரிந்து என் இலக்கை அப்படியே விரிவாக்கி சமுதாய கண்ணோட்டத்தில் குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, முதியோர்களுக்கு என பல்துறை சார்ந்தவர்களுக்கும் பயனுள்ள வகையில் சாஃப்ட்வேர்கள், அனிமேஷன் படைப்புகள், ஆப்கள் தயாரிப்பதை இலக்காகிக் கொண்டேன்.
என் பணியின் மூலம் நான் செய்கின்ற ஒவ்வொரு விஷயமுமே ஒரு ஆய்வுதான். எனவே இலக்கை வைத்துக்கொள்ளும்போது அதன் நோக்கம் அடுத்தடுத்த நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் வகையில் நம் சிந்தனையை மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.
வாழ்க்கையில் நமக்கான இலக்குகளை வைத்துக்கொண்டு அதை நோக்கி பயணிப்பது நல்ல விஷயம்தான். தங்கள் பிள்ளைகள் இப்படித்தான் வரவேண்டும் என ஒரு விதையை தங்கள் மனதுக்குள்ளும் விதைத்து தங்கள் பிள்ளைகள் மனதுக்குள்ளும் விதைத்து அதற்காகவே தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்கிறார்கள்.
இதனால் அவர்கள் வைத்துக்கொண்டுள்ள இலக்கில் வெற்றியடைய முடியாத சூழல் உருவாகும்போது பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் பெற்றோர்களே உடைந்துபோகிறார்கள். படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் தற்கொலைகளுக்குக் காரணம் ’கொக்குக்கு ஒன்றே மதி’ என ஒரே இலக்கை வைத்துக்கொண்டு வாழ்க்கை மொத்தத்தையும் அதற்காகவே பணயம் வைப்பதுதான்.
எப்பவுமே மிலிட்டரி மிரட்டலில் இலக்கை நோக்கிய பயணம். வேறு சிந்தனைகளுக்கு மனதில் இடமே இல்லாதபோது சந்தோஷங்களை அனுபவிக்கவும், தோல்விகளை எதிர்கொள்ளவும் மனம் பழகியே இருக்காதபோது சின்ன சறுக்கல் வந்தால் கூட ‘அவ்வளவுதான் வாழ்க்கை’ என ஒடிந்துபோய் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அவலமான மனநிலை.
இதற்கு என்ன செய்யலாம்?
எங்கள் தொழில்நுட்ப உலகில் ஒரு பரிசோதனைக்கான தீர்வை கண்டுபிடிக்க Else if Statement என்று ஒருகை புரோகிராம் நுட்பம் உண்டு.
அதாவது if என்ற கட்டளை மூலம் முதலில் ஒரு நிபந்தனையை (Condition-1) பரிசோதிக்க வேண்டும். அதன் பதில் சரி என வந்தால் அதற்கான ஆணைத்தொடர்களை (Statement-1) இயக்க வேண்டும்.
தவறு என வந்தால் else if என்ற கட்டளை மூலம் அடுத்த நிபந்தனையை (Condition-2) பரிசோதிக்க வேண்டும். அதன் பதில் சரி என வந்தால் அதற்கான ஆணைத்தொடர்களை (Statement-2) இயக்க வேண்டும்.
தவறு என வந்தால் else if என்ற கட்டளை மூலம் அடுத்த நிபந்தனையை (Condition-3) பரிசோதிக்க வேண்டும்.
இப்படியாக ஒவ்வொரு நிபந்தனையாக பரிசோதனை செய்துகொண்டே வர வேண்டும். எந்த நிபந்தனைக்குமே சரி என பதில் வரவில்லை என்றால் இறுதியாக உள்ள else என்ற கட்டளைக்கு பிறகுள்ள ஆணைத்தொடர்களை (Default Statement) இயக்க வேண்டும். அதுவே நாம் எடுத்துக்கொண்டுள்ள பரிசோதனைக்கான தீர்வாகும்.
If (condition-1)
{
Statements-1
}
else if (condition-2)
{
Statements-2
}
else if (condition-3)
{
Statements-3
}
else
{
Default Statements
}
இதே நுட்பத்தை நம் இலக்குகளை நோக்கிய பயணத்துக்கும் பயன்படுத்தலாமே. ஒரே இலக்கை வைத்துக்கொள்ளாமல் அது சார்ந்த பிற பிரிவுகளையும் அடுத்தடுத்த இலக்குகளாக வைத்துக்கொண்டால் ஒன்றில் தவறும்போது மற்றொன்றை பிடித்துக்கொண்டு முன்னேற முடியுமல்லவா?
எங்கள் தொழில்நுட்பம் ஒருபோதும் எந்த ஒரு பரிசோதனைக்கும் ‘தீர்வே கிடையாது ஓடிப்போ’ என்று சொல்வதில்லை. நம் வாழ்க்கையும் அப்படித்தான். ஆனால் நாம்தான் தீர்வே இல்லையோ என நினைத்து இலக்குக்கான எல்லைக்கு நாமே முற்றுப்புள்ளி வைத்துக்கொள்கிறோம். பலர் வாழ்க்கையையும் முடித்துக்கொள்கிறார்கள்.
உதாரணத்துக்கு ‘சினிமா’ என்பது உங்கள் கனவு என்றால் ‘சினிமாவில் நடிப்பு’, ‘சினிமாவில் கதை வசனம்’, ‘சினிமாவில் கிராஃபிக்ஸ்’, ‘சினிமாவில் எடிட்டிங்’ என உங்கள் கனவுகளை விரிவாக்கிக்கொள்ளுங்கள்.
‘சினிமாவில் நடிப்பு’ என்ற இலக்கு தோல்வியில் முடிந்தால், ‘சினிமாவில் கதை வசனம்’ என்பதைப் பற்றிக்கொள்ளலாம். அதுவும் தோல்வியில் முடிந்தால் ‘சினிமாவில் கிராஃபிக்ஸ்’ என்பதைப் பற்றிக்கொள்ளலாம். அதுவும் தோல்வியில் முடிந்தால் ‘சினிமாவில் எடிட்டிங்’ என்பதைப் பற்றிக்கொள்ளலாம். இவை எதுவுமே ஒத்துவரவில்லை என்றால் சின்னத்திரைக்குள் நுழைந்துவிடலாமே. ஆயிரம் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றனவே.
இதுதான் இலக்கை நோக்கிய பயணத்தில் ஜெயிப்பதற்கான ஒரே லாஜிக்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP