ஜம்முனு வாழ காம்கேரின் OTP-154: சுரண்டல்கள்!

பதிவு எண்: 885 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 154
ஜூன் 3, 2021

சுரண்டல்கள்!

ஆன்லைன் வகுப்புகள் பெருமளவில் அறிமுகப்படுத்தப்பட்டால், எல்லாவற்றுக்கும் ஆதாரம் டிஜிட்டலாக பதிவாகிவிடுவதால் பயம் இருக்கும் என்பதால், ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ளும் மனப்பாங்கு குறையும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், வெவ்வேறு வடிவம் எடுத்து அது  தொடர்ந்துகொண்டே தான் உள்ளது.

பி.எச்.டி மாணவிகள் அனுபவிக்கும் பிரச்சனைகள் பற்றி அறிந்தவர்கள் பி.எச்.டி படிக்க வேண்டும் என நினைத்தாலும் படிக்கவே அஞ்சுவார்கள். பி.எச்.டியை பொருத்தவரை அவர்களுக்கு அமையும்  வழிநடத்தும் பேராசிரியர் (Guide) சரியாக அமைந்துவிட்டால் பிரச்சனை இல்லை. அப்படி இல்லாதபட்சத்தில் அவர்கள் கொடுக்கும் அத்தனை அழுத்தங்களையும் தாங்கிக்கொண்டு டாக்டரேட் முடித்து பட்டம் பெறுபவர்கள் மிக வலிமையான இதயம் கொண்டவர்கள். எத்தனையோ ஆராய்ச்சி மாணவிகள் ஆய்வை பாதியிலேயே நிறுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

அழுத்தங்கள் என்பது பாலியல் சுரண்டல்கள் மட்டும் அல்ல. அவர்களுக்குத் தேவையான விஷயங்களை அவர்கள் சொல்லும் வேலைகளை அவ்வப்பொழுது செய்துகொடுக்க வேண்டும்.

அவர்கள் சொல்லும் வேலைகள் என்பது, அவர்களுக்கு ‘குட்மார்னிங்’ எப்படி சொல்வதில் இருந்துத் தொடங்கி அவர்கள் வீட்டுக்கு காய்கறிகள் வாங்கிக்கொடுப்பது, அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு பள்ளி ப்ராஜெக்ட்டுகளை செய்து தருவது என படிக்கின்ற மாணவிகளின் திறமைக்கு ஏற்ப வேலைகளின் பளு கூடும்.

ஏதோ அவர்களின் பெற்றோர் அவர்களை ‘நேர்ந்துவிடவே’ பெற்றிருக்கிறார்கள் என்கின்ற தோரணையில் அவர்களை ஆட்டிப் படைப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

இப்படி அழுத்தங்கள் கொடுப்பது ‘ஆண்’ பேராசிரியர்கள்  மட்டுமல்ல, பெண் பேராசிரியைகளும்தான். அழுத்தங்கள் என்பது பாலியல் சுரண்டல் மட்டுமல்ல. எந்த விதத்தில் எல்லாம் மாணவ மாணவிகளை அவர்களின் படிப்பைத் தாண்டி அவர்களின் திறமையை தங்கள் சுயலாபத்துக்காகப் பயன்படுத்துகிறார்களோ அத்தனையும் அழுத்தங்களே. அத்தனையும் சுரண்டல்களே.

அதுபோல மாணவிகளுக்கு மட்டுமல்ல, மாணவர்களிடமும் சுரண்டல்கள் நடைபெறுகின்றன. அவர்களுக்கான பிரச்சனைகளில் பாலியல் சுரண்டல் என்பது சதவிகிதத்தில் குறைவு. மற்றபடி மேற்படி சொன்ன அத்தனைப் பிரச்சனைகளும் அவர்களுக்கும் உண்டு.

என் நிறுவனத்தில் R&D செக்‌ஷனில் பணியில் இருக்கும் இரட்டை டாக்டரேட் பட்டம் பெற்ற ஆண் பொறியாளர் ஒருவர் தான் பட்ட கஷ்டங்களை விலாவாரியாக சொல்லி இருக்கிறார். கை காசை செலவழித்துக்கொண்டு அவருடைய கைட் பணிபுரியும் கல்லூரிக்கு அவர் அழைக்கும் போதெல்லாம் சென்று சிறப்பு வகுப்புகள் எடுப்பது, அவர் கைடின் தினப்படி கல்லூரிப் பணிகளை கம்ப்யூட்டரில் டாக்குமெண்டாக தயாரித்துக் கொடுப்பது, கைட் வகுப்பு எடுக்கத் தேவையான பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் தயாரித்துக்கொடுப்பது என ஆய்வு செய்பவரின் அன்றாட வாழ்க்கையே திசை மாறிப் போய்விடுவதை கண்ணீர் விடாத குறையாக சொல்லி இருக்கிறார்.

இவ்வளவு ஏன், பத்திரிகை துறையில் இதே ஆதிக்க மனப்பாங்குடன் நடந்துகொண்ட பெண்களை எனக்கு நன்கு தெரியும். 28 வருடங்களுக்கு முன்பெல்லாம் பத்திரிகையில் தொழில்நுட்பம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் வருவதே அபூர்வம். ஏன் நம் மக்களும் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்தனர். அப்போது ஒரு பிரபலமான பெண்கள் மாத இதழுக்கு ‘தொழில் நுட்பத்தை தமிழில் அறிமுகப்படுத்தலாம்’ என நான் ஐடியா கொடுத்து போஸ்ட் கார்ட் அனுப்பினேன். அவர்களும் அழைத்துப் பேசி எழுதச் சொன்னார்கள். முதன் முதலில் ஜனரஞ்சகப் பத்திரிகையில் தமிழில் தொழில்நுட்பம் குறித்து வெளிவர ஆரம்பித்த முதல் தொடராகவும் அது அமைந்தது. இதையும் அவர்களே என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.

ஓரிரு மாதங்கள் தொடர் வெளிவந்த பிறகு, அந்தப் பத்திரிகையின் எடிட்டராக பணியில் இருந்த ஒரு பெண்மணியின் ஆதிக்க மனோபாவம் வெளிப்படத் தொடங்கியது. அவர்கள் வீட்டில் அவர்கள் நடத்துகின்ற ஒரு பத்திரிகைக்கு இலவசமாக லே அவுட் செய்துகொடுக்க சொல்வது, அவர்கள் வீட்டு கம்ப்யூட்டர், பிரிண்டர் சரியில்லை என்றால் இலவசமாக சர்வீஸ் செய்து கொடுப்பது என சின்ன சின்னதாக எதிர்பார்ப்புகளை வைக்க ஆரம்பித்தார். எதையுமே இலவசமாக செய்து தரும் அளவுக்கு எங்கள் காம்கேரும் அப்போது வளரவில்லை, அப்போதுதான் நிறுவனம் தொடங்கி முதல் கியரில் ஓட ஆரம்பித்திருந்த நேரம் என்பதால் அவர் சொன்ன அத்தனையையும் ஆரம்பத்திலேயே மறுத்து  ‘இது இதற்கு இவ்வளவு ஆகும்’ என சர்வீஸ் சார்ஜ் சொன்னபோது அந்தப் பெண்மணி சொன்ன ஒரு வார்த்தை இன்னமும் என் நினைவில் உள்ளது ‘நீங்கள் சுயநலம் மிக்கவர், நான் உங்கள் கட்டுரைத் தொடரை பத்திரிகையில் போடுகிறேன். ஆனால் நீங்கள் எனக்கு எந்த உதவியையுமே செய்வதில்லை’ என்றார்.

இத்தனைக்கும் அவர் அங்கு மாத சம்பளத்துக்கு பணிதான் செய்துகொண்டிருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் வீட்டில் நடத்தி வந்த ஒரு பத்திரிகைக்கு நான் பெரிய மனதுடன் இலவசமாக சர்வீஸ் செய்தால் பத்திரிகையில் கட்டுரைத் தொடர் வெளியாகும் என்ற பின்னணியில் அவரது செயல்பாடுகள் அத்தனையும் அமைந்திருந்தன.

நான் உடனே அவருக்கு என்ன பதில் சொன்னேன் தெரியுமா ‘மிக்க நன்றி மேடம், கட்டுரை எழுதுவது என் பணியின் ஒரு சிறு பகுதி. என் தொழில்நுட்ப அனுபவங்களையும், நான் கற்றறிந்ததையும் இந்த சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில் பகிரவே எழுதுகிறேன். மற்றபடி கட்டுரை எழுதி பெரும்புகழ் அடைய வேண்டும் என்பது என் நோக்கமல்ல… இதுவரை பப்ளிஷ் செய்தமைக்கு மிக்க நன்றி மேடம்’ என்று சொன்னேன்.

அதன் விளைவு என்ன தெரியுமா ‘அந்தத் தொடருக்கு வாசகர்கள் ரெஸ்பான்ஸ் இல்லை’ என பொய்யான காரணத்தை மேலிடத்துக்கு தெரிவித்துவிட்டு அரையும் குறையுமாக அந்தத் தொடரை நிறுத்துவிட்டார் அந்த எடிட்டர்.

நிறுவனத் தலைமைக்குக் கடிதம் எழுதினேன்.  ஆனால் அந்த அலுவலகத்தில் எல்லா கடிதங்களும் அந்த எடிட்டர் பார்வைக்கு சென்ற பிறகே மேலிடத்துக்குச் செல்லுமாம். அவருடைய உதவியாளர் ஒருமுறை சொல்லி இருக்கிறார். அதனால் நான் அனுப்பிய கடிதம் குப்பைக்குச் சென்றது.

அப்போதெல்லாம் டிஜிட்டல் உலகமே இல்லை என்பதால் வேறெந்த வகையிலும் அந்த எடிட்டர் குறித்து நிறுவனத் தலைமைக்குச் சொல்ல வாய்ப்பில்லாமல் போனது.

மேலும் எனக்கும் என் நிறுவன பணிகள் அதன் வளர்ச்சி உழைப்பு ஆராய்ச்சி என குறிக்கோள் இருந்ததால் அந்த எடிட்டர் குறித்து மறந்தே போனேன்.

இந்த நிகழ்வுக்குப் பெயர் என்ன? சுரண்டல்.

இன்று அதே நிறுவனத்தின் தலைமை, எங்கள் காம்கேருடன் பிசினஸ் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு எங்கள் தொழில்நுட்ப ஆலோசனைகளுடன் தான் தங்கள் பத்திரிகையை கொண்டு செல்கிறார்கள்.

28 வருடம் கடந்து அன்று நடந்ததை அந்த நிறுவன தலைமைக்குச் சொன்னேன். அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டார்.

பத்திரிகை உலகிலேயே இத்தனை என்றால் தொலைக்காட்சி, திரைப்படத் துறை இங்கெல்லாம் எவ்வளவு அழுத்தங்களைக் கடந்து வர வேண்டி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இவ்வளவு ஏன் கட்டிடம் கட்டும் இடத்தில் சித்தாள்களுக்கு மேஸ்திரிகள் கொடுக்கும் பிரச்சனைகள் குறித்து சொல்ல ஆரம்பித்தால் ‘சுரண்டல்கள் தொடரும்’ என போட்டுக்கோண்டே போக வேண்டியதுதான்.

பெண்களுக்கு ஆண்களால் உண்டாகும் பிரச்சனைகள் ஒருபக்கம் இருக்க, பெண்களுக்குப் பெண்களால் ஏற்படும் மன உளைச்சல்களும், பிரச்சனைகளும் இன்னும் கொடூரமானவை. ஏன் எனில் எங்கு அடித்தால் பெண் காயப்படுவாள் என அவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் குறி வைத்து தாக்குவார்கள்.

எல்லோராலும் எல்லா சுரண்டல்களையும் மீறி வெளிவருவது சாத்தியமில்லை. அதற்கு நல்ல மனவலிமை வேண்டும். எந்தப் பிரச்சனைக்கும் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் பக்குவம் வேண்டும். எல்லோரையும் அனுசரித்துச் செல்வதாக நினைத்துக்கொண்டு ‘தும்பை விட்டு வாலை பிடிக்கும்’ கதையாக பிரச்சனைகள் முற்றும்போதுதான் அதில் இருந்து வெளிவர யோசிக்கவே ஆரம்பிக்கிறார்கள். இதுதான் பிரச்சனையின் அடிநாதமே.

இதை இன்னும் விரிவாக அலசலாம்தான். ஆனால் மனிதர்களின் மனோநிலை மாறாத வரை எவ்வளவு அலசினாலும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை.

தனி மனித ஒழுக்கம் ஒன்றே இதற்கான தீர்வு!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 477 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon