ஜம்முனு வாழ காம்கேரின் OTP-83: கற்பனைகள் சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கு அயற்சி!


ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 83

மார்ச் 24, 2021

கற்பனைகள் சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கு அயற்சி!

எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே. விமர்சிக்க நாம் யார் சொல்லுங்கள்.

சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்நாளில் நமக்குப் பிடித்த அரசியல் தலைவர்கள் குறித்து பதிவு எழுதினால்கூட நாம் பொது எதிரி ஆகிவிடுகிறோம்.

நம் முன்னாள் முதலமைச்சர் டாக்டர். ஜெ.ஜெயலலிதா அவர்கள் குறித்து  வியந்து நேர்மறையாகக் கட்டுரை எழுதியபோது ஃபேஸ்புக்கில் சில தொடர்புகள் விலகின. நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்து செய்தி பதிவிட்ட போது சில தொடர்புகள் விலகின.

இப்படி நான் விலக்க வேண்டுமானால் என் ஃபேஸ்புக்கில் நான் மட்டுமே இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கும் எவரையும் நான் விலக்குவதில்லை. மதிப்பு கொடுத்தல் என்பது ‘ஆஹா, ஓஹோ’ என்று புகழ்வதை சொல்லவில்லை. ‘அருமை, பெருமை’ என கொண்டாடுவதையும் சொல்லவில்லை. ’மேடம் உங்களைப் போல் உண்டா…’ என பாராட்டிப் புகழ்வதையும் சொல்லவில்லை.

தங்கள் கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களை சொன்னாலும் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் வன்மத்தைக் கொட்டாமல் அமைதியாகக் கடப்பவர்களே உயர்வானவர்கள்.

அதே சமயம் நம் கருத்துக்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வக்கிரமாக எதிர்ப்பவர்களை நான் விட்டு வைப்பதில்லை. வக்கிரம் என்பது தவறான நோக்கம், மோசமான சித்தரிப்பு, ஆபாச கண்ணோட்டம் என்பது மட்டுமில்லை. நம் பதிவுகளின் பின்னூட்டத்திலேயே சின்ன சின்னதாய் சீண்டல்கள்,  பொறாமையின் வெளிப்பாடுகள் இத்யாதி இத்யாதி. இவை அனைத்துமே வக்கிரம்தான். அடுத்தவர் மனதை காயப்படுத்தும் எந்த ஒரு விஷயமும் வக்கிரமமே.

சமீபத்தில் பெண்களின் உணர்வுகள் குறித்து  நான் எழுதிய கவிதையைப் படித்த வயதில் மூத்த வாசகர் ஒருவர்  ‘கற்பனைக் காவியம் சூப்பர். ஆனால் வாழ்க்கைக்கு ஒத்துவராத சாத்தியம் இல்லாத விஷயம்’ என்று எழுதி பின்னூட்டமிட்டிருந்தார். கவிதையில் கூட பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்லது அதற்கு மதிப்பளிக்க மனமில்லாதவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி புரிந்துகொள்ளப் போகிறார்கள் என்ற ஆதங்கமே எனக்கு முதலில் ஏற்பட்டது.

முன்பெல்லாம் பெண்கள் தங்கள் கணவன் சரியில்லை என்றால் பொதுவெளியில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஆனால் இன்று வெளுத்து வாங்குகிறார்கள். எத்தனை நாட்கள்தான் பெண்கள் மட்டும் பொறுமைசாலிகளாய் இருக்க முடியும்?

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம். 80 வயதைக் கடந்த ஒரு கணவன், மனைவி. ‘மாமா போயிட்டார்…’ என தன் கணவன் இறந்த செய்தியை மாமி தானே போன் செய்து சொன்னார். துக்கம் விசாரிக்க சென்றிருந்தோம். மாமி எப்படி இருக்கிறாரோ? வருத்தத்தில் இருப்பார். அழுதால் எப்படித் தேற்றுவது என்றெல்லாம் யோசித்தபடி சென்றேன். மாமியைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆங்கிலப் பத்திரிகைகள் படிக்கும் அளவுக்கு நல்ல விஷய ஞானம் உள்ளவர்.

நான் நினைத்ததுக்கு மாறாக அன்றைய சூழலும் மாமியின் அணுகுமுறையும் இருந்தன. அந்த மாமி என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

‘மாமா இருந்த வரை ஒரே டாமினேஷன்தான். இத்தனை வருடங்கள் எந்த சுதந்திரமும் இல்லை. வெளியில் பார்ப்பதற்கு அனுசரணையான மனிதர் போல இருந்தாலும் எல்லாம் தனக்குப் பிடித்ததைப் போலவே நடக்க வேண்டும். தன் இஷ்டப்படியே எல்லாம் இருக்க வேண்டும். என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்ததே இல்லை… இனியாவது கொஞ்சம் சுதந்திரமாக இருக்க ஆசைப்படுகிறேன்…’ என்றாரே பார்க்கலாம்.

இன்றைய தலைமுறை பெண்களின் நிலை வேண்டுமானால் மாறிக்கொண்டிருக்கலாம். ஆனால் 70+ வயதுடைய பல பெண்களின் நிலை இப்படித்தான் உள்ளது. 80 வயதைத் தாண்டிய ஒரு பெண்மணி சுதந்திரமாக சுவாசிக்க ஆசைப்படுகிறார் என்றால் எத்தனை ரணம் அது. இதை நான் எழுதினால்கூட அதையும் கற்பனை என்றும் காவியம் என்றும் சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

எங்கள் உறவினர். எழுபது வயதைத் தாண்டிய தம்பதி. ஒரு திருமணத்தில் அந்த மாமி தன் உறவினர்களிடம் அழுதுகொண்டே சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டபோது வலித்தது. ‘அந்த மனுஷன் அனுபவிக்கணும்… கொட்டிய வார்த்தைகளுக்கு தண்டனை கிடைக்கணும்… அதை நான் பார்க்கணும்… நிச்சயம் நான் அந்த மனுஷன் போனதுக்குப் பிறகு ஒன்றிரண்டு வருடங்களாவது சுதந்திரமாக இருந்துட்டுத்தான் போகணும்….’

இப்படி பெண்கள் மனம் விட்டு எல்லோரிடமும் சொல்லிவிடுவதில்லைதான். தன் மனதுக்கு நெருக்கமானவர்களிடம், தன்னைப் புரிந்துகொள்பவர்களிடம் புலம்பியாவது தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொள்வார்கள். வேறென்ன செய்வது.

இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாதவர்கள்தான் அவற்றை கற்பனை என்றும், காவியம் என்றும் பேசக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள்  ‘தத்துபித்தென’ மனதில் தோன்றும் வார்த்தைகளை எல்லாம் பேசுவதைப் போல பேசி கடந்து செல்வார்கள். அவர்களை கண்டுகொள்ளாமல் வில(க்)குவதுதான் புத்திசாலிகள் செய்யும் செயலாக இருக்க முடியும்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

நான் வாழ்க்கையை விட்டு விலகி எந்த ஒரு கருத்தையும் சிந்திப்பதும் இல்லை. எழுதுவதும் இல்லை என்பது என் எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசிக்கும் எவருக்கும் தெரியும்.

சாத்தியம் இல்லாத விஷயங்களை கற்பனை செய்யக் கூட விரும்புவதில்லை. காரணம் அது எனக்கு மிகுந்த அயர்ச்சியைக் கொடுக்கும். இது என் கருத்து. எனது சுபாவம். அதனாலேயே என் எழுத்தில் நான் கடைபிடிக்கும் விஷயங்களை மட்டுமே சொல்கிறேன். என்னுடைய எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இல்லை என்றால் எனக்கு மூச்சு முட்டுவதைப் போல் இருக்கும். அதுபோல செயற்கையாக பேசுகின்ற நபர்களிடம் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசுவதும் அயற்சியைக் கொடுக்கும்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் நடக்காத விஷயங்களை கற்பனையிலாவது அனுபவிக்கலாமே என பலர் கற்பனை உலகில் வாழ்ந்து வருகிறார்கள். அது அவரவர் விருப்பம். அப்படி மற்றவர்களை பாதிக்காமல் கற்பனை செய்வது அவருக்கு புத்துணர்வுக் கொடுப்பதாக இருந்தால் அவருடைய செயல் தவறே இல்லை.

எங்கள் நிறுவனத்தின் பணிப்பெண்ணிடம் அவரது மிகப்பெரிய ஆசை என்ன என்று கேட்டேன். ‘வாழ்க்கையில் ஒரு முறையாவாது நயாகரா சென்று வந்துவிட வேண்டும்’ என்று சொன்னார். அவருக்கு நல்ல வீடு கிடையாது. இரண்டு புடவைகளுக்கு மேல் உடுத்துவதற்கு நல்ல உடைகள் கிடையாது. கணவனும் நல்ல குணவாளன் கிடையாது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தன் ஆசை கனவு என்று சொல்வார் என எதிர்பார்த்தேன். எனக்குத் தெரிந்து அவர் தற்சமயம் இருக்கின்ற வாழ்க்கைச் சூழலில் நயாகரா அருவி கனவு சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனாலும் அவர் அதை ஆசைப்படுகிறார். அதையே வாழ்நாள் கனவு என்கிறார். அந்த ஆசையும் கனவும் அவருக்கு வாழ்வதற்கான உத்வேகத்தைக் கொடுத்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே.

அதை நாம் ஏன் சிதைக்க வேண்டும். விமர்சிக்கக் கூட யாருக்கும் உரிமை கிடையாது.

அவரவர் வாழ்க்கை. அவரவர் நல்லது கெட்டது. அவரவர் விருப்பம். தேவையில்லாமல் தலையிடாமல் இருப்பதுதான் மனிதனாக வாழ்வதன் ஆகச் சிறந்த அடையாளம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP, #COMPCARE_OTP

(Visited 47 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon