ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1001: மொய்யும் நன்றியும்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1001
செப்டம்பர் 27, 2021 | திங்கள் | காலை: 6 மணி

மொய்யும் நன்றியும்!

வீட்டில் ஒரு திருமண நிகழ்வுக்கான ஏற்பாடு.

அது நமக்காகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் நம் பிள்ளைகளுக்கோ அல்லது உடன் பிறந்தவர்களுக்கோ யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம்.

என்னவெல்லாம் செய்வோம். அழைப்பிதழ் அடிப்போம். உற்றார் உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். புத்தாடைகள், நகைகள், பாத்திரம் பண்டங்கள் என பார்த்துப் பார்த்து வாங்குவோம். திருமண மண்டபத்துக்கு, நாதஸ்வரத்துக்கு, விருந்துக்கு, இனிப்பு காரம் என பலகாரங்களுக்கு என பார்த்துப் பார்த்து முன் பதிவு செய்வோம். திருமணம் நடத்தி வைக்க சாஸ்திரிகள் அதன் தொடர்பான சம்பிரதாயங்கள் என அனைத்துக்குமே முன்னேற்பாடுகள் செய்வோம்.

திருமண நிகழ்வுக்கு 2 மாதங்கள் முன்பில் இருந்தே திருமணக் கலை கட்டிவிடும் வீட்டில். அப்படித்தானே?

திருமண நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்கு அது ஒருநாள் நிகழ்வு. ஆனால் திருமணத்தை நடத்துகின்ற இரு வீட்டாருக்கும் அது இரண்டு மூன்று மாத முன்னெடுப்புகள். முயற்சிகள். ஏற்பாடுகள்.

இப்படி வீட்டில் நடைபெற இருக்கும் ஒரு மகிழ்ச்சியான வைபவம் செம்மையாக நடைபெற எப்படிப்பட்ட முயற்சிக்கள் எல்லாம் எடுப்போமோ அப்படித்தான் ‘காம்கேர் OTP 1000’ தினத்துக்கான நிகழ்வை நானும் கொண்டாட ஏற்பாடுகள் செய்தேன் என்று சொல்லலாம்.

ஐம்பது நாட்களுக்கு முன்பே பொதுவெளியில் ‘காம்கேர் OTP 1000 – விழாவில் யார் வேண்டுமானாலும் விருந்தினராகக் கலந்துகொள்ளலாம்’ என்று அழைப்பிதழ் வைத்தேன்.

அடுத்தடுத்த நாட்களில் காம்கேர் OTP பதிவுகளின் வாசகர்கள் அதை தங்களுக்கு வைக்கப்பட்ட தனி அழைப்பிதழாகக் கருதி தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

அவற்றை அவ்வப்பொழுதே அழைப்பிதழாக வடிவமைத்து அவர்களை விட்டே மற்றவர்களை நிகழ்ச்சிக்கு அழைப்பதைப் போல ஒரு ஆர்வத்தை உண்டாக்கினேன். ஒருவர் வாழ்த்துச் சொல்ல ஆரம்பிக்க அது சங்கிலித் தொடர்போல கடந்த 50 நாட்களாக தினமும் தொடர்ந்தது.

ஆக ‘காம்கேர் OTP 1000’ நிகழ்ச்சிக்கு நான் பொதுவெளியில் வைத்தது ஒரே ஒரு அழைப்பிதழ். ஆனால் என்னுடைய வாசகர்கள் ஒவ்வொருவரும் காம்கேர் OTP பதிவுகள் குறித்து அவரவர் கருத்துக்களை, வாழ்த்துக்களை, அபிர்ப்பிராயங்களை அழகாக எழுதி அதற்கு  ‘தினம் ஒரு அழைப்பிதழ்’ தயாரிக்க உதவி மற்றவர்களை அழைக்க பேருதவி செய்தனர். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

ஆம். ஒவ்வொருவரின் வாழ்த்தையும் நான் அழைப்பிதழ் போல வடிவமைத்து என் எழுத்தை வாசித்து, ரசித்து, மகிழ்ந்து லைக்கும் கமெண்ட்டும் ‘போடாமல்’ கடந்து செல்வோரையும்கூட ‘காம்கேர் OTP 1000’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்திருந்தேன்.

இப்படியாக 50 நாட்கள் கடந்து சென்றுகொண்டிருக்க 50 அழைப்பிதழ்கள் வைத்து ‘காம்கேர் OTP 1000’ நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தேன். என்னளவில் நான் அறிந்த வகையில் 50 அழைப்பிதழ்கள் வைத்து நிகழ்ச்சியைக் கொண்டாடியது முதன்முயற்சியே. வேறு யாரேனும் வேறு வடிவில் செய்திருக்கலாம். ஆனால் நான் வாசகர்களின் வாழ்த்துரைகளையே அழைப்பிதழாக மடைமாற்றி ‘காம்கேர் OTP 1000’ நிகழ்ச்சிக்கு அழைத்தேன் என்பதுதான் உண்மை.

அந்த அழைப்பிதழ்களே ‘காம்கேர் OTP 1000’ என்ற நிகழ்ச்சிக்கு அவர்கள் ஒவ்வொருவரும் எனக்குக் கொடுத்த பரிசும் கூட.

ஏற்கெனவே மலைபோல குவிந்திருந்த பரிசுகளைத் தவிர நிகழ்ச்சிக்காகவே நேற்று சிறப்புப் பரிசுப் பொருட்களும் வர ஆரம்பித்தன.

எல்லா பரிசுகளுமே அற்புதம்தான். ஆனாலும் ஒரு பரிசு சட்டென என்னை திரும்பிப் பார்க்க வைத்தது. விருதுநகரில் இருந்து பட்டப்படிப்பு முடித்து வேலைக்காக முயற்சித்துக்கொண்டிருக்கும் இளம் பெண் கோபிகா முருகேஷ் என்னை காகிதத்தில் பென்சில் ஸ்கெட்ச் செய்து அழகான ஓவியமாக்கி அதை லேமினேட் செய்து அனுப்பினார். ஓவியம் வரைந்தது அத்தனை அழகு என்றால், அதை லேமினேட் செய்து என் பெயரையும், என் நிறுவனப் பெயரையும் கட்வுட் செய்து ஓவியத்தின் கீழ் பதித்து பத்திரமாக கொரியர் செய்த அவரின் ‘மெனக்கெடல்’ அதிஅழகு.

ஏற்கெனவே இவரது தந்தை முருகேஷ் பாலகிருஷ்ணன் அவர்கள் தன் மனைவியுடனும் மூத்த மகள் கிருபாவுடனும் குடும்பமாக இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கமலா முரளி அவர்கள் அழகு தமிழில் கவிதை எழுதி அனுப்பி இருந்தார்.  ‘ஆயிரத்தில் ஒன்று’ என்று ஒலிநயமிக்க வரிகளுடன் அவர் எழுதிய அந்தக் கவிதையை நான் பாட்டாக மாற்றி மனதுக்குள் கேட்டேன் என்பதுதான் உண்மை.

‘இலட்சம் பதிவுகள் வர மகா தமிழ் வாழ்த்துகிறது’என்று தன் மகா தமிழ் யு-டியூப் சேனல் சார்பாக திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செளந்தர மகாதேவன் அவர்களும் வாழ்த்து அனுப்பி இருந்தார்.

பத்திரிகை துறையில் பணியாற்றும் உதயபாபு அவர்கள் கவிதை எழுதி அதற்குப் பொருத்தமான புகைப்பட தொகுப்பையும் தயாரித்து பரிசளித்தார்.

கோபி சரபோஜி அவர்கள் கவிதை எழுதி அனுப்பி இருந்தார். அவர் தன் மகள் இலக்கியாவுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத் தக்கத்து.

இப்படியாக நேற்று காலை 7 மணிக்கு ‘காம்கேர் OTP 1000’ நிகழ்வு நான் நினைத்திருந்ததைவிட பிரமாண்டமாய் நடந்தேறியது. நேற்று ஞாயிறு. ஓய்வு நாள். இந்த நாளும் தானாகவே அமைந்து, அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வழிவகுத்தது.

நிகழ்ச்சிக்கு ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். தங்கள் வாழ்த்துரைகள் மூலம் ‘மொய்’ எழுதினார்கள்.

ஏராளமான கவிதைகள், அழகு பாராட்டுக்கள், அன்பின் மொழிகள், புகைப்படத் தொகுப்பு, வீடியோ தொகுப்பு என என் ஃபேஸ்புக் பேஜ் நிரம்பி வழிந்தது.

பொதுவாக குடும்பத்து நிகழ்ச்சிகளில் ‘ஆர்கெஸ்ட்ரா’, இசை விருந்து என்றெல்லாம் வைத்து விருந்தினர்களை மகிழ்விப்பார்கள்தானே.

அதுபோன்றதொரு பணியை சங்கரநாராயணன் பாலசுப்ரமணியன் சித்திரை சிங்கர் அவர்கள் முன்னேடுத்து ஆர்வத்துடன் செய்தார்.

காம்கேர் நிறுவனம் குறித்தும், என் குறித்தும், காம்கேர் பதிவுகள் குறித்தும் ஒரு மணிக்கு ஒரு முறை வாழ்த்துரை எழுதி தன்னுடைய ஃபேஸ்புக் பேஜில் பதிவேற்றிக்கொண்டே இருந்தார்.

இசை நிகழ்ச்சி முடிந்ததும் அந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்தவர்களுக்கு நாம் தானே சன்மானம் கொடுக்க வேண்டும். ஆனால் அவரோ கூகுள் பே மூலம் 1000 ரூபாய் அனுப்புவதாகவும் அதற்கு ஏதேனும் பரிசுப் பொருள் வாங்கிக் கொள்ளுமாறும் சொல்லி தகவல் அனுப்பி அன்பின் மழையில் நனையச் செய்துவிட்டார்.

அவர் அனுப்பும் பணத்தை எங்கள் ஶ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்ந்தப் பணிகளுக்கு பயன்படுத்தும் நோக்கத்துடன் அந்த அக்கவுண்ட்டுக்கு அனுப்பச் சொல்லி உள்ளேன்.

எல்லாம் சரி, திருஷ்டிப் பரிகாரமாக ஏதேனும் இருக்க வேண்டுமே? அதுவும் இருந்தது. திருமணம் என்றால் சம்மந்தி சண்டை இல்லாமலா?

சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், முரண்கள், மனஸ்தாபங்கள் எட்டிப் பார்த்தன. ஆனால் அதை முற்ற விடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டேன்.

பொதுவாக குடும்ப நிகழ்ச்சிகள் முடிந்து வீட்டுக்கு வந்தால் மனமும் உடலும் நிகழ்ச்சி ஏற்பாட்டில் இருந்து வெளிவரவே முடியாமல் அசாத்திய மகிழ்ச்சியும், உடல் அசதியும் பின்னிப் பிணைந்திருக்குமே அதுபோன்றதொரு மனநிலையில் நேற்று மாலைப்பொழுதும் எனக்கு அமைந்தது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அவர்கள் வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை வாசித்து மகிழ்ந்து என மனம் முழுவதும் பரபரப்பும், பரவசமும்.

இப்படிப்பட்ட ஒரு மனநிறைவை உண்டாக்கிக் கொடுத்த வாசகர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்.

இதை தனிப்பட்ட முறையில் உங்கள் அனைவருக்கும் நான் செலுத்தும் நன்றியாகக் கருதி ஏற்றுக்கொள்ளுங்கள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 804 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon