ஜம்முனு வாழ காம்கேரின் OTP-81: வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 81
மார்ச் 22, 2021

வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல, வீட்டு வேலை என்பது அலுவலக வேலைபோன்று அத்தனை சுலபமும் அல்ல!

எங்கள் வீடு ஒன்றை விற்பனை செய்வதற்காக முயற்சித்து வருகிறோம். அதை வாங்குவதற்காக வந்திருந்த ஒரு நபருக்கு 60 வயதிருக்கும். வீடு சம்மந்தமான பேச்சுக்குப் பிறகு பொதுவான சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

அவர் என் அப்பாவை தன் சம வயது என்று நினைத்தே பேசிக்கொண்டிருந்தார். நான் இடையில் பேச்சோடு பேச்சாக ‘அப்பாவுக்கு 75 வயதாகிறது…’ என்பதை சொன்னேன். இதை ஏன் சொல்ல வேண்டியிருந்தது என்றால் என்னையும் இருபத்தைந்து இருப்பத்தாறு வயது பெண்ணாக நினைத்துக்கொண்டு ‘இந்த காலத்து பிள்ளைகள்…’ என்ற கோணத்தில் ஏதோ  ‘பொத்தாம் பொதுவாக’ தன் கருத்துக்களை சொன்னதால் தெளிவிற்காக அப்பாவின் வயதை சொல்ல வேண்டி இருந்தது.

உடனே அந்த நபர் ஆச்சர்யப்பட்டு ‘அப்படியா… நல்லது நல்லது… ஒரு வயதுக்கு மேல் இருக்கின்ற ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்குக்கொடுத்துள்ள கிஃப்ட்’ என்று ஏதோ நேர்மறையாக சொல்வதாக எதிர்மறையான கருத்தை வெளியிட்டார். அது அவருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன சொல்ல வருகிறார்? ‘இதுவரை இருப்பதே பெரிய விஷயம்… இனி வாழும் காலம் போனஸ் காலம்’ என்று சொல்கிறாரா என்று சட்டெனெ ஒரு கோபம் அவர் மீது உண்டனாது.

இப்படித்தான் பலர் வயதில் பெரியோர்கள் மீது பலவிதமான கண்ணோட்டங்களை வைத்துள்ளார்கள். தங்கள் அறியாமையை அப்பட்டமாக அடுத்தவர்கள் மீது அள்ளி வீசவும் செய்கிறார்கள்.

ஒருமுறை எங்கள் தெருவில் சாலை செப்பணிடும் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது நாங்கள் அப்பார்ட்மெண்ட்டில் இல்லை. தனி வீட்டில் குடியிருந்தோம். அந்தத் தெருவில் பெரும்பாலான வீடுகள் தனி வீடுகள்தான். என் அப்பா வழக்கம்போல வேலை செய்பவர்களுடன் பேச்சுக் கொடுத்து, அவர்களுக்குக் குடிப்பதற்காக வீட்டு வாசலில்  தண்ணீர் கேன் வைத்து, மாலை 3 மணி அளவில் சுடச்சுட டீ தயாரித்துக் கொடுத்து அவர்களை ஊக்குவித்துக்கொண்டிருந்தார்.

அப்பாவுக்கு வீடு கட்டுவதை அருகில் இருந்து கவனித்துக்கொண்டே இருப்பது பிடிக்கும். சிவில் படிக்கவில்லையே தவிர வீடு கட்டும் நுட்பம் அத்தனையும் அத்துபடி. அப்பாவின் ஆர்வத்தைப் பார்க்கும் பலரும் அப்பா ஒரு சிவில் இன்ஜினியர் என்றே நினைத்துக்கொள்வார்கள். எங்கள் மூவருக்கும் வீடு கட்டும்போதும் அவரே அருகில் இருந்து பார்த்துப் பார்த்து கட்டினார். எங்கள் குடும்பத்தில் யார் வீடு கட்ட வேண்டுமென்றாலும் அப்பாவிடம்தான் ஆலோசனை கேட்பார்கள். வீடு கட்டுவது மட்டுமல்ல, எலக்ட்ரிகல் வேலை, மரவேலை, ப்ளம்பிங் என அத்தனையிலும் ஈடுபாடு அதிகம். தானாகவே இறங்கி வேலையும் செய்வார். பெரும்பாலும் எங்கள் வீட்டில் வெளி ஆட்கள் இதுபோன்ற வேலைகளுக்கு அழைப்பதில்லை. தவிர்க்க முடியாத வேலைகளுக்கு மட்டும் அழைப்பார்.

பணி ஓய்வுக்குப் பிறகு மட்டும் அல்ல, பணியில் இருந்தபோதும் அப்படித்தான். ஆர்வமும் ஊக்கமும் ஈடுபாடும் இருந்துவிட்டால் வயதோ வேறு எந்தக் காரணமும் தேவையில்லை எந்த வேலையை செய்வதற்கும்.

பணி ஓய்வுக்குப் பிறகு அவரது முழு கவனமும் எங்கள் காம்கேர் பணிகளில். எங்கள் காம்கேரின் ஒவ்வொரு செங்கல்லும் அவர் பெயரைச் சொல்லும்.

அப்பா சாலை செப்பணிடும் பணியில் இருப்பவர்களுக்காக செய்யும் உதவிகளை எதிர் வீட்டினர் பார்த்துக்கொண்டே இருந்தனர். அந்த வீட்டில் இருப்பவர்களும் வயதில் பெரியோர்களே. உடன் ஒரு மகள் மற்றும் மருமகன். அந்த மருமகன் வீட்டில் ஒரு துரும்பை நகர்த்த மாட்டார். கையில் காபி வர வேண்டும். சாப்பிட்ட தட்டை அப்படியே டேபிளில் வைத்துவிட்டு சென்றுவிடுவார். இப்படி அடுத்தவர் உழைப்பை சுரண்டுவதில் மன்னர்.

அந்த வீட்டுப் பெரியவர்கள் என் அப்பாவை பாராட்டிப் பேசியபோது ‘அவருக்கென்ன ரிடையர்ட்டு பர்சன்… வேலையா வெட்டியா… இப்படி பொழுதை போக்க வேண்டியதுதானே?’ என்று சொல்லி இருக்கிறார். அந்தப் பெரியவர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும். இளம் வயதில் சுறுசுறுப்பாக குறிக்கோளுடன் பணி செய்வதாக அவ்வப்பொழுது பாராட்டுவார்கள். அவர்களின் இளைய மகள் அவரது 25 வயதில் விபத்து ஒன்றில் இறந்துவிட்டதால் என்னைப் பார்க்கும்போது அவர்களுக்கு அவர்கள் இளைய மகள் நினைவு வருவதாகச் சொல்வார்கள். வாஞ்சையுடன் பேசுவார்கள். அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது தன் மருமகன் என் அப்பா பற்றி சொன்ன விஷயத்தையும் சொல்லி விட்டார்கள்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் குறித்த இதுபோன்ற கண்ணோட்டம் பரவலாக இருந்துகொண்டுதான் உள்ளது.

கடந்த பத்து வருடங்களாக மின்கட்டணம் முதற்கொண்டு, வீட்டு வரி, தண்ணீர் வரி என அத்தனையும் ஆன்லைனில் வந்துவிட்டதால் ஓய்வு பெற்றவர்கள் தப்பித்தார்கள். அதற்கு முன்பெல்லாம் மின்கட்டணம் கட்ட வேகாத வெயிலில் வரிசையில் நின்றுகொண்டிருக்கும் பெரியோர்களை அதிகம் பார்த்திருப்போம். அது மட்டுமல்ல கடைக்குச் செல்வது காய்கறிகள் மளிகை வாங்குவது என அத்தனையும் வீட்டுப் பெரியோர்களே செய்ய வேண்டிய சூழல்.

வேலை செய்வதில் தவறே இல்லை அல்லது செய்யச் சொல்வதிலும் தவறே இல்லை. ‘ஓய்வு பெற்றாகி விட்டது. சும்மாதானே வீட்டில் இருக்கிறார்… செய்யட்டுமே…’ என்ற மனோபாவமும் கண்ணோட்டமும்தான் மோசமானது என்கின்றேன்.

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் குறித்து யாரேனும் ‘அவர் என்ன செய்கிறார்?’ என்று கேட்கும்போது ‘என் அம்மா வீட்டில்தான் இருக்கிறார்’ என்ற பதிலை குழந்தைகளும், ‘என் மனைவி வேலைக்குச் செல்லவில்லை. சும்மாதான் இருக்கிறார்’ என்ற பதிலை ஆண்களும் சொல்வதை பார்த்திருப்போம்.

இதே மனநிலைதான் வயதானவர்கள் குறித்த கண்ணோட்டமும்.

எங்கள் நிறுவனத்தில் Work From Home-ல் இருக்கும் பல பொறியாளர்கள் ‘எப்போதடா ஆஃபீஸ் வந்து வேலை செய்வோம் என்றிருக்கிறது மேடம்…’ என்கிறார்கள். காரணம் வீட்டில் குழந்தைகளுக்கும் ஆன்லைனில் பாடம். பரிட்சை. சிறப்பு வகுப்புகள். இத்யாதி இத்யாதி. குழந்தைகளை கவனித்துக்கொள்வதை ஆண்களும் செய்ய வேண்டி இருப்பதால் கொஞ்சம் கூட ஓய்வே இருப்பதில்லை. உடல் அசந்து போகிறது என்று அலுத்துக்கொள்கிறார்கள்.

‘வீட்டு வேலை, சமையல் வேலை, சுத்தம் செய்யும் வேலை, துணி துவைத்து ஐயர்ன் செய்யும் வேலை, தின்பண்டங்கள் செய்து தரும் வேலை இதையெல்லாம் உங்கள் மனைவி பார்த்துக்கொள்கிறார்தானே?’ என்று கேட்பேன்.

‘ஆமாம் மேடம் அவளுக்கும் நாள் முழுக்க வேலைதான். இரவு தூங்கவே 11 மணி ஆகிறது…’ என்று பதில் சொல்வார்கள்.

‘என் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் சும்மா தான் இருக்கிறாள்’ என்று சொல்பவர்களுக்கு பெண்களின் பணிச்சுமை இப்போதாவது புரிகிறதா?

வீட்டில் பணி ஓய்வு பெற்ற அப்பா அம்மா இருந்தால் அவர்களின் பணிச்சுமையை கூர்ந்து கவனித்தால் அவர்கள் மீதான மதிப்பு கூடும்.

பணி ஓய்வு பெற்ற பெண்களாக இருந்தால் பேரன் பேத்திகளை கவனித்துக்கொள்வது, அவர்களை குளிப்பாட்டி, அவர்களுக்கு தேவையான சமையல் செய்து, அவர்களை சாப்பிட வைத்து, தூங்க வைத்து, கதை சொல்லி என நாள் முழுவதும் அவர்களை பார்த்துக்கொள்வதில் செல்கிறது. இடையில் தங்களுக்குத் தேவையானதை சமைத்து, இரவு டிபனுக்கு முன் ஏற்பாடுகள் செய்து அப்பப்பா அவர்களின் வேலைச் சுமைகளை என்றுமே அவர்களால் கீழ் இறக்கி வைக்க முடிவதில்லை.

பணி ஓய்வு பெற்ற ஆண்களாக இருந்தால், தன் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்தல், பேரன் பேத்திகளை கவனித்துக்கொள்ளுதல், வீட்டில் ஏதேனும் ரிப்பேர் ஆகி இருந்தால் அதை செய்வதற்கு ஆட்களை அழைத்துப் பேசி வரச் செய்து அவர்களுடன் இருந்து வேலையை முடித்தல் என்று சதா வேலைகள் இருந்துகொண்டேதான் இருக்கும்.

மதியம் கொஞ்சம் கண் அயரலாம் என்றால் அப்போதுதான் ‘கொரியர்’ ஏதேனும் வரும். ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்ய காலிங் பெல் அடிப்பார்கள்.

வயது கூடக்கூட நினைத்த நேரத்தில் கண் அயர முடிகிறதா? கண் தானாக அசத்தும்போது தூங்கினால்தான் உண்டு. ஆனால் அது என்னவோ சொல்லி வைத்தாற்போல் ஐந்து நிமிடம் தூக்கம் கண்களை அசத்தும்போதுதான் யாரேனும் காலிங் பெல் அடிக்கிறார்கள். அவர்களுக்காக இல்லை என்றாலும், எதிர் வீடு, அடுத்த வீடுகளுக்கு கொரியரும் ஸ்பீட் போஸ்ட்டும் வந்தால் கூட அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டித்தான் பெயர் முகவரி வழி கேட்டுச் செல்கிறார்கள்.

‘அவருக்கென்ன ரிடையர்ட்டு பர்சன் தானே?’ என்ற வார்த்தையின் வலியை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகுதான் உணர முடியும்.

வேலைக்குச் செல்லாத பெண்களாக இருந்தால் ‘நான் வீட்டில் சும்மாத்தான் இருக்கிறேன்’ என்ற கூச்சத்தைத் தவிருங்கள். ஓய்வு பெற்றவர்களாக இருந்தால் ‘வீட்டில் சும்மாத்தானே இருக்கிறோம்…’ என்று தன்மையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு உங்கள் மீதான மதிப்பை நீங்களே குறைத்துக்கொள்ளாதீர்கள்.

வீட்டில் 24 மணி நேரமும் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும் வீடு என்பது வெறும் கட்டிடமுமல்ல என்பதும், வீட்டு வேலை என்பது காலை 10 மணி அடித்தால் உள்ளே சென்று மாலை 6 மணி அடித்தால் கிளம்பிவிடும் பணியுமல்ல என்பதும்.  வீட்டில் இருக்கும் 24 மணி நேரத்தில் எத்தனை நிமிடங்கள் அவர்களுக்கே அவர்களுக்காக செலவழிக்கிறார்கள் என்று கணக்குப் போட்டுப்பார்த்தால் வேலைக்காக வெளியில் சென்று (தப்பித்து) விடுபவர்கள் வாயைத் திறக்க முடியாது.

எனவே பேசும் பேச்சில் கவனம் இருக்கட்டும்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP, #COMPCARE_OTP

(Visited 50 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon