ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 50
பிப்ரவரி 19, 2021
புரிதல்களை தெளிய வைக்க இத்தனைப் பிரயத்தனங்களா?
என் தொழில்நுட்பப் புத்தகங்களின் வாசகர் ஒருவர் போன் செய்திருந்தார். அவரும் அவரது மனைவியும் ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் பணி செய்வதாகச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டார்.
என் புத்தகங்களை வைத்துத்தான் அவர் மகன்கன் இருவரும் டாட் நெட், ஜாவா எல்லாம் கற்றுக்கொண்டு கல்லூரியில் இன்ஜினியரிங் சேர்ந்துள்ளதாக கூறினார்.
அத்துடன் முடித்திருந்தால் பரவாயில்லை. அடுத்து அவர் சொன்ன ஒரு கருத்து அவரது தவறான புரிதலை வெளிப்படுத்தியது.
‘என் மகன்களுக்கு உங்களைத்தான் நான் ரோல் மாடலா வைத்துக்கொள்ளச் சொல்லி இருக்கேன் மேம்…’
‘ஓ… நைஸ்… தேங்யூ…’
‘மேடம் வெறும் எம்.எஸ்.ஸிதான் படிச்சிருக்காங்க… ஆனால் சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சு பெரிய லெவலுக்கு வந்துட்டாங்க…’
இந்த இடத்தில் அவர் சொன்ன ‘வெறும்’ என்ற ஒற்றை வார்த்தை எனக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. சட்டென தலைவலி வந்துவிட்டதைப் போல உணர்ந்தேன்.
‘ஏன் சார் எம்.எஸ்.ஸிக்கு என்ன குறைச்சல்…’
‘அதில்ல மேடம்…’
‘அப்புறம் என்ன படித்திருந்தால் கம்பெனி ஆரம்பிக்கலாம்…’
‘பி.ஈ, பி.டெக் என இன்ஜினியரிங் படிக்காமலேயே…’
‘சார், நீங்கள் சொல்லும் பி.ஈ நான்கு வருடம்தான், எம்.எஸ்.ஸி ஐந்து வருடம்…’
அவர் கொஞ்சம் தடுமாறினார்.
‘அத்துடன் நான் நம் நாட்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அடி எடுத்து வைப்பதற்கு முன்பேயே முதன் முதலில் கல்வித் திட்டத்தில் பாடமாக அறிமுகமான நேரத்தில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். பிறகு அதில் முதுகலைப்பட்டம் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். கம்ப்யூட்டரே நம் நாட்டுக்கு பெருமளவில் அறிமுகமாகாத காலகட்டத்தில் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் என்பது அமெரிக்காவில் எம்.எஸ் படிப்பதற்கு சமம். மேலும் அப்போது இன்ஜினியரிங்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அறிமுகமே ஆகவில்லையே…’
‘அதில்லை மேடம்… இன்ஜினியரிங் என்றால் ஹார்ட்வேர் எல்லாம் வரும்…’
பேசப் பேச அவரது தவறான புரிதல்கள் பிதற்றலாகவே வெளிப்பட்டன.
‘சரி சார் நீங்கள் சொன்ன கணக்குக்கே வருகிறேன்… பில்கேட்ஸ் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ஆரம்பிக்கும்போது அவர் கல்லூரி படிப்பையே முடிக்கவில்லையே… அதற்கு என்ன சொல்கிறீர்கள்?’
இப்படியாக அவருக்கு புரிய வைக்க பதினைந்து நிமிடங்கள் ஆனது.
நிறுவனம் தொடங்கியபோது எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். நம் நாட்டில் கல்வித்திட்டத்தில் முதல் முதலில் அறிமுகமான கம்ப்யூட்டர் சயின்ஸ் சப்ஜெக்ட் எடுத்து படித்து அதில் இரட்டைப் பட்டம் பெற்றிருந்தேன். இந்தியாவிலேயே ஐடி நிறுவனங்கள் எல்லாம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சொற்பமாக இருந்த அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஐடி நிறுவனம் தொடங்கிய முதல் பெண் என்ற சிறப்பையும் பெற்றிருந்தேன். அதற்கான விருதுகளைக் கூட பெற்றிருக்கிறேன். முதன் முதலில் Work From Home திட்டத்தை அறிமுகப்படுத்தினேன், அதுவும் இன்டர்நெட்டெல்லாம் அறிமுகம் ஆகாத காலத்திலேயே.
