ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 106
ஏப்ரல் 16, 2021
குற்றங்களுக்கு ஒரு மடங்கு ‘ஃபோக்கஸ்’, தண்டனைகளுக்கு இரண்டு மடங்கு ஃபோக்கஸ்’!
சமீபகாலமாக ‘பாலியல் வன்கொடுமை’ குறித்து அதிகம் கேள்விப்படுகிறோம். நித்தம் பெயர் தெரியாத ஊர்களில் இருந்தெல்லாம் வயது வித்தியாசமின்றி ‘60 வயதானவன் 5 வயது குழந்தையை சீரழித்துக் கொன்றான்’ என்பதைப் போன்ற செய்திகளை முந்தித்தருகின்றன மீடியாக்கள். யார் முதலில் பரபரப்பான செய்தியை, மனதை பதறச் செய்யும் வீடியோக்களுடன், புகைப்படங்களுடன் தருகிறார்கள் என்பதில் கடும்போட்டி வேறு.
ஒரு செயல் தவறானது, கொடூரமானது, மனிதத்தன்மையில்லாதது என்ற செய்தி பரவும்போது அதுபோன்ற செயல்பாடுகள் குறையத்தானே வேண்டும். மாறாக ஏன் அதிகமாகிறது?
‘இந்த பாவச் செயலுக்கு தண்டனை என்ன தெரியுமா… இந்தத் தவறை செய்தவன் இந்த தண்டனை பெற்றான்… தவறு செய்தவனுக்கு தண்டனை நிச்சயம் உண்டு… தாமதமானாலும் தண்டனை உறுதி…’ என்பதைப் போன்ற செய்திகள் அதிகம் வருவதில்லை.
தண்டனைகள் குறித்த செய்திகளைவிட குற்றங்கள் குறித்த செய்திகளே அதிகம் பரவுவதால் குற்றங்களே பெருகுகின்றன.
தண்டனை என்ற வார்த்தை பிரயோகம் அதிகமானால்கூட குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.
மிகவும் துடுக்குத்தனமாக விஷமம் செய்யும் குழந்தைகளை கையாள்வது சற்று கடினம்தான். ஒருசில குழந்தைகள் கண்களால் மிரட்டினாலே சமர்த்தாகிவிடும். ஒருசில வாயால் அதட்டினால் அமைதியாகும். இன்னும் ஒருசில கைகளால் லேசாக அடித்தால்தான் அடங்கும்.
இப்படி எதுவுமே செய்யாமல் குழந்தைகளுக்கு தாங்கள் செய்வது ‘விஷமம்’ என்பது எப்படி புரியவைக்க முடியும். ஏதேனும் ஒரு எதிர்வினை காட்டினால்தானே குழந்தைக்குக்கூட புரிய வைக்க முடிகிறது. அப்படி எடுத்துச் சொல்லாமல் அவர்களை கடந்து சென்றுகொண்டே இருந்தால் எதிர்காலத்தில் ‘தான்தோன்றியாக’ அல்லவா அந்தவகைக் குழந்தைகள் வளர்ந்து நிற்பார்கள்.
போலவே, சமுதாயத்தில் நடைபெறும் குற்றங்களை ‘ஃபோக்கஸ்’ செய்யும் அளவுக்கு அதற்கான தண்டனைகள் குறித்து இரண்டு மடங்கு ‘ஃபோக்கஸ்’ செய்தால் குற்றம் செய்ய பயம் ஏற்படும்.
இது குறித்து ஏற்கெனவே பலமுறை எழுதிவிட்டாலும் என்றும் எப்போதும் காலத்துக்கும் ஏற்ற கருத்தாக இருப்பதால் மீண்டும் பதிவிடுகிறேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP