ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1019
அக்டோபர் 15, 2021 | வெள்ளி | காலை: 6 மணி
தொணதொணப்பு!
வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி நினைவுப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அதை கேட்பதற்கு கொஞ்சம் போரடிக்கும். ‘சும்மா ஏன் தொணதொணன்னு சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்… நினைவில் இருக்கிறது…’ என நம்மில் ஒரு சிலர் சலித்துக்கொள்ளவும் செய்வோம்.
ஆனால், உண்மையில் இதுபோல சில விஷயங்களை வீட்டுப் பெரியவர்கள் நினைவுப்படுத்திக்கொண்டே இருப்பதால்தான் வீடுகளில் பல வேலைகள் நேரம் தவறாமல் காலம் தவறாமல் நடந்துகொண்டே இருக்கின்றன. இல்லை என்றால் மின்கட்டணம் செலுத்தக் கூட மறந்துபோய் மின்வாரியம் ஃப்யூஸ் பிடுங்கிய பிறகுதான் கவனிக்கும் நிலையில் பல வீடுகள் இருக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.
எனவே பெரியவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பதை தொணதொணப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அந்த தொணதொணப்புகள்தான் பல நேரங்களில் மறைமுகமாக நம் ஊக்க சக்தியாக இருந்து நம்மை வழிநடத்துகின்றன.
நம் கம்ப்யூட்டரில் ஆண்ட்டி வைரஸ் சாஃப்ட்வேர் காலாவதி ஆகப்போகிறதென்றால் அது அடிக்கடி தலையை ‘பாப் அப்’ விண்டோவாக நீட்டி ‘நான் காலவதி ஆகப்போகிறேன்… என்னைப் புதுப்பியுங்கள்…’ என சொல்கிறதே அதுபோல ஓர் எச்சரிக்கை மணியாக பெரியோர்களின் வார்த்தைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பெரியோர்களின் தொணதொணப்புகள் கிடைக்காத எத்தனையோ பேர் அப்படிப்பட்ட பெரியோர்கள் கிடைக்கவில்லையே என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறக்காதீர்கள். பெரியோர்கள் என்றால் அப்பா, அம்மா, மாமனார், மாமியார் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஓர் உதாரணம். உண்மை நிகழ்வு.
வீட்டில் இப்படி மகன்களுக்கு எல்லாவற்றையும் அக்கறையாக நினைவூட்டிக்கொண்டு, எடுத்துச் சொல்லிக்கொண்டு ‘சரியான தொணதொணப்பு’ என பெயரெடுத்த 80 வயது பெரியவர் இறந்தபோது அவரது நான்கு மகன்களுக்கும் அந்த சூழலை எப்படி கையாள்வது என்றுகூட தெரியவில்லை. யார் யாருக்கு சொல்வது, எப்படி எல்லோருக்கும் சொல்வது, என்ன சம்பிரதாயம், எப்படி சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக செய்வது என்பது தொடங்கி அத்தனையிலும் தடுமாறினார்கள். இத்தனைக்கும் அவர்கள் அனைவருமே 55+ வயதினரே.
இறந்துபோன அப்பா கண்ணாடி பெட்டியில் இருந்து ‘என்னடா இன்னும் மசமசன்னு நின்றுகொண்டிருக்கிறீர்கள்… முதலில் வாட்ஸ் அப்பில் நம் குடும்ப குரூப்பில் எல்லோருக்கும் தகவல் கொடுங்கள். அவர்கள் அனைவரிடமும் அவரவர்கள் உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கச் சொல்லுங்கள்… இப்படி செய்தால் எல்லோருக்கும் தகவல் வேகமாக சென்றுவிடும்…’ என சொல்வதைப்போல ஒரு மகனுக்கு அசரிரீயாக குரல் கேட்பதைப் போல் இருக்க அப்படியே செயல்படுத்த ஆரம்பித்தார்கள்.
பெரியவர்கள் நமக்கு எடுத்துச் சொல்வதை நாம் கேட்கிறோமோ அல்லது உதாசினப்படுத்துகிறோமோ, அவர்கள் நம்மை விட்டு மறைந்தாலும் அவர்கள் பின்பற்றும் அத்தனை நல்ல விஷயங்களும் நம்மையும் அறியாமல் நமக்குள் சென்று நம்மை வழிநடத்தும் என்பதை மறக்க வேண்டாம்.
அவர்களின் அறிவுரைகளுக்கு வழிகாட்டல்களுக்கு நாம் வைத்துள்ள ‘சரியான தொணதொணப்பு’ என்ற பட்டப்பெயர்தான் நம் வாழ்க்கைக்குக் காட்டும் ஒளிவிளக்கு.
‘தொணதொணப்புகளே’ பெரும்பாலான நேரங்களில் நமக்கு எச்சரிக்கை மணியாக செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் என்றேனும் ஒருநாள் உணர்ந்தே தீருவோம்.
யாரையும், எதையும் எந்த சூழலிலும் உதாசினப்படுத்த வேண்டாம். உணர்வோமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP