மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்: உயர்திரு. மா. சாந்தா தேவி! இவர் திருவண்ணாமலையில் மெய் அக்குயோகா மையம் நடத்தி வரும் அக்குயோகா தெரபிஸ்ட்!
#வாசகர்_நேர்காணல்
1. இங்கு படைப்புகளையோ அல்லது தொழில் துறையிலேயோ சாதிப்பவர்களின் சாதனையை விட அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை காட்டுவது போல் சிலரின் தலையீடுகளை எவ்வாறு தடுப்பது? குறிப்பாக பெண்களுக்கு இத்தகைய சூழலில் உங்கள் ஆலோசனை என்ன?
2.உங்கள் படைப்புகளால் நாங்கள் பயன்பெற்று வருகிறோம். ஆனாலும் இன்னும் முக்கியமாக மக்களுக்கு சென்று சேர வேண்டிய விஷயமாக ஏதும் வைத்துள்ளீர்களா?
3.நீங்கள் தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள் மட்டுமின்றி உளவியல் நூல்களையும் எழுதி வருகிறீர்கள். ஆனால் இந்த சமுதாயத்தில் இலக்கியமோ அல்லது எந்தவொரு படைப்பாயினும் அதை ஆண் எழுத்து பெண் எழுத்து என்று பிரித்து பார்ப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? அதுபோன்ற அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?
4.நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயம் ஏதும் உண்டா?
5.வெப்சைட் உருவாக்குவது மற்றும் ஆன்லைன் வர்த்தகம் குறித்து தகவல்கள் சம்பந்தமாக உங்கள் வழிகாட்டல் என்ன?
6.நம் பாரம்பரிய வாழ்வியலை முன்னெடுக்கும் என் போன்றோர்களுக்கு தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கு உங்கள் ஆலோசனை என்ன?
பதிவு எண்: 844 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 113
ஏப்ரல் 23, 2021
சுய அங்கீகாரமே முழுமையான வெற்றி!
1. இங்கு படைப்புகளையோ அல்லது தொழில் துறையிலேயோ சாதிப்பவர்களின் சாதனையை விட அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை காட்டுவது போல் சிலரின் தலையீடுகளை எவ்வாறு தடுப்பது? குறிப்பாக பெண்களுக்கு இத்தகைய சூழலில் உங்கள் ஆலோசனை என்ன?
நம் அனுமதி இன்றி நம்மை யாரும் இங்கு ஆட்டிப்படைக்க முடியாது. எந்த ஒரு விஷயமும் சிறியதாக இருக்கும்போதே கவனித்து சரி செய்ய வேண்டும்.
அது காதலாக இருந்தாலும் சரி நட்பாக இருந்தாலும் சரி அல்லது நட்பு காட்டுவதுபோல ஆதரவு அளிப்பவர்களின் செயல்பாடுகளாக இருந்தாலும் சரி.
உங்களிடம் ஒருவர் காதலை சொல்கிறார் என்றால் ஒரு காலக்கெடு வைத்துக்கொண்டு முடியும், முடியாது என தெளிவாக சொல்லிவிட்டால் எதிராளி மனதுக்குள் ஆசைகளையும் கனவுகளையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்காமல் செயல்பட முடியும். அதைவிட்டு எந்த பதிலையும் சொல்லாமல் தவிர்த்துவந்தால் எதிராளியின் மனதில் ஆசைகள் வளர்ந்து அது நிறைவேறாத போது குரோதமும் வளர்ந்து அதன் விளைவுகள் மோசமானதாக வெளிப்படும். அப்படி ஆரம்பத்தில் சொல்லியும் பிரச்சனை வந்தால் அதை சமாளிப்பாது அடுத்தகட்ட நடவடிக்கை.
எந்த ஒரு பிரச்சனைக்கும் பலகட்டங்களில்தான் தீர்வை கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொரு கட்டமாகவே அதில் இருந்து மீள முடியும். எனவே முதல் கட்டத்தில் இருந்தே கவனமாக இருக்க வேண்டும்.
நம்மிடம் எல்லை மீறி உரிமை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நாம் இடம் கொடுக்கவே கூடாது. ஒரு சிலருக்கு பிறரின் புகழ்ச்சி தேவையாக உள்ளது. அந்தப் புகழ் போதையில் அவர்களுக்கு இடம் கொடுத்துவிட்டு, அதையே அவர்கள் ஆயுதமாக பயன்படுத்தி அவர்கள் தொந்திரவு கொடுக்க முயலும்போது அதில் இருந்து மீள்வது கொஞ்சம் கடினமாகிவிடுகிறது.
பிரபலம், ஆளுமை என பிறரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் குணங்களினால் கூட பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள் பலர்.
அவரவர் வாழ்க்கையில் அவரவர்களுக்கான பாதையில் பயணம் செய்கிறார்கள். நாம் நமக்கான பாதையில் பயணம் செய்கிறோம். அவ்வளவுதான். இதில் நாமே பிறருக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு நமக்கே நமக்கான சிம்மாசனத்தில் கொஞ்சம் இடத்தையும் வழங்கிவிட்டு, அவர்கள் முழு சிம்மாசனத்தையும் எடுத்துக்கொள்ளும்போது ’ஆச்சா போச்சா’ என கதறுவதால் பிரயோஜனம் இல்லை.
சரி, இங்கு சாதிப்பவர்களின் சாதனையை விட அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை காட்டுவது போல் சிலரின் தலையீடுகளை எவ்வாறு தடுப்பது என்ற கேள்விக்கு வருகிறேன்.
ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் இந்த பிரச்சனைகளைக் கடந்துதான் முன்னேற வேண்டியுள்ளது. பெண்களாக இருந்தால் ‘பெண்’ என்பதே எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு ஒரு காரணியாக உள்ளது. முதலில் பெண்கள் ‘தான் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இதை தனியாக செய்கிறேன்’ என்ற எண்ணத்தை விட வேண்டும். அப்படி நினைக்கும்போதே என்னவோ பெண்களால் முடியவே முடியாத ஒரு செயலை தாங்கள் செய்வதாக ஒரு கழிவிரக்கமும் உண்டாகிறதல்லாவா?
அதுபோல ஆணுக்கு இணையாக நான் செய்கிறேன் என்ற எண்ணமும் வேண்டாமே. இது வலுகட்டாயமாக தங்களை தேவையில்லாமல் உயர்த்திக்கொண்டு சிரமப்படுத்திக்கொள்ளச் செய்யும். மேலும் கொஞ்சம் கர்வத்தையும் மனதுக்குள் ஏற்றிவிடும்.
கழிவிரக்கம், கர்வம் இரண்டுமே நம்மை நாமே பல பலவீனங்களுக்குள் அழைத்துச் செல்ல வழிவகுக்கும்.
இயல்பாக செயல்பட்டாலே சுதந்திரமாக இயங்க முடியும். சுதந்திரம் என்பது யாரோ நமக்குக் கொடுத்து வருவதில்லை. நமக்குள் நாமே ஏற்றி வைத்துக்கொள்ளும் சில குணாதிசயங்களில் இருந்து வெளிவருவதே உண்மையான சுதந்திரம்.
அத்துடன் சுயஅங்கீகாரத்தில் திருப்தி அடைபவர்களை புறத்தில் எந்த ஒரு சக்தியாலும் அத்தனை சுலபத்தில் வீழ்த்திவிட முடியாது. நம் முந்தைய தலைமுறை பாட்டிகளை கவனித்துப் பாருங்கள், பெண் சுதந்திரம் எல்லாம் முழுமையாக கிடைக்கப்பெறாத அந்த நாட்களிலேயே அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்பவே வாழ்ந்து, தன் குடும்பத்தினரையும் தன் கட்டுக்குள் வைத்திருந்திருப்பார்கள் என்பது புரியும். அவர்கள் வாழ்க்கையை மேலோட்டமாக பார்த்தால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது. ஆழ்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே அந்தப் பேருண்மை புலப்படும். அவர்கள் தங்கள் சுய அங்கீகாரத்தில் திருப்தி அடைந்தவர்களாக இருப்பார்கள். அதுவே அவர்கள் வெற்றி.
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கவும் முடியும், தன்னைத்தானே வீழ்த்திக்கொள்ளவும் முடியும். கவனம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
பதிவு எண்: 845 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 114
ஏப்ரல் 24, 2021
எழுத்து அரசியல்!
2. உங்கள் படைப்புகளால் நாங்கள் பயன்பெற்று வருகிறோம். ஆனாலும் இன்னும் முக்கியமாக மக்களுக்கு சென்று சேர வேண்டிய விஷயமாக ஏதும் வைத்துள்ளீர்களா?
என் எண்ணம் சொல் செயல் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் விஷயங்களை மட்டுமே எழுதுகிறேன். மாறாக இருப்பதை எழுத முயன்றதுமில்லை. அப்படியே எங்கேயேனும் எழுத முயற்சித்தால் எனக்கு எழுத்தின் ஓட்டமே வருவதில்லை. என் மனமே என்னை கேலி செய்வதைப் போல் இருக்கும்.
கற்பனையாக இருந்தாலும் அதிலும் நேர்மை இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன். கற்பனைக் கதைகள் எழுதுவதை விட்டு 28 ஆண்டுகள் ஆகின்றன. ஏனெனில் நான் நிறுவனம் தொடங்கி 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் சந்திக்கும் ஒவ்வொருவர் வாழ்க்கையுமே ஆயிரம் ஆயிரம் உண்மைக் கதைகளை தாங்கியிருப்பதைக் காணும்போது கதை எழுதும் ஆர்வம் குறைந்துள்ளது. கதையாக இருந்தால் கற்பனை பெயர்களுடன் கொஞ்சம் சுவாரஸ்யம் தூக்கலாக எழுதுவேன். வாழ்வியலாக இருந்தால் நிதர்சனம் தூக்கலாக இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டுமே நான் சந்திக்கும் அனுபவங்களே.
அனுபவங்கள் என்பது என் முந்தைய தலைமுறையினர், என் தலைமுறை, எனக்கு அடுத்த தலைமுறை என எல்லோரிடம் இருந்து நான் பெறுபவை. மனிதர்களிடம் இருந்து மட்டும் அல்ல. செடிகொடிகள், விலங்குகள், பஞ்ச பூதங்கள் இப்படி நாம் இயங்கும் பிரபஞ்சமே நித்தம் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஒரு புது அனுபத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டுதானே இருக்கின்றன.
விழிப்புடன் இருந்தால் காற்றில் கலந்திருக்கும் சிறு தூசியும் ஆயிரம் பாடமெடுத்துவிட்டுச் செல்லும் நமக்கு. தேவை நமக்கு விழிப்புணர்வு மட்டுமே.
என் 10 வயதில் இருந்து நித்தம் எழுதுகிறேன். அந்த வயதில் எனக்குத் தெரிந்ததை எழுதினேன். 21 வயதுவரை என்னைச் சுற்றியச் சூழலில் நான் கற்றறிந்ததை எழுதினேன். அதன்பிறகு இன்றுவரை நான் புறத்தில் இயங்கும் தொழில்நுட்பத்தையும், அகத்தில் வாழும் வாழ்வியலையும் எழுதுகிறேன். எப்படியோ கிரியேட்டிவிட்டி என்பது என் சுவாசம் போன்றது. அதனால் நிறுத்தாமல் எழுதுகிறேன்.
மக்களிடம் எதையும் கொண்டு சேர்ப்பதற்காக நான் எழுதுவதில்லை. அறிவுரை சொல்லும் நோக்கத்துடனும் எழுதுவதில்லை. ஒருவரது அனுபவங்கள்தான் அறிவுரைகள் என்பதால், அது எல்லோருக்கும் எல்லா சூழலுக்கும் ஒத்துப் போகாது.
நான் என் இயல்பில் வாழ்கிறேன். அது மற்றவர்களுக்கு பாடமாகிறது. நான் எழுதுபவற்றை உற்று நோக்கினால், அதில் என் வாழ்க்கை தெரியும். என் வாழ்க்கையின் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று பிரிவுகளாக்கி அந்த அனுபவங்களையே எழுதுகிறேன். என் வாழ்க்கையே என் அடையாளம். ஒவ்வொருவருக்குமே அவர்கள் வாழ்க்கைத்தான் அடையாளம். அதை எப்படி மதிப்புமிக்கதாக்கிக்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்வதற்கான களமே வாழ்க்கை.
ஆனால் நான் எழுதும் விஷயங்கள் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை, சென்ற தலைமுறை, இந்தத் தலைமுறை, அடுத்த தலைமுறை என மூன்று தலைமுறையினருக்கும் சென்று சேரும் வகையில், பொருந்தும் வகையில் இருப்பதே நான் பெற்ற வரம்.
வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை வந்தால் என் எழுத்துக்களைத் தேடி எடுத்து வாசிக்கும்போது அதில் அவற்றுக்கான தீர்வு கிடைப்பாதாக சொல்கிறார்கள் பலர். இது நான் பெற்ற பேறு.
சரி. இன்னும் முக்கியமாக மக்களுக்கு சென்று சேர வேண்டிய விஷயமாக ஏதும் வைத்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு வருகிறேன்.
ஒருவரின் எழுத்தினால் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றால் வாசிப்பவர்களும் அந்த எழுத்தோடு பின்னிப்பிணைய வேண்டும். எழுத்தும் வீச்சும், வாசகர்களின் மனதும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும்.
தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றோ, தீர்வு வேண்டும் என்றோ ஏதேனும் ஓர் ஆழமான பிடிப்புடன் வாசிப்பவர்களால் மட்டுமே எழுத்தில் அவர்களுக்கான தீர்வை பெற முடியும்.
இந்த லாஜிக் ஏதேனும் மனம் / உடல் பிரச்சனைகளுக்காக கவுன்சிலிங் செல்பவர்களுக்கும் பொருந்தும்.
மற்றபடி பொழுதுபோக்கிற்காக வாசிப்பவர்களுக்கு எழுத்தும் வாசிப்பும் ஒரு பொழுதுபோக்குதான். புத்தகத்தை மூடி வைத்ததும் அதிலுள்ளவை மனதில் இருந்து மறைந்துவிடும்.
எழுத்து மட்டுமே தன்னிச்சையாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. ஏனெனில் இந்தத் துறையிலும் பிடித்த எழுத்தாளர், ஆதர்ச படைப்பாளர், நட்சத்திர எழுத்தாளர், பிரபல எழுத்தாளர் என்ற பல்வேறு அரசியல்கள் உள்ளன. அதில் சிக்கியுள்ள வாசகர்கள் எழுத்தைவிட எழுத்தாளர்களை கொண்டாட ஆரம்பித்துவிடுவதால் எழுத்தின் வீச்சும் அதன் மதிப்பும் அது எப்படி படைக்கப்படுகிறதோ அந்த வாசனையில் அப்படியே சென்றடைவதில் சிக்கல்கள் உள்ளன.
எனவே, நான் வாழ்கிறேன். எழுதுகிறேன். அதில் நேர்மையும், உண்மையும் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன். தேவைப்படுபவர்களுக்கு அது தானாக சென்றடைகிறது.
3. நீங்கள் தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள் மட்டுமின்றி உளவியல் நூல்களையும் எழுதி வருகிறீர்கள். ஆனால் இந்த சமுதாயத்தில் இலக்கியமோ அல்லது எந்தவொரு படைப்பாயினும் அதை ஆண் எழுத்து பெண் எழுத்து என்று பிரித்து பார்ப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? அதுபோன்ற அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?
யார் எப்படிப் பிரித்துப் பார்த்தால் நமக்கு என்ன? நான்தான் முதல் கேள்வியிலேயே இதற்கு பதில் சொல்லி விட்டேனே. சுய அங்கீகாரம்தான் முக்கியம். அதைக்கூட பெற முடியாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதுபோன்றவர்கள்தான் பிறரை ஏதேனும் ஒரு காரணம் வைத்துக்கொண்டு கீழிறக்கி மட்டப்படுத்தி அதில் ஒரு சுகம் காண்பார்கள்.
என்னைப் பொருத்தவரை நான் எழுதுகிறேன். பாடுகிறேன். மிமிக்கிரி செய்கிறேன். அனிமேஷன் செய்கிறேன். புரோகிராம் எழுதுகிறேன். சாஃப்ட்வேர் தயாரிக்கிறேன். ஆவணப்படம் எடுக்கிறேன். அது என் வாழ்க்கை.
என் இயல்பில் நான் இயங்குகிறேன். பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நான் என்றுமே கவலைப்படுவதில்லை. என் மனதுக்கு நான் நேர்மையாக இருக்கிறேனா, குற்ற உணர்வின்றி செயல்படுகிறேனா என்று மட்டும் பார்த்துக்கொள்கிறேன்.
நன்றாக கவனித்துப் பாருங்கள். ‘என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்ற ட்ரெண்டிங் ஃபேஸ்புக்கில் வந்தபோதுகூட நான் அதில் எல்லாம் கலந்துகொண்டிருக்க மாட்டேன். ‘என்னைப் பற்றி சொல்லுங்கள்’ என கேட்க மாட்டேன். ஏனெனில் அது எனக்கு தேவையில்லாத வேலை. என்னைப் பற்றி எனக்குத் தெரியும்போது அதை பிறரிடம் ஏன் எதிர்பார்த்து அவர்கள் தங்கள் மனம் போன போக்கில் பதில் சொல்ல அதனால் மன உளைச்சல் உண்டாக, இப்படி தொடர்ச்சியாக மனச்சிக்கலை உண்டு செய்யும் செயல் அது.
ஆனால் என் வாசகர்களிடம் நான் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி ‘என் எழுத்து உங்களை என்ன செய்தது?’. அதுவும் எதற்கென்றால் என் எழுத்து எந்தெந்த வகையில் பயன் அளிக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவே. அதுசார்ந்து இன்னும் நிறைய எழுதவே. மற்றபடி என் எழுத்தின் புகழ்ச்சியைப் பெறுவதற்காக அல்ல.
தேவையில்லாத விஷயங்கள் என் கவனத்துக்கு வரும்போது எனக்கு காதுகள் தானாக மூடிக்கொள்ளும். கண்களும் செவிடாகிவிடும். இந்தக் கலை என் சிறு வயதில் இருந்தே பரிச்சியம் எனக்கு. நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் நிம்மதியாக வாழலாம்.
4.நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயம் ஏதும் உண்டா?
குறிப்பாக ஏதுமில்லை. நொடிப்பொழுதில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும் தொழில்நுட்ப உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பதால் நித்தம் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளாவிட்டால் பின்தங்கி விடுவோம். நினைக்கும்தோறும் புதுவிஷயங்களை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறேன். கற்றுக்கொண்டே இருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் இது தொடரும்.
5.வெப்சைட் உருவாக்குவது மற்றும் ஆன்லைன் வர்த்தகம் குறித்து தகவல்கள் சம்பந்தமாக உங்கள் வழிகாட்டல் என்ன?
ஆன்லைன் வர்த்தகத்துக்கு உங்களுக்கான இமெயிலே உங்கள் விசிட்டிங் கார்ட். பலர் பல இமெயில் முகவரிகளை வைத்துக்கொண்டு திண்டாடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படி செய்யாமல், ஒரே ஒரு இமெயில் முகவரியை நிரந்தரமாக்கிக்கொள்ளுங்கள். அதன் மூலம் பிளாக், வெப்சைட், யு-டியூப் சேனல் என உருவாக்கிக்கொண்டு ஆன்லைனில் உங்கள் வர்த்தகத்துக்கான அஸ்திவாரத்தை பலப்படுத்திக்கொள்ளலாம். ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் விளம்பரப்படுத்திக்கொள்ளலாம். விரல் நுனியில் உங்கள் வர்த்தகத்தை வைத்துக்கொண்டு இந்த உலகையே சுற்றி வர முடியும்.
நீங்களாகவே எல்லாவற்றையும் செய்ய முடியவில்லை என்றால் அந்தப் பணிகளை செய்து தரும் நிறுவனங்களை அணுகி பயன்பெறலாம். மேலும் நீங்களும் தொழில்நுட்பத்தில் அப்டேட் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிறரை எதிர்பார்க்காமல் இருக்க முடியும்.
ஆன்லைன் வர்த்தகம் என்பது பெரிய கான்செப்ட்.
வாடகைக்கு ஒரு இடம் பார்த்து அல்லது சொந்தமாக ஒரு இடம் வாங்கி, கடைவிரித்து, விளம்பரப்படுத்தி, வியாபாரம் செய்து, கணக்கு வழக்குகள் பார்த்து, லாப நஷ்டம் முடிவு செய்து… இப்படி நேரடியாக வியாபாரம் செய்ய என்னவெல்லாம் செய்கிறோமோ அத்தனையையும் ஆன்லைன் வர்த்தகத்திலும் செய்ய வேண்டும். பயன்படுத்தும் நுணுக்கம் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவே.
6.நம் பாரம்பரிய வாழ்வியலை முன்னெடுக்கும் என் போன்றோர்களுக்கு தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கு உங்கள் ஆலோசனை என்ன?
நம் பாரம்பரிய வாழ்வியலை முன்னெடுக்கும் செயல்பாடு மிக நல்ல விஷயம். உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள். இலவசமாக கேம்ப்கள் நடத்தி உங்களையும் உங்கள் சேவைகளையும் அறிமுகப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் செயல்பாடுகள் மக்கள் மனதில் பதிவாகி உங்களை நாடி வரத்தொடங்குவார்கள்.
தொலைபேசி, அலைபேசி, வாட்ஸ் அப், ஸ்கைப், ஜூம் போன்றவற்றில் கூட தொடக்கத்தில் இலவசமாக உங்கள் சேவைகளை தொடரலாம். பின்னர் கட்டணத்துக்கு மாறலாம்.
எந்த ஒரு புது முயற்சியும் மக்கள் மனதில் நீங்காமல் இடம்பெற நாட்கள் எடுக்கும். எனவே பொறுமை அவசியம். வாழ்த்துகள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP
மெய்நிகர் (Virtual) நேர்காணல் செய்தவர்: உயர்திரு. சாந்தா தேவி!