இப்படி பல முதன் முதலுக்கு எல்லாம் அடிகோலிய பிறகும் இதுபோன்ற அபத்தமான தவறான புரிதல்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளதை நினைத்து வேதனைப்பட்டேன்.
மேலும் கம்பெனி ஆரம்பித்து முதலீடு செய்து விட்டு அக்கடா என்ற அமரும் துறையா தொழில்நுட்பம். கூகுள் வேகத்தில் புதுப்புது மாற்றங்கள். நிறைய அப்டேட் செய்துகொள்ள வேண்டும். படிக்க வேண்டும். ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும். நித்தம் அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். அத்துடன் திறமைகளையும் வளர்த்தெடுக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் இடையில் எம்.பி.ஏ வேறு முடித்திருந்தேன்.
எங்கள் நிறுவன தயாரிப்புகள் அத்தனையும் நம் நாட்டுக்காகவே தயாராகும் படைப்புகள். காம்கேர் பிராண்டில் உருவாகும் படைப்புகள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் (R & D – Research and Development) செய்ய வேண்டி இருக்கும்.
இப்படியாக அறிவுசார்ந்த உழைப்பில் உருவாகும் படைப்புகள் ஒவ்வொன்றின் பின்னாலும் என் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்திருக்கிறேன். தூக்கத்திலும் லாஜிக்குகளும் கான்செப்ட்டுகளும் மட்டுமே வரும். பெரும்பாலான தொழில்நுட்ப சிக்கல்களுக்குத் தீர்வு கனவில்தான் கிடைக்கும்.
எங்கள் நிறுவன தயாரிப்புகளுக்காக தொழில்நுட்ப வல்லுநர்களை அமர்த்துவதற்கு முன்னர் அந்தந்த தயாரிப்புகளுக்கான தொழில்நுட்பத்தை ஆராய்ச்சிகள் செய்து ஆழமாக கற்றறிந்த பின்னரே நேர்காணலுக்கு விளம்பரம் கொடுக்கிறேன். ‘அது வராது மேடம், இதை செய்ய முடியது மேடம்…’ என்று யாரும் எந்த சாக்கு போக்கும் என்னிடம் சொல்ல முடியாத அளவுக்கு தொழில்நுட்பத்தில் கரைகண்ட பிறகே ஆட்களை தேர்ந்தெடுக்கிறேன்.
மேலோட்டமாக படித்துவிட்டு வருபவர்கள் என்னிடம் பணி புரிவது கடினம். தொழில்நுட்பத்தில் கொஞ்சம் ஆழமான அறிவு, என் வேகத்து ஈடுகட்டும் அளவுக்கு வேகம், ஆராய்ச்சிகள் செய்து படைப்புகள் தயாராவதற்கு ஆகும் காலகட்டத்தில் பொறுமை, கடுமையாக உழைக்கும் பக்குவம் இப்படி எல்லாம் இருப்பவர்களால் மட்டுமே எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய முடியும்.
இப்படியாக எங்கள் நிறுவனத்தில் தயாராகும் ஒவ்வொரு பிராஜெக்ட்டும் ஒரு நெடும் ஆராய்ச்சியே. அந்த வகையில் யாரேனும் எனக்கு டாக்டரேட் பட்டம் கொடுத்திருந்தால் பத்து இருபது டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கலாம்.
நான் முறையாக பி.எச்.டி சேராததுக்கு இரண்டு முக்கியக் காரணங்கள். ஒன்று நேரம். இரண்டாவது என் தொழில்நுட்ப அறிவை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்த நினைத்த சில பேராசிரியர்கள். பி.எச்.டிக்கு அப்ளை செய்யும்போதே அவர்களின் டாமினேஷன்களின் பல கோணங்கள் புரிந்ததால் டாக்டரேட்டே தேவையில்லை என முடிவு செய்து அந்த ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.
ஒன்றும் குறைவில்லை. தினமும் புதுப்புது ஆராய்ச்சிகள். புதுப்புது படைப்புகள். கிரியேட்டிவிட்டியும், லாஜிக்குமாய் தொழில்நுட்பப் பயணத்தில் ஐக்கியமாகி நான் இயங்குகின்ற களத்தையும் தளத்தையும் சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில், குறிப்பாக நம் தேசத்துக்குப் பயனுற வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா, குறை ஒன்றும் இல்லை கண்ணா என்ற பாடல் வரிகள் அடிக்கடி எனக்கு நினைவுக்கு வரும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP