தேனம்மை பிளாகில்! விருது கொடுக்கும் காலத்தை உருவாக்கிய பெற்றோருக்கு வந்தனம்! (May 4, 2019)

 திருமிகு. தேனம்மை லெக்ஷ்மணன்  என்னைப் பற்றி எழுதி இருந்த முன்னுரை 

பார்க் கல்லூரியின் மகளிர் மன்றத்தைத் திறந்துவைக்க சிறப்பு விருந்தினராக பார்க் கல்லூரியின் முதல்வராக இருந்த திரு திருமாறன் ஜெயராமன் அவர்களால் அழைக்கப்பட்டிருந்தேன். அந்நிகழ்வு முடிந்த சில நாட்களிலேயே காம்கேர் புவனேஸ்வரி அவர்களையும் அக்கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக மற்றோர் நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் அந்நிகழ்ச்சியும் மிக்க பயனுள்ளதாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார் முதல்வர் திருமாறன். அதற்கு முன்பே காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் எனக்கு முகநூல் தோழி என்றாலும் அதன் பின் தான் அவருடைய பணிகளை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தேன்.

பொதுநலத் தொண்டும் சமூகத் தொண்டும் மற்றைய நேர்மறைக் கருத்துக்கள் கண்டும் வியந்ததுண்டு. தன்னம்பிக்கைப் பேரரசியான அவரிடம் என் பிளாகுக்காக நேற்று எழுதித்தரச் சொல்லிக் கேட்டிருந்தேன். உடனே அனுப்பி விட்டார். அவர் தன் தாய் தந்தை பெயரில் விருதுகள் வழங்குவது குறித்து அன்பும் பாராட்டும். நீங்களும் படித்துப் பாருங்கள். அவரது சுயவிவரத்தைச் சுருக்கும் எண்ணமில்லாமல் அப்படியே வெளியிட்டிருக்கிறேன். அத்தனயும் முத்து.

இப்படிக்கு
தேனம்மை லெக்ஷ்மணன், பிளாகர்
மே 4, 2019

—***—

விருது கொடுக்கும் காலத்தை உருவாக்கிய பெற்றோருக்கு வந்தனம்!

– காம்கேர் கே. புவனேஸ்வரி

செப்டம்பர் 2, 2007. தி.நகர் வாணிமஹாலுக்கு காரில் நானும் அப்பா அம்மாவும் பயணித்துக்கொண்டிருந்தோம். ஒரு நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். பெற்றோரையும் அழைத்துவர வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தார்கள்.

வாணி மஹால் வந்தடைந்தோம். அப்பா காரை பார்க் செய்ய, எனக்கு ஒரு போன்கால் வரவே, ‘இதோ ஸ்பாட்டில்தான் இருக்கிறோம். இன்னும் சில நொடிகளில் அங்கிருப்போம்’ எனச் சொல்லி, நிகழ்ச்சி நடக்கின்ற ஹாலுக்குச் சென்றோம்.

ஹால் கும்மிருட்டாக இருந்தது. நாங்கள் குழம்பி நிற்கையில் ‘என்ன இது?’ என நான் சற்றே குரலை உயர்த்திப் பேச, திடீரென ஹால் முழுவதும் வெளிச்சம். ‘என்ன இது’ என்பது நான் கொடுத்த சிக்னல். அது எதற்காக என தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

‘ஹேப்பி பேரண்ட்ஸ் டே!’ என்ற உற்சாகக் கூச்சல். ‘Ideal Parents Day’ என கண்களைக் கவரும் பேனர்கள். புரொஜெக்ட்டர் ஸ்கிரீனில் நாதஸ்வர இசையுடன் என் பெற்றோரின் புகைப்படமும் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை தொடக்க விழா என்ற விவரங்களும் மாறி மாறி கண் சிமிட்ட நொடியில் அந்த ஹாலே கலகலப்பானது.

அறை முழுவதும் காம்கேரில் என்னுடன் பணியாற்றுபவர்கள், அப்பா அம்மாவுடன் தமிழகமெங்கும் பல்வேறு  ஊர்களில் பணிபுரிந்த நண்பர்கள், உறவினர்கள் என உற்சாகக் கூட்டம்.

ஒருநிமிடம் அப்பா அம்மாவுக்கு எதுவுமே புரியவில்லை. இருவரும் படபடப்பானார்கள். நான் சுறுசுறுப்பாகி விஷயத்தைச் சுருக்கமாகச் சென்னேன்.

‘உங்கள் இருவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கவே இந்த நிகழ்ச்சி. அதனாலேயே என்னுடன் உங்களையும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பதாக சொன்னேன்.

இன்று இரண்டு நிகழ்வுகள். ஒன்று உங்கள் இருவர் பெயரிலும் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையை இன்று தொடங்க இருக்கிறேன். இரண்டாவது உங்கள் வாழ்க்கையை ஆவணப்படமாக (Biography Film) தயாரித்திருக்கிறேன். அதையும் திரையிட இருக்கிறேன்…. அதற்கு சில சிறப்பு விருந்தினர்களை அழைத்துள்ளேன்.’

எங்களுக்காக ஓடி ஓடி எல்லாவற்றையும் செய்த பெற்றோரை உட்கார வைத்து அன்றைய தினம் விழாவை பார்த்து ரசிக்க மட்டுமே நான் அனுமதி கொடுத்தேன். அப்பா அம்மா முதல் வரிசையில் அமர, எல்லோரும் அவர்களிடம் மகிழ்ச்சியுடன் கை கொடுத்து பேச ஆரம்பிக்க, நான் என் டீமுடன் இணைந்து மற்ற வேலைகளை கவனிக்கத் தொடங்கினேன்.

லேப்டாப், புரொஜெக்டர், Wi-Fi, ஸ்கைப், வெப்சைட், ஆடியோ, வீடியோ என அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை குறித்து…

என் அப்பா ‘கிருஷ்ணமூர்த்தி’, அம்மா ‘பத்மாவதி’ இருவரின் பெயரில்  ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற பெயரை உருவாக்கியிருந்தோம். எங்கள் காம்கேர் நிறுவனம் தொடங்கியதில் இருந்தே மாற்றுத்திறனாளிகள் பலர் என்னிடம் ஏதேனும் ஒரு உதவி கேட்டு வந்துகொண்டே இருந்தனர். மேலும் சிறுவயதில் இருந்தே அவ்வப்பொழுது ஆதரவற்றோர் இல்லங்களுக்கு செல்லும் வழக்கம் இருந்தது. என் திறமைக்கும் அறிவுக்கும் மதிப்பளிக்கும் இந்த சமுதாயத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தோம். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என ஏதேனும் ஒரு விதத்தில் உதவுவது என்பதை நோக்கமாகக் கொண்டோம். அதன் உச்சமாக பார்வையற்றோர் மற்றவர்கள் உதவியின்றி தாங்களாகவே ஸ்கிரீன் ரீடிங் தொழில்நுட்பம் மூலம் தேர்வு எழுத உதவும் ‘ஸ்க்ரைப் சாஃப்ட்வேர்’ உருவாக்கியுள்ளோம்.

விழாவுக்கு தலைமைத் தாங்க முத்தமிழ் பேரரசி ஆன்மிகச் சொற்பொழிவாளர்  டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்களை அழைத்திருந்தேன்.

சிறப்பு விருந்தினர்களாக திருமிகு. H. ராமகிருஷ்ணன் (இருகால்களும் செயலற்ற மாற்றுத்திறனாளியான இவர் ஆகச் சிறந்த செய்தி வாசிப்பாளர்), திருமிகு. R. ஜெயசந்திரன் (இரு கண் பார்வைத்திறனற்ற மாற்றுதிறனாளியான இவர் தமிழில் டாக்டர் பட்டம் பெற்ற கல்லூரி முதல்வர்), திருமிகு. ஜெயஸ்ரீ ரவீந்தர் (காது கேட்காத மாற்றுத்திறனாளியான இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான Ability Foundation நிறுவனத்தின் தலைவர்) மூவரையும் அழைத்திருந்தேன்.

இத்தனை பெருமை வாய்ந்த சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக உள்ளே வர அவர்களை அன்புடன் வரவேற்று அமரச் செய்தோம்.

முதலில் டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அன்பின் மிகுதியால் ‘தன்னம்பிக்கைத் தாரகை’ என்ற பட்டத்தை எனக்களித்தார்.

அடுத்து ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு…’ ஆவணப்படம் திரையிடல்.  தியேட்டர் லுக்குக்கு வந்த சபை அமைதியானது.

எங்கள் அப்பா அம்மாவின் தியாகம் விலைமதிப்பற்றது. 24 மணிநேர சுழற்சிப் பணியில் இருவரும். தீபாவளி பொங்கல் என்றால் இருவரும் சேர்ந்து வீட்டில் இருப்பது அரிது. இருவருக்கும் சேர்ந்து விடுமுறை என்று வருகிறதோ அன்றுதான் எங்களுக்கு பண்டிகை தினம்போல. அதற்காக எதையும் விட்டு வைத்ததில்லை. அப்பா இனிப்பு செய்ய, அம்மா காரம் செய்ய எல்லா பண்டிகைகளும் எங்கள் வீட்டில் கலகலதான்.

அப்பா இல்லாதபோது அம்மாவும் இருப்பதைப்போன்ற உணர்வையும், அம்மா இல்லாதபோது அப்பாவும் இருப்பதைப்போன்ற உணர்வையும் கொடுக்க எங்கள் பெற்றோரால் மட்டுமே முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.

அந்த காலத்திலேயே அம்மாவும் இரவு பகல் பணிநேரமாற்றத்தில்  வேலைக்குச் சென்று 40 ஆண்டுகாலம் கடுமையாக உழைத்து எங்களுக்கெல்லாம் ரோல்மாடலாக இருந்ததால், எங்கள் அகராதியில் வேலை சுமை, கஷ்டம் போன்ற வார்த்தைகள் எல்லாம் இல்லவே இல்லை.

எங்கள் மூவரையும் எங்கள் விருப்பப்படி படிக்க வைத்து, எங்கள் விருப்பபடி வேலைக்கு செல்ல அனுமதித்து, விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க அனுமதிகொடுத்து எல்லா சுதந்திரங்களையும் கொடுத்து அன்பெனும் ஒரு கயிற்றில் எங்களைக் கட்டி அதன் ஒரு முனையை அவர்கள் கைகளில் வைத்து எங்களை கண்ணுக்குள்ளும், உள்ளங்கைகளுக்குள்ளும் வைத்துத் தாங்கினார்கள். நல்ல குணநலன்களும், கல்வியும்தான் வாழ்க்கைக்கு அத்தியாவசியம் என்பதை எங்கள் இரத்தத்தில் கலக்க வைக்க, தாங்கள் அவற்றை தங்கள் நாடி நரம்பெல்லாம் ஏற்றி முன்மாதிரியானார்கள்.

தேவையான நேரத்தில் மென்மையாகவும், தேவையான நேரத்தில் கடுமையாகவும் நடந்துகொள்ளக் கற்றுக்கொடுத்து எந்த நேரத்திலும் நேர்மையை விட்டு எந்த காரியத்தையும் சாதிக்கக் கூடாது என்ற உன்னத குணத்தை எங்களுக்குள் விதைத்த எங்கள் அப்பா அம்மாவுக்கும் எங்களுக்குமான ரிலேஷன்ஷிப்பை அந்த ஆவணப் படத்தில் முதல் பாதியில் காட்சிப்படுத்தி இருந்தேன்.

என் அப்பா அம்மாவாக, என் அப்பாவின் அக்கா மகன் மற்றும் அவர் மனைவியை நடிக்க வைத்தேன். சிறுவயதில் நான், தங்கை, தம்பி மூவரின் கதாபாத்திரத்துக்கு என் அலுவலக ஸ்டாஃப் ஒருவரின் மகன் மற்றும் மகள்களை நடிக்க வைத்தேன்.

இரண்டாவது பாதியில் அப்பா அம்மாவுடன் வெவ்வேறு ஊர்களில் பணி புரிந்த நண்பர்கள் மற்றும் எங்கள் உறவினர்களிடம் பேட்டி எடுத்து காட்சிப்படுத்தியிருந்தேன்.

மொத்தம் 1-1/2 மணி நேர ஆவணப்படம். 15 நாட்களில் மொத்த ஷீட்டிங் மற்றும் எடிட்டிங் அனைத்தையும் முடித்தேன். லொகேஷன் தேர்வு, நடிகை, நடிகர்கள் தேர்வு, பயிற்சி கொடுத்தல், ஸ்கிரிப்ட், எடிட்டிங் என அத்தனையும் நான்தான் செய்தேன் என்றாலும் அந்த டீமின் அனைவரது முழு ஒத்துழைப்பினால் மட்டுமே அது சாத்தியமானது. என் முதல் ஆவணப்படமும் இதுவே.

இந்த ஆவணப்படம் இயக்கியதுதான் என் வாழ்க்கையில் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் நான் செய்த முதல் செயல். அதற்குக் காரணம், அவர்களை சர்ப்ரைஸாக அன்பின் மழையில் நனைக்க வேண்டும் என்ற பேராசைதான்…

நினைத்ததைப் போலவே அப்பா அம்மா இருவரும் கண்கள் பனிக்க படத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததை நிகழ்ச்சி வீடியோவில் பார்த்தேன். சபையில் இருந்த பலருக்கும் பல இடங்களில் கர்சீஃப் தேவையாக இருந்தது.

அத்தனை உணர்ச்சிப் பிழம்பான வசனங்கள், நடிப்பு, பின்னணி இசை, காட்சி அமைப்பு… திரையிடலுக்கு முன் எடிட்டிங்கில் இருந்து கிட்டத்தட்ட 3,4 முறை பார்த்திருந்தாலும் எனக்கே ஒரு திரைப்படம் எடுத்ததைப் போன்ற பெருமிதம் ஏற்பட்டது அந்த சபையில்.

அடுத்து திருமிகு. ராமகிருஷ்ணன், திருமிகு. ஜெயசந்திரன், திருமிகு. ஜெயஸ்ரீ ரவீந்திரன் அனைவரும் சிறப்புரை ஆற்றி  ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வெப்சைட்டை துவக்கி வைக்க, இறுதியில் அவர்கள் என் அப்பா அம்மாவுக்கு Ideal Parents என்ற பட்டத்தையும், ஆவணப்படத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நினைவுப் பரிசையும் அளிக்க விழா இனிதே நிறைவடைந்தது.

நிகழ்ச்சியை லைவாக ஸ்கைபில் அமெரிக்காவில் வசிக்கும் என் தம்பி தங்கைகள் பார்வையிட்டு அங்கிருந்தபடி அப்பா அம்மாவுடன் பேச அப்பாவின் பாசம் கண்களில் கண்ணீராக. அம்மாவின் பாசம் வழக்கம்போல முக மலர்ச்சியுடனும் பெருமிதத்துடனும் பூரிப்புடனும்.

அடுத்து அனைவருக்கும் இனிய விருந்தோம்பல்.

இந்த நிகழ்ச்சியில் என்ன ஒரு சிறப்பு என்றால் உறவினர்கள், நண்பர்கள், என் நிறுவன ஸ்டாஃப்கள் என அனைவருமே என் அப்பா அம்மாவுக்கு எதைப்பற்றியும் மூச்சு விடாமல் இரகசியத்தைக் காப்பாற்றியதுதான்.

இன்று எங்கள் அறக்கட்டளை ஆரம்பித்து 12 வருடங்கள் ஆகிறது. இதன் மூலம் வருடந்தோறும் திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்து வருகிறோம்.

நாங்கள் விருது பெற்ற காலம் போய் நாங்கள் விருதுகொடுக்கும் காலத்தை ஏற்படுத்திய எங்கள் பெற்றோர் பெருமைக்கு உரியவர்கள் தானே.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited

மே 4, 2019

தேனம்மை லெக்ஷ்மணன் பிளாகில் படிக்க
 https://honeylaksh.blogspot.com/2019/05/blog-post.html

(Visited 118 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon