ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1018: வாழ்வதற்காக உழைப்பது சுகம்!


ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1018
அக்டோபர் 14, 2021 | வியாழன் | காலை: 6 மணி

வாழ்வதற்காக உழைப்பது சுகம்!

Work From Home – ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு என புலம்பும் நபரா நீங்கள். அப்போ உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை!

துபாயில் நான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு நேர் எதிர் திசையில் நம்ம சென்னை சங்கீதா ஓட்டலின் துபாய் கிளை. சாப்பாட்டு பிரச்சனை இல்லை. ஓட்டலில் இருந்து சாலையை கடந்து எதிர்திசை செல்ல மிகப் பெரிய பாலம் இருக்கிறது. வாக்கிங் செல்வதைப் போல் அந்தப் பாலத்தில் ஏறி இறங்கி தினமும் காலையில் அங்கு சென்று காபி குடித்துவிட்டு வந்தால் வேலையைப் பார்க்கலாம். நேரம் போவதே தெரிவதில்லை.

படியில் ஏறி இறங்க சோம்பலாக இருந்தால் பாலத்தில் ஏறி நடந்து கடந்து சென்று இறங்க லிஃப்ட் உள்ளது. லிஃப்ட்டில் நாமெல்லாம் மனிதர்கள் மட்டும்தான் சென்று பார்த்திருப்போம். அங்கு லிஃப்ட்டில் சைக்கிளில் செல்பவர்கள் சைக்கிளுடன் ஏறி இறங்குவதைக் காணலாம். சைக்கிள் எல்லாம் மீடியம் சைஸில் இருக்கிறது. இங்கு பலரும் சைக்கிளில் செல்வதைக் காண முடிகிறது. சைக்கிளுடன் படிகளில் ஏறி இறங்குபவர்களுக்கு சைக்கிளை ஏற்றி இறக்க ஒரு பாதை வைத்திருக்கிறார்கள். பொது இடத்தில் உள்ள லிஃப்ட் சுத்தமோ சுத்தம். எச்சில், குப்பை, நாற்றம் எதுவும் இல்லை. படு சுத்தம்.

இங்கு மனிதர்களுடன் கூடவே பூனைகளும் பயமில்லாமல் நடமாடுகின்றன. சாவகாசமாக நம்மை கடந்து செல்கின்றன இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக. சகுணம் பார்க்காமல்(!).

காபி மட்டுமல்ல. டிபன், சாப்பாடு எல்லாம் சங்கீதாதான். அங்குள்ள சப்ளையர்கள் முதல் பில்லிங் வரை அனைவருமே தமிழ் பேசுகிறார்கள். ஆங்கிலமும் தெரிகிறது. இந்தியையும் விட்டு வைக்கவில்லை. யார் வருகிறார்களோ அவர்களுக்கு ஏற்ப அந்தந்த மொழியில் பேசுகிறார்கள். அது தவிர அவரவர் தாய்மொழியும் தெரிகிறது. அவசியம் ஏற்பட்டால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடிகிறது என்பதற்கு வெளிநாட்டில் வேலை செய்பவர்களே ஆகச் சிறந்த உதாரணம்.

நான் சென்னையிலேயே ஓட்டலில் சாப்பிட நேர்ந்தால் வாழை இலை இருக்கிறதா என கேட்டு அதில் சாப்பிடவே விரும்புவேன். ஓட்டலில் சாப்பிடச் செல்லும்போது அங்கு நான் சாப்பிடும் உணவு இருக்கிறதா என்பது முக்கியமல்ல, வாழை இலையில் போடுவார்களா என்பதே முக்கியம். முதலில் வாழை இலை குறித்த கேள்விதான் கேட்பேன். பின்னர்தான் என்ன சாப்பிட வேண்டும் என முடிவெடுப்பேன். அப்படி வாழை இலை இல்லாத இடங்களில் வாழை இலைக்கு பதிலாக பேக்கிங்கிற்குப் பயன்படுத்தும் அலுமினியம் ஃபாயில் போட்டு தரச் சொல்வேன்.

அதே லாஜிக்தான் துபாய் சங்கீதாவிலும். எப்போது சென்றாலும் அங்குள்ள சப்ளையர்கள் இன்முகத்துடன் வேலை செய்வதைப் பார்க்க முடிகிறது. எனக்குத்தான் கொஞ்சம் பாவமாக தோன்றும்.

எத்தனை மணி நேர வேலை என்பதை நேரடியாக கேட்காமல்  ‘எப்போ வேலைக்கு வருவீங்க, எப்போ கிளம்புவீங்க’ என்று கேட்டேன்.

காலை 7.30 முதல் இரவு 11 மணிக்கு ஓட்டல் திறந்திருக்கும் என அவரும் நாசூக்காக பதில் சொன்னார்.

உங்கள் வேலை நேரம்? என்று நேரடியாகவே கேட்டேன். அவர் திரும்பவும் அதே பதிலைச் சொன்னார். என் முக பாவணையை வைத்து நான் எதற்காகக் கேட்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு ‘இடையில் மூன்று மணி நேரம் ஓய்வு எடுக்க அனுமதி உண்டு’ என்றார்.

‘வார விடுமுறை எப்போது?’ என்றதற்கு மாதத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு உண்டு என்றார்.

‘குடும்பம்?’ என் அடுத்த கேள்விக்கு அவர் பதில் ‘ஊரில்’.

ஓட்டல்களில் மட்டுமல்ல இங்கு கடைகளிலும் இதர இடங்களிலும் பணிபுரிபவர்களில் நிறைய பேர்  நேபாளிகள், தமிழர்கள், மலையாளிகள். குடும்பம் மனைவி பிள்ளைகள் அனைவரும் ஊரில்.

காலை மாலை என எப்போது சென்றாலும் அலுக்காமல் சலிக்காமல் சாப்பிட வருபவர்களுக்கு கேட்டுக் கேட்டு பரிமாறும் அவர்களைப் பார்க்கும்போது அவர்கள் முகத்தில் அவர்கள் அணிந்திருக்கும் புன்னகையில் அவர்களின் முகத்துக்கு பதிலாக ஊரில் உள்ள அவர்கள் குடும்பத்தின் பொறுப்புதான் எனக்குத் தெரிகிறது. அந்தப் பொறுப்பில் குடும்பத்தைப் பிரிந்து அவர்கள் வாழும் வாழ்க்கையின் வெறுமையை என்னால் உணர முடிந்தது.

நேற்று லிஃப்டில் பரபரப்பாக சைக்கிளில் ஏறிய மலையாளி ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தேன். ஓட்டலில் வேலை செய்வதாகவும், டோர் டெலிவரி செய்யும் பணியில் இருப்பதாகவும் கூறினார். மலையாளி. கமிஷன் அடிபப்டையில் சம்பளம். தினமும் எவ்வளவு சப்ளை செய்கிறாரோ அதற்கேற்ப ஊதியம் என்றார். குடும்பம் ஊரில்.

‘குடும்பத்தைப் பிரிந்து இப்படி வெளிநாட்டில் வேலை செய்வது கஷ்டமாக இல்லையா?’ என்றேன்.

‘அது குறித்து யோசிப்பதற்கெல்லாம் நேரமே இருக்காது…’ என்று சொல்லிவிட்டு கருமமே கண்ணாயினராக  ‘நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீர்கள்? என என்னைக் கேட்டு உங்களுக்கும் தேவைப்பட்டால் உணவு சப்ளை செய்கிறேன், என் மொபைல் எண்ணை வாங்கிக்கொள்ளுங்கள் என அவரது மொபைல் எண்ணைக் கொடுத்தார். பிறகு அவசரம் அவசரமாக சைக்கிளில் ஏறி சென்றுவிட்டார்.

சுற்றி சிறியதும் பெரியதுமாய் ஏராளமான கடைகள். நம் ஊர் மளிகைக்கடைகளில் கிடைக்கும் அத்தனையும் கிடைக்கின்றன. சென்னையில் இருப்பதைப் போலவே இருந்தது. பேசிப் பார்த்ததில் பெரும்பாலும் குடும்பத்தைப் பிரிந்து வேலை செய்பவர்களே அதிகம் இருந்தார்கள்.

வாழைப் பழம் இன்று சாப்பிடும் அளவுக்கு பழமாக இருக்கிறதா என அங்கு பணியில் இருந்த ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஒரு வாழைப் பழத்தை உரித்துக் காண்பித்து ‘பாருங்கள், நல்ல பழமாக இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு அந்த வாழைப்பழ சீப்பில் இருந்து வாழைப்பழம் எடுத்துக்கொள்ளச் சொன்னார். அவர் உரித்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு வந்தார்.

‘இது உங்கள் கடையா?’ என்றேன். இல்லை. ‘நான் வேலை செய்கிறேன்’ என்றபோது  ‘எனக்காக ஒரு வாழைப்பழத்தை உரித்தீர்களே அதற்குக் காசு வேண்டாமா?’ என்றதற்கு ‘வேண்டாம், நீங்கள் காயாக இருக்கிறதே என யோசித்தபடி நின்றிருந்ததால் உரித்தேன். நான் சாப்பிட்டேன். நான் சாப்பிட்டதற்கு நான் தானே காசு கொடுக்க வேண்டும். நான் காசு போட்டுவிட்டேன்… ஒரு டிராம்தானே பரவாயில்லை’ என்றார்.

அவரிடமும் அவர் ஊர், குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்தேன். அவரும் குடும்பத்தைப் பிரிந்துதான் பணியில் இருக்கிறார்.

இங்கு பர்துபாயில் சிவா கிருஷ்ணா கோயில் உள்ளது. அந்த இடத்தில் இறங்கி நான் கோயிலுக்கான வழி கேட்டுக்கொண்டிருந்த போது ஓர் இளைஞன் ‘தமிழா’ என கேட்டு நானும் கோயிலுக்குத்தான் செல்கிறேன். வாருங்கள் என சொல்லி முன்னே சென்று வழிகாட்டினார். அவரிடமும் வேலை குடும்பம் குறித்து விசாரித்தேன். சிவில் இஞ்ஜினியர். மனைவி குழந்தைகளுடன் இரண்டு வருடங்களாக துபாயில் வசிப்பதாக சொன்னார்.

உலகளாவிய முறையில் ஒரு விஷயம் மட்டும் பொதுவாக உள்ளது உழைப்பு என்பது எல்லா நிலையிலும் ஒன்றுதான். உடல்சார்ந்த உழைப்பு, அறிவுசார்ந்த உழைப்பு இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். படித்திருந்தால் குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியாக இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் நிம்மதியாக வாழ முடிகிறது. படிக்காவிட்டால் குடும்பத்துக்காக குடும்பத்தைப் பிரிந்து வெறுமையான சூழலில்தான் வாழ வேண்டிய சூழல்.

வாழ்வதும் அதற்காக உழைப்பதும் நம் சந்தோஷத்துக்காகத்தானே. அந்த சந்தோஷத்துக்கான அஸ்திவாரமே நம் குடும்பம் எனும் அமைப்புதானே.

குடும்பத்துடன் சேர்ந்து வாழ்பவர்கள் வாழ்வதற்காக உழைப்பதைப் போலவும், குடும்பத்தைப் பிரிந்து பணி செய்பவர்கள் உழைப்புக்காவே வாழ்வது போலவும் எனக்குத் தோன்றுவதை தவிர்க்கவே முடியவில்லை.

படிப்பு ஒன்றுதான் நம் வாழ்க்கையின் எல்லாவிதமான சந்தோஷங்களுக்கும் அடிப்படை. படிக்க வாய்ப்பிருந்தும் படிக்காமல் முரண்டு பிடிக்கும் பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் குடும்பத்தைப் பிரிந்து வாழுகின்ற பணியாளர்களின் கதைகளை சொல்லுங்கள். அதையே ஒரு பாடமாக சொல்லிக்கொடுங்கள்.

படியுங்கள் செல்லங்களே, இல்லை என்றால் உழைப்பதற்காகவே வாழ வேண்டி இருக்கும். வாழ்வதற்காக உழைப்பது சுகம், உழைப்பதற்காகவே வாழ்வது நரகம். சிந்தியுங்கள்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP #dubai

(Visited 1,905 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon