‘ட்ரங்க் பொட்டி’ பாட்டியின் “அதுக்குப் பேருதான்டா வாழ்க்கை”  தத்துவம்

நூலாசிரியர்  பாலகணேஷ் அவர்களின் தாத்தா
தன் ட்ரங்க் பொட்டியில் சேகரித்து வைத்திருந்த பொக்கிஷங்களின் தொகுப்பு

என் வாசிப்பு பழக்கம்

எந்தப் புத்தகத்தையும் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம்வரை வரிசையாகப் படிக்க மாட்டேன். முன் அட்டை, பின் அட்டை, ஆசிரியர் உரை, பதிப்பாசிரியர் உரை என பார்த்துவிட்டு புத்தகத்தின்  பக்கங்களை அப்படியே புரட்டிக்கொண்டே வருவேன். பரவலாக ஒரு பார்வை.

கட்டுரை தலைப்பு, துணை தலைப்பு, கேப்ஷன்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், லேஅவுட் அனைத்தையும் என் மனசு சேகரித்துக்கொண்டே வரும்.

எந்த இடத்தில் என் கவனம் முதலில் குவிகிறதோ அதுவே ஸ்டார்டிங் பாயிண்ட் எனக்கு. அப்படியே ஆரம்பித்து முன்னும் பின்னுமாக முழு புத்தகத்தையும் விரைவாக படித்துவிடுவேன்.

இப்படித்தான் இந்தப் புத்தகத்தையும் வாசிக்க ஆரம்பித்தேன்.

என் பாணியில் படிக்க இந்தப் புத்தகம் சுலபமாக இருந்தது. ஏனெனில், இந்தப் புத்தகத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். அத்தியாயத் தலைப்பு, துணைத்தலைப்பு என எதுவுமே கிடையாது.

ட்ரங்க் பொட்டிக்குள் சாமான்கள் எப்படி கலைந்து கிடக்குமோ அந்த பாணியில் ஒவ்வொன்றாக வரிசையாக உள்ளது உள்ளபடி வடிவமைத்திருக்கிறார்.

முத்தான மூன்று அசத்தல்கள்

முதல் அசத்தல்…

புத்தகத்தின் அட்டையில் அந்தக்கால ட்ரங்க் பொட்டியை சாயம் மங்கிய கலரில் அப்படியே பிரிண்ட் செய்திருந்தது.

இரண்டாவது அசத்தல்…

புத்தகத் தலைப்பு ‘ட்ரங்க் பொட்டி’.

இதில் பெட்டியை  ‘பெட்டி’ என்று பெயரிடாமல் ‘பொட்டி’ என பேச்சு வழக்கிலேயே பெயரிட்ட அசத்தலான ஐடியாவில் மனம் குவிய அதுவே புத்தகத்தை முழுக்கப் படிக்கத் தூண்டியது.

மூன்றாவது அசத்தல்…

ஆசிரியர் உரையில் நூலாசிரியரின் தாத்தா அவரை ‘போடா அந்தண்டை’ என திட்டியதுடன் முதுகில் ஒரு சாத்து சாத்திய தருணத்தை விளக்கியிருந்த அழகிய வரிகளில் மனம் குவிய அப்படியே வரிசையாக படிக்க ஆரம்பித்தேன்.

இந்த மூன்று அசத்தல்கள்தான் புத்தகத்தை கீழே வைக்க விடாமல் வாசிக்க வைத்தன.

ட்ரங்க் பொட்டி பொக்கிஷங்கள்

1979-ம் ஆண்டு கோவை தினத்தந்தியில் ‘சுமங்கலி’ நிறுவனம் தங்கள் நெய் வியாபாரத்தை நிறுத்தியதை  அதற்கான காரணத்துடன் விளம்பரம் செய்ததில் தொடங்குகிறது ட்ரங்க் பொட்டியின் முதல் பொக்கிஷம்.

குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களான மரப்பாச்சி பொம்மை, கிலுகிலுப்பை…

வாசகர்களின் திட்டுக்களைத் தாங்கிய வாசகர் கடிதங்கள்…

பட்டணத்தில் பூதம் பாட்டு புத்தகத்தை குவளை வடிவத்திலும், வியட்நாம் வீடு புத்தகத்தை வீடு வடிவத்திலும் வெளியிட்டு அசத்திய அந்தகால பாட்டுப் புத்தகங்கள்…

ஈயச் சொம்பில் ரசத்தை அடுப்பில் வைத்துவிட்டு மறந்துவிட்டால் ஈயச்சொம்பு உருகி ரசத்துடன் சொம்பும் காணாமல் போய்விடும் ரகசியம்…

புத்தகங்களை படிக்க வைக்க வாசகர்களை இழுக்க அந்த காலத்தில் மேற்கொண்ட யுக்திகள்…

குறைந்த பக்கம் குறைந்த விலையில் குழந்தைகளுக்காக விற்கப்பட்ட அணில் புத்தகம்…

மனைவியிடம் கணவன் வாங்கும் திட்டுக்களின் தொகுப்பு (சில சமயம் செல்லமாக, பல சமயம் நிஜமாக)…

தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநர் மிஸ்.டி.பி.ராஜலட்சுமி இயக்கிய திரைப்படத்தின் துண்டுப் பிரசுரம்…

இரண்டு ரூபாய் மாந்திரீக மோதிரம்…

நாவல்  ராணி ‘வை.மு. கோதைநாயகி அம்மாள்’ எழுதிக்குவித்த நாவல்களின் பட்டியல்…

1972-ல் தொடங்கப்பட்ட கோகுலம் சிறுவர் பத்திரிகையின் விளம்பரம்…

அந்தக் காலத்து ஆரவாரம் அற்ற அமைதியான அண்ணா சாலை…

என ஒவ்வொரு பக்கத்திலும் ட்ரங்க் பொட்டியில் இருந்த பொக்கிஷங்களை கலைநயத்துடன் விவரித்துள்ளார் நூலாசிரியர்.

பழமை வாசனை மாறாத ட்ரங்க் பொட்டி

ஒவ்வொரு பக்கத்திலும் கவனம் சிதறாமல் படிக்கத்தூண்டும் ரசனையான எழுத்துநடை.

புத்தகம் முழுவதும் ஆங்காங்கே தன் பாட்டியிடம் பேசிக்கொண்டே தகவல் சேகரித்து அதை அந்தக்காலத்து வசனத்துடனேயே அதே பழமையான வாசனையுடனேயே  பதிவு செய்திருப்பது பெரும் சிறப்பு.

தாத்தாவை பாட்டி செல்லமாக திட்டும் ‘திருட்டுக் கொட்டு’  என திட்டும் இடம் கவிதை.

ட்ரங்க் பொட்டி  பாட்டியின்  “அதுக்குப் பேருதான்டா வாழ்க்கை” தத்துவம்

தாத்தாவின் மூக்குப்பொடி பழக்கம் பாட்டிக்குப் பிடிக்காமல் பொடி டப்பாவை மறைத்து வைக்க, தாத்தா பொடி போடும் வழக்கத்தை கைவிட்டாலும் பாட்டிக்குத் தெரியாமல் மூக்குப்பொடி டப்பாவை எடுத்து ட்ரங்க் பொட்டியில் சேகரிக்கிறார்.

அதுபோல பாட்டியின் வெற்றிலை போடும் பழக்கம் தாத்தாவுக்குப் பிடிக்காததால் அவரது வெற்றிலை பாக்கு உரலை எடுத்து ட்ரங்க் பொட்டிக்குள் மறைத்து வைக்கிறார். பாட்டியும் வெற்றிலைப் பழக்கத்தைக் கைவிடுகிறார்.

இந்த விஷயத்தை பாட்டி நூலாசிரியரிடம் விவரிக்கும் காட்சி கவிதை.

“இந்த விஷயம் எனக்குத் தெரியாதுன்னு தாத்தா நெனச்சுண்டிருந்தார். ஆனா அவர் ஒளித்து வச்ச விஷயம் எனக்குத் தெரியும். பொடி போடற அவர் பழக்கம் எனக்குப் பிடிக்கலங்கற மாதிரி நான் வெத்தல போடறது அவருக்குப் பிடிக்கலை. அவர் அந்த பழக்கத்த விடறப்ப, நானும் அவருக்குப் பிடிக்காததை விட்டுர்றதுதானே நியாயம்னு தோணிச்சு… அதுக்கப்பறம் நான் இதைத் தொடவே இல்லை…”

“ஆக ரெண்டு பேரும் ஒருத்தரோட ஒருத்தர் கன்சல்ட் பண்ணிக்காமலேயே மத்தவங்களுக்காக விட்டுக் குடுத்துட்டீங்கன்னு சொல்லு…”

“அதுக்குப் பேருதான்டா வாழ்க்கை” என்று புன்னகைத்தாள் பாட்டி.

எனக்குள்ள ஒரே ஆதங்கம்

இந்த ட்ரங்க் பொட்டிக்கு சொந்தமான தாத்தாவையும், தகவல்களை கேட்டுப் பெற்ற பாட்டியின் புகைப்படமும் இருந்திருந்தால் புகைப்படமாக எங்கேனும் வெளியிட்டிருக்கலாம். இது ஒன்றுதான் என் ஆதங்கம்.

என்ன செய்வது?

அந்தக் காலத்தில் புகைப்படம் எடுப்பதெல்லாம் அபூர்வம்தானே!

நூலின் பெயர்: ட்ரங்க் பொட்டி!

நூலாசிரியர்: பாலகணேஷ்

பதிப்பகம்: தங்கத் தாமரை

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited

மே 6, 2019

 

(Visited 300 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon