ஹலோ With காம்கேர் -17: கட்டணமில்லா புகழாரங்கள்!


ஹலோ with காம்கேர் – 17

ஜனவரி 17, 2020

கேள்வி: கட்டணமில்லா புகழாரங்கள்!

கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப்பும், மெசஞ்சரும் கண்டுகொள்ளப்படாமல் பொங்கல் வாழ்த்துக்களால் திணறி கொண்டிருந்தன. ஒரு வாட்ஸ் அப் பகிர்வுக்கு 1 ரூபாய் என கட்டணம் வைத்தால் இதுபோல திணற திணற ஃபேர்வேர்ட் மெசேஞ்களை அனுப்புவார்களா என சில நேரங்களில் விளையாட்டாகவும் பல நேரங்களில் சீரியஸாகவும் யோசித்துண்டு.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணியின் வாட்ஸ் அப் மெசஞ்சர்களில் ஏராளமான குறுஞ்செய்திகள். ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்… உங்களுடன் நட்பு கிடைத்ததே பெரும் பாக்கியம்… இந்த நட்பு இறுதிவரைத் தொடர வேண்டும்… உங்களைப் பார்த்தால் ஒரு வளர்ந்தக் குழந்தைக்கு அம்மா என்றே சொல்ல முடியவில்லை…’ இப்படியாக அவரின் புறத்தோற்றத்தை வைத்தே அந்தத் தகவல்கள் இருந்தன. எட்டாவது  படிக்கும் அவரின் மகள் எதேச்சையாக அவற்றைப் படித்துப் பார்க்கிறாள்.

‘அம்மா, இந்த வயதிலும் உன்னை எத்தனை பேர் ஃபாலோ செய்கிறார்கள்… நம்ம அப்பா மட்டும் உன்னை புரிஞ்சுக்கவே இல்லை. அப்பப்ப சண்டை போடறார்… அப்பா இன்னும் உன்னை நல்லா வச்சுக்கணும்’ என்று சொல்ல அவர் அதிர்ந்து போனார்.

என்னிடம் அதை பகிர்ந்துகொண்டு வருத்தப்பட்டார். நான் சில ஆலோசனைகளைக் கொடுத்தேன்.

அதை அன்றில் இருந்தே செயல்படுத்தத் தொடங்கினார்.

‘கண்மணி, நான் என்ன பொருளா? என்னை நல்லா பத்திரமா பாதுகாக்க… அப்பா அம்மாவுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வருவதால் அவர்களுக்குள் அன்பு இல்லை என்று பொருளல்ல. நல்ல புரிந்துகொள்ளல் இருந்தால்கூட சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும். அதைவிடு கண்மணி, பெண்களை நல்லா பத்திரமா பார்த்துக்கொள்ள மட்டுமே ஆண்கள் படைக்கப்படவில்லை. பெண்கள், ஆண்கள் இருவரும் இணைந்து நட்புணர்வோடு பயணிப்பதற்காகவே இந்த வாழ்க்கை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது… யாரும் யாரையும் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. அவரவர் தேவைகளை முடிந்தவரை அவரவர்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தன்னம்பிக்கையோடு வாழ முடியும்’ என்ற ரீதியில் முடிந்தவரை தன் பெண் புரிந்துகொள்ளும் வகையில் பேசினார்.

ஆனாலும் அந்த சின்னப்பெண்ணுக்குப் புரிந்தும் புரியாத நிலை. அடுத்த நாள் மொபைலில் இருந்து வாட்ஸ் அப், மெசஞ்சர்களை டெலிட் செய்து விடுகிறார். இந்த செய்தியை மகளிடமும் சொல்கிறார்.

ஒரு வாரம் கழித்து மகளிடம் பேச்சுக் கொடுக்கிறார்.

‘கண்மணி, என் மொபைல் எஸ்.எம்.எஸ்களைப் பார்…’

மகளும் பார்க்கிறார். ஆப்ஸ்களில் இருந்ததைப் போல ‘அச்சுபிச்சு’ மெசேஜ்கள் எதுவுமே இல்லை. எல்லாமே அவசியமான தகவல்களாகவே இருந்தன.

‘கண்மணி, இலவசமாக ஒரு வசதி கிடைக்கிறது என்றவுடன் தாராள மனப்பான்மையுடன் வாட்ஸ் அப்பில் ‘எக்கச்செக்க’ புகழாரங்களை அள்ளி வீசியவர்களில் யாரேனும் காசு கொடுத்து சாதாரண எஸ்.எம்.எஸ் அனுப்பி இருக்கிறார்களா பார்! ஒரு எஸ்.எம்.எஸ் கூட தவறான நோக்கத்தில் இல்லை அல்லவா?

இதுதான் மனித இயல்பு. இப்படித்தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். இதில் ஆண் பெண் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. எனவே புகழ் வார்த்தைகளுக்கு மயங்கக் கூடாது. சமூக வலைதளங்களில் நண்பர்களை வைத்துக்கொள்வதில் மிகமிக கவனமாக இருக்க வேண்டும்.’

என் அலோசனையின்படி தன் பெண்ணிடம் ஒருவார காலம் பேசி புரியவைத்ததை என்னிடம் நன்றியுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்த ஆலோசனை வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல நன்கு படித்து நல்ல வேலையில் திருப்தியாக சம்பாதிக்கும் பலருக்கும் சேர்த்துத்தான்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 49 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon