ஹலோ With காம்கேர் -14 : யாருடனாவது மனஸ்தாபம் வந்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லையே?

ஹலோ with காம்கேர் – 14
ஜனவரி 14, 2020

கேள்வி: யாருடனாவது மனஸ்தாபம் வந்தால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு விரக்தியடைந்து விடுகிறேன். நிம்மதியாக இருக்க முடியவில்லையே?

ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லோரும் எல்லோருக்கும் நல்லவர்களாக இருந்துவிட முடியாது. பிடித்தமானவர்களாகவும் வாழ்ந்துவிடவும் சாத்தியமில்லை.

நாம் ஒருவருக்கு 1000 நன்மைகள் செய்திருப்போம். ஆனால் ஏதேனும் ஒரு விஷயத்தில் நமக்குப் பிடிக்காததை அவர்கள் செய்யும்போது நாம் அதை அவர்களிடம் வலியுறுத்திச் சொன்னால், நாம் செய்த 1000 நன்மைகளும் அவர்கள் மனதில் இருந்து மேஜிக் போல மறந்துவிடும்.

அவர்களால் நமக்கு ஏற்பட்ட அசெளகர்யத்துக்காக நாம் சுட்டிக் காட்டிய கருத்துக்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு நம்மை பகைத்துக்கொள்வார்கள்.

இதுபோன்ற சூழலில் நமக்கு மனம் வேதனை அடைவதை தவிர்க்க முடியாது. ஆனால் முடிந்தவரை நம் நிலையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். புரிந்துகொள்ளும் மனநிலையை அவர்கள் கடந்து சென்றிருந்தால் நம் அன்புக்கும் மரியாதைக்கும் தகுதியானவர் அவரில்லை என்பதை உணர்ந்து விலகி இருப்பதே உத்தமம்.

மனஸ்தாபம் என்பது இரண்டு புரிதல் உள்ள உள்ளங்களுக்குள் மனசாட்சி உள்ளவர்களுக்குள்  ஏற்படுவது. ஏதேனும் ஒரு கட்டத்தில் தானகவே சரியாகும்.

ஈகோ, பொறாமை, காழ்ப்புணர்ச்சி இதுபோன்ற காரணங்களினால் உண்டாவதற்கு பெயர் விரோதம்.

மனஸ்தாபத்தை சரி செய்யலாம் அல்லது சரியாகும். விரோதத்தை சரி செய்வது என்பது இயலாத செயல்.

ஒருமுறை எனக்கு அறிமுகமே இல்லாத ஒரு ஆசிரியை போன் செய்து அழுதுகொண்டே தன் பிரச்சனையை எடுத்துச் சொல்லும்போது தலைமை ஆசிரியர் தன்னை அவமதித்தனினால் தற்கொலை செய்துகொள்ளலாம் போல் இருக்கிறது என சொன்னார்.

அவமதித்தல் என்பது அநாகரிகமான செயல். அந்த செயலை செய்தவர்கள்தானே வருந்த வேண்டும். நீங்கள் ஏன் வருந்தப்பட வேண்டும் என்ற நோக்கில் அவரை சமாதானப்படுத்தி பிரச்சனையை காதுகொடுத்து கேட்டேன்.

அவமானம் என்பது எதுவும் இல்லை. உங்கள் செயல்களும் எண்ணங்களும் நேர்வழியில் இருக்கிறது என உங்கள் உள்மனது 100 சதவிகிதம் சொன்னால் நீங்கள் செய்கின்ற செயல்களுக்கான எதிர்வினைகள் அவமானம் என்ற பிரிவின்கீழ் வராது. அவை எதிர்வினைகள் அவ்வளவே. அந்த அளவில் எடுத்துக்கொண்டு ரியாக்ட் செய்தால் போதும்.

அறத்துக்கும் சமூகத்துக்கும் மனசாட்சிக்கும் எதிராக தகாத செயல்களை செய்யக்  கூடாது. அவற்றை செய்ய மனதால் நினைப்பதுகூட அவமானம்தான். அப்படி  அவமானகரமான செயல்களை செய்யும்போது உங்களுக்குக் கிடைக்கும் மரியாதைக்குப் பெயர்தான் அவமரியாதை.

மற்றபடி உங்கள் நேர்மறைக் கொள்கைகளும் கண்ணியமான கருத்துக்களும் பிடிக்காமல் உங்களிடம் கடுமையாக நடந்துகொள்பவர்களின் நடவடிக்கையை எதிர்வினை என்ற அளவில் புரிந்துகொண்டு அமைதியாக இருப்பதுதான் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

அவமதித்தலையும், எதிர்வினையையும் சரியாக இனம்பிரித்து புரிந்துகொள்வோம். மனிதர்களை கையாளப்பழகுவோம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 45 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon