ஹலோ With காம்கேர் -21: பிறருடன் தொடர்பில் இருப்பதும் அவர்களுடன் அன்பின் இணைப்பில் இருப்பதும் வெவ்வேறு. எப்படி? 

ஹலோ with காம்கேர் – 21
ஜனவரி 21, 2020

கேள்வி: பிறருடன் தொடர்பில் இருப்பதும் அவர்களுடன் அன்பின் இணைப்பில் இருப்பதும் வெவ்வேறு. எப்படி?

நேற்று அப்பாவுடன் மியாட் மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. காலையில் காரை எடுக்கும்போதே ஸ்டார்ட் செய்யத் தடங்கியதால் ஓலா புக் செய்தோம்.

பொங்கல் விடுமுறை, டிராஃபிக் என பேசிகொண்டே டிரைவர் நிதானமாக கார் ஓட்டினார். மியாட் மருத்துவமனையில் நாங்கள் செல்ல வேண்டிய கடைசி ப்ளாக்கில் இறக்கிவிட்டவுடன், ‘திரும்பி வருவதற்கு ஓலா புக் செய்தால் டிரைவருக்கு போன் செய்து மருத்துவமனையின் முகப்பு நுழைவாயிலுக்கு வந்துவிடுங்கள் என்று சொல்லிவிடுங்கள். ஏனெனில் இந்த ப்ளாக்கின் பின்பக்கம் முன்பு வீடுகள் இருந்ததால், ஓலா புக் செய்யும்போது அது மியாட் மருத்துவமனையின் பின்பக்கத் தெருவையே பிக்அப் பாயிண்ட்டாகக் காட்டும். டிரைவருக்கு குழப்பமாக இருக்கும்…’ என்று சொன்னார்.

ஒரு டிரைவராக அவரது வேலை பயணிகளை அவர்கள் சொல்லும் இடத்துக்குக் கொண்டு சேர்க்க வேண்டியது மட்டுமே. ஆனால் நாங்கள் கேட்காமலேயே அவர் தனக்குத் தெரிந்த விஷயத்தைச் சொல்லி உதவினார்  மனிதாபிமானத்தின் அடிப்படையில்.

அவர் எங்களை இறக்கிவிட்டு தனக்குத் தெரிந்த விஷயத்தை சொல்லாமல் சென்றிருந்தால் அவர் எங்களுடன் தொடர்பில் மட்டுமே இருந்ததாகப் பொருள். அது டிரைவருக்கும் பயணிக்குமான தொடர்பு.

அவர் எங்கள் மீது அக்கறை கொண்டு செயல்பட்டதால் அவர் எங்களுடன் அன்பின் இணைப்பில் இருந்தார்.

சுவாமி விவேகானந்தர் ஒரு சொற்பொழிவில் ‘தொடர்பு’ மற்றும் ‘இணைப்பு’குறித்து பேசியதைத் தொடர்ந்து நியூயார்க் பத்திரிகையாளர் அவரை பேட்டி எடுத்தார். அப்போது அவரது சொற்பொழிவில் குறிப்பிட்ட தொடர்பு மற்றும் இணைப்பு குறித்த கேள்விகளை முன் வைத்தார்.

அப்போது விவேகானந்தர் அந்த நிருபரிடம் நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன், பிறகு நீங்கள் என்னை கேட்கலாம் என்றார்.

நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?

நியூயார்க்கில்.

வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

அம்மா இறந்துவிட்டார். அப்பா மட்டும் என்னுடன் இருக்கிறார். சகோதர சகோதரிகள் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசிக்கிறார்கள்.

உங்கள் தந்தையுடன் கடைசியாக எப்போது  பேசினீா்கள்?

வீட்டுக்குச் செல்லும் நேரம் அவர் தூங்கியிருப்பார். வார விடுமுறையில் பேசுவேன்.

உங்களுடைய சகோதர சகோதரிகளை அடிக்கடி சந்திப்பதுண்டா?

வருடத்துக்கு ஒருமுறை கிறிஸ்மஸ் சமயத்தில் சந்திப்போம்.

எல்லோரும் சேர்ந்து எத்தனை நாட்கள் இருந்தீர்கள்?

மூன்று நாட்கள்.

உங்களுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து, அவரோடு  எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள்?

உட்கார்ந்து ஆற அமர பேசுவதற்கு நேரம் இருப்பதில்லை.

கடைசியாக அவருடன் அமர்ந்து  எப்போது உணவு சாப்பிட்டீர்கள்?

இந்த கேள்விக்கு நிருபரின் கண்களில் இருந்து கண்ணீர்.

அம்மா இறந்த பிறகு நாட்களை எப்படி கழிக்கிறீர்கள் என்று அப்பாவிடம் என்றாவது கேட்டிருக்கிறீர்களா?

இந்த கேள்விக்கு நிருபர் கேவி கேவி அழவே ஆரம்பித்துவிட்டார்.

இப்போது சுவாமிஜி நிதானமாக சொல்ல ஆரம்பித்தார்.

‘இதுதான்  நீங்கள்  தொடர்பு  மற்றும் இணைப்பு பற்றி கேட்ட கேள்விக்கான பதில்.  நீங்கள் உங்களுடைய  அப்பாவுடனும் சகோதர சகோதரிகளுடனும் தொடர்பில் இருக்கிறீர்கள். ஆனால் இணைப்பில் இல்லை.

இணைப்பு என்பது  இதயத்துக்கும் இதயத்துக்கும் இடையே இருப்பது.

ஒருவர்மீது ஒருவர் அக்கறை கொண்டு, ஒன்றாக அமர்ந்து, ரசித்து ருசித்து உணவைப் பகிர்ந்து, ஆறுதலாய் தொட்டுப் பேசி, கண்களை நேருக்கு நேர் பார்த்து, சேர்ந்து அமர்ந்து மனம் விட்டு உரையாடி சேர்ந்து நேரத்தை செலவிடுவதுதான் இணைப்பு.’

நிருபர் சுவாமிஜியை கையெடுத்து வணங்கி விடைபெற்றார்.

நாம் ஒவ்வொருவரும் நம் செல்போன் தொடர்பு பட்டியலில் தொலைபேசி எண்களை சேமித்து வைப்பதைப்போலவும், ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் வெர்ச்சுவலாக நண்பர்களை இணைத்துக்கொள்வதைப் போலவும் இல்லாமல், உணர்வுப்பூர்வமான மனிதாபிமான இணைப்பில் இருப்போமே.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 91 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon