சில வாரங்களுக்கு முன்னர் கற்றறிந்த கல்வியாளர்கள் சந்திப்பில் எங்கள் உரையாடலுக்குப் பிறகு எனக்கு Uncompromised Honesty என்ற அங்கீகாரம் கிடைத்தது.
இது பட்டமோ, விருதோ அல்ல. என்னுடைய நேர்மையான செயல்பாடுகளுக்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் மனதார வாழ்த்திய மாபெரும் அங்கீகாரம்.
இதன் தாக்கத்தில், படித்து முடித்துவிட்டு திறமைகளுடன் கனவுகளையும் சுமந்துகொண்டு கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் இருந்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு வருகின்ற இளைஞர்களுக்காக சில விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன்.
நேர்மையே உயரிய விருது
இன்ஜினியரிங்கோ அல்லது டிகிரியோ படித்துவிட்டோம், நம் படிப்புக்கு சென்ற இடமெல்லாம் வரவேற்பு இருக்கும் என்ற கனவுடன் சென்னை மண்ணுக்குக் காலடி எடுத்து வைப்பீர்கள். இங்கு உங்களுக்கு முன்பே ஒன்றுக்கு மூன்று டிகிரி படித்து முடித்த பலர் தங்கள் படிப்புக்கும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாத பணியில் இருப்பதைக் காணக் கூடும். எனவே தினமும் ஏதேனும் ஒரு புது விஷயத்தை கற்றுக்கொண்டே இருங்கள்.
திறமை இருக்கிறது. திறமையை வெளிப்படுத்தினால் நம்மை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என கற்பனை செய்ய வேண்டாம். ஏனெனில் இங்கு முன்னேறுவதற்கு திறமை மட்டும் போதாது. உங்கள் சுயமரியாதையை தனித்தன்மையை அடகு வைத்தால்தான் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட அங்கீகாரத்தை உதறித்தள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்றில்லாவிட்டாலும் என்றாவது உச்சத்துக்கு வருவீர்கள்.
அங்கீகாரத்துக்காக கொஞ்சம் வளைய ஆரம்பித்தீர்கள் என்றால் அங்கீகாரம் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கலாம். ஆனால் நீங்கள் பெருமைப்படும் விதத்தில் இருக்கவே இருக்காது. உங்களை வளைத்துக்கொள்ளும் பழக்கம் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு உங்கள் சுயத்தை அழித்துவிடும்.
எங்கு சென்றாலும் எல்லோரிடமும் (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தலும்) ஏதேனும் ஓர் எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். அதை பூர்த்தி செய்தால் மட்டுமே உங்களுக்கான உயரத்தை பெற முடியும். உங்களுக்கான உயரத்தை அடைய பிறரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.
அப்படி பிறரை திருப்திபடுத்தி உங்கள் சுயத்தை இழந்தால் ஒருவேளை நீங்கள் அடைய நினைக்கும் உயரத்தை அடைந்தாலும் அடைந்துவிடலாம். ஆனால் அந்த உயரத்தில் இருப்பது நீங்கள் அல்ல. பலரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காக உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டதால் அவர்கள் அனைவரின் கலவையாக மாறிப்போயிருப்பீர்கள்.
பிறரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் முனைப்பு காட்டாமல் உங்களை எந்த சூழலையும் எதிர்கொண்டு நிலைநிறுத்திக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். வெற்றி கிடைக்க நாளானாலும் நிச்சயமாக நிம்மதி நிலைத்திருக்கும்.
பலர் பணியிடங்களில்கூட அத்தனை அவஸ்தைப்பட மாட்டார்கள். ஆனால் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்குவார்கள். உங்கள் திறமையில் நீங்கள் திருப்தியாக இருந்தால் எதற்கு அவசரப்பட வேண்டும். புகழ் கிடைக்கும்போது கிடைக்கட்டுமே. உங்களுக்கு கிடைக்க வேண்டியதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பொறுமையாக திட்டமிட்டுப் பயணியுங்கள்.
நேர்மையாக இருப்பது பிழைக்கத் தெரியாதவர்களின் கொள்கை என்பதை சட்டம்போடாத குறையாக வலியுறுத்துவார்கள். அதை நிஜம் என நம்பி நேர்மையற்ற செயல்களில் உங்கள் மனதை செலுத்த வேண்டாம். சின்ன சின்ன விஷயங்களிலும் நேர்மையை கடைபிடியுங்கள். நேர்வழியில் பயணிக்க முயற்சியுங்கள்.
நேர்மையாக இருப்பது என்பது அவ்வளவு சுலபமல்லவே. ஏமாளி, பிழைக்கத் தெரியாதவன், நன்றாக நடிக்கிறான் என்பதுபோன்ற ஏளனமும் எதிர்மறை கமெண்ட்டுகளையும் கடந்துவர வேண்டியிருக்கும்.
நேர்மையாக இருப்பதே கம்பீரம், அதுவே அங்கீகாரம், அதுவே விருது, அதுவே புகழ், அதுவே பெருமை, அதுவே சர்வமும். நேர்மையாக இருப்பதற்கு பெருமைப்படுங்கள். கர்வப்படுங்கள். நாளடைவில் தீய சக்திகள் உங்கள் முன் மண்டியிடும். இதுவே நேர்மையாக வாழ்பவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் நம்பிக்கை OTP.
நமக்கு நாமே சில FAQ!
எந்த ஒரு சர்வீஸ் வெப்சைட்டாக இருந்தாலும், ஆப்பாக இருந்தாலும், சாஃப்ட்வேராக இருந்தாலும் அதில் FAQ என்ற பகுதி இருக்கும். Frequently Asked Questions என்பதன் சுருக்கமே FAQ.
இந்தப் பகுதியில் கஸ்டமர்களுக்கு அடிக்கடி ஏற்படும் சந்தேகங்களை அவர்களாகவே கேள்விகளாக்கி அதற்கான பதில்களையும் எழுதி வைத்திருப்பார்கள். நம்முடைய சந்தேகங்களுக்கான பதில்களும் அதிலேயே கிடைத்துவிடலாம்.
இதைப்போல நமக்கு நாமே சில கேள்விகளை எழுப்பிக்கொண்டு அதற்கான பதில்களையும் நாமே தேடினால் ‘ஓரளவுக்கு’ அமைதியாக மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியும்.
மூன்று கேள்விகளை எடுத்துக்கொள்வோம். ஆமாம், இல்லை என்று ஒருவார்தையில் பதில் போதும்.
எல்லா நேரங்களிலும் குறைந்தபட்ச மனிதாபிமானத்துடனாவது நடந்துகொள்ள முடிகிறதா?
ஏதேனும் ஒரு காரணத்தால் தவறான புரிதலால் பிறரால் நீங்களோ, உங்களால் பிறரோ காயப்பட்டிருந்தால் அதை ஏதேனும் ஒரு சந்தர்பத்திலாவது சரி செய்ய முயற்சி செய்திருக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் கோபத்தில்லோ டென்ஷனிலோ யாரையாவது திட்டியிருந்தால் அதற்காக அன்று இரவு தூங்குவதற்குள் உங்கள் மனதுக்குள்ளேயாவது மன்னிப்புக் கேட்க முடிகிறதா?
இதற்கான உங்கள் பதில் ‘இல்லை’ என்று நீங்கள் கொடுத்திருந்தால் காரணம் உங்கள் ‘ஈகோ’ என்பதைத்தவிர வேறொன்றாக நிச்சயம் இருக்க முடியாது.
முதல் கேள்விக்கான ‘இல்லை’ என்ற பதிலுக்கானக் காரணம், அவன்/அவள் இப்படி நடந்துகொள்ளும்போது நாம் ஏன் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்? என்ற ஈகோ.
இரண்டாவது கேள்விக்கான ‘இல்லை’ என்ற பதிலுக்கானக் காரணம், என் மீது தவறே இல்லை என்கிறபோது எதற்காக தவறான புரிதலை சரி செய்ய வேண்டும்? என்ற ஈகோ.
மூன்றாவது கேள்விக்கான ‘இல்லை’ என்ற பதிலுக்கானக் காரணம், அவன்/அவள் தவறு செய்ததால், என் கோபத்தை கிளறியதால் திட்டினேன். என்மீது தவறே இல்லாதபோது ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? என்ற ஈகோ.
நம் மீது தவறே இருந்தாலும் அதை நாம் ஒத்துக்கொள்ளாமல், நாம் சரியாக இருக்கிறோம், மற்றவர்கள் சரியாக இல்லை என்ற கண்ணோட்டத்தில்தான் நம்மில் பெரும்பாலானோர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். விளைவு ஈகோவின் உச்சகட்டம்.
இந்த மூன்று கேள்விகளுக்கும் ஆம் என்று பதில் சொல்லும் வகையில் உங்கள் செயல்பாடுகளை மாற்றி அமைத்துக்கொள்ளும்போது உங்கள் ஈகோ உடையும். மனது அழகாகிவிடும். அது உங்கள் முகத்திலும் வெளிப்படும். உங்களைச் சுற்றி ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷன் பரவும்.
இந்த மூன்று கேள்விகளுக்கும் என்னுடைய பதில் என்ன தெரியுமா?
‘ஆமாம்’!
நம் எண்ணம் தூய்மையாகும்போது நம் மனது அழகாகும், நம் முகத்திலும் தெளிவு கிடைக்கும், பேச்சிலும் செயலிலும் கண்ணியம் கரைபுரண்டோடும். இதுவே எண்ணத் தூய்மை நமக்குக் கற்றுக்கொடுக்கும் OTP.
சின்ன சின்ன ஆசை!
நம் எல்லோருக்குமே ஆசைகள் இருக்கும். அவைதான் நம்மை இயக்குகின்ற Fuel.
அதை அடைய நாம் எடுக்கும் முயற்சிகளில் நேர்மை இருந்துவிட்டால் வாழ்க்கைச் சக்கரம் இயல்பாக ஓடும், கொஞ்சம் ‘முன்னே பின்னே’ இருக்கலாம் என காம்ப்ரமைஸ் செய்துகொண்டால் அவ்வளவுதான், ஏதோ ஒரு இடத்தில் வாழ்க்கைச் சக்கரம் சிக்கிக்கொண்டு தடுமாறும்.
நம் கனவுகள் பொதுவாகவே பிரமாண்டமாகத்தான் இருக்கும்.
கார் வாங்க ஆசைப்படுபவர்கள் இருப்பதிலேயே விலையுயர்ந்த காரை வாங்கக் கனவு காண்பார்கள். ஒருகட்டத்தில் தங்களால் முடிகிறதோ இல்லையோ லோன் போட்டாவது தங்கள் காரை வாங்கிவிடுவார்கள். எத்தனை நாள் ஆசை ஆசையாய் வாங்கிய அந்தக் காரை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் வெளியில் செல்கிறார்கள் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். பார்க்கிங் பிரச்சனை என்று சொல்லி ஓலாவுக்கும் ஊபருக்கும் புக் செய்துவிட்டு டாக்ஸியை மொபைல் App-ல் ட்ராக் செய்துகொண்டிருப்பார்கள்.
ஒன்று தெரியுமா?
நம் மனம் பெரிய ஆசைகளை சுமந்துகொண்டு அதற்காக கனவு கண்டுகொண்டிருந்தாலும் ‘சின்ன சின்ன’ விஷயங்களில்கூட திருப்தி அடைந்துவிடக் கூடியதுதான்.
நாங்கள் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நாமெல்லாம் கார் எங்கே வாங்கப் போகிறோம் என்று எண்ணி இருக்கிறோம். எங்கள் அப்பா, ‘ஒரு ஆட்டோ வாங்கி அதை நான்கு பக்கமும் நன்றாக சீல் செய்து உள்ளேயே ஃபேனைப் பொருத்தி ஒரு மினிகாராக மாற்றிவிடலாம்’ என்று அடிக்கடி சொல்லுவார்.
எங்கள் அப்பா சொன்னதைப் போல ஆட்டோவையெல்லாம் கார்போல மாற்ற அவசியமில்லாமல் எங்கள் உழைப்பிலேயே 1999-ம் வருடம் மாருதி 800 வாங்கினோம். அப்பா, நான், தம்பி, தங்கை என குடும்பமாக கார் ஓட்டக் கற்றுக் கொண்டோம். தமிழகமெங்கும் அந்த காரிலேயே சென்றிருக்கிறோம். Self Drive. அப்பாவும், நாங்களும் மாற்றி மாற்றி ஓட்டிச் செல்வோம்.
ஒவ்வொரு ஐந்து வருடத்துக்கு ஒருமுறை பழைய காரை கொடுத்துவிட்டு அடுத்த வகை காரை வாங்கத் தொடங்கினோம்.
வாழ்க்கையில் ஒருமுறை நயாகரா சென்றுவிட வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு திருக்குற்றால அருவிக்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் சென்று வந்தாலே திருப்தி கிடைத்துவிடும்.
தங்கத்திலேயே வாட்ச் கட்டிக்கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு ‘கோல்ட் கோட்டட்’ வாட்ச் வாங்க முடிந்தாலே மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.
புத்தகம் எழுதி வெளியிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு தினசரி பத்திரிகையில் அவர்களின் எழுத்து அவர்கள் பெயருடன் எங்கோ ஒரு மூலையில் சின்னதாக வந்தாலும் பெருமகிழ்ச்சியாகவே இருக்கும்.
சதா சண்டைபோடும் எதிர்வீட்டுக்காரரின் தொந்திரவு பொறுக்க முடியாமல் வீட்டை மாற்ற நினைக்கும் நேரத்தில் அவர் ஏதோ ஒரு உதவிக்காக உங்களிடம் ஹாய் சொல்லும் நேரத்தில் ஒரு நிம்மதி நம் மனதுக்குள் பரவும் பாருங்கள். அதற்கு ஈடு இணையான சந்தோஷம் வேறெதுவும் இருக்கிறதா என்ன?
இப்படி சின்ன சின்ன சந்தோஷங்களுக்கும் வெற்றிகளுக்கும் ‘பொட்டிப் பாம்பாய்’ அடங்கிவிடக் கூடியதுதான் நம் மனது. அந்த சந்தோஷங்களை அனுபவிக்கத் தெரிந்தவர்கள் மெல்ல மெல்ல முன்னேறி மேலே சென்றுகொண்டே இருப்பார்கள்.
சின்ன சந்தோஷங்களில் பூரிப்படையாதவர்களால் வெற்றியின் உச்சத்துக்குச் செல்வது மிகவும் கடினமே.
‘உன்னால் இந்த சின்ன சந்தோஷத்தை அனுபவிக்கவே தெரியவில்லை. பெரிய சந்தோஷத்தை எப்படி தாங்கப் போகிறாய்’ என்றெண்ணி வெற்றியும் சந்தோஷமும் தூர ஓடிப் போய்விடுமோ என்றுகூட நான் நினைப்பதுண்டு.
சின்ன சின்ன விஷயங்களில் நிறைவடைவோமே. அதுவே பெரிய பெரிய வெற்றிகளைப் பெறுவதற்கான OTP.
இந்தா பிடிங்க உங்களுக்கான OTP…
சின்ன சின்ன தவறுகளுக்கும் சம்மந்தப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்போம். சின்ன சின்ன சந்தோஷங்களிலும் மகிழ்ச்சியடைவோம். சின்ன சின்ன விஷயங்களிலும் நேர்மையை கடைபிடிப்போம். இதுவே வெற்றிகரமான வாழ்க்கைக்கான OTP.
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 17
டிசம்பர் 2019
புத்தக வடிவிலேயே படிக்க:சின்ன திருப்தி பெரிய நிறைவு : புதிய தலைமுறை பெண் டிசம்பர் 2019