ஹலோ With காம்கேர் -15: , எனது சமீபத்தைய மிகப் பெரிய சந்தோஷம்!

ஹலோ with காம்கேர் – 15
ஜனவரி 15, 2020

கேள்வி: எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்வி, எனது சமீபத்தைய மிகப் பெரிய சந்தோஷம் என்ன?

இதற்கான பதிலை என்னால் யோசிக்காமல் சொல்லிவிட முடியும்.

அரசுப் பள்ளிகளின் அட்டகாசமான பயிற்சியும், முயற்சியும், ஒத்துழைப்பும், ஆர்வமும், ஈடுபாடும் அப்பப்பா என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறது.

எனது 27 வருடகால தொழில்நுட்பப் பயணத்தில் எங்கள் நிறுவன சாஃப்ட்வேர் தயாரிப்புகளுக்காக, அனிமேஷன் படைப்புகளுக்காக, தொழில்நுட்ப தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளுக்காக, மொபைல் ஆப்களுக்காக,  நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் நிகழ்ச்சிகளுக்காக என பலதரப்பட்ட ப்ராஜெக்ட்டுகளுக்கு நித்தம் வெவ்வேறு டாப்பிக்குகளில் ஸ்கிரிப்ட்டுகள் எழுதி வருகிறேன்.

ஆனாலும் ஒரு புதிய பரவசத்தையும் ஆனந்தத்தையும் அண்மையில்  நான் எடுத்து செயல்படுத்தி வரும் ஒரு புது ப்ராஜெக்ட் கொடுக்கிறது.

அது என்னவென்றால், ஆங்கிலப் புத்தாண்டு 2020 ஜனவரி முதல் தேதியில் இருந்து அரசு பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் நாங்கள் தொடங்கியுள்ள ‘அறம் வளர்ப்போம்’ வாட்ஸ் குழுவில் தினமும் காலையில் 6 மணிக்கு பதிவிடும் அறநெறி கருத்துக்களுக்கான ஸ்கிரிப்ட்டுக்களே.

இந்தக் குழுவில் இணைந்துள்ள ஆசிரியர்களின் ஆர்வமும் ஈடுபாடும், அந்த குழந்தைகளின் ஒத்துழைப்பும் என்னை வியக்க வைக்கிறது.

இந்த குழு ஆரம்பிப்பதற்கு அச்சாணியாக இருந்தது எது தெரியுமா?

2019-ம் ஆண்டு முழுவதும் ஃபேஸ்புக்கில் நாள் தவறாமல் பிரம்ம முகூர்த்தத்தில் நான் எழுதி வந்த ‘இந்த நாள் இனிய நாள்’ தொடரின் விடியற்காலை பதிவுகளே.

பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் எந்த ஒரு செயலும் தெய்வீக சக்தி பெற்றுவிடும்.

அந்த வகையில் 2019 டிசம்பரில் என் எழுத்தை தினமும் வாசித்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர் பாரதி அவர்கள் என்னுடைய ஒரு பதிவில் ‘பள்ளி குழந்தைகளுக்கு அறநெறியைச் சொல்லித் தருவதற்கு சின்ன சின்ன அறநெறி வாக்கியங்களை உருவாக்க முடியுமா… வெற்றிகரமாக வாழும் பெண்ணான உங்களை குழந்தைகளுக்கு மார்டன் ஒளவையாராக அறிமுகப்படுத்தலாம்…’ என்று பின்னுட்டமிட்டிருந்தார்.

உடனடியாக அவரை தொடர்புகொண்டு பேசி ஆரம்பிக்கப்பட்டதே  ‘அறம் வளர்ப்போம்’ வாட்ஸ் அப் குழு.

இதில் தினந்தோறும் அறநெறி கருத்துக்களை பதிவிட்டு வருகிறேன்.  அதிலுள்ளதை அப்படியே ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வீடியோ எடுத்து எனக்கு அனுப்புகிறார்கள். அவற்றை சரிபார்த்து யு-டியூப் சேனலில் பதிவிடுவதற்காக தேர்ந்தெடுக்கிறேன்.

ஒவ்வொரு வீடியோவும் மாணவ மாணவிகளின் கள்ளமில்லா உள்ளத்தை பிரதிபலிக்கிறது. அவர்களுக்கு பொறுமையாகச் சொல்லிகொடுத்து ஊக்கப்படுத்தும் ஆசிரியர்களின் உழைப்பும் அசாத்தியமானது.

வீடியோவில் குழந்தைகளின் உடல்மொழி  உணர்த்தும் உற்சாகமும், குரலின் நிரம்பி வழியும் நம்பிக்கையும் எனக்குள் புதுவிதமான மகிழ்ச்சியை பரவசத்தை நிரப்புகிறது.

கார்ட்டூனில் கந்தர் சஷ்டி கவசம், தினம் ஒரு பழம், தாத்தா பாட்டி கதைகள், பேரன் பேத்தி பாடல்கள், தமிழ் கற்றுக்கொடுக்கும் சிடி என எங்கள் காம்கேரில் குழந்தைகளுக்காக நாங்கள் தயாரித்த ஏராளமான அனிமேஷன் படைப்புகளுக்கு நான் ஸ்கிரிப்ட் எழுதி இருந்தாலும், தினந்தோறும் நான் எழுதும் அறம் சார்ந்த ஸ்க்ரிப்ட்டை சுடச் சுட குழந்தைகள் குரலில் வீடியோவில் பார்ப்பதும் கேட்பதும் புதுவிதமான அனுபவமாக உள்ளது.

மாதிரிக்கு ஒன்று  உங்கள் பார்வைக்காக இங்கே!

South Vandaanam JAN 10, 2020 (Makizhchi)

அந்த வகையில் என் சமீபத்தைய மிகப் பெரிய சந்தோஷம் இதுதான்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 64 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon