ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1016: ஒழுங்கு, நேர்த்தி, அழகு!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1016
அக்டோபர் 12, 2021 | செவ்வாய் | காலை: 6 மணி

ஒழுங்கு, நேர்த்தி, அழகு!

துபாய் என்றதும் எனக்கு சிரிப்பு வந்துவிடும். காரணம் நடிகர் பார்த்திபனும், வடிவேலுவும் சேர்ந்து செய்த காமெடி சீன்தான்.

பார்த்திபனிடம் வடிவேலு ‘நீ துபாய்ல எங்க  இருந்தாய்?’ என்று கேட்கும் சீனில் பார்த்திபன் ‘நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய்’ என்று சொல்லும் காட்சியை தவிர்க்க முடிவதே இல்லை. ஆம். நேற்று கூட!

காரணம். நேற்று துபாய் பயணம்!

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கலாச்சாரம் இருப்பதைப்போல் துபாய்க்கும் உள்ளது.

கிளம்புவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் PCR Test (கோவிட் பரிசோதனை). சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கோவிட் டெஸ்ட். துபாயில் இறங்கியவுடன் மீண்டும் கோவிட் டெஸ்ட்.

எல்லாம் முடிந்து சென்னையில் இருந்து துபாய் கால் டாக்ஸி சர்வீஸ் ஒன்றில் ஏற்கெனவே புக் செய்து வைத்திருந்த காருக்கு போன் செய்தேன்.   பெட்டிகளை ஏற்றி இறக்கி சர்வீஸ் செய்ய வந்திருந்த போர்ட்டருக்கு ஆங்கிலம் முழுதாக தெரியவில்லை. ஆங்கிலத்தை அவர் மொழியில் கலந்து ஏதோ பேசினார். நான் தமிழ் என்று தெரிந்ததும் பேசினால் கஷ்டப்பட்டுப் புரிந்துகொள்ளும் அளவுக்கான தமிழில் பேசினார். நடுவில் கரன்சி மாற்றுவதற்காக நின்றபோதும் பொறுமையாக காத்திருந்தார்.

இதற்குள் ஏற்கெனவே புக் செய்திருந்த காரும் வந்தது. கார் டிரைவர் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை மற்றும் டையுடன் பார்ப்பதற்கே மரியாதையாக தோன்றினார். பேசும்போதும் அப்படியே. பெட்டிகளை போர்ட்டர் காரில் ஏற்றும்போது அவரும் சேர்ந்து உதவினார். போர்ட்டர் சர்வீஸ் கேபினில் ஏற்கெனவே கட்டணம் கட்டி இருந்தாலும், போர்ட்டருக்கு தனியாக டிப்ஸ் கொடுக்கலாம் என நினைத்து டிராமை (Dirham) எடுப்பதற்குள் அவர் போயே போய்விட்டார்.

கார் டிரைவர் நான் தமிழ் என தெரிந்ததும் தமிழிலேயே பேசினார். அவருடைய ஊர் ஸ்ரீலங்கா என்றும் கடந்த 15 வருட காலமாக துபாயில் வசிப்பதாகவும் கூறினார். அப்படியே துபாய் குறித்தும் சில விஷயங்களை சொல்லிக்கொண்டே கார் ஓடுவதே தெரியாத அளவுக்கு ஓட்டிக்கொண்டு வந்தார்.

கண்ணாடி வழியே துபாய் கட்டிடங்களை பார்த்து ரசித்துக்கொண்டே அவருடைய பேச்சையும் கவனித்தபடி பயணித்தேன். அமெரிக்காவில் இருப்பதைப் போலவே ஒரு உணர்வு. சாலை, கட்டிடங்கள், டிராஃபிக் எல்லாமே மிக நேர்த்தி. தூசி, குப்பை என எதுவுமே கண்களில் படவில்லை.

டிரைவர் தான் வசிக்கும் நாட்டைப் பற்றி மிக உயர்வாக சொல்லிக்கொண்டே வந்தார். உண்மையே உயர்வுதான். அதை உரக்கச் சொல்லும்போது அது மேலும் மேலும் உயர்வாகத்தானே தோன்றும்.

‘இங்கு நீங்கள் பயப்படவே வேண்டாம். தைரியமா நடமாடலாம். எல்லோரும் நல்ல மனிதர்கள். பொய், திருட்டு, ஏமாற்று இதுவெல்லாம் எதுவுமே கிடையாது. அரசின் சட்ட திட்டங்களை இங்குள்ள மக்கள் நூறு சதவிகிதம் பின்பற்றுவார்கள். கொரோனா காலகட்டத்தில் மக்கள் மாஸ்க், வேக்சினேஷன், சமூக இடைவெளி என எல்லாவற்றையும் நூறு சதவிகிதம் பின்பற்றினார்கள். இப்போதும் அப்படியே. அதனால்தான் உலக அளவில் பிரமாண்டமான கண்காட்சி (Expo Dubai 2021) இந்த வருடம் துபாயில்  நடத்த திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. அங்கும் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.

கொரோனாவுக்கு முன் துப்பாய் எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் முழுமையாக இயங்குகிறது. காரணம் மக்களின் ஒத்துழைப்பு.

மாஸ்க் போடவில்லை என்றால் 3000 டிராம் அபராதம். இந்திய மதிப்பில் 61634/- ரூபாய்.

இப்படி கடுமையான சட்ட திட்டங்கள். மக்களின் ஒத்துழைப்பு. திட்டமிட்ட பணிகள். ஏற்பாடுகள். நடவடிக்கைகள் என எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது…’

டிரைவர் சொன்னதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. ஏற்கெனவே புக் செய்திருந்த ஹோட்டலில் பெட்டிகளை இறக்க உதவி செய்துவிட்டு ‘எங்கே செல்ல வேண்டும் என்றாலும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்யுங்கள்…’ என்று சொல்லி விடைபெற்றார்.

ஒரு விஷயம் மட்டும் மீண்டும் நிரூபனமானது. எங்கெல்லாம் சட்ட திட்டங்கள் கடுமையாக இருக்கிறதோ, எங்கெல்லாம் மக்களும் சட்ட திட்டங்களை மதித்துப் பின்பற்றுகிறார்களோ அங்கெல்லாம் ஒழுங்கு, நேர்த்தி, அழகு எல்லாமே சாத்தியம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP #dubai

(Visited 996 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon