ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 66
மார்ச் 7, 2021
தன்னம்பிக்கையும், ‘போலி’ தன்னம்பிக்கையும்!
உங்கள் குழந்தைகளுக்கு தவறு செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி வளருங்கள். அதில் தவறே இல்லை. ஆனால் எது தவறு என்பதை சொல்லி வளருங்கள். அவர்களை உணரச் செய்யுங்கள்.
அதற்கு முன் நீங்கள் தவறு என்றால் என்ன அர்த்தம் என்று என்பதை ஆழமாக தெரிந்துகொள்ளுங்கள்.
கைத்தவறி பொருட்களை உடைத்துவிடுதல், சாப்பிடும்போது தண்ணீரை கொட்டிவிடுதல், பால் காபி போன்றவற்றை கீழே சிந்திவிடுதல், தெரியாமல் புத்தகங்களை கிழித்துவிடுதல், பள்ளிக்குக் கொண்டு சென்ற பொருட்களை தவறவிடுதல், சைக்கிள் ஓட்டும்போது கீழே விழுந்து செலவு வைத்தல், மொபைலை தவறுதலாக கீழே போட்டு டிஸ்ப்ளே உடைந்துவிடுதல் போன்றவற்றை எல்லாம் தவறு என்ற பிரிவில் சேர்த்து பிள்ளைகளை கடுமையாக கோபித்துக்கொண்டால் உங்கள் பிள்ளைகள் பயத்துடன்தான் வளர்வார்கள். எதிர்காலத்தில் தன்னம்பிக்கைக் குறைவானவர்களாகவோ அல்லது அதீத தன்னம்பிக்கை இருப்பதாகக் காண்பித்துக்கொள்ளும் ‘போலி’ தன்னம்பிக்கைமிக்கவர்களாகவோதான் வளர்வார்கள். இயல்பாக இருக்க மாட்டார்கள்.
மேலும் உங்களிடம் உண்மையாக நடந்துகொள்வார்கள் என நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது. காரணம் நீங்கள் அவர்களிடம் காண்பிக்கும் கடுமையை எதிர்நோக்கும் சக்தியற்று சின்ன சின்ன விஷயங்களையும் மறைக்க ஆரம்பிப்பார்கள். விளைவு உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரிக்கும்.
ஒழுக்கம் தவறி நடப்பது, பிறர் மனதை காயப்படுத்துவது, சட்டத்துக்குப் புறம்பானதை செய்வது, சாதி மத இன வேறுபாட்டை வளர்த்துக்கொண்டு கொடிபிடிப்பது இவைதான் தவறு என்ற பிரிவில் வரும்.
இந்த விஷயங்களில் உங்கள் பிள்ளைகள் சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்றால் தெரியாமல் வீடுகளில் அவர்கள் சேட்டை எனும் பெயரில் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் விட்டுவிடுவதோ அல்லது ‘என்னடா செல்லம், இப்படி செய்துட்டே… கீழே கொட்டியது தவறே இல்லை… ஆனால் பார் அம்மாவுக்கு எவ்வளவு வேலை அதை சுத்தம் செய்ய… … இனிமேல் பார்த்து கவனமா செய் என்ன…’ என அன்புடன் எடுத்துச் சொல்லும்போதுதான் அவர்கள் உணர்வுப்பூர்வமாக தங்கள் செயல்களை உணர ஆரம்பிப்பார்கள்.
அதைவிட்டு தண்ணீரோ, பாலோ, காபியோ கீழே கொட்டிவிட்டால் அதற்கு என்னவோ செய்யக் கூடாத தவறை செய்துவிட்ட தொனியில் கடுமையான முகத்துடன் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் செய்து அவர்களை திட்டியும், மிரட்டியும், அடித்தும் செய்து வளர்த்தால் அவர்கள் குறைகளுடன்தான் வளர ஆரம்பிப்பார்கள்.
தவறே செய்யக் கூடாது, தவறு செய்வது அசிங்கமானது, அவமானகரமானது என்ற தொனி வேண்டாமே. தவறு செய்யக் கூடாதுதான். ஆனாலும் சின்ன சின்ன தவறுகள் சகஜம்தான். ஆனால் திரும்பத் திரும்ப அதே தவறை செய்ய நேரிட்டால் பிரச்சனை பிள்ளைகளின் அணுகுமுறையில்தான் என்பதை அழுத்தமாக சொல்லி வளருங்கள். அப்போதுதான் அவர்கள் தாங்களாகவே தங்கள் தவறுகளுக்கு வருந்துவார்கள். அந்த வருத்தமே அவர்களை சரி செய்துகொள்ள வழிவகை செய்யும்.
உங்கள் மகனோ மகளோ ஏதேனும் ஒருநாள் அவர்கள் தினமும் செல்லும் பாட்டு வகுப்புக்கோ அல்லது ஏதேனும் சிறப்பு வகுப்புக்கோ செல்ல விருப்பம் இல்லாமல் ‘இன்னிக்கு கிளாஸுக்கு போகலை’ என்று சொன்னால் ‘நான் எத்தனை கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டி உனக்காக மெனக்கெடறேன்… நீ என்னடா என்றால் அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் கிளாஸூக்கு கட் அடிக்கிறாயா?’ என்று புலம்பாமல் அவர்கள் ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று அவர்களிடம் மனம் விட்டுப் பேசி காரணத்தை அறிய முற்படுங்கள். உங்கள் முன்னிலையிலேயே, வகுப்பிற்கு வரவில்லை என்பதை போனிலோ, வாட்ஸ் அப்பிலோ ஆசிரியர்களுக்கு அவர்களைவிட்டே தகவல் கொடுக்கச் செய்யுங்கள். பொதுவெளியில் பண்புடன் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்கத்தை இப்படியான சின்ன சின்ன செயல்பாடுகள் மூலம் உணரச் செய்யுங்கள்.
பெரியவர்களான நமக்கேகூட சில நாட்கள் மனம் சரியில்லாமல் சோர்வாக இருக்கும். தினமும் செய்யும் வேலைகளில் அத்தனை உற்சாகம் காட்டாமல் ஏனோ தானோவென்றுதான் வேலை செய்வோம். சின்னக் குழந்தைகளுக்கு அந்த உணர்வு இன்னும் அதிகமாகவே இருக்கும். எனவே அவர்களிடம் பேசி காரணத்தை அறியுங்கள். ஓரிரு நாட்கள் வகுப்பை கட் செய்வது ஒன்றும் மாபெரும் தவறு கிடையாது. புரிந்துகொண்டு பிள்ளைகளின் மனநலனில் அக்கறை இருப்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். நிச்சயம் அவர்கள் உணர்ந்துகொண்டு வளர்வார்கள்.
தேர்வு நடந்துகொண்டிருக்கும்போது உங்கள் பிள்ளைகள் மொபைலில் ஏதேனும் ஒரு கேம்ஸ் விளையாட அனுமதி கேட்டால் ‘டைமர் வைத்துக்கொண்டு விளையாடு. பத்து நிமிடம் என்றால் அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட விளையாடாதே. படிக்க வேண்டும், பரிட்சை இருக்கிறது’ என்று அன்புடன் சொல்லுங்கள். தொடர்ச்சியாக படித்துக்கொண்டே இருப்பதைவிட இடையில் 10 நிமிடங்கள் இப்படி தங்களுக்குப் பிடித்ததை செய்யும்போது அவர்கள் மனம் புத்துணர்வு அடையும். படிப்பதும் நன்றாக மனதில் பதியும். பத்து நிமிடத்தை பத்து நிமிடத்துக்குள் நிறுத்திக்கொள்ள வைப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம் உள்ளது. விளையாடவேக் கூடாது என அதிகாரத் தொனியில் சொல்வதில் எந்த பலனும் கிடைத்துவிடாது. தெரியாமல் பாத்ரூமுக்குள் சென்று கதவை தாழ்போட்டுக்கொண்டு விளையாடுவார்கள்.
ஒருசிலரை பார்த்திருக்கிறேன் தங்கள் பிள்ளைகளை மிலிட்டரி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைப் போல நடத்துவார்கள். ‘என் பிள்ளை எனக்குத் தெரியாமல் எதையுமே செய்ய மாட்டான்….’ என பெருமை வேறு பேசுவார்கள். ஆனால் அந்தப் பிள்ளைகள்தான் திருட்டு தம் அடிப்பது முதல் பெற்றோருக்குத் தெரியமால் காதல் திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக வந்து நின்று அதிர்ச்சிக் கொடுப்பதுவரை செல்லத் துணிவார்கள்.
சின்ன சின்ன விஷயங்களில் விட்டுப் பிடித்தால் பெரிய பெரிய விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் வரும். இல்லை என்றால் சின்ன சின்ன விஷயங்கள் மட்டுமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். பெரிய பெரிய விஷயங்கள் உங்கள் அனுமதிக்காகக் காத்திருக்காமல் உங்கள் கவனத்துக்கே வராமல் கடந்து சென்று கொண்டே இருக்கும். கவனம்!
உங்கள் பிள்ளைகள் உத்தமர்களாக வளர வேண்டும் என்றால் முதலில் நீங்கள் அதற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்கள். அவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்வார்கள். பாடம் எடுத்துக் கற்றுத்தர குடும்பம் ஒன்றும் பள்ளிக்கூடம் அல்ல. பள்ளிக்கூடங்களையே குடும்பம்போல அன்புடன் பாவிக்க வலியுறுத்தும் காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.
பெற்றோராய் இருப்பது அத்தனை சுலபம் இல்லை மக்களே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP