ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1: புத்தாண்டுத் தீர்மானங்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1
ஜனவரி 1, 2021

புத்தாண்டுத் தீர்மானங்கள்!

New Year Resolution என்பதே தமிழில் புத்தாண்டுத் தீர்மானம்.

நம்மில் பலர்  ‘இந்த புத்தாண்டில் இருந்து இதை இதை செய்யப் போகிறேன்’ என்றும், ‘இனி இப்படித்தான் செயல்படப் போகிறேன்’ என்றும், ‘இனிமேல் இப்படித்தான்’ என்றும் புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்.

இது வழக்கமான ஒன்றுதான். எல்லோரும் செய்கிறார்களே என ஒரு உத்வேகத்தில் செய்யப்படும் ஒரு செயல். அப்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழியை எத்தனைபேர் வருடம் முழுவதும் பின்பற்றுகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

ட்ரெண்டிங் ஆகும் நடை உடை பாவனைகள் போலவே புத்தாண்டு தீர்மானங்களும் ட்ரெண்டிங் ஆகின்றன.

இப்படி ஏதேனும் ஒரு தினத்தில் இப்படி தீர்மானங்கள் எடுத்துக்கொண்டு அதை சில தினங்கள் மட்டுமே பின்பற்றி கைவிட்டுவிடாமல் இருக்க நான் கடைபிடிக்கும் சில யோசனைகளை சொல்லட்டுமா?

பைக்கில் செல்ஃப் ஸ்டார்ட், கிக் ஸ்டார்ட் என இரண்டு இருக்கும். தினமும் அவசரம் அவசரமாகக் கிளம்பி வண்டியை எடுக்கும்போது நாம் அனைவருமே செல்ஃப் ஸ்டார்ட் போட்டுதான் கிளம்(ப்)புவோம்.

ஆனால் பைக்கை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது கிக் ஸ்டார்ட் போட்டு கிளப்பினால்தான் இன்ஜினும், பேட்டரியும் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். இன்னும் சொல்லப் போனால் நீங்கள் பைக் வாங்கும்போதே, ‘தினமும் முதன் முதலில் பைக்கை எடுக்கும்போது கிக் ஸ்டார்ட் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்யுங்கள். ஏனெனில் இரவு முழுவதும் குளிர்ந்த நிலையில் இருக்கும் இன்ஜினும், பேட்டரியும் இயல்பு நிலைக்கு வர வேண்டும் என்றால் கிக் ஸ்டார்ட் போட்டு ஸ்டார்ட் செய்தால்தான் நல்லது. அன்றைய தினத்தில் அடுத்தடுத்து வண்டியை கிளப்பும்போது செல்ஃப் ஸ்டார்ட் செய்யலாம்’ என சொல்லி இருப்பார்கள். ஆனால் நம்மால்தான் நம் அவசரத்துக்கு அதையெல்லாம் பின்பற்ற முடிவதில்லை.

வண்டி எப்போதாவது செல்ஃப் ஸ்டார்ட் செய்ய மறுத்தால் மட்டுமே கிக் ஸ்டார்ட் குறித்த நினைவே நமக்கு வரும். அப்போதுதான் அதை தேடி கண்டுபிடித்து உதைத்து உதைத்து வண்டியைக் கிளப்புவோம்.

இதுபோலதான் நம் வாழ்க்கையில் செல்ஃப் ஸ்டார்ட் செய்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். காலையில் எழுகிறோம், சாப்பிடுகிறோம், வேலைக்குச் செல்கிறோம், வீட்டுக்கு வருகிறோம், மொபைல் டிவி பார்க்கிறோம், வீட்டு வேலை செய்கிறோம், தூங்குகிறோம். இப்படி ஒரே மாதிரியான வேலைகள். ஓட்டம் ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இப்போது கொரோனா காலத்தில்தான் கொஞ்சம் நம் வாழ்க்கை முறையில் கொஞ்சம் மாற்றம் உண்டாகி உள்ளது.

இப்படி தினமும் ஒரே மாதிரி ஓடிக்கொண்டிருந்துவிட்டு புத்தாண்டு அன்று மட்டும் புதுத் தீர்மானங்கள் எடுத்தால் அதை வருடம் முழுவதும் பின்பற்ற வேண்டுமே என்ற எண்ணமே சுமையாகி அதை பாதியிலேயே கைவிட்டு விடுவோம்.

இப்படி பெருஞ்சுமையை சுமக்காமல் இருக்க அவ்வப்பொழுது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ ஒரு மாதத்துக்கு ஒருமுறையோ நம்மை நாம் ஓட்டத்தில் இருந்து நிறுத்திக்கொண்டு நம் பைக்கை கிக் ஸ்டார்ட் போட்டு கிளப்புவதைப் போல ‘நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம், சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோமா, இன்னும் என்ன செய்யலாம், எப்படி செயல்படலாம்’ என கேள்வி கேட்டு உசுப்பிவிட்டுக்கொண்டு பின்னர் ஓடத் தொடங்கலாம். இதனால் வருடம் முழுவதும் குட்டி குட்டியாய் தீர்மானங்கள் எடுக்க முடியும். அவற்றை பின்பற்றுவதும் சுலபமாகி அதுவே நம் இயல்பாகவும் மாறிவிடும்.

இதைத்தான் நான் செய்கிறேன். இப்படித்தான் செயல்படுகிறேன்.

இவ்வளவு ஏன்? இன்னமும் நான் தோசையைக் கூட குட்டி குட்டியாய் வார்த்துத்தான் சாப்பிடுகிறேன். ஓட்டல்களில் கொடுக்கும் மெகா சைஸ் தோசையைப் பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. மலைப்பாக இருக்கும். முழு தோசையை இரண்டு பாகமாகவோ மூன்று பாகமாகவோ பிய்த்து ஒவ்வொரு பாகமாக சாப்பிட்டு முடிப்பேன்.

மிகப் பெரிய வேலையை சுலபமாக செய்வதற்கான உத்தியும் இதுவே. இதே லாஜிக்கைத்தான் நிர்வாகத்தில் என் எல்லா பணிகளிலும் பின்பற்றுகிறேன். பெரிய வேலையை சிறு சிறு பகுதிகளாக்கிக்கொண்டு ஒவ்வொன்றாய் முடித்துக்கொண்டே வரும்போது மனநிறைவு கிடைக்கும். அந்த மனநிறைவு கொடுக்கும் உற்சாகத்தில் நிறைய பணிகளை குறுகிய காலத்தில் செய்து முடித்துவிட முடியும்.

நீங்களும் செயல்படுத்திப் பாருங்களேன்!

அனைவருக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டுத் தொடக்கம் இனிதாக அமையட்டும். வெற்றிகளைக் குவிக்கட்டும். ஆரோக்கியமான சூழலை உருவாக்கட்டும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 8 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon