ஜம்முனு வாழ காம்கேரின் OTP-82: வினையும் தினையும்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 82
மார்ச் 23, 2021

தினை விதைத்தால் தினை முளைக்கத் தவறினாலும் மறந்தும் வினை முளைக்காது!

எல்லா விஷயங்களையும் சொல்லிக்கொடுத்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. பார்த்துக்கொண்டிருந்தாலே தெரிந்துகொண்டுவிடும் அளவுக்குத்தான் நம் மனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சொல்லிக் கொடுப்பது என்பது ஒரு சாதனத்துக்கு அதன் நேரடியான பலனைவிட இணைப்பாகக் கொடுக்கும் மற்றொரு வசதியைப் போன்றது.

உதாரணத்துக்கு தினமும் உங்கள் பிள்ளைகள் கண்களில்படுமாறு ஏதேனும் புத்தகங்கள் வாசிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இரண்டு வயது குழந்தைகூட ஏதேனும் ஒரு புத்தகத்தை தலைகீழாக வைத்துக்கொண்டாவது கால் மேல் கால் போட்டுக்கொண்டு படிப்பதைப் போல பவானை செய்யும்.

குழந்தைகள் சொப்பு வைத்து சமைத்து சாப்பிடுவதாக விளையாடுவதும், தன் முகத்துக்குப் பொருந்தாத அம்மாவின் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு, அப்பாவின் துண்டை புடவையாக்கிக்கொண்டு கைகளில் ஒரு குச்சி வைத்துக்கொண்டு சுவரை கரும்பலகையாக கற்பனை செய்து  ‘ஆ,ஊ’ என மழலையில் வகுப்பெடுப்பதும், சோபாவில் அமர்ந்து தன் தங்கையையோ, தம்பியையோ தன் தோளில் சாய்த்துக்கொண்டு அப்பாபோல அரவணைப்புக் காட்டுவதும் தன்னைச் சுற்றி வீட்டில் இருப்பவர்களின் செய்கைகளைப் பார்ப்பதினால்தான்.

இதையெல்லாம் எந்த அப்பா அம்மா சொல்லிக்கொடுக்கிறார்கள் குழந்தைகளுக்கு?

கல்லையும் மண்ணையும் சுமந்துகொண்டு வேலை செய்யும் கட்டிட வேலை செய்பவர்களின் பிள்ளைகள் கற்களையும் மண்ணையும் வைத்து அதே வீடு கட்டும் விளையாட்டைத்தான் விளையாடுவார்கள். பார்த்திருப்போம்.

அதனால்தான் உறுதியாக சொல்கிறேன் நம் மனம் நம்மைச் சுற்றி நடப்பதை உணர்வு ரீதியாக உள்வாங்கிக்கொண்டு செயல்படுகிறது. பெற்றோர் எந்த அளவுக்கு பண்பிலும், ஒழுக்கத்திலும், அன்பிலும், பாசத்திலும் மிகச் சரியாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களின் பிள்ளைகள் அவர்களின் பிரதியாக உருவாவார்கள்.

தினை விதைத்தால்
தினை முளைக்கத் தவறினாலும்
மறந்தும் வினை முளைக்காது!
ஆனால்
வினை விதைத்தால்
தவறியும்
தினையை முளைக்க விடாது!
நிச்சயம்
வினை
முளைத்தே தீரும்
கவனம்!

நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருக்கும்போது வகுப்பாசிரியர் ‘நீங்கள் எதிர்காலத்துல் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்?’ என்று கேட்டுக்கொண்டே வந்தார். மற்றவர்கள் வழக்கம்போல டாக்டர், இன்ஜினியர், ஆஃபீசர், வக்கீல் என சொன்னார்கள். என்னுடைய பதில் என்ன தெரியுமா?

‘என் அம்மாவைப் போல ஆஃபீஸ் செல்ல வேண்டும்’. இந்த பதிலுக்கு  ஆசிரியர் சிரித்துக்கொண்டார்.

என் அப்பா அம்மாவுக்கு இரவு பகல் என 24 மணிநேர சுழற்சிப் பணி. சில நாட்கள் இரவு ஷிஃப்ட் பார்த்துவிட்டு அடுத்த நாள் பகல் ஷிஃப்ட்டையும் முடித்துக்கொண்டு மதியத்துக்கு மேல்தான் வீட்டுக்கே வர முடியும்.

வீட்டில் அப்பா அல்லது அம்மா யாரேனும் ஒருவர் இருப்பார்கள். அப்பா இருந்தால் அவர் தாயுமானவர். அம்மா இருந்தால் அவர் தந்தையுமானவர். இருவரிடமும் அந்த ஆளுமை இருந்ததால் அந்தப் பண்பும் எங்களுக்குள் தானாகவே வந்தது.

மேலும் வேலை என்பது வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக மட்டும் இல்லாமல் உளவியல் ரீதியாகவும் நம்மை செம்மைப்படுத்தும் என்பதையும், தன்னம்பிக்கை, தைரியம், குறிக்கோள், லட்சியம் இப்படி பலதரப்பட்ட நேர்மறை விஷயங்களை உள்ளுக்குள் செலுத்தி நாம் வாழும் வாழ்க்கையை நிறைவாக்கித்தரும் என்பதையும் பாடம் எடுக்காமல் வாழ்ந்து சொல்லிக்கொடுத்தார்கள் என் பெற்றோர்.

இதனால்தான் ஒரு நிறுவனம் நடத்தும் அளவுக்கு ஆளுமையை என் மிக இளம் வயதிலேயே பெற முடிந்தது. என் 22 வயதிலேயெ மிக நேர்த்தியான அலுவலகம், கீபோர்ட் சப்தம் கூட பெரிதாக கேட்கும் அளவுக்கு அமைதியான கட்டுக்கோப்பான நிர்வாகம் என்று பரபரவென்றிருக்கும் என்னைப் பார்ப்பவர்கள் ‘இது உங்கள் தந்தை ஆரம்பித்த நிறுவனமா… படித்து முடித்ததும் நீங்கள் இதை நிர்வகிக்கிறீர்களா?’ என்று கேட்டு வியப்பார்கள். ‘இல்லை. என் பெற்றோர் ஆசியுடன் நான் தொடங்கி நிர்வகிக்கும் நிறுவனம்’ என்று பதில் சொல்லி இருக்கிறேன்.

இந்தக் கதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் நாம் எதைப் பார்க்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். சொல்லிக் கேட்பதெல்லாம் இரண்டாம்பட்சமே.

இன்னும் ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், என் நிறுவனத்துக்கு நான்தான் முதலில் செல்வேன். ‘எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும்’ காலை 6 மணிக்கு ‘டான்’ என்று ஆஜராகிவிடுவேன். மழை, வெயில், புயல், வெள்ளம் எதுவாக இருந்தாலும் நான் என் நிறுவனத்தில் இருப்பேன்.

அப்போதிருந்த அலுவலகத்தில் நுழை வாயிலிலேயே என் அறை இருக்கும். அலுவலகத்தில் நுழைந்ததும் விளக்கு ஏற்றி ஊதுவத்தி வாசனையுடன் வருபவர்களை வரவேற்கும் ஆன்மிக சூழல். அப்போதெல்லாம் எங்கள் காம்கேரில் மூன்று ஷிஃப்ட்டுகள். காலை 7 மணி ஷிஃப்ட்டுக்கு வருபவர்கள் 7.30, 7.45 என தாமதமாக வந்தால் மிகவும் சங்கடப்படுவார்கள். என்னைத் தாண்டித்தான் அலுவலகத்துக்குள் செல்ல வேண்டும் என்பதால் மிகவும் கில்டியாகவும் உணர்வார்கள். அதை அவர்கள் செய்கையில் இருந்தே தெரிந்துகொள்ள முடியும்.

அவர்களில் பலர் என் காதுபடவே பேசிக்கொள்வார்கள் ‘மேடமுக்கு வீட்டில் வேலையே கிடையாது போல. அதான் ஆஃபீஸுக்கு வந்து உட்கார்ந்து விடுகிறார்…’

ஒருமுறை என்னிடம் நேரடியாகவே சொன்ன ஒருவருக்கு நான் சொன்ன பதிலில் அவர் அதன்பிறகு என்னைப் பார்க்கும்போதெல்லாம் இரண்டு முறை வணக்கம் சொல்லித்தான் கடந்து போவார்.

அப்படி என்ன சொன்னேன்?

‘திருச்சியில் பி.எஸ்ஸி படித்துக்கொண்டிருந்தபோதே எனக்கும் என் சகோதரிக்கும் தனிவீடு எடுத்து சமைத்து சாப்பிட ஏற்பாடு செய்திருந்தனர் என் பெற்றோர். அவர்களுக்கு டிரான்ஸ்பர் உடனடியாகக் கிடைக்காததால் இரண்டு வருடம் சமையல், சாப்பாடு என எங்களுக்குத் தனிக்குடித்தனம். விடியற்காலை 4 மணிக்கே எழுந்து குறிப்பிட்ட நேரங்களே வருகின்ற பைப்பில் தண்ணீர் பிடித்து எடுத்து வந்து, குளித்து, சமைத்து, சாப்பிட்டு மதியத்துக்கும் எடுத்துக்கொண்டு, சரியாக எட்டு மணிக்கு கல்லூரிக்குச் சென்று, மாலை வீட்டுக்கு வந்து இரவு டிபனுக்கு தயார் செய்து படித்து ஹோம்வொர்க் செய்து அசைன்மெண்ட் எழுதி ப்ராஜெக்ட் செய்து கல்லூரியிலும் பெயர் எடுத்து…’ என மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டவருக்கு மூச்சு முட்டியது.

நான் விடுவேனா?

‘நாம் ஒரு குறிக்கோளை எடுத்துக்கொண்டால் அதற்கேற்றவாறு நம் வேலைகளை நாம்தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். 24 மணி நேரம் என்பது எல்லோருக்கும் இயற்கைக் கொடுத்துள்ள வரம். அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது அவர்வர் சாமர்த்தியம். புத்திசாலித்தனம். எங்களை புத்திசாலியாக வளர்த்துள்ளார்கள் எங்கள் பெற்றோர். ஏனெனில் அவர்களும் புத்திசாலிகள்.’

எங்கள் நிறுவனப் பொறியாளர்கள் என்னைப் பார்த்து வேலையைக் கற்றுக்கொண்டார்கள். நேரம் தவறாமையை கற்றுக்கொண்டார்கள். குறிக்கோளுடன் வாழக் கற்றுக்கொண்டார்கள். நேர்மையாக இருக்கப் பழகினார்கள். நேர்த்தியாக செயல்பட ஆரம்பித்தார்கள். அவர்களைப் பார்த்து அடுத்தடுத்த வந்த பொறியாளர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். இதோ 27 வருடங்கள் கடந்து விட்டது. 28-வது வருடத்தில் இருக்கிறது எங்கள் காம்கேர்.

எங்கள் பெற்றோரைப் பார்த்து நான் வாழப் பழகினேன். என்னைப் பார்த்து என் நிறுவனத்தின் பொறியாளர்கள் கற்றுக்கொண்டார்கள். இப்படி வழிவழியாகத் தொடரும் கற்றுக்கொள்ளும் இயல்பினால் பிரமாண்ட சரித்திரங்களும், மாபெரும் சாம்ராஜ்ஜியங்களும் உருவாகின்றன. இந்த சமுதாயத்தில் நல்ல மனிதர்களை உருவாக்குவதில் நம் பங்கும் உள்ளது என்பதை நாம் உணர ஆரம்பித்தாலே நாம் ஒவ்வொருவரும் நம்மை கட்டமைப்பதில் முனைப்புக் காட்டத் தொடங்குவோம்.

முதல் புள்ளி வைப்பதுதான் கஷ்டம். அடுத்தடுத்தப் புள்ளிகள் வைப்பதற்கு அத்தனை கஷ்டங்கள் இருக்காது. அந்தப் புள்ளிகளை இணைத்து கோலம் போடுவதில்தான் நம் வாழ்க்கையின் சூட்சுமம் இருக்கிறது. இது வியாபாரத்துக்கு மட்டும் அல்ல. வாழ்க்கைக்கும் பொருந்தும் லாஜிக்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP, #COMPCARE_OTP

(Visited 45 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon