அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 7
ஏப்ரல் 20, 2020
வீட்டுக்கு ஒரு தகவல் நோட்டை பராமரிப்போமே!
வீட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவாக ஒரு தகவல் நோட்டை பராமரிப்போம். வீட்டில் ஒருவர் இல்லாதபோது நடக்கின்ற விஷயங்களை மற்றவர்களுக்கு மறக்காமல் சொல்வதற்கு வசதியாக அதில் குறிப்பு எழுதி வைக்கும் பழக்கத்தை வழக்கமாக்குவோம்.
அதுபோல உங்கள் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் பிரத்யோகமாக ஒரு தகவல் நோட்டை தயார் செய்யலாம். அப்பா அம்மா இருவரும் இல்லாத நேரத்தில் அவர்களுக்குள் ஏதேனும் சண்டை வந்தால் அவர்களுக்குள் சண்டை போடாமல் என்ன பிரச்சனையோ அது குறித்து அந்த நோட்டில் எழுதச் சொல்லிப் பழக்கலாம். நீங்கள் வீட்டுக்கு வந்ததும் அவரவர்கள் நோட்டில் என்ன எழுதியிருக்கிறார்களோ அதைப் படித்துப் பார்த்து அவர்களுடன் மனம்விட்டுப் பேசி புரிய வைக்க வேண்டியவற்றை புரிய வைக்கலாம். அதுபோல உங்களுடன் ஏதேனும் மனஸ்தாபம் வந்தாலும் அந்த நோட்டில் அது குறித்து எழுதச் சொல்லலாம். கோபம் சற்று குறைந்ததும் அது குறித்து அவர்களுடன் பேசி மனஸ்தாபங்களை சரி செய்துகொள்ளலாம்.
இப்படி கோபங்களையும் மனஸ்தாபங்களையும் எழுதி வைக்கும்போது அவற்றின் தாக்கம் தானாகவே குறையும் வாய்ப்பு உண்டு. கோபத்தை எழுதி வைத்து குறைப்பதும் உன்னதமான ஓர் உளவியல்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 8
ஏப்ரல் 21, 2020
கதைபோல் அறிவுரைகள்!
மற்ற வேலைகளுக்கு நேரம் ஒதுக்குவதைப் போல பெற்றோர்கள் தினந்தோறும் குழந்தைகளுடன் மனம்விட்டுப் பேசவும் நேரம் ஒதுக்க வேண்டும்.
அறிவுரைகளை கதைகள் போலவும், நடைமுறை நிகழ்வுகளுடனும் ஒப்பிட்டு சொல்லலாம்.
தங்கள் குடும்பத்தில் நடந்த நல்ல சம்பவங்களை சுவைபடச் சொல்லும் அதே நேரம், கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி எப்படி வாழக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர்களை பற்றியும் எடுத்துச் சொல்லலாம். குழந்தைகள் தங்கள் குணங்களை தாங்களே கட்டமைக்க இதுபோன்ற கலந்துரையாடல்கள் உதவி செய்யும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 9
ஏப்ரல் 22, 2020
நம்மைப் புதுப்பிக்கும் பயணங்கள்!
நேரம் கிடைக்கும்போது உங்கள் இருப்பிடம் தாண்டி குடும்பத்துடன் பயணம் செய்யலாம். நெடுந்தூரப் பயணத்துக்கு வாய்ப்பில்லை என்றாலும் அருகில் இருக்கும் இடங்களுக்காவது சென்று வரலாம்.
பயணங்கள் பலதரப்பட்ட மனிதர்களையும், பல்வேறு விதமான காட்சிகளையும், மாறுபட்ட சூழல்களையும் அறிமுகப்படுத்தும்.
உள்ளூரோ வெளியூரோ வெளிநாடோ எதுவாகினும் பயணங்கள் உங்கள் படைப்பாற்றலைத் தூண்டி கற்பனைவளத்தை வளர்க்கவல்லது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 10
ஏப்ரல் 23, 2020
ஒளிவு மறைவை குறைப்போமே!
கூடுமானவரை அன்றாட வாழ்வில் குடும்ப உறுப்பினர்களிடம் ஒளிவு மறைவை குறைத்துக்கொள்ளலாம். ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு அதிகரிக்கும்.
குழந்தைகளுடன் வீட்டு வரவு செலவுகள் முதற்கொண்டு அனைத்தையும் பகிர்ந்துகொள்ளலாம். அவர்களுக்குள் இயல்பாகவே பொறுப்புணர்வு கூடும்.
இந்த பழக்கம் தலைமுறை இடைவெளியை குறைக்கும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 11
ஏப்ரல் 24, 2020
கருத்துக்களை திணிக்க வேண்டாமே!
உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்கள் பிள்ளைகள் மீது திணிக்க வேண்டாம்.
உங்கள் செயல்பாடுகளினாலும் அன்பினாலும் அவர்களையே உணரச் செய்யுங்கள்.
அறிவுறுத்தி அறிவுரை செய்ய வேண்டாம். உங்களையே முன்மாதிரியாக்கி வாழ்ந்து காட்டுங்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 12
ஏப்ரல் 25, 2020
உங்கள் குழந்தைகளே உங்கள் சொத்து!
உங்களுக்கு எத்தனை வயதானாலும் உங்கள் பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் குழந்தைகள்தான் என்பதை மறக்காதீர்கள்.
என்ன படித்தாலும் எத்தனை உயரிய பதவிக்குச் சென்றாலும் உங்கள் பிள்ளைகளுக்கு தனி மரியாதை கொடுத்து தூக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை. எப்போதுமே உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் குழந்தைகள்தான் என்பதை மறக்காதீர்கள்.
உங்கள் பிள்ளைகள் புகழின் உச்சிக்குச் சென்றாலும் உச்சி முகர்ந்து வாழ்த்துவதுடன் தேவையான வழிகாட்டலையும் காட்டுவதற்குத் தயங்காதீர்கள். எப்போதுமே உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் குழந்தைகள்தான் என்பதை மறக்காதீர்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்
இங்கிதம் பழகுவோம் – 13
ஏப்ரல் 26, 2020
பெற்றோர்களே பிள்ளைகளைக் காக்கும் கவசம்!
உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள், அதே சமயம் ஆலோசனை கொடுக்கத் தவறாதீர்கள்.
கண்டிப்பாக இருங்கள். ஆனால் கடுமையாக இருக்காதீர்கள்.
கண்காணியுங்கள். ஆனால் சந்தேகிக்காதீர்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai