அறம் வளர்ப்போம்

குரு ஸ்தானத்தில் இருந்து பொறுப்புடன் செயல்பட வேண்டிய உயரிய இடத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் மதிப்புக்குரிய ஆசிரியர்களுக்கு,

காம்கேர் புவனேஸ்வரியின் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். காலையில் மு. பாரதி மேடம் என்னை இந்த ‘அறம் வளர்ப்போம்’ குழுவில் உங்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

இனி  ‘அறம் வளர்ப்போம்’ கான்செப்ட் எப்படி உருவானது, இதற்காக நான் என்னெவெல்லாம் செய்ய இருக்கிறேன் என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஜனவரி 1, 2019 முதல் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற பெயரில் தொடர்  ஒன்றை ஃபேஸ்புக்கில்  எழுதி வருகிறேன்.  இது வயது வித்தியாசமின்றி அனைவருக்குமானது.

இந்தத் தொடரைத் தொடர்ச்சியாகப் படித்து வரும் பலரும், ‘முழுக்க முழுக்க நேர்மறை சிந்தனையுடன் யாரையும் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக ஒவ்வொரு எழுத்தையும் செதுக்குகிறீர்கள்…. கண்ணியமான நேர்த்தியான எழுத்து நடையில் உண்மையும் நேர்மையும் வெளிப்படுகிறது…’ என்று சொல்வதுடன் மனமார வாழ்த்தியும் வருகிறார்கள்.

எதுவெல்லாம் நல்லதோ அதுவே அறம். அறம் செய்யும் நம்மையும் மகிழ்விக்கும், பயனடைபவர்களையும் மகிழ்விக்கும். மற்றவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொண்டு, அவர்களையும் அறம் செய்ய வைத்து, இப்படியாக அறம் தானகவே தன்னை வளர்த்தெடுக்கும்.

இந்த தொடர் மூலம்  ‘அறம்’ பல கிளைகளில் தன்னை வளர்த்தெடுத்துக்கொண்டுள்ளது.

இதில் இடம்பெற்று வரும்  பதிவுகளை அவ்வப்பொழுது பலர் அனுமதி கேட்டு என் பெயருடன்  தங்கள் பத்திரிகை, டிவி, மேடைப் பேச்சு என அவரவர் களத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒருசில பள்ளிகளில் மாணவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் பதிவுகளை படித்துக்காட்டி அது குறித்து விவாதித்த பிறகே வகுப்புக்குள் செல்வதாகவும் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

கல்லூரி பேராசிரியர்களுக்கான சில வாட்ஸ் அப் குழுக்களுக்கு இந்தப் பதிவை ஆங்கிலத்தில் அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.

டிசம்பர் 15, ‘இ.நா.இ.நா’பதிவின் 350-வது எபிசோடுக்கு ஓர் அறிவார்ந்த பின்னூட்டம் வந்திருந்தது. எழுதியவர் திருப்பத்தூர் மாவட்டம், மிட்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியை மு.பாரதி அவர்கள்.

இவர் இந்தத் தொடரை தினந்தோறும் படித்து வருபவர். அவரது பின்னூட்டத்தை அவருடைய வார்த்தைகளிலேயே உங்கள் பார்வைக்கு கொடுக்கிறேன்.

//தங்களிடம் ஒரு கோரிக்கை.

தங்களது இந்த நாள் இனிய நாள் தொடரை தினமும் படிக்கிறேன்.

தங்களது பண்பு நான் வியக்கும் வண்ணம் மிகச்சிறந்ததாக உள்ளது.

தங்களது ஒவ்வொரு செயலும் அடுத்த தலைமுறைக்கு பாடமாக இருக்கிறது என்றே தோன்றுகிறது.

தாங்கள் பின்பற்றும் விழுமியங்கள் அடுத்த தலைமுறை கடைபிடிக்க வேண்டியன என்பதில் ஐயமில்லை.

இத்தகைய விழுமியங்களை இளம் குழந்தைகளின் மனதில் சிறுவயதிலேயே ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன்.

ஒளவை எழுதிய ஆத்திச்சூடி போல எளிமையாக நினைவு வைத்துக் கொள்ளக்கூடிய வகையில், தற்காலத்துக் குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஏற்கக் கூடிய வகையில் ஒரு சொற்றொடர் திரட்டு எழுதினீர்களானால் நன்றாக இருக்கும்.

வாழ்க்கையின் வெற்றிகரமான பெண்மணியாக இருக்கும் தாங்கள் சொல்வதை தமது குழந்தைகள் கற்க பெற்றோரும் விரும்புவார்கள். //

இந்த பின்னூட்டத்தை அனுப்பியபிறகு  போனில் தொடர்பு கொண்டார். அவருடைய எண்ணத்தை விரிவாக என்னிடம் எடுத்துச் சென்னார். பின்னர் அவரது பள்ளி தலைமை ஆசிரியையிடமும் என்னை அறிமுகம் செய்துவைத்தார். அவரும் என்னுடன் போனில் பேசினார்.

இவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க  ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கின்ற பள்ளி மாணவர்களுக்காக தினந்தோறும் ஒரு நல்ல விஷயத்தை சொல்லிக்கொடுக்க இருக்கிறேன்.

இதற்காக  பிரத்யோகமாக ‘அறம் வளர்ப்போம்’என்ற வாட்ஸ் அப் குழுவையும், யு-டியூப் சேனலையும் தொடங்கி உள்ளேன்.

அதற்கான ஸ்கிரிப்ட்டை ஆசிரியர்களுக்கான  ‘அறம் வளர்ப்போம்’ என்ற  வாட்ஸ் அப் குழுவில் பகிர்வேன். அதை  தினந்தோறும் ஆசிரியர்களாகிய நீங்கள் உங்கள் பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் தாருங்கள்.

தினமும் ஆசிரியர் ஒருவர் அதை சொல்லிக்கொடுக்க மாணவர்கள் ஒருமித்த குரலில் சொல்வதை வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப் குழுவில் பள்ளியின் பெயர் மற்றும் ஊரின் பெயரோடு பகிர்ந்தால் அதை ‘அறம் வளர்ப்போம்’ என்ற யு-டியூப் சேனலில் பகிர்வதாக தற்சமயத்துக்கான திட்டம்.

வீடியோ கேமிரா மூலம் எடுக்கப்படும் வீடியோக்களே யு-டியூப் சேனலில் தெளிவாக நல்ல கிளாரிட்டியுடன் வெளிப்படும். ஸ்மார்ட் போன்களில் எடுக்கப்படும் வீடியோக்கள் கிளாரிட்டி இல்லை என்றால் அப்லோட் செய்தால் நன்றாக இருக்காது. எனவே வீடியோ கேமிரா இருக்கும் பள்ளிகள் வீடியோ கேமிரா மூலம் எடுக்க முயற்சிக்கலாம்.

ஸ்மார்ட்போன் மூலம் எடுத்தனுப்பும் வீடியோக்களை அப்லோட் செய்ய முயற்சிக்கிறேன். ஆனால் தெளிவில்லாத வீடியோக்களாக இருந்து அவற்றை யு-டியூபில் அப்லோட் செய்ய இயலாமல் போனால் யாரும் அதற்காக வருத்தப்படக் கூடாது.

வாருங்கள் ஆசிரியர்களே, இணைந்து செயல்பட்டு சிறப்பான முறையில் மாணவச் செல்வங்களை வளர்த்தெடுப்போம்.

ஜனவரி 1, 2020 புதன் கிழமையில் இருந்து காலை 6 மணிக்கு ‘அறம் வளர்ப்போம்’ தொடர் மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
December 29, 2019

(Visited 68 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon