ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 2: பிடிக்காதவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போமே! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 2
ஜனவரி 2, 2021

பிடிக்காதவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போமே!

நாம் செய்கின்ற வேலைகள் அத்தனையுமே நமக்குப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. சில வேலைகள் நம் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கும். சிலவற்றை நினைத்தாலே அலுப்பாக இருக்கும். இன்னும் சில சலிப்பை உண்டு செய்யும். ஆனாலும் நமக்கான வேலைகளை செய்துதானே ஆக வேண்டும்.

வேலைகளை மூன்று விதமாக பிரித்துக்கொள்ளலாம். ஒன்று வீட்டு வேலை. இரண்டாவது அலுவலக வேலை. மூன்றாவது நம் மனதுக்கு மிக நெருக்கமான நம் திறமை சார்ந்த வேலைகள். உதாரணம்: படம் வரைவது, வீடியோ எடுப்பது, பாடுவது. இவற்றுக்கெல்லாம் இப்போது தொழில்நுட்பமும் பேருதவி செய்வதால் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டு சுடச்சுட அங்கீகாரமும் பெற முடிகிறது.

மூன்றாவதாக குறிப்பிட்ட திறமை சார்ந்த வேலைகளை செய்வதற்கு யாருக்கும் அலுப்போ சலிப்போ பெரும்பாலும் வருவதில்லை. செய்யாமல் இருந்தால்தான் போதைக்கு அடிமையானவர்களைப் போல எரிச்சலும், படபடப்பும் வருகிறது. ஓட்டலுக்குச் சென்றால் நம் டேபிளுக்கு வரும் டிஷ்களுடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்யவில்லை என்றால் படபடப்பு. பிறந்த நாள் கேக் வெட்டியதை டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் வீடியோவாக போட்டு லைக்கை அள்ள முடியாத சூழல் உருவானால் எரிச்சல். இப்படி நம் மனதுக்கு குதூகலம் அளிக்கும் வேலைகளை செய்வதில் தடங்கல் ஏற்பட்டால், அவற்றை செய்ய முடியாமல் போனால்தான் கோபம் வரும்.

இரண்டாவதாக குறிப்பிட்ட அலுவலக வேலையில் நம் விருப்பத் தேர்வு என்பது மிகக் குறைவு. நாம் எடுத்துக்கொண்ட பணியில் நமக்கு அளிக்கப்படும் வேலைகளை செய்தால்தான் மாதம் பிறந்தால் சம்பளம் கிடைக்கும். எனவே அலுப்பாக இருந்தாலும் சலிப்பாக இருந்தாலும் செய்து முடித்துவிடும் திறன் நம் எல்லோருக்குள்ளேயுமே இயல்பாக இருக்கும்.

முதலாவதாக குறிப்பிட்ட வீட்டு வேலையில்தான் நம்மால் அலுப்பையும் சலிப்பையும் காட்ட முடியும். அலுப்பும் சலிப்பும் இன்றி எப்படி அத்தனையையும் ஈடுபாட்டுடன் செய்யவது என பார்க்கலாம்.

இதற்கு ஒரு சிறிய லாஜிக் உள்ளது. அதாவது நம் மனதுக்குப் பிடிக்காத வேலைகளுக்கு முதல் முன்னுரிமை கொடுத்து அதை முதலில் முடித்துவிடுவது. அப்படி செய்துவிடுவதால் நம் மனதுக்கு அந்த வேலை மீதான ஸ்ட்ரெஸ் குறைந்து ‘அப்பாடா அந்த வேலை முடிந்துவிட்டது’ என குதூகலம் பிறக்கும். நிம்மதி அடையும். அந்த உற்சாகத்தில் நமக்குப் பிடித்த வேலைகளை செய்யத் தொடங்கும்போது அது மிக சிறப்பாக மிக அழகாக நடந்து முடியும். இன்னும் சொல்லப் போனால் மிக சீக்கிரமே செய்துமுடித்துவிட முடியும்.

மனதுக்கும் உடலுக்கும் நிறைய சம்மந்தம் உண்டு. மனம் குதூகலமாக இருந்தால் உடலும் குதூகலமாக இருக்கும். மனம் சோர்ந்தால் உடலும் சோர்வடையும்.

நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போது சாப்பிடும் தட்டில் எந்த காய்கறி போட்டாலும் வீணடிக்கக் கூடாது, எல்லா காய்கறிகளையும் சாப்பிட வேண்டும் என்பது என் பெற்றோரின் அறிவுரை. குழந்தைகளுக்குப் பொதுவாக பாகற்காய், கீரை வகைகள் போன்றவை பிடிக்காதல்லாவா? அதுப்போல்தான் எங்களுக்கும்.

ஆனாலும் நாங்கள் அந்த காய்கறிகள் சமைக்கும் நாட்களில் முதலில் அவற்றை சாதத்துடன் சேர்த்து சாப்பிடாமல் முதலில் அப்படியே சாப்பிட்டு விடுவோம். இதுவும் எங்கள் பெற்றோர் சொல்லிக்கொடுத்ததுதான். பிடிக்காததை முதலில் சாப்பிட்டுவிட்டால் பிடித்ததை ரசனையுடன் சாப்பிடலாமே என்பதுதான் அந்த லாஜிக்.

மேலும் தட்டில் நமக்குப் பிடிக்காத அந்த காய்கறிகளை பார்த்துக்கொண்டே ‘ஐயோ அதை சாப்பிட வேண்டுமே’ என்ற சிறிய மன உளைச்சலும் நமக்குள் இருக்காதல்லவா?

அதன் பின்னர் வழக்கம்போல் குழம்பு சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை சாப்பிடுவோம். தேவைப்பட்டால் அப்பளம் சுட்டு போடுவார்கள்.

விருந்தினர் வீடுகளுக்குச் செல்லும்போது நாங்கள் தட்டில் வைத்ததை உடனடியாக சாப்பிட்டு விட்டால் எங்களுக்கு அந்த காய் மிகவும் பிடித்திருப்பதாக நினைத்து மீண்டும் வைப்பார்கள். அவர்களுக்கு எங்கள் சாப்பாட்டு விதியை பிறகு புரிய வைப்போம்.

ஒருமுறை காந்திஜியின் சபர்மதி ஆஸ்ரமத்திற்கு வினோபா சாப்பிடச் சென்றபோது, காந்திஜி சமைத்துப் பரிமாறினார். வினோபாவிற்கு பாகற்காய் பிடிக்காது என்று காந்திஜிக்குத் தெரியாது. அதை இலையில் பரிமாறிவிட்டு சாதம் எடுத்துவர உள்ளே சென்றுவிட்டார் காந்திஜி.

வினோபா பாகற்காய் பொரியலை ஒரே வாயில் எடுத்து விழுங்கிவிட்டார். சாதம் பரிமாற வந்த காந்திஜி, வினோபாவுக்கு பாகற்காய் என்றால் அவ்வளவு இஷ்டம் என நினைத்து மீண்டும் கொண்டுவந்து இலையில் வைத்துவிட்டார்.

அப்போது வினோபா, ‘விரும்பியதை விடுவதுதான் துறவறம் என நினைத்தேன், விரும்பாததை ஏற்றுக்கொள்வது அதைவிட மிகப் பெரிய துறவறம் என்று புரிந்துகொண்டேன்’ என்றார்.

பிடிக்காதவற்றை ஒதுக்க வேண்டாம். முன்னுரிமை கொடுப்போம். முதலில் முடிப்போம். பின்னர் நமக்குப் பிடித்தவற்றை ரசனையுடன் அனுபவித்து செய்வோம். இப்படி செய்யும்போது செய்யும் செயல்களில் கிடைக்கும் நேர்த்தியையும் பூரணத்துவத்தையும் கண்டு நீங்களே வியப்பீர்கள்.

நான் இப்படித்தான் செயல்படுகிறேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 11 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon