ஜம்முனு வாழ காம்கேரின் OTP-84: நம்மை நாமே கண்காணிப்பதில் இத்தனை செளகர்யங்களா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 84
மார்ச் 25, 2021

நம்மை நாமே கண்காணிப்பதில் இத்தனை செளகர்யங்களா?

எங்கள் நிறுவனத்தின் அடிப்படை வேலை சாஃப்ட்வேர் தயாரித்தல். 2000-ம் ஆண்டு நாங்கள் அனிமேஷன் பிரிவை அறிமுகப்படுத்தியபோது அந்தப் பிரிவில் பணி புரிபவர்களுக்கும் சாஃப்ட்வேர் பிரிவில் பணி புரிபவர்களுக்கும் மனதளவில் நிறைய வித்தியாசங்களை விரைவிலேயே உணர்ந்துகொள்ள முடிந்தது. காரணம், எனக்கு இரண்டிலும் திறனும் திறமையும் இருந்ததால்.

புரோகிராம் மட்டுமே எழுதும் ஆற்றல் பெற்றவர்களால் கிரியேட்டிவிட்டி சார்ந்த பணிகளின் தன்மையை புரிந்துகொள்வது கஷ்டம்தான்.

சாஃப்ட்வேர் தயாரித்தல் என்பது லாஜிக்குகளை பயன்படுத்தி புரோகிராம் எழுதுவது. முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்தது. அனிமேஷன் தயாரித்தல் என்பது முழுக்க முழுக்க கற்பனையும், கிரியேட்டிவிட்டியும் சார்ந்தது. அவற்றை தொழில்நுட்பத்துடன் இணைத்து மேம்படுத்துதல் என்பதில் வரும்.

முன்னதில் (சாஃப்ட்வேர்) பணி புரிபவர்கள் 8 மணி நேர வேலை என்றால் சில நேரங்களில் பணியின் தன்மைக்கு ஏற்ப அவர்களாகவே 10 மணி நேரம் அதிகமாக வேலை செய்து அதை முடித்துக் கொடுத்துவிட்டு செல்வார்கள். காரணம் புரோகிராம் எழுதுதல், இயக்குதல், பிழை சரிபார்த்தல், மீண்டும் தேவையான பகுதிகளுக்கு புரோகிராம் எழுதி இணைத்தல், இம்ப்ளிமெண்ட் செய்தல் என படிப்படியாக வேலை செய்யும்போது நேரம் ஆக ஆகத்தான் அந்த பணியின் முழு வீச்சும் நம் மனதுக்குள் சென்று ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கத் தொடங்கும். அப்போது எட்டு மணி நேரம் முடிந்துவிட்டது என செய்துகொண்டிருக்கும் வேலையை அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு செல்வது என்பது புரோகிராம் எழுதுவதையே பணியாகக் கொண்டவர்களுக்கு சாத்தியம் இல்லாத ஒன்று. அதனால் ஒரு எல்லை வரை முடித்துவிட்டுக் கிளம்பவே தோன்றும். அப்படித்தான் பெரும்பாலானோர் வேலை செய்வார்கள்.

ஆனால் பின்னதில் (அனிமேஷன்) வேலை என்பது கற்பனை சம்மந்தப்பட்டது. 2 + 2 = 4 என கணக்குப் போடுவதற்கு லாஜிக் போதும். ஆனால் 2 + 2 = 4 என்பதை ஒரு கதை மூலம் அனிமேஷன் படைப்பை உருவாக்குவதற்கு லாஜிக் மட்டும் போதாது. மனம் கற்பனையில் ததும்பி வழிய வேண்டும். அந்த கற்பனையின் ஆனந்தப் பெருமிதம் வரைகின்ற ஓவியத்தில் வெளிப்பட வேண்டும். அந்தப் பெருமிதம் கொடுக்கின்ற மனநிறைவு அடுத்தடுத்தக் காட்சிகளுக்கு உத்வேகமாக அமைய வேண்டும்.

இப்படியாக மனமும் இதயமும் பின்னிப் பிணைந்து செயல்படும் அனிமேஷன் துறையில் எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என அவர்களுக்கு காலக்கெடுவை கொடுப்பது சற்று கடினமாக இருந்தது. ஒருசிலர் கொடுக்கின்ற பணியை 5 அல்லது 6 மணி நேரத்தில் முடித்துவிட்டால் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். காரணம் 8  மணி நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு அனிமேஷன் படைப்பை ஐந்தாறு மணி நேரத்தில் முடித்துக்கொடுப்பவர்களுக்கு, வேலையை முடித்தவுடன் மனம் வெறுமையாகி (Dry) விடும். அதன் பிறகு நாம் எந்தப் பணியைக் கொடுத்தாலும் அவர்களால் அதில் முழுமையாக ஈடுபட முடியாது. கற்பனை ஊற்றெடுக்காது. உற்சாகம் இருக்காது. அதனால் உடல் அளவிலும் சோர்வாகிவிடுவார்கள்.

அவர்களை 8 மணி நேர வேலை கணக்கிற்காக அலுவலகத்தில் உட்கார வைப்பதைவிட வீட்டுக்கு அனுப்ப அனுமதித்தால் அவர்கள் அந்த நேரத்தை குடும்பத்துடன் செலவழிப்பார்கள் அல்லது தங்கள் துறை சார்ந்த பிற விஷயங்களை அப்டேட் செய்துகொள்ள முயல்வார்கள். அந்த நேரத்தை நாம் அலுவலகத்தில் முடக்கினால் நமக்குத்தான் நஷ்டம். எனவே அடுத்த காட்சிக்கான கான்செப்ட்டை மட்டும் விளக்கிவிட்டு வீட்டுக்கு கிளம்பச் சொல்லிவிடுவேன். அடுத்த நாள் வரும்போது பிரமாதமான ஐடியாக்களுடன் வந்து அனிமேஷனில் கலக்குவார்கள்.

எனவே, பணியின் நேர்த்தி என்பது எத்தனை மணி நேரங்கள் வேலை செய்கிறார்கள் என்பதில் இல்லை. எத்தனை ஈடுபாட்டுடன் பணி செய்கிறார்கள் என்பதில்தான் உள்ளது.

இப்போது முழுக்க முழுக்க Work From Home கொடுத்துள்ளோம். 2020 மார்ச் மாதம் இறுதியில்  தொடங்கியது. கிட்டத்தட்ட ஓராண்டுகள் முடியப் போகிறது. இன்னும் சில மாதங்கள் இப்படியேத்தான் தொடரவும் போகிறது. விருப்பப்படுகிறவர்களுக்கு அவர்கள் பணிக்காலம் முழுவதும்கூட Work From Home கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

முன்பைவிட இப்போது புரொடக்டிவிட்டி அதிகமாகியுள்ளது என்றே சொல்வேன். காரணம் ஒவ்வொருவரும் தொழில்நுட்பப் பொறியாளர் என்ற மனப்பான்மையைத் தாண்டி ஒரு தொழில்முனைவோருக்கு உள்ள குணாதிசயங்களுடன் உருவாகி வருகிறார்கள்.

காரணம். அவர்களின் வீடே அலுவலகம், அவர்கள் அமர்ந்து பணி செய்யும் இடமே அவர்களின் கேபின். அது சமையல் அறை மேடையாக இருந்தாலும் சரி, பால்கனி ஊஞ்சலாக இருந்தாலும் சரி. ஒரு நாளின் 24 மணி நேரத்தில் அவர்களே பிராஜெக்ட்டின் தன்மைக்கு ஏற்ப நேர நிவாகம் செய்துகொள்ளுதல், இடையிடையே வீட்டில் தயாரிக்கும் சுத்தமான டீ, காபி, மோர், ஜூஸ். நேரத்துக்கு வாய்க்கு ருசியாக சுடச்சுட சத்தான சப்பாடு. குறிப்பாக டிராஃபிக்கில் உடல் நோக மனம் நொந்து வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் சலிப்பான வாழ்க்கைமுறையில் இருந்து விடுதலை. இதுபோன்ற பல காரணிகளால் லாஜிக்கில் கலக்கும் பொறியாளர்களும் சரி, கற்பனையில் கலக்கும் அனிமேட்டர்களும் சரி தங்கள் பணியில் ஜமாய்க்கிறார்கள் என்றே சொல்வேன்.

அவர்களுக்கு சொந்தமான இடத்தில் அமர்ந்து வேலை செய்யும்போது ஒரு தொழில்முனைவோரின் மனப்பாங்கு தானாகவே உருவாகிவிடுகிறது. பிறர் கட்டுப்படுத்துவதைவிட தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு செயல்படும் பக்குவம் கொடுத்துள்ள வரம் அது. இதன் காரணமாய் செய்கின்ற பணிகளில் நேர்த்தி, அழகு இத்யாதி இத்யாதி. மொத்தத்தில் புரொடக்டிவிட்டி கூடியுள்ளது.

நம்மை நாமே கண்காணித்துக் கொள்ளும்போது, சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்துவதால் கிடைக்கும் தன்னம்பிக்கைக்கு இணையான தன்னம்பிக்கையைப் பெற முடியும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP, #COMPCARE_OTP

(Visited 23 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon