ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 49
பிப்ரவரி 18, 2021
எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒன்றாக இருக்கும்படி வாழ்வது அத்தனை கடினமா?
இல்லையே. மிக சுலபமே. அதற்கும் ஒரு எளிய லாஜிக் உள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு கல்லூரி கலை நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். மாணவ மாணவிகளுக்கு ஊக்க உரை பேசினேன். இலக்கியம், ஓவியம் இன்னபிற துறை சார்ந்த இரண்டு மூன்று பேரும் சிறப்பு விருந்தினர்களே.
அவரவர்கள் துறை சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். இலக்கியத்துறை சார்ந்த எழுத்தாளர் ஒருவர் பேசியது எதிர்மறை சிந்தனையை தூண்டுவதாகவே அமைந்திருந்தது.
‘இப்போதெல்லாம் யாருமே சரியில்லை’
‘எல்லா இடங்களிலும் கரப்ஷன்’
‘இளைய தலைமுறையினர்களிடம் பொறுப்பே இல்லை. கல்லூரியில் படிப்பு வருகிறதோ இல்லையோ காதல் வந்துவிடுகிறது…’
இப்படி வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி எதிர்மறை கருத்துக்கள். அதற்கு உதாரணங்களை வேறு நகைச்சுவையாக சொல்வதைப் போல சொல்லிக்கொண்டே இருந்ததால் புரிந்ததோ புரியலைவில்லையோ மாணவர்களுக்கு அந்த நேரத்துக்கு அது பொழுதுபோக்காக இருந்ததால் பலமான கைதட்டல்.
நிகழ்ச்சியில் ஒரு ஆவணப்படத்தைக் காட்சிப்படுத்தியதால் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் அமர்ந்தோம். அப்போது ஓவியத்துறை சார்ந்தவர் இலக்கியவாதியிடம் ‘என்ன சார் 20, 30 புத்தகங்கள் எழுதி இருக்கீங்க… உங்க எழுத்தை படிச்சு கூடவா இந்த சமுதாயத்தில் ஒரு துளி மாற்றம் கொண்டு வர முடியலை… உங்கள் வாசகர்களில் ஓரிருவர் கூடவா மாறவில்லை…’ என்று கேட்டார். இருவரும் நண்பர்கள் போல. அதனால் அந்த கேள்வியை இலக்கியவாதி சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கும் குபுக்கென பெரிய சிரிப்பை வெளிப்படுத்தி ‘நீ வேறய்யா… நான் என்ன சமுதாயத்தை சீர்திருத்தவா எழுதுகிறேன்… செல்லும் இடங்களில் என் மீது வெளிச்சம் கிடைக்கிறது… பொழுதும் போகிறது…’ என்ற கோணத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்.
இப்படி தன் மீது வண்டி வண்டியாய் குப்பைகளை வைத்துக்கொண்டு சமுதாயமே சரியில்லை என்று சொல்லும் நபர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கவே முயல்கிறேன்.
என் பதிவுகளை தொடர்ச்சியாக படித்துவரும் 60+ வயது வாசகர் ஒருவர் ஒருநாள் என் பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்த தகவல் எனக்கு அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது.
‘காலையில் நான் எழுந்திருக்கும்போது என் மனம் வெவ்வேறு உணர்வுக் குழப்பங்களில் இருக்கும். எழுந்து ஒருமணி நேரத்துக்கு யாரிடமும் பேச மாட்டேன். உணர்வு ரீதியான குழப்பத்தில் இருந்து மீண்டவுடன்தான் பேச ஆரம்பிப்பேன். உங்கள் விடியற்காலை பதிவுகளை காலை காபி குடித்துக்கொண்டே படிக்கும்போது ஏதோ ஒரு பாசிட்டிவ் உணர்வு எனக்குள் நிரம்புகிறது. அதற்குப் பிறகு வீட்டில் எனக்கு எரிச்சல் கொடுப்பதைப் போல என் பிள்ளைகளும் மருமகள்களும் ஏதேனும் பேசினால்கூட எனக்கு கோபம் வருவதில்லை. அதுபோல வீட்டை விட்டு வெளியில் சென்றால் முகம் தெரியாத நபர்கள் யாரேனும் என்னை ஏதேனும் சொன்னால்கூட கோபப்படுவதில்லை. முன்பெல்லாம் எல்லாவற்றுக்கும் கத்துவேன். இப்போது என் கோபம் குறைந்து சாந்தமாகிவிட்டேன். காரணம் காலை காபியுடன் நீங்கள் எழுதும் பதிவுகள் எனக்குள் ஏற்படுத்தும் நேர்மறை தாக்கம்…’
எத்தனை நெகிழ்வான கருத்தை உள்ளடக்கிய பின்னூட்டம்.
நாம் செய்கின்ற செயல்கள் நமக்கு சிறியதாக இருக்கலாம். ஆனால் அது மற்றவர்களிடம் மிகப் பெரிய மாற்றத்தை உண்டு செய்யும் என்பதால் சொல்லும் சொல்லிலும், செய்யும் செயலிலும் கவனம் தேவை. அதற்கு எண்ணும் எண்ணத்தில் தூய்மையும் நேர்மையும் இருக்க வேண்டும். அது இருந்துவிட்டால் நம் சொல்லையும் செயலையும் நாம் கவனிக்க வேண்டியதில்லை. அவை தானாக தங்களை கவனித்துக்கொள்ளும். நம்மை மேம்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கும்.
ஒரு புள்ளியும், கமாவும் கதை கட்டுரை எழுதும்போது தவறிவிட்டால் அந்தப் படைப்பு புரியாமல் போகாது. ஆனால் கம்ப்யூட்டர் லேங்குவேஜ்களில் புரோகிராம் எழுதும்போது கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்கத் தவறிய புள்ளியும், கமாவும் பல பிழைத்தகவல்களை வெளிப்படுத்தி சரியான தீர்வைக் கொடுக்காது. அதுவும் COBOL போன்ற மொழிகள் ஒரு கமா, செமிகோலன் தவறினால் பக்கம் பக்கமாய் தவறை சுட்டிக் காட்டும்.
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நம்முடைய சின்ன சின்ன அசைவும் பெரிய பெரிய மாற்றத்துக்கு வித்திடும். பல நம் கவனத்துக்கு வரவே வராது. நம் கவனத்துக்கு வருகின்றவை நம்மை இன்னும் செம்மைப்படுத்திக்கொள்ள உதவும்.
எண்ணம், சொல், செயல் இவை மூன்று ஒன்றாக இருப்பவர்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையிலும், செய்கின்ற சின்ன சின்ன செயல்களிலும் நேர்மறை வெளிப்படும். காரணம் அவர்களின் எண்ணமே நேர்மறையாக இருப்பதே.
எண்ணம் சொல் செயல் இவை மூன்றும் ஒன்றாக இருக்கும்படி வாழ்வது கடினம் என்று நினைப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். எண்ணத்தை சீர் செய்யாமல் மனம் போன போக்கில் பேசும்போதும், செயல்படும்போதும்தான் பிரச்சனையே உண்டாகிறது. உங்கள் எண்ணத்தில் மட்டும் கவனம் வையுங்கள். உங்கள் எண்ணத்துக்கு துரோகம் செய்யாமல் மனசாட்சியுடன் நடந்துகொண்டால் அதுவே உங்கள் சொல் மற்றும் செயலை வழிநடத்தும்.
முயற்சி செய்து பாருங்களேன்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP