ஹலோ With காம்கேர் -22: சாப்பாடு என்பது வெறும் சாதமும் காய்கறியும் சாம்பாரும் ரசமும் மட்டும் அல்ல. அப்புறம் வேறென்ன?

ஹலோ with காம்கேர் – 22
ஜனவரி 22, 2020

கேள்வி: சாப்பாடு என்பது வெறும் சாதமும் காய்கறியும் சாம்பாரும் ரசமும் மட்டும் அல்ல. அப்புறம் வேறென்ன?

தலைமுடி வளர்க்கும் பிரச்சனையில் தூக்கில் தொங்கிய சிறுவன். செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி, மதிப்பெண் குறைவு என சொல்லி திட்டியதால் மனமுடைந்த சிறுவன் வீட்டைவிட்டு ஓட்டம் இப்படியான செய்திகளை பெருகிவிட்டன.

இந்த காலத்துப் பிள்ளைகளை வளர்ப்பது அத்தனை கடினமா?

குழந்தைகளை திடீரென ஒருநாள் கண்டிப்பதினால் இதுபோல விபரீத முடிவுகள்தான் ஏற்படும்.

சிறிய வயதில் இருந்தே அவர்களுடன் நிறைய பேச வேண்டும். அவர்களுக்குள் நல்ல விஷயங்களை புகுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் வளர வளர நாம் சொல்லும் விஷயங்களை அவர்களால் சரியான கோணத்தில் புரிந்துகொள்ள முடியும்.

இப்படி பேசி வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோர் சொல்லும் எல்லாவற்றையும் முழுமனதுடன் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்கிறார்களா என்று கேட்டால் அதற்கும் ஆமாம் என்ற பதிலை சொல்லிவிட முடிவதில்லை.

ஆனால் அம்மா அப்பா என்றால் இப்படித்தான் ஏதேனும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என அவர்கள் மனதில் பெற்றோர்களைப் பற்றிய பிம்பம் பதிவாகிவிடும். அவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ சலிப்புடனாவது பெற்றோரை பின்பற்றுவார்கள். சலிப்பு ஒருநாள் பேரன்பாக மாறுவது நிச்சயம்.

மனித மனம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் தொடர்ச்சியாக சொல்லப்படும் கருத்துக்களும், பார்க்கும் காட்சிகளும் மனதில் அப்படியே ஒட்டிக்கொள்ளும்.

ஆண்பிள்ளை என செல்லம் கொடுப்பது, ஒரே குழந்தை என ஆரம்பத்தில் கண்டிக்காமல் விடுவது என்றிருந்துவிட்டு திடீரென அவர்களின் பருவ வயது மாற்றத்தினால் தவறுகள் செய்யும்போது அறிவுரை சொல்ல ஆரம்பித்தால் அதுநாள்வரை அந்தக் குழந்தைகளுக்கு ஹீரோவாக இருந்த  பெற்றோர்கள் எதிரிகளாவார்கள்.

இந்த காலத்துப் பிள்ளைகள் சொன்னால் கேட்பதில்லை என்று சொல்லி அவர்கள் போக்கில் விடுவதுதான் இன்றைய பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு. இப்படி நான் சொல்வதற்காக மன்னிக்கவும் பெற்றோர்களே.

பிள்ளைகள் கேட்கிறார்களோ இல்லையோ பெற்றோர்கள் நல்லவற்றை வலியுறுத்தி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். சொல்வது பெற்றோர் கடமை. கேட்க வேண்டியது பிள்ளைகள் கடமை.

பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை கேட்காமல் தங்கள் கடமையில் இருந்து தவறுகிறார்கள் என்பதற்காக பெற்றோர்கள் சொல்லாமல் விடுவது அவர்கள் கடமையில் இருந்து தவறுவதைப் போலதான்.

சொல்லிக்கொண்டே இருந்தால் என்றேனும் ஒருநாள் ஒரு புள்ளியில் அவர்களுக்குள் நல்ல விஷயங்கள் உள்ளே செல்லும்.

தினமும் தன் கைகளால் சமைத்து அன்புடன் பரிமாறும் அம்மாக்கள் சொல்லிக்கொடுக்காத ஒழுக்கத்தையா கல்விக்கூடங்கள் சொல்லிக்கொடுத்துவிடப் போகிறது. அப்பாக்கள் காட்டாத பாதுகாப்பை உணர்வையா மற்றவர்கள் காட்டிவிடப் போகிறார்கள்.

சாப்பாடு என்பது வெறும் சாதமும் காய்கறியும் சாம்பார் ரசமும் மட்டும் அல்ல. அதில் அன்பு பாசம் நேசம் ஒழுக்கம் இத்தனையையும் கலந்து கொடுக்கும் மேஜிக் எல்லா காலங்களிலும் அம்மாக்களுக்கு கை வந்த கலை.

கல்விக்கூடங்களில் நீதிபோதனை வகுப்பு வைக்க வேண்டும் என்று சொல்பவர்களிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி, யாருக்கு மாணவர்களுக்கா அல்லது ஆசிரியர்களுக்கா? இப்படி நான் சொல்வதற்காக ஆசிரியர்கள் என்னை மன்னிக்கவும்.

மாணவர்களிடம் பண்புடன் பழகுவதற்கே பயிற்சி கொடுக்கும் நிலையில்தான் சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இதிலும் விதிவிலக்குகள் உண்டு.

வீடு, பெற்றோர், கல்விக்கூடம், ஆசிரியர் போன்ற அரண்கள் முறையாக அமைந்துவிட்டால் சமுதாயம், தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றால் உண்டாகும் அலைக்கழிப்புகளில் இருந்து இளையதலைமுறையினரை காப்பாற்றிவிட முடியும்.

அரண்களின் தரத்தை மேம்படுத்துவதை விட்டு அலைகழிப்புகளை மட்டும் குறை சொல்வதினால் பயன் என்ன?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 57 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon