‘யு டர்ன்’

‘யு டர்ன்’ – நாயகியின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.

த்ரில்லர்  ரகத் திரைக்கதையை  ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் இயக்கி விழிப்புணர்வை கொடுக்க முடியுமா எனவும் வியக்க வைத்தது.

தினந்தோறும் சாலைவிதிகளை மீறி சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் ஒருசில நபர்களால், அதற்கு சம்மந்தமே இல்லாத பயணிகள் விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள். இதனைத் தடுக்க ‘சாலை விதிகளை பின்பற்றுங்கள்…’ என அறிவுரை போல சொல்லாமல் திரைக்கதையில் மிரட்டலாகச் சொல்லியுள்ளார் இயக்குனர்.

பாடல்கள், விரசக்  காட்சிகள், ஆழமான காதல், தீவிரமான நட்பு, அதீதமான பாசம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இவை ஏதுமில்லாமல் ஒரு சினிமா, பார்வையாளர்களை  அசையாமல் உட்காரவைக்க முடியுமா என ஆச்சர்யப்படுத்தியுள்ளது ‘யு டர்ன்’.

இன்ஜினியரிங் படித்து அதில் வேலையைத் தொடராமல் பத்திரிகைத் துறையில் பயணிக்க விரும்பும் ஒரு நாயகியின் நடிப்பில் கதையின் களம் அமைந்துள்ளது.

விருப்பமான துறையில் பணியைத் தேர்ந்தெடுக்கும் தைரியம், தன்னம்பிக்கை, சமூக பொறுப்புணர்வு என பெண்களுக்கு  அவசியம் தேவைப்படும் குணநலன்களுடன் சமந்தா…

சென்னை, வேளச்சேரி பாலத்தில் சட்டத்திற்கு புறம்பாக, சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி வைத்துவிட்டு  ‘யு டர்ன்’  எடுப்பவர்களால் ஏகப்பட்டவிபத்துகள் ஏற்படுகிறது.

சாலை விதிமுறைகளை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த பத்திரிகை நிருபராக வரும் சமந்தா ஒரு கட்டுரை  எழுத ஆய்வில் இறங்குகிறார்.

மேம்பாலத்தில் நடுவில் சாலை விதிகளை மீறி கற்களை நகர்த்திவிட்டு யு டர்ன் செய்பவர்களை பேட்டி கண்டு எடுக்கும்விதமாக  அவரது ஆய்வு அமைந்துள்ளது.

யார் யாரெல்லாம் யு டர்ன் செய்கிறார்களோ அவர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் இறந்துபோவதாக கதை நகர்கிறது.

யு டர்ன் செய்த ஒருவரை பேட்டி எடுக்கச் செல்லும்போது, அவர் மர்மமான முறையில் இறந்துப்போக, அதில் சமந்தா சம்மந்தமில்லாமல் குற்றவாளியாக  மாட்டிக்கொள்கிறார்.

அவர் எப்படி அந்த கேஸில் இருந்து வெளிவருகிறார்… மர்மமான முறையில் இறப்புகள் நடைபெறுவது ஏன்… எப்படி… என துவக்கம் முதல் இறுதிவரை கதை வேகத்துடனும்  மர்மத்துடனும் செல்கிறது.

பல திருப்பங்களுடன் ஒரு நிறைவான க்ளைமேக்ஸுடன் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பவன் குமார்.

‘லூசியா’  என்ற சிறிய பட்ஜெட் படத்தை கன்னடத்தில் எடுத்து பிரபலமாக அறியப்பட்ட இயக்குனர் பவன் குமாரின் அடுத்த கன்னட படைப்பான ‘யு டர்ன்’ படத்தின் தமிழ் ரிமேக்.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
செப்டம்பர் 18, 2018

(Visited 13 times, 1 visits today)
error: Content is protected !!