ஜம்முனு வாழ காம்கேரின் OTP-107: விதிவிலக்குகள் பெருக வேண்டும்!

பதிவு எண்: 838 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 107
ஏப்ரல் 17, 2021

விதிவிலக்குகள் பெருக வேண்டும்!

இளம் தலைமுறையினரில் பலர் தங்கள் உறவுகளுக்குள் தங்கள் வயதினர்களிடம் ஒட்டுதலாக இருப்பதில்லை. இன்னும் ஏன், தன்னுடன் பிறந்தவர்களிடம் கூட ஒட்டுதலாக இருப்பதில்லை. முகம் கொடுத்துப் பேசிக்கொள்வதில்லை. காரணம் பெரும்பாலும் பெற்றோர்களே.

ஏதோ ஒரு காரணத்தால் வீட்டில் ஒரு குழந்தையிடம் மட்டும் தங்கள் பாசத்தை கொஞ்சம் அதிகமாகவே வெளிக்காட்டிக்கொள்கிறார்கள். அது மூத்த குழந்தையாக இருக்கலாம் அல்லது கடைசிக் குழந்தையாக இருக்கலாம்.  இதில் ஆண் பெண் என்ற வித்தியாசம் எல்லாம் இருப்பதில்லை.

இன்னும் சில வீடுகளில் மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தைகளை அவர்கள் பெற்றோரில் அம்மாவோ அல்லது அப்பாவோ வெறுப்பைக் கக்கியபடி இருப்பதையும் காணலாம். எப்போதும் இல்லாவிட்டாலும் ஏதேனும் ஒரு வருத்தமான சூழலில் வாழ்நாள் சுமையாக இருக்கும் அந்தக் குழந்தைகளை ஓரிரு வார்த்தைகளால் குத்திக் காயப்படுத்துவிடுவதுண்டு.

அப்படி இல்லை என்றால் வீட்டுக்கு வரும் உறவினர்களும் நண்பர்களும் அவர்கள் குறித்து ரகசியமாக விசாரிப்பதாக நினைத்துக்கொண்டு பேசுவதை பார்க்கும் அந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் மனதளவில் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவதும் உண்டு.

இது தவிர சில வீடுகளில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடு வேறு.

தின்பண்டங்களை எல்லோருக்கும் கொடுக்கும் அளவை விட அவர்களுக்குக் கொஞ்சம் குறைவாகவே கொடுப்பார்கள். மற்றவர்கள் செய்யும் அதே தவறை அவர்கள் செய்தால் கண்டிப்பின் காரமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் மறைமுகமாக சில நேரங்களிலும், வெளிப்படையாக பல நேரங்களிலும் அவர்கள் காட்டும் ‘பார்ஷியாலிட்டி’ பின்னாளில் தங்கள் உடன்பிறந்தோர்களிடம் ஒரு ஒட்டுதலே இல்லாமல் செய்துவிடுகின்றன.

அந்தக் காலத்து சிவாஜி கணேசன் – சாவித்திரி போல பாசமலர் அண்ணன் தங்கைகளை காண்பது அபூர்வமாக உள்ளது.

இப்படி உடன்பிறந்தோரிடம் கூட ஒட்டுதலாக இல்லாத பெற்றோர்களைப் பார்த்து வளரும் இளம் தலைமுறையினர் எப்படி தங்கள் உடன் பிறந்தோரிடமும், தங்கள் உறவினர்களிடம் தங்கள் வயதை ஒத்தவர்களிடமும் ஒட்டுதலாக இருப்பார்கள். எதை பார்க்கிறார்களோ அதுதானே உள்ளே செல்லும். அதைத்தானே கிரகித்துக்கொள்வார்கள்.

சில பெற்றோர்கள் தாங்கள் பெற்ற பிள்ளைகளிடம் பார்ஷியாலிட்டி காண்பிப்பதை அவர்களுடன் விடுவதில்லை. அடுத்தத் தலைமுறையினரிடமும் கடத்துவதைத்தான் சகிக்க முடிவதில்லை.

‘உன் அம்மா சின்ன வயதிலேயே அப்படி’,  ‘உன் அப்பா மட்டும் ரொம்ப ஒழுங்கா’ ‘அவள் இந்த வயதில் என்ன செய்தாள் தெரியுமா?’, ‘அவன் ஆடாத ஆட்டமில்லை’ என்று கொஞ்சம் கொஞ்சமாக தான் பெற்ற பிள்ளைகளைப் பற்றி அவர்களின் குழந்தைகளிடம் அவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி விஷத்தைக் கலக்கும் பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். யாராலும் இல்லை என மறுக்க முடியாது. சதவிகிதத்தில் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். அவ்வளவுதான்.

இப்படி விஷத்தைக் கக்குவது என்பது, தன் பிள்ளைகளைப் பற்றிய அவதூறு செய்திகளை சொல்ல ஆரம்பிப்பது முதல் தொடங்கி அவர்களை தன் பிள்ளைகளிடம் இருந்தே முற்றிலும் பிரித்து ஆளும் சதி வரை தொடர்கிறது. இந்த அவலம் அவர்கள் வாழ்நாள் சாதனைபோல் வாழ்நாள் முழுவதும் நடந்துகொண்டுதான் உள்ளது.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு ‘வீக்னெஸ்’ இருக்கும். வீக்னெஸ் என்பதை ஏதோ பெரிய அளவில் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். சில குழந்தைகளுக்கு தனக்கு சாதகமாக பேசுபவர்களை மிகவும் பிடித்துப் போகும். சில குழந்தைகள் காசு கொடுத்தால் சமர்த்தாக இருப்பார்கள். காசு கொடுத்து அல்லது அவர்களுக்குப் பிடித்தமானதை வாங்கிக்கொடுத்து அவர்களை தங்கள் வசம் வைத்துக்கொள்ளும் பெரியோர்களும் உண்டு. இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வீக்னெஸ், எப்படி பெரியவர்களாகிய நமக்கெல்லாம் இருக்கிறதோ அதுபோல.

இப்படி உண்டியலில் காசு சேர்க்கும் ஆசை உள்ள பேரக்குழந்தைகளிடம் ‘என் சொத்தில் ஒரு பகுதி உனக்குத்தான்’ என்ற வாக்குறுதியைக் கொடுத்து தான் பெற்றெடுத்தப் பிள்ளைகளுக்கு எதிராக தான் ஆயுதமாகப் பயன்படுத்தும் பேரக்குழந்தையின் மனதில் நஞ்சை விதைத்து அவர்களை தான் சொல்வதைப் போலெல்லாம் செய்ய வைக்கும் சூழ்ச்சியை பல வீடுகளில் பல பெரியோர்கள் செய்யத்தான் செய்கிறார்கள். அந்தக் சின்னஞ்சிறு பிள்ளைகளுக்குத் தெரியுமா, தன் தாத்தா பாட்டியின் சொத்தே அவர்களுக்கு வரும் சொற்ப்பப் பென்ஷன் பணம் மட்டுமே என்று.

கொஞ்சம் பாசமாக, நிறைய நேசமாக, மனம் கொள்ளா அன்புடன் திகட்டத் திகட்ட பேரன்புடன் வளைய வந்துகொண்டிருக்கும் பேரக்குழந்தைகளிடம் அவர்களின் சென்டிமென்ட்டையே பலவீனமாகப் பயன்படுத்தி ‘நீ இப்படி செய்யவில்லை என்றால் பாட்டியின் / தாத்தாவின் உயிருக்கே ஆபத்து வந்திவிடும்…’ என மிரட்டி தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் பெரியோர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இப்படியாக தங்கள் பேரப்பிள்ளைகளின் வீக்னெஸை பயன்படுத்திக்கொண்டு தன் பிள்ளைகள் வீட்டில் வசித்துக்கொண்டே அவர்களுக்கு எதிராக அம்பு எய்வதற்கு தன் பேரன் பேத்திகளையே ஆயுதமாக்கிக்கொள்ளும் பெற்றோர்கள் இருப்பதால்தான் ஆரோக்கியமற்ற சூழல் உருவாகி பிள்ளைகளுக்குள் ஒற்றுமை சீர்குலைகிறது.  ‘இல்லை என்றால் மட்டும் அப்படியே ஒற்றுமையாக இருந்துவிடப் போகிறார்களாக்கும்’ என நீங்கள் நொடித்துக்கொள்வது புரிகிறது. ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் விரோதியாக வாழ மாட்டார்கள் அல்லவா?

நேற்று இமெயிலில் ஒரு பெண் தன் பெற்றோரின் இதுபோன்ற செயல்பாட்டினால் தன் கணவனும், பிள்ளைகளுமே தன்னைவிட்டு விலகிச் சென்ற கதையை உருக்கமாக அனுப்பி இருந்தார். தற்சமயம் தான் மட்டும் ஒரு காப்பகத்தில் வசிப்பதாகவும், தன் கணவன் தன் பிள்ளையுடன் வசிப்பதாகவும் சொல்லி இருந்தார். பெற்றோர்களே அவர்கள் காலம் முடியும்வரை தன் பிள்ளைகளுக்கு இப்படி சதி செய்துகொண்டிருந்தால் எப்படித்தான் வாழ்வது? பூனை குட்டி போட்டதும் தான் பெற்றெடுத்ததில் நோஞ்சானாக இருக்கும் ஒரு குட்டியை சாப்பிட்டுவிடும். அதுபோல பிறந்தவுடனேயே பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்திருக்கலாம். இப்படி வாழ்நாள் முழுவதும் வஞ்சித்து கொடுமைகள் செய்வதை தாங்கவே முடியவில்லை. இது குறித்த விழிப்புணர்வை உங்கள் பதிவுகளில் என்றேனும் கொண்டுவாருங்கள் என முடித்திருந்தார்.

அதன் தாக்கத்தில் இன்றைய இந்தப் பதிவு!

மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா என எனக்குத் தெரியாது. ஆனால் இனி வரும் தலைமுறையினராவது விழித்துக்கொள்ளவே இது குறித்து எழுதத் தோன்றியது.

மீண்டும் முன் குறிப்பை படித்துவிடுங்கள், ஏதேனும் பின்னூட்டம் எழுத நினைத்தால்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 29 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon