தினம் ஒரு புத்தக வெளியீடு – வெர்ச்சுவல் நிகழ்ச்சி – கொண்டாட்டம் – நாள் 5!
நாள்: மார்ச் 6, 2021
இடம்: இந்த நிகழ்ச்சியை 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடுவதாக ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியை 14 நாட்களும் வெர்ச்சுவலாக ஆன்லைனில் நடத்துகிறேன். ஃபேஸ்புக்கும், காம்கேர் டிவியுமே நிகழ்ச்சி மேடை.
சிறப்பு விருந்தினர்: உயர்திரு. எல். முருகராஜ்
சிறப்பு விருந்தினர் குறித்து!
இவர் தினமலரில் முதன்மை போட்டோ ஜர்னலிஸ்ட். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தினமலரில் பணிபுரிந்து வரும் இவர் படிப்படியாக தன் குணத்தாலும், உழைப்பாலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வாழ்க்கையில் வெற்றி கண்டவர்.
ஒரு மனிதரால் எல்லோரிடமும் பாகுபாடின்றி ஒரே மாதிரி கனிவான மரியாதை கொடுத்து பேசவும், பழகவும் முடியுமா என நான் வியக்கும் மனிதநேயம் மிக்க மனிதர். தேவை மற்றும் எதிர்பார்ப்பு சார்ந்த உலகமாகிவரும் இன்றைய கமெர்ஷியல் உலகில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித நேயத்துடன் பழகும் இவரது மென்மையான உயர்ந்த குணம்தான் இவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் குறித்து இவர் தினமலரில் எழுதும் நிஜக்கதைகளை உள்வாங்கிக்கொள்வோர் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்வார்கள். எப்போதுமே கஷ்டப்படும் மனிதர்களின் சோகங்களை உள்வாங்கி அவர்களுக்கு ஏதேனும் ஒருவிதத்தில் வெளிச்சத்தை காட்டுவதற்கு தன் எழுத்து மற்றும் புகைப்பட திறமையை சேவையாக்கிக்கொண்டவர்.
வேலையில் சேர்ந்து கொஞ்சம் பதவி உயர்வு கிடைத்தவுடனேயே நடை உடை பாவனை அத்தனையிலும் மாற்றம் பெற்று சற்றே செருக்குடன் நடந்துகொள்ளும் இன்றைய மனிதர்களுள் 35 வருட உழைப்பையும் தன் கனிவில் கரைத்து பழகி அனைவரையும் அன்பால் ஈர்க்கும் இனிய சுபாவம் கொண்டவர்.
இத்தகு சிறப்புமிக்க இவரை நாங்கள் நடத்துகின்ற வெர்ச்சுவல் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைக்க அழைத்தவுடன் கொஞ்சமும் தயங்காமல் ஒத்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இனி இவரின் உரை இவரது வார்த்தைகளில்…
//தினம் ஒரு புத்தக வெளியீடு’ – Virtual Event.
நான் ஒரு நாளிதழுக்கு வேலை பார்க்கும் போட்டோ ஜர்னலிஸ்ட்.
பல வருட அனுபவத்தில் எனக்கான வேலை எது என்பதை முடிவு செய்ய இரண்டு நிமிடம் போதும் ஆனால் இரண்டு நாளாக ஒரு விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறேன்.
அது காம்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் , நல்லதை மட்டுமே நாள்தோறும் எழுத்தால் விதைத்துவரும் காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய எண்ணற்ற புத்தகங்களில் ஒன்றை ‛மெய்நிகர்’ முறையில் நான் வெளியிட வேண்டும் என்பதுதான்.இந்த வெளியீடு சம்பிரதாயத்தில் குறைந்த பட்சம் நான்கு வார்த்தையாவது சொல்லவேண்டும், அந்த நாலு வார்த்தைக்குதான் இந்த திணறல்.
தினம் ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் நான் வெளியிடப் போவது பனிரெண்டாவது புத்தகம் ஆகவே இதற்கு முன் புத்தகத்தை வெளியிட்ட பதினொரு பேர் எனக்கு கொஞ்சம் கூட விஷயத்தை விட்டுவைக்காமல் மேடத்தைப் பற்றி நிறைய சொல்லியுள்ளனர்.
நான் பார்வையில்லாதவர்களின் பரிதாப நிலையைப் பற்றி எழுதிக் கொண்டு இருக்கும் போது, இந்தப் பரிதாபமெல்லாம் வேலைக்காகது என்று சொல்லிவிட்டு பார்வையற்றவர்கள் கணணி இயக்குவதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்துக் கொடுத்து என்னை பிரமிக்க வைத்தவர்.
அது முதல்தான் அவரோடு நட்பு ஏற்பட்டது எனது ‛குட்புக்’கில் அவர் பெயர் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை ஆனால் அவரது ‛குட்புக்’கில் நான் இருப்பதுதான் ஆச்சர்யம். அதன் விளைவுதான் அவரது புத்தகத்தை ‛விர்ச்சுவல்’ முறையில் வெளியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது இந்த வாய்ப்பை கொடுத்தமைக்கு அவருக்கு மிகவும் நன்றி.
ஒரு கட்டுரையை எழுதி முடிக்கவே மூச்சு வாங்கும் நிலையில் சர்வ சாதாரணமாக இது என் இந்த மாத படைப்பு என்று கனமாய் ஒரு புத்தகத்தை வெளியிடுவார்.
நான் எனக்கான உயரத்தை நெருங்கவே திணறிக் கொண்டு இருக்கும் போது அவரோ சிகரத்தில் ஏறி சாதாரணமாக நின்று கொண்டிருப்பவர்.
அவர் எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறார்?
சரியாக தெரியாது.
சரி என்னவெல்லாம் கம்ப்யூட்டர் துறையில் சாதித்திருக்கிறார்?
அதுவும் சரியாக தெரியாது.
பிறகு அவரைப்பற்றி என்னதான் தெரியும்?
கம்ப்யூட்டருக்கு என்ன தமிழ்ச் சொல் என்று கண்டுபிடிப்பதற்கு முன்பாக அதை சிறப்புடன் கையாண்டவர் என்பதும் தான் சிரமப்பட்டு கற்றதை மற்றவர்கள் சிரமமின்றி கற்றுக்கொள்ள புத்தகமாக தந்தவர் என்று தெரியும்.
குழந்தைகளுக்கு,பெண்களுக்கு,பெரியவர்களுக்கு,இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் எளிமையாக எண்ணற்ற நுால்கள் எழுதிவருவதுடன்,தான் எழுவது எல்லோருக்கும் போய்ச்சேரவேண்டும் என்பதற்காக எழுத்தையும் தன்னைப் போலவே எளிமையாக்கி வைத்திருப்பவர்.அதிலும் கடினமான தொழில்நுட்ப விஷயத்தைக்கூட நாவல் போல சுவராசியமாக்கிதரும் வல்லமை கொண்டவர் என்று தெரியும்.
ஒரு நாளாவது பிரம்ம முகூர்த்தத்த நேரத்தை (அதிகாலை 3 மணி) பார்த்துவிட வேண்டும் என்று எண்ணி இன்று வரை அதில் தோல்வியே கண்டுவரும் நிலையில், நாள் தவறாமல் அந்த நேரத்தில் எழுந்து தனது வேலையை அல்ல வேள்வியை துவங்கிவருபவர் என்று தெரியும்.
கொரோனா காலத்தில் நிறைய தகவல்கள் தந்ததால் முகநுாலுக்கு பலர் நன்றிக்கடன் பட்டிருப்பர், ஆனால் அந்த நல்ல தகவலின் சுரங்கமாய் இருந்ததால் முகநுால் இவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது என்று தெரியும்.
பழம்பெருமை பேசும் உலகில் ‛இன்று புதிதாய் பிறந்தோம்’ என்று ஒரு குழந்தையைப் போல உற்சாகமாய் உவகையாய் புதுப்புது விஷயங்களில் தனது நாட்டத்தையும், ஒட்டத்தையும் காட்டிவருபவர். அதன் வெளிப்பாடே இந்த மெய்நிகர் புத்தக வெளியீடு.
நாளைய உலகம் வாசிப்பு பழக்கத்திற்கு எப்படி மாறப்போகிறது என்பதை இன்றே உணர்ந்து அதற்கு ஒரு வழிகாட்டியாக முன்னத்தி ஏராக இருந்து இந்த விழாவினை நடத்திவருகிறார்,அவரது முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
எல்.முருகராஜ்
மார்ச் 6, 2021//
வாசகர்களாகிய உங்கள் அனைவரின் பேரன்புடன் என் தொழில்நுட்பப் பயணத்தில் எழுத்துப் பயணத்தையும் இணைத்துக்கொண்டு தொடர்கிறேன்.
என் எழுத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்பு நன்றிகள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP
#காம்கேர்_புத்தகம் #compcare_book
#Daily_a_Book_Release_Virtual_Event