ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1017: பங்கீடு செய்ய வேண்டாமே!


ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1017
அக்டோபர் 13, 2021 | புதன் | காலை: 6 மணி

பங்கீடு செய்ய வேண்டாமே!

எந்த ஒரு விஷயத்தை சொல்வதானாலும் நாம் என்ன சொல்ல வருகிறோமோ அதை மட்டும் தெளிவாக சொல்லப் பழக வேண்டும். எதற்கெடுத்தாலும் அதை மற்ற ஒரு விஷயத்துடன் ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்பதில்லை. குறிப்பாக ஒன்றை மட்டம் தட்டித்தான் மற்றதை உயர்த்த வேண்டும் என்ற மனோநிலையை குறைத்துக்கொள்ளலாம்.

நேற்று துபாயின் சட்ட திட்டங்களை கார் டிரைவர் உயர்வாகச் சொன்னதை பெருமையாக எழுதி இருந்தேன் அல்லவா? அந்தப் பதிவைப் படிக்காதவர்களுக்காக மீண்டும் பகிர்கிறேன்.

‘இங்கு நீங்கள் பயப்படவே வேண்டாம். தைரியமா நடமாடலாம். எல்லோரும் நல்ல மனிதர்கள். பொய், திருட்டு, ஏமாற்று இதுவெல்லாம் எதுவுமே கிடையாது. அரசின் சட்ட திட்டங்களை இங்குள்ள மக்கள் நூறு சதவிகிதம் பின்பற்றுவார்கள். கொரோனா காலகட்டத்தில் மக்கள் மாஸ்க், வேக்சினேஷன், சமூக இடைவெளி என எல்லாவற்றையும் நூறு சதவிகிதம் பின்பற்றினார்கள். இப்போதும் அப்படியே. அதனால்தான் உலக அளவில் பிரமாண்டமான கண்காட்சி (Expo Dubai 2021) இந்த வருடம் துபாயில்  நடத்த திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. அங்கும் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். கொரோனாவுக்கு முன் துப்பாய் எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் முழுமையாக இயங்குகிறது. காரணம் மக்களின் ஒத்துழைப்பு. மாஸ்க் போடவில்லை என்றால் 3000 டிராம் அபராதம். இந்திய மதிப்பில் 61634/- ரூபாய். இப்படி கடுமையான சட்ட திட்டங்கள். மக்களின் ஒத்துழைப்பு. திட்டமிட்ட பணிகள். ஏற்பாடுகள். நடவடிக்கைகள் என எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது…’

இதை எழுதும்போது எனக்குள் நம் நாட்டைப் பற்றிய சிறு ஒப்பீட்டு சிந்தனையும் உண்டாதை தவிர்க்க முடியவில்லை.

ஒருமுறை எங்கள் தெருவில் என் கண் முன்னே ஒருவரது போனை பைக்கில் வந்த இருவர் அவர் பாக்கெட்டில் இருந்து திருடிக்கொண்டு பறந்துவிட அவர் கத்திக்கொண்டே பைக் பின்னே ஓடினார். நான் அப்போதுதான் அலுவலகம் முடிந்து வந்து கொண்டிருந்தேன். அவர் பாக்கெட்டில் இருந்து மொபைல் திருடியவன் பணத்தையும் சேர்த்து உருவியதால் கொஞ்சம் பணம் தெருவில் விழுந்திருந்தது. நான் அதை எடுத்துச் சென்று பைக் பின்னால் ஓட முடியாமல் ஓய்ந்து நின்றிருந்தவரிடம் கொடுத்ததை அன்றைய பதிவாக எழுதி இருந்தேன்.

அதற்கு வந்திருந்த அதிகமான பின்னூட்டம் என்ன தெரியுமா?

‘மேடம், இந்த திருட்டுப் பசங்களில் சதி வேலையில் பைக்கை தவற விட்டவனும் ஒருவனாக இருக்கும். இப்படி எல்லாம் எடுத்துக்கொடுக்காதீர்கள். இரவில் தனியாகவா வீட்டுக்கு வருகிறீர்கள். பார்த்து பத்திரம் மேடம். திருட்டுப் பசங்க அதிகமாயிட்டாங்க… எப்போ என்ன பண்ணுவாங்கன்னே தெரியாது…’

நான் என்னவோ வேறு கிரகத்தில் வசிப்பதைப் போலவும், இப்போதுதான் நம் நாட்டுக்கு வந்ததைப் போலவும் ஆலோசனைகளை அள்ளி வீசியவர்களுக்கு அன்றே பதில் சொல்லி இருந்தேன்.

எப்படி எல்லாம் மக்கள் மனநிலை மாறிவிட்டது பாருங்கள்.  நாலு பேருக்கு உதவ வேண்டும் என்று சொல்வதற்கு பதில், யாருக்கும் உதவ தேவையில்லை. கண் முன்னே ஒருவன் கதறினாலும் கண்டுகொள்ளாமல் சென்று விடுங்கள். இரவு ஒன்பது மணியே அர்த்த ராத்திரி 1 மணி போல நினைத்து கூடடைந்துவிடுங்கள்.

இதெல்லாம் நம் நாட்டில் காலம் காலமாய் வசிப்பவர்கள் நம் நாட்டைப் பற்றியே நம்மிடமே சொல்லும் அறிவுரைகள்.

இப்படி இருக்கும்போது வேறு நாட்டில் இருந்து வருகிறவர்களுக்கு நம் நாட்டின் பெருமைகளை எப்படி எடுத்துரைப்பார்கள் சொல்லுங்கள்.

‘பார்த்து பத்திரம். ஆட்டோ டிரைவர்கள் கொஞ்ச தூரத்தில் இருக்கும் இடத்துக்கே ஊரைச் சுற்றி அழைத்துச் சென்று காசு பிடுங்குவார்கள். ரவுடிகள் அதிகம் இருப்பார்கள். நீங்கள் பெண்ணாக வேறு இருக்கிறீர்கள். இரவில் தனியாக செல்லாதீர்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கும்…’ என்றெல்லாம் அறிவுரைகள் பறக்கும் தானே?

அவர்கள் சொல்லும் அறிவுரைகளில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

நேற்று நான் துபாயில் பாதுகாப்புக் குறித்த பதிவை எழுதும்போது எனக்குள்ளும் நம் நாட்டின் பாதுகாப்பு குறித்த சிந்தனை உருவானதுதான். ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த சிந்தனையை தள்ளி வைத்தேன். ஓட ஓட விரட்டினேன் எனவும் சொல்லலாம். அப்படி விரட்டவில்லை என்றால் என் பதிவிலும் அது பிரதிபலிக்கும். தேவையில்லாமால் நம் நாட்டின் பாதுகாப்பையும் மற்ற விஷயங்களையும் குறைத்துச் சொல்லி துபாயின் பெருமையை உயர்த்த வேண்டி இருக்கும்.

நான் அதை ஒப்பிட்டுச் சொல்லி இருந்தால், நான் சொல்ல வந்த கருத்து நீர்த்துப் போயிருக்கும். நான் சொல்ல வந்தது ஒரு நாட்டில் குடியேறி வந்திருக்கும் மற்றொரு நாட்டுக்காரரே அந்த நாட்டைப் பற்றிப் பெருமையாகச் சொல்லும் மனப்பாங்கையும், அந்த நாட்டின் ஒட்டு மொத்த சட்டதிட்டங்களை மக்கள் முழுமனதுடன் பின்பற்றும் ஒழுங்கையும்தான்.

அதனால்தான் சொல்கிறேன், எந்த ஒரு விஷயத்தைச் சொல்வதாக இருந்தாலும் நேரடியாக அந்த விஷயத்தைப் பற்றி மட்டும் பேசுவோம். அப்போதுதான் நாம் சொல்ல வருவது சொல்ல வரும் நோக்கத்துடன் நேரடியாக சென்று சேரும்.

பாராட்டுவதைக் கூட பங்கீடு செய்யாமல் முழுமையாக பாராட்டுவோமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP #dubai

(Visited 2,004 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon