ஜம்முனு வாழ காம்கேரின் OTP-153: வாழ்தல் இனிது, சூட்சுமம் அறிந்தால்! (Sanjigai108)

பதிவு எண்: 884 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 153
ஜூன் 2, 2021

வாழ்தல் இனிது, சூட்சுமம் அறிந்தால்!

நாம் ஒரு செய்கின்ற ஒரு செயல் வெற்றியடைய வேண்டுமானால் அந்த செயலுடன் தொடர்புடைய பலரின் உழைப்பும் ஒத்துழைப்பும் நமக்கு மிக அவசியம்.

மற்றவர்களின் ஒத்துழைப்பை முழுமையாக பெறுவதற்கு மிக எளிமையான லாஜிக் ஒன்றுண்டு.

எதிராளியின் கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிப்பதை அல்லது எதிராளியை நாம் மதிப்பதை அவர்களுக்கு உணர வைத்தாலே போதும், நம்முடைய செயல்பாடுகளுக்குத் தேவையான அத்தனை ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கொரோனா, லாக்டவுன், வியாபாரத்தின் சரிவு, விற்பனை மந்தம் என தொடர்ச்சியாக கீழ்நோக்கி செல்ல ஆரம்பித்த பல பத்திரிகைகளின் அச்சுப் பிரிவுகள் நிறுத்தப்பட்டு அவர்கள் ஆன்லைனுக்கு மாறத் தொடங்கியதும் பெரும்பாலானோர் எங்கள் நிறுவனத்தை அணுகினார்கள்.

அவர்கள் அனைவருமே கடந்த 28 வருடங்களாக எங்கள் காம்கேரின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் எங்கள் தயாரிப்புகளின் தனித்தன்மையாலும், என்னுடைய திறமையாலும் ஈர்க்கப்பட்டு அவற்றை வெளியுலகிற்கு செய்திகள் மூலமாகவும் நேர்காணல்கள் மூலமாகவும் வெளிச்சம் போட்டுக் காட்டி பெருமைப்படுத்தியவர்கள் என்பதால் அவர்களுக்கு எங்கள் காம்கேரின் பங்களிப்பை ஆலோசனைகள் மூலமாகவும், நேரடியாக தொழில்நுட்ப ரீதியாக அவர்களை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வெப்சைட்டுகள், ஆப்கள் மற்றும் யு-டியூப் சேனல்கள் என உருவாக்கிக்கொடுக்கும் ப்ராஜெக்ட்டுகளை செய்து கொடுப்பதன் மூலமாகவும் உதவி வருகிறோம். முழுக்க முழுக்க பிசினஸ் தான். ஆனாலும் அதை ஆத்மார்த்தமாக  செய்து தருவதால் எங்கள் தயாரிப்புகள் அவர்களை வெகுவாகக் கவர்கின்றன.

சில பத்திரிகை நிறுவனங்களில், தலைமைகளின் புத்திசாலித்தனத்தைவிட அவர்களிடம் பணிபுரிபவர்கள் சாதுர்யமாக இருப்பதை கண்டு நான் வியக்கிறேன்.

உதாரணத்துக்கு ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர்கிறேன்.

அவர்களின் யு-டியூப் சேனல்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களின் நலன், தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை என பல்வேறு தலைப்புகளில் வீடியோ தொடர்கள் தயாரித்து வழங்கி வருகிறோம். வீடியோவை தயாரித்து அந்தந்த நிறுவன தலைமைக்கும் அவர்களிடன் பணிபுரியும் ஓரிருவருக்கும் அனுப்ப வேண்டும். அவர்கள் ஒருமுறை பார்த்து ஓகே சொன்னதும் அவர்களின் யு-டியூப் சேனலில் பதிவேற்றிவிடுவோம்.

இதுதான் நடைமுறை.

ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரியும் 35+ வயது பெண்ணின் அணுகுமுறை என்னை வியக்க வைத்தது.

நேற்று நாங்கள் அனுப்பிய வீடியோவை அவர் பார்ப்பதற்கு நேரம் இல்லாததால் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி இருந்தார்.

‘மேடம், தங்கள் வீடியோ தொடரின் இன்றைய எபிசோடின் ப்ரிவியூ ஷோவை தவற விட்டுவிட்டேன். அந்தத் தொடர் ரிலீஸ் ஆகும்போது பார்க்கிறேன். சாரி  மேடம்..’

இவர் பயன்படுத்திய வார்த்தைகளில் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறார்.

அதாவது நாங்கள் தயாரிக்கும் வீடியோவை அவர்கள் பார்வைக்கு அனுப்புவது அவர்கள் அதில் ஏதேனும் எழுத்துப் பிழைகள், எடிட்டிங் தவறுகள் இருந்தால் சரி செய்வதற்காகவே. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் ‘குற்றம் குறைகளை’ காணவே.

ஆனால் அந்த இளம்பெண் பணியாளர் அந்த செயலின் தரத்தை எப்படி வார்த்தைகளால் உயர்த்துகிறார் பாருங்கள்.

அவர்கள் பார்வைக்கு அனுப்புவதை ‘ப்ரிவியூ ஷோ’ என்றும், யு-டியூபில் அப்லோட் செய்யப்படும் வீடியோவை ‘வீடியோ ரிலீஸ்’ என்றும் குறிப்பிட்டு அந்தப் பணிகளை செய்யும் நபர்களுக்கு எத்தனை உயரிய மதிப்பளிக்கிறார் என்பதையும் கவனியுங்கள்.

இப்படித்தான் நாம் செய்கின்ற பணியில் பிறரது ஒத்துழைப்பை முழுமையாகப் பெறுவதற்கு அவர்களை நாம் மதிப்பதை ஏதேனும் ஒரு விதத்தில் உணர வைத்து வைத்துவிட வேண்டும். அப்படி செய்துவிட்டால் அப்புறம் பாருங்கள், உங்கள் பணிக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், உங்களுடன் பழகும் விதத்தில் அவர்கள் காட்டும் மேலான அணுகுமுறையையும்.

அவர் அனுப்பிய வாட்ஸ் தகவலுக்கு நான் என்ன பதில் அளித்தேன் தெரியுமா?

‘இந்த இடத்தில்தான் நீங்கள் வேறுபட்டு வித்தியாசப்படுகிறீர்கள். ஒரு வீடியோவை உங்கள் பார்வைக்கு அனுப்பிய பிறகு உங்கள் நிறுவனத்திடம் இருந்து அனுமதி கிடைத்த பிறகு லைவ் போடச் சொல்கிறார்கள். ஆனால் நீங்கள், அதை ‘ப்ரிவியூ ஷோ’ என்றும், லைவ் ஆக வெளிவருவதை ‘ரிலீஸ்’ என்றும் மிக அழகாக அதன் தரத்தை உயர்த்துகிறீர்கள். எல்லாவற்றையும் பாசிட்டிவாக பார்க்கும் உங்கள் கண்ணோட்டம் மனமுதிர்ச்சியை நான் பல நேரங்களில் ரசித்திருக்கிறேன். இன்றும் அப்படியே. உங்களை இப்படி வடிவமைத்த நான் முகமறியா உங்கள் பெற்றோருக்கு என் வணக்கங்கள். ஆல் தி பெஸ்ட்’

நான் அனுப்பிய வாட்ஸ் அப் தகவலுக்கு நெகிழ்ந்துபோய் அவர் ‘நான் சோர்ந்திருக்கும் நேரங்களில் நீங்கள் அனுப்பும் இதுபோன்ற ஊக்க வார்த்தைகள் எனக்கு எனர்ஜி தருகிறது மேடம். மிக்க நன்றி’ என பதில் அனுப்பினார்.

இப்படித்தான் நாம் பிறரிடம் காணும் சின்னச் சின்ன விஷயங்களில் உள்ள நேர்மறையை நாம் உள்வாங்கிக்கொள்வதுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நாம் செய்கின்ற பணி இலகுவாகும். வாழ்க்கை இனிக்கும். வாழ்தல் இனிது என கொண்டாடத் தோன்றும்.

அன்பாகட்டும், மரியாதை ஆகட்டும் மனதுக்குள் வைத்திருந்தால் அதற்குப் பலன் கிடையாது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தத் தவற வேண்டாம். அது ஒன்றுதான் மனிதர்களுக்கு இடையேயான அத்தனை பாகுபாடுகளையும், வேறுபாடுகளையும், ஏற்ற இறக்கங்களையும் நீக்கவல்ல அருமருந்து.

ஆம். வாழ்தல் இனிதுதான், அதன் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 995 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon