ஜம்முனு வாழ காம்கேரின் OTP-112: ரோல் மாடலாக வாழ்வது எப்படி?

பதிவு எண்: 843 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 112
ஏப்ரல் 22, 2021

ரோல் மாடலாக வாழ்வது எப்படி?

நாம் நேர்மையாக செய்யும் சிறு செயல்கள் கூட இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் யாரேனும் ஒருவருக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய உந்துதலாய் இருக்கும் என்பதை மீண்டும் உணர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் உண்டானது.

நேற்று விடியற்காலை ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போதே ஃபேஸ்புக் தொடர்பில் இருக்கும் ஒருவர் மெசஞ்சரில் வந்தார்.

‘ஹலோ மேடம்?’ என்று மட்டும் சொல்லிவிட்டு காத்திருந்தார். இதுபோல சொல்ல வந்ததை சொல்லாமல் ‘ஹலோ’, ‘குட்மார்னிங்’ என டைப் செய்துவிட்டு உரையாடுவதற்காக காத்திருப்பவர்களுக்கு எந்த பதிலும் கொடுப்பதில்லை. ஆனால் ஹலோ மேடம் சொன்ன நபர் கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு முன்னர் என்னிடம் புரோகிராமராக பணியாற்றியவர். இதுநாள் வரை எந்த ஒரு விஷயத்துக்காகவும் மெசஞ்சரில் வந்து பேசியதில்லை என்பதால் பதிவை என் வெப்சைட்டில் அப்லோட் செய்துவிட்டு அவருக்கு ’ஹலோ…’ என பதில் சொன்னேன்.

பரஸ்பர நலன் விசாரிப்புக்குப் பிறகு, ‘இப்போது எங்கிருக்கிறீர்கள்?’ என கேட்டேன்.

15 வருடங்களுக்கு முன்னரே அமெரிக்காவில் பணி நிமித்தம் சென்றவர், தற்சமயம் அங்கேயே வசிப்பதாகவும், ‘நீங்கள்தான் என் ரோல் மாடல் மேடம்’ என்றும் டைப் செய்தார்.

அவர் என்னிடம் பணியாற்றிய சமயம் அவர் பயிற்சி புரோகிராமராக இருந்தார். அப்போது அவரை ஒட்டி நடந்த சில நிகழ்வுகளை நினைவு கூர்ந்தேன். அவரிடம் பகிர்ந்தும் கொண்டேன்.

எங்கள் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்துக்குப் பணிக்குச் செல்ல என்னிடம் அனுமதி பெற்று  எங்கள் காம்கேரில் இருந்து விடைபெறும் தருணத்தில் அவர், ‘நீங்கள் இவ்வளவு புத்தகம் எழுதுகிறீர்கள். உங்கள் குறித்து வாய்ப்பு ஏற்படும்போது நான் எழுதுகிறேன்’  என்று சொன்னதை நான் நினைவு கூர்ந்து பகிர்ந்ததும் அவர் ‘எப்படி மேடம் 17 வருடங்களுக்கு முன்னர் நடந்ததை நேற்று நடந்ததுபோல் சொல்கிறீர்கள்?’ என்று அதிசயித்தார்.

ஒரு முறை எங்கள் நிறுவனத்துக்கு தங்கள் கல்லூரி ப்ராஜெக்ட்டுக்காக வந்திருந்த மூன்று கல்லூரி மாணவிகளால் இவருக்கு ஒரு சிறிய மன உளைச்சல் ஏற்பட்டது. கல்லூரிப் பெண்களுக்கே உரிய குறும்புடன் இவரை ஏதோ சீண்டி இருக்கிறார்கள். அது குறித்து அவர் என்னிடம் சொல்லி வருத்தப்பட்ட போது நான் அவருக்கு சமாதானம் சொல்லி அனுப்பினேன். மேலும் அந்த மூன்று மாணவிகளையும் அழைத்து அவர்களுக்குப் புரியும்படி அறிவுரை சொல்லி அனுப்பினேன்.

இதையும் அவரிடம் நினைவு கூர்ந்தேன்.

‘என்னால் நம்பவே முடியவில்லை மேடம், உங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது… இத்தனை வருடங்களில் நீங்கள் எத்தனையோ ஸ்டாஃப்களை பார்த்திருப்பீர்கள்… என் சம்மந்தப்பட்ட விஷயங்கள் எப்படி நினைவில் உள்ளது… எப்படி இது சாத்தியம் என ஆச்சர்யமாக உள்ளது’ என டைப் செய்தார்.

‘என் சிந்தனையே காம்கேர்தான் எனும்போது என்னிடம் பணியாற்றியவர்கள் அத்தனை பேரின் சரித்திரமும் என் நினைவில் இருந்து எப்படி அகலும். உங்கள் பிள்ளைகளைப் பற்றிய விஷயங்கள் உங்களுக்கு மறந்துபோகுமா? அதுபோல்தான்’ என்றேன்.

‘என் மனதில் நீங்கள் இத்தனை உயர்வான இடத்தில் இருப்பதற்குக் காரணமே, அந்த கல்லூரி மாணவிகளால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலின் போது நீங்கள் எனக்குத்தான் சப்போர்ட் செய்தீர்கள். என் பக்கத்து நியாயத்தை புரிந்துகொண்டீர்கள். எனக்கும் புரிய வைத்து அந்த மாணவிகளுக்கும் எடுத்துச் சொன்னீர்கள். யாரும் யாரையும் விரோதித்துக்கொள்ளாமல் சீண்டிக்கொள்ளாமல் அந்தப் பிரச்சனையை அமைதியாக முடித்து வைத்தீர்கள்…’ என்று டைப் செய்தார்.

நான் பதிலுக்கு எதுவும் டைப் செய்யாமல் அமைதியாக இருந்தேன்.

‘கடைசிவரை நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்… என்றும் என் ரோல் மாடல் நீங்கள்தான் மேடம்’  என்று டைப் செய்தார்.

காலைப் பொழுதை இனிமையாக்கிய அவருக்கு நன்றி சொன்னேன்.

‘சென்னை வரும்போது நிச்சயம் காம்கேருக்கு வந்து தங்களை சந்திக்கிறேன்…’ என்று சொன்னவருக்கு ‘வாருங்கள்… ஆல் தி பெஸ்ட், டேக் கேர்’ என சொல்லி விடைபெற்றேன்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் சின்ன சின்ன அசைவுகள் கூட பிறர் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை உண்டாகும்.

என்றோ, எப்போதோ நடந்த சிறு நிகழ்வு, உலகில் பல மைல்களுக்கு அப்பால் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நபருக்கு இன்றளவும் வாழ்க்கையில் மிகப் பெரிய உந்துதலை உண்டாக்கி இருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நம் செயல்பாடுகளின் வீச்சை புரிந்துகொள்ளுங்கள்.

ரோல் மாடலாக இருக்க நீங்கள் சாதனைதான் செய்திருக்க வேண்டும் என்பதில்லை. நல்ல மனிதராக வாழ்ந்தாலே போதும். பிறர் மனதில் உங்களுக்கான சிம்மாசனம் தயாராகிவிடும்.

என்ன உங்களுக்கான சிம்மாசனத்துக்கு ஆர்டர் செய்யக் கிளம்பிட்டீங்களா?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 49 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon