ஹலோ With காம்கேர் -114: செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் ஜெயம் உண்டாக என்ன செய்யலாம்?

ஹலோ with காம்கேர் – 114
April 23, 2020

கேள்வி: செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் ஜெயம் உண்டாக என்ன செய்யலாம்?

புதிய கோவிலின் வாசலுக்கு வரைபடம் தயாரிக்கும்படி ஒரு துறவிக்கு உத்தரவிடப்பட்டது. அவர் பல வரைபடங்களை தயாரித்து அதில் பெயரெடுத்தவர். அவருக்கு மிகவும் திறமையான சீடன் ஒருவன் இருந்தான். வரைபடம் தயாரிக்கும்போது அவனை தன்னுடனேயே இருக்கும்படி கூறினார். அவர் வரைபடம் தயாரிக்கையில் அவன் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அவனுக்கு அது பிடித்திருந்தால் நன்றாக இருக்கிறது என சொல்ல வேண்டும். பிடிக்கவில்லை என்றாலும் சொல்லிவிட வேண்டும். அந்த சீடன் எந்த வரைபடத்தை பிடித்திருக்கிறது என சொல்கிறானோ அதையே அனுப்பப் போகிறேன் என்றும் சொல்கிறார்.

அந்த குருவும் நூற்றுக்கணக்கான வரைபடங்களை வரைந்து விட்டார். ஆனால் சீடன் எதையுமே நன்றாக இருக்கிறது என சொல்லவே இல்லை. இப்படியே சில மாதங்கள் கடந்துவிட்டன.

ஒருநாள் சீடனை ஏதோ ஒரு வேலை கொடுத்து வெளியே அனுப்பினார். அவன் வருவதற்குள் வரைபடம் ஒன்றை புதிதாக வரைந்து முடித்திருந்தார். சீடன் வந்ததும் ‘அபாரம்’ என்று சொல்கிறான்.

சீடன் தன்னுடன் அமர்ந்து தான் வரையும் வரைபடத்தை பார்த்துக்கொண்டே இருக்கும்போது அவனது இருத்தலும் கவனிப்புமே குருவுக்குள் பதட்டமாக ஒட்டிக்கொள்கிறது. ‘சீடன் நாம் வரைவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான், அவனுக்கு இது பிடிக்குமோ பிடிக்காதோ’ என நினைத்துக்கொண்டே வரையும்போது குருவினால் இயல்பாக இருக்க முடியவில்லை. பதட்டத்துடன் வரையும்போது வரைபடத்தில் முழுமை கிடைக்கவில்லை. சீடன் சில நிமிடங்கள் வெளியே சென்றிருக்கும்போது அவன் இல்லாதபோது, அவனது கவனம் தன்மீதும் தன் செயல்பாட்டின் மீதும் குவியாதபோது விரைவாகவும் முழுமையாகவும் வரைந்து முடிக்க முடிந்தது.

இந்தக் கதையை ஓஷோ தன்னுடைய உரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலை நம்மில் பலர் பல்வேறு விதமாகக் கடந்து வந்திருப்போம்.

பொதுவாக நான் செக்கிலோ அல்லது ஏதேனும் முக்கிய டாக்குமெண்ட்டிலோ கையெழுத்தைப் போடும்போது யாரேனும் பார்த்துக்கொண்டே இருந்தால் பார்க்க வேண்டாம் என்று சொல்லுவேன். பார்த்துக்கொண்டே இருக்கும்போது கையெழுத்தில் சின்ன ஸ்ட்ரோக்கில் ஏதேனும் தடுமாற்றம் உண்டாகி கையெழுத்தில் மாற்றம் உண்டாகும்.

வேதியியல் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட். வகுப்பில் 100 மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுத்ததே இல்லை. +2 செயல்முறை தேர்வின்போது ஆசிரியர் என் அருகில் நின்றுகொண்டு நான் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்தார். படபடப்பு உண்டாகி கையில் வைத்திருந்த உபகரணத்தை கீழேபோட்டுவிட அது உடைந்துவிட்டது. வேறொன்றை கொடுத்தார்கள். படபடப்புடன் செய்து முடித்தேன். செயல்முறை தேர்வில் அனைவருக்குமே முழு மதிப்பெண் கொடுத்துவிடுவார்கள். ஆனால் நான் 2 மதிப்பெண் குறைவாகவே எடுத்தேன். காரணம் படபடப்பு.

எந்த ஒரு செயலையும் நாம் இயல்பாக செய்ய வேண்டும். இயல்பு நிலையில் மட்டுமே நம்மில் நாம் கரைய முடியும். நம்மை நாம் மறக்க முடியும். ‘நாம் செய்கிறோம்’ என்பதை மறந்து செய்யப்படும் எந்த ஒரு செயலும் முழு வெற்றி பெறும்.

மேடை நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு தடுமாறும் சிலருக்கு நான் கொடுக்கும் யுக்தியும் இதன் அடிப்படையில்தான். அதாவது எதிரே யாருமே அமர்ந்தில்லாததைப் போல நினைத்துக்கொண்டும், வெற்று அரங்கில் மைக்கில் பேசுவதைப் போல கற்பனை செய்துகொண்டும், உரையாற்றுவதற்கு எதை எப்படி தயாரித்து வந்திருக்கிறீர்களோ அதை அப்படியே இயல்பாகப் பேசுங்கள். தடுமாற்றமே வராது. பிறர் கவனிக்கிறார்கள் என்று நினைக்கும்போதுதான் பதட்டம் குழப்பம் கவனச் சிதறல் எல்லாமே.

நம்மில் நாம் கரைந்து நம்மையே மறந்து செய்யும் செயல்கள் அனைத்தும் ஜெயமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 8 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari