ஹலோ With காம்கேர் -113: நம் மனம் என்ன சுமைதாங்கியா?

ஹலோ with காம்கேர் – 113
April 22, 2020

கேள்வி: நம் மனம் என்ன சுமைதாங்கியா?

நம் ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நாம் ஒவ்வொருவரும் வேறுபடுகிறோம்.

பணம் உள்ளவர்களுக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்குக்கு என்ன சமைக்கலாம் என்பது பிரச்சனை. பணம் இல்லாதவர்களுக்கு அடுத்த வேளை எப்படி சமைத்து சாப்பிடப் போகிறோம் என்பது பிரச்சனை.

அவரவர்கள் சூழல் அவரவர்கள் பிரச்சனைகளை கட்டமைக்கிறது.

கவலைப்படுவதால் எந்தப் பிரச்சனையும் தீர்ந்துவிடப் போவதில்லை. கஷ்டங்களை எதிர்நோக்கிப் போராடிக்கொண்டிருப்பதுதான் பிரச்சனைகளுக்கான தீர்வு.

‘When a problem cannot be cured, it has to be endured’ என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. பிரச்சனைகளை தீர்க்க முடியாவிட்டால் அதை சகித்துக்கொள்ளப் பழக வேண்டும் என்பது எத்தனை சக்திவாய்ந்த வாசகமாக உள்ளது.

நேற்றைய கஷ்டங்களையும் நாளைய சுமைகளையும் சுமந்துகொண்டு இன்றைய மகிழ்ச்சியை விரயம் செய்யாமல் வாழப் பழகுபவர்களுக்கே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கஷ்டங்களும் பிரச்சனைகளும் எங்கிருந்து பூதம்போல கிளம்பும் என்பது தெரியாது. திடீரென விஸ்வரூபம் எடுக்கும். சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு நம் மனதைத் தயார்படுத்தினால்தான் பெரிய விஷயங்களை எதிர்கொள்ளும் பக்குவம் கிடைக்கும். பிரச்சனைகளும் கஷ்டங்களும்தான் நமக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்.

சமீபத்தில் நடந்த சின்ன விஷயம் ஒன்றை சொல்கிறேன். அதை நான் எப்படி கையாண்டேன் என்பதையும் சொல்கிறேன்.

பள்ளி மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவும் அறம் வளர்ப்போம் என்ற வாட்ஸ் அப் குழுவை தொடங்கி அதில் தினந்தோறும் அறநெறி சிந்தனைகளை எழுதி வருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்தக் குழுவில் அட்மின்கள் மட்டுமே தகவல் பகிர முடியும். இப்போது அது விஷயம் அல்ல.

அந்தக் குழுவில் உள்ள தனியார் பள்ளி கரஸ்பான்டன்ஸ் ஒருவருக்கு கண்களில் என்ன பிரச்சனையோ தெரியவில்லை. நான் எழுதிவரும் அறநெறி கருத்துக்கள் அவர் கண்களை மட்டுமல்ல மனதையும் சேர்த்து உறுத்தயிருக்கிறது. பிரச்சனையை என்னிடம் நேரடியாக சொல்லி இருந்தால் தீர்வை நானே சொல்லி இருப்பேன். ஆனால் அந்த பெரிய மனிதர் அந்தக் குழுவில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு தனித்தகவல் அனுப்பியிருந்தார். எனக்கு அனுப்பவில்லை.

‘இன்னார் அறநெறியை சொல்லித்தர வேண்டும் என்றால் பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர், ஆத்திச்சூடி, நாலடியார் போன்றவற்றில் இருந்தல்லவா கருத்துக்களை எழுத வேண்டும். ஆனால் இன்னாரோ தானே சொந்தமாக அறநெறியை சொல்லித் தருகிறார். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் செயல் இது…’

இன்னார் என்ற இடத்தில் என் பெயரை குறிப்பிட்டிருந்தார். ஆசிரியர்களுக்கு தனித்தகவலில் அனுப்பியவை எனக்கு எப்படித் தெரியும் என நினைக்கிறீர்களா? ஒருசில ஆசிரியர்கள் எனக்கு அதை அப்படியே ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பியிருந்தார்கள்.

‘ஆத்திச்சூடி, நாலடியார், பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர் போன்றவற்றை பள்ளியில் பள்ளி அசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் சொல்லித்தருவதையே எங்களைப்போன்ற பிறதுறை வல்லுநர்களும் சொல்லித்தருவதில் என்ன பிரயோஜனம்.

அதோடு மட்டுமில்லாமல் யார் ஒரு செயலை எடுத்துச் செய்கிறார்களோ அவர்கள்தானே முன்னிலைப்படுத்தப்படுவார்கள். அதுதானே இயற்கை. நடைமுறை. நான் இந்தக் குழுவை ஆரம்பித்து அறநெறியை வாட்ஸ அப்பிலும், இணையத்திலும் சொல்லித்தருவதால் என்னுடைய பெயர்தானே முன்னிலைப்படுத்தப்படும். நான் எழுதிவிட்டு பிறர் பெயரையா முன்னிலைப்படுத்த முடியும்?

எதிர்காலத்தில் இவை மொபைல் செயலியாகவும் யு-டியூப் சேனலிலும் வெளிவரும். இதுபோல அடுத்தடுத்த கட்டத்துக்கு கல்வியை நடைமுறை உதாரணங்களுடன் கொண்டு செல்லும்போதுதான் மாணவர்கள் மனதில் புதிய பரிமாணமும் புதிய கண்ணோட்டமும் உருவாகும்…’ என்று பொதுவாக ஒரு பதிவிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். சம்மந்தப்பட்ட நபர் தானாகவே குழுவைவிட்டு விலகிவிட்டார்.

சாதாரண ஒரு வாட்ஸ் அப் குழுவில் எடுக்கும் தீர்மானங்களுக்கும் செயல்பாடுகளுக்குமே இத்தனை பொறாமைகளும் எதிர்வினைகளுமா என என்னை வியக்க வைத்த நிகழ்வு இது.

பிரச்சனைகளுக்கான தீர்வு பல கட்டங்களை கடந்துதான் கிடைக்கும். சில பிரச்சனைகளுக்கு முதல் கட்டத்திலேயே கிடைத்துவிடும். சின்னதாக ஒரு அசைவில் முதல் கட்டத்திலேயே தீர்க்க வேண்டிய பிரச்சனைகளுக்கு பெரிய அளவில் கொதித்து பிரச்சனையை பெரிதாக்க வேண்டிய அவசியமில்லை.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#ஹலோ_காம்கேர் #Hello_Compcare

(Visited 37 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon