ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 39
பிப்ரவரி 8, 2021
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் கணக்குகள்!
சமீபத்தில் ஒரு பதிப்பாளர் தொழில்நுட்ப உதவிக்காக என்னை தொடர்புகொண்டார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன கணக்கு என்னை வியக்க வைத்தது.
ஒரு குறிப்பிட்ட ஃபாண்ட் சாஃப்ட்வேரை பயன்படுத்தி 10 கோடி எழுத்துக்களை டைப் செய்துள்ளோம் என சொன்னார்.
அதாவது அவரது தந்தை காலத்தில் இருந்தே அவருடைய தொழில் பதிப்புத்தொழில். இவர் காலத்தில் இவர் தொழில்நுட்ப உதவியுடன் பதிப்பிக்கிறார்.
அவர் பயன்படுத்தும் ஸ்ரீலிபி சாஃப்ட்வேரை பயன்படுத்தி எல்லா புத்தகங்களையும் வடிவமைக்கிறார். ஒவ்வொரு புத்தகத்திலும் உள்ள எழுத்துக்களை கணக்கிட்டு அத்தனைகோடி எழுத்துக்களை அந்த சாஃப்ட்வேரில் உள்ள ஃபாண்ட்டுகளைப் பயன்படுத்தி இருப்பதாக சொன்னார்.
அத்துடன் விட்டாரா, அந்த சாஃப்ட்வேருக்கு தாங்கள்தான் இத்தனை உயரிய பெருமை சேர்த்துள்ளதாக சொன்னதுதான் வியப்பிலும் வியப்பு.
இத்தனை புத்தகங்கள் வெளியிட்டு சாதனை செய்துள்ளோம் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை எங்கள் புத்தகங்களில் இதுவரை எழுத்துக்களை பயன்படுத்தி உள்ளோம் என்று சொல்லிக் கேட்பது இதுதான் முதன் முறை.
விளம்பரமயமாகிவிட்ட இந்த உலகில், இனி வரும் காலத்தில் நிமிடத்துக்கு இத்தனை முறை மூச்சு விட்டேன் என்று சொல்லிக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அவர் சொன்ன கணக்கில் பார்த்தால் நான் எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் 500 பக்கங்கள் இருக்கும். அதில் உள்ள எழுத்துக்களைக் கணக்கிட்டால் எத்தனை கோடி வரும் என யோசித்தேன்.
கிட்டத்தட்ட 40 வருடங்களாக தினந்தோறும் எழுதி வருகிறேன். எத்தனை எழுத்துக்கள் இதுவரை எழுதி இருப்பேன் என கணக்கிட முடியுமா என்ற சிந்தனையும் ஓடியது.
தவிர சாஃப்ட்வேர் தயாரிப்புகள், அனிமேஷன், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் என எல்லாவற்றுக்கும் எழுத்துதான் அடிப்படை. அத்தனைக்கும் நான் பயன்படுத்தி உள்ள எழுத்துக்களை கணக்கிட்டால் எவ்வளவு வரும் என கணக்கிட மனம் விழைந்தது.
ஆனால் எதையுமே கணக்கிடவில்லை. என்னைப் பொருத்தவரை எழுத்து மட்டுமல்ல என் நிறுவனத்தில் வாயிலாக நான் இயங்கி வரும் துறை சார்ந்த எல்லா கணக்குகளும் இறை அருளே.
இது குறித்து எழுத வேண்டும் என பல நாட்கள் நினைத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் சரியான சந்தர்ப்பம் வரவில்லை. இன்று எப்படி அந்த சந்தர்ப்பம் கிடைத்தது என நினைக்கிறீர்களா? சொல்கிறேன்.
நேற்று Zee Tamil தொலைக்காட்சியில் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் பெற்றோரை பராமரிப்பதில் அதிகம் அக்கறை காட்டுவது ஆண்களா, பெண்களா என்ற விவாதம்.
அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரோஜா என்ற பெண்மணி வந்திருந்தார். அவர் அனாதை பிணங்களை அடக்கம் செய்யும் சேவையை செய்து வருகிறார். அவர் சொன்ன கணக்கு வியக்க வைத்தது. கடந்த 20 வருடங்களில் 5600 அனாதை பிணங்களை அடக்கம் செய்துள்ளதாக கூறினார்.
இதுவரை நான் கேள்விப்படாத கணக்கு இது. இதுவரை அவர் குறித்தும் கேள்விப்பட்டிருக்கவும் இல்லை. அந்த நிகழ்ச்சியின் நடுவரே பிரபலம் அல்லாதவரை சிறப்பு விருந்தினராக்கி இருக்கிறோம் என்று சொல்லியே அறிமுகப்படுத்தினார்.
எழுதுவது, பதிப்பிப்பது, புத்தகம் வெளியிடுவது எல்லாமே அவரவர் வேலை, தொழில். ஆனால் ரோஜா என்ற பெண்மணி செய்வது முற்றிலும் சேவை. யாரும் துணிந்து செய்யத் தயங்கும் சேவை.
ஒவ்வொருவர் வீட்டிலும் அம்மாக்கள் சமையல் அறையில் எத்தனை தோசை, எத்தனை இட்லி, எத்தனை சப்பாத்தி செய்திருக்கிறார் என கணக்குபோட்டு சொன்னால் நாமெல்லாம் மலைத்து நிற்க வேண்டியதுதான்.
ஒரு முறை என் நிறுவனத்தின் லைப்ரரிக்கு புதிதாக புக் ஷெல்ஃப் தயாரிப்பதற்காக ஒரு கார்ப்பென்டரை வரச் சொல்லி இருந்தோம்.
எங்கள் லைப்ரரியைப் பார்த்தவர் அசந்துபோய் ‘இத்தனை புத்தகளும் நீங்கள் எழுதியதா…’ என வியந்து ‘அம்மா நீங்கள் சரஸ்வதி தேவி அருள் பெற்றவர்… இத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கீங்க… இது எத்தனை பெரிய சாதனை? ’ கை கூப்பி வணங்கினார்.
நான் இடைமறித்து, அவர் எத்தனை வருடங்கள் கார்ப்பென்டர் துறையில் இருக்கிறீர்கள்’ என்று கேட்டேன்.
நான் 25 வருடங்களுக்கு மேல் கார்ப்பென்டரா இருக்கேன். 10-வது படிச்சுட்டு எடுபிடியா வேலை செய்து… கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இப்போ எனக்குன்னு ஒரு ஷாப். என்கிட்ட 4 பேர் வேலை செய்யறாங்க…’ என்றவரிடம் ‘உங்கள் 25 வருட அனுபவத்தில் இதுபோல எத்தனை விதமான மரவேலை செய்திருப்பீர்கள்…’ என கேட்டேன்.
‘சரியா கணக்குத் தெரியலை மேடம்… நிறைய செய்திருக்கிறேன்….ஏன்னா அதுதானே என் வேலையே…’ என்று பதில் சொன்னவரை பார்த்துப் புன்னகைத்தேன்.
‘நான் எழுதியவை 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களே… நீங்கள் செய்ததோ எண்ணற்றவை… அப்போ யார் பெரியவர் சொல்லுங்கள்…’ – இது நான்.
‘மேடம் உங்களுடையது அத்தனையும் அறிவு…’ இது கார்ப்பென்டர்.
‘சார் உங்களுடையது அத்தனையும் உழைப்பு…’ இது நான்.
அவர் பதில் சொல்லாமல் புன்னகைத்தபடி நின்றிருந்தார்.
நான் தொடர்ந்தேன்.
‘இன்ஜினியர், டெக்னீஷியன், கார்ப்பென்டர், டிரைவர் போன்றவர்களின் சேவைகள் எப்படி மக்களுக்குப் பயன்படுகிறதோ, அப்படித்தான் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமாத்துறை சார்ந்தவர்கள் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளும். ஒருசில பணிகள் முழுக்க முழுக்க அறிவு சார்ந்தவை. ஒருசில உழைப்பு சார்ந்தவை. ஒருசில அறிவும், உழைப்பும் சார்ந்தவை. இவை எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒன்றுள்ளது அதுதான் ஈடுபாடு. அது இருந்துவிட்டால் அவரவர் பணியில் அவரவர் ராஜாதான்’ என்றேன்.
எல்லோர் வாழ்க்கையிலும் இப்படி கணக்கிட்டு பெருமைப்பட எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் அந்தக் கணக்கு எதை சார்ந்தது என்பதில்தான் பெருமையே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP