ஹலோ With காம்கேர் -205: மனம் குப்பைத் தொட்டியா, மாயசக்தியா?

ஹலோ with காம்கேர் – 205
July 23, 2020

கேள்வி: நம் மனம் ‘மனமெனும் குப்பைத் தொட்டியா?’ அல்லது ‘மனமெனும் மாயசக்தியா?’

கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் எங்கள் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் பழக்கத்துக்கு நன்கு வழக்கமாகிவிட்டார்கள்.

நம் நாட்டில் ‘Work From Home’ வழக்கம் இன்டர்நெட் பெருமளவில்  புழக்கத்துக்கு வந்து ஐடி நிறுவனங்கள் பெருகிய பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் எங்கள் நிறுவனத்தில் 1992-களிலேயே ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ பழக்கத்தை அறிமுகம் செய்தோம்.

அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களே குறைவு என்பதால் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தி நாங்களே அசம்பிள் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்து அவர்கள் பணிகளுக்காக சாஃப்ட்வேர்களை தயாரித்து இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரையும் நாங்கள் தயாரித்த சாஃப்ட்வேர்களையும் அவர்கள் பயன்படுத்தும் வகையில் பயிற்சி கொடுத்து தொழில்நுட்பத்தை பரவலாக நம் நாட்டில் அங்கிங்கெனாதபடி கொண்டு சேர்த்ததில் எங்கள் காம்கேருக்கும் எனக்கும் பெரும்பங்குண்டு.

பல நிறுவனங்கள் தங்கள் இடத்தில் கம்ப்யூட்டரை பயன்படுத்தத் தயக்கம் காண்பித்ததால் அவர்களுக்குத் தேவையான சாஃப்வேரை தயாரித்து அன்றாடம் மாலை அவர்கள் பணி முடிந்ததும் அவர்களிடம் அன்றையப் பணிகளுக்கான தகவல்களை சேகரித்து வந்து இரவுக்குள் டேட்டா எண்ட்ரி செய்து ஃப்ளாப்பியில் பதிவாக்கி டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில் பிரிண்ட் எடுத்து மறுநாள் காலை பத்து மணிக்கு அவர்களிடம் சேர்ப்போம். கம்ப்யூட்டர் ஷீட்டில் அவர்களின் அன்றாட பணிகளுக்கான தகவல்களை முறைப்படுத்தி அக்கவுண்ட் ஷீட் போல பார்க்கும்போது அவர்கள் முகம் மலரும் பாருங்கள். அதுவே எங்கள் வெற்றியாக கருதுவோம்.

இப்படி மாலை 7 மணியில் இருந்து மறுநாள் காலை 9 மணிக்குள் தகவல்களை டேட்டா ஷீட்டுகளாக அக்கவுண்ட் ஷீட்டுகளில் முறையாக தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்றால் அந்தப் பணிகளை செய்யும் எங்கள் நிறுவனப் பணியாளர்கள் அந்த நேரத்தில்தானே வேலை செய்ய வேண்டும்.

அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பை பாடமாக எடுத்துப் படித்தவர்களே குறைவு என்பதால் என்ன படித்திருந்தாலும் அவர்களை பணிக்கு எடுத்து பயிற்சி கொடுத்தே அவர்களையும் தொழில்நுட்பப் புரட்சியில் இணைக்க வேண்டியதாக இருந்தது. அதனால்தான் எங்கள் காம்கேரின் வளர்ச்சி ஆரம்பத்தில் ஐந்தாறு வருடங்கள் மிகவும் மெதுவாகவே வளர்ந்து வந்தது. ஆனால் அதுவே வலிமையான அஸ்திவாரமானது.

தகவலக்ளை முறைப்படுத்தும் வேலைக்கு பெண்களையே தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலானோர் பயிற்சி காலத்துக்குப் பிறகு வீட்டில் ஏதேதோ பிரச்சனை என சொல்லிக்கொண்டு வேலையில் இருந்து நின்றுவிடுவார்கள். அவர்களுக்கு அளித்த பயிற்சி வீணாகக் கூடாதல்லவா?

அதனால் அவர்களை அணுகி அவர்கள் வீட்டிலேயே கம்ப்யூட்டர்களை இன்ஸ்டால் செய்துகொடுத்து வேலை செய்யும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அந்த வகையில் Work From Home பழக்கத்தை அறிமுகம் செய்தது நாங்கள் அறிந்த வகையில் எங்கள் நிறுவனமே முதன்மை நிறுவனம் என நினைக்கிறேன்.

அப்போது சாஃப்ட்வேர் நிறுவனங்களே மிக மிகக் குறைவு. அதோடு மட்டுமில்லாமல் கம்ப்யூட்டரை ஏசி அறையில் மட்டுமே பயன்படுத்த முடியும், இல்லை என்றால் வெடித்துவிடும் என்ற தவறான கருத்து நிலவி வந்த காலம் அது.

இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு என கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

லாக்டவுன் தளர்த்தப்பட்ட பிறகு முதன் முதலாக அலுவலகம் சென்ற போது பணிப்பெண்ணையும் வரச் சொல்லி இருந்தேன். மார்ச் மாதம் இடையில் இருந்து ஜூன் மாதம் வரை நிறுவனம் மூடி இருந்ததால் ஜூலை முதல் தேதி நான் அலுவலகத்தில் நுழைந்தபோது ஓர் அதிர்ச்சியை சந்தித்தேன். எங்கள் நிறுவனத்தில் மெயின் ரோடைப் பார்த்தபடி இருக்கும் பால்கனியை ஒட்டிய அறையில் ‘ஸ்டாஃப் மீட்டிங்’ நடக்கும். பால்கனி கதவையும் ஜன்னல்களையும் திறந்து வைத்துக்கொண்டால் நல்ல காற்று வரும் என்பதால் கட்டும்போதே ப்ளான் செய்தே கட்டினோம்.

அந்த பால்கனியில் ஆங்காங்கே குருவியோ புறாவோ கூடு கட்டுவதற்காக பொருட்களை சேகரித்து வைத்திருந்தது.

முட்டை இட்டு வைத்திருக்கிறதோ என பயந்துகொண்டே பணிப்பெண் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை சுத்தம் செய்தாள்.

எப்படி உள்ளே நுழைந்திருக்கும் என பார்த்தபோது பால்கனி ஷட்டரில் ஒரு சிறிய இடைவெளி இருந்திருக்கிறது. ஷட்டர் இடைவெளியை எப்படியோ நகர்த்தி நகர்த்தி இடைவெளியை பெரிதாக்கிக்கொண்டு உள்ளே நுழைந்து அந்த இடத்தைத் தனதாக்கிகொண்டிருந்தன பறவைகள்.

‘கொஞ்சநாள் வரலை என்றால் இந்த இடத்தையே பட்டா போட்டு ரெஜிஸ்ட்டர் செய்துகொண்டிருக்கும்போல’ என்று நான் விளையாட்டாக சொல்லப் போக பணிப்பெண்  வெகு இயல்பாக, ‘ஆமாம்மா, யாரும் புழங்கலைன்னா இது நமக்கானதுன்னு உரிமை கொண்டாட வேண்டியதுதானே, பயன்படுத்தாத இடம் இருந்தா பயன்படுத்த வேண்டியதுதானே…’ சொல்லிக்கொண்டே வேலையில் கவனமாக இருந்தாள்.

விஷயமே இல்லாத நிகழ்வுகளில்கூட ஏதோ ஒரு வாழ்வியல் கற்பிதத்தைக் காணும் இயல்புள்ள எனக்கு அந்தப் பணிப்பெண்ணின் வார்த்தைகள் மிகப் பெரிய தத்துவத்தை சொல்லிச் சென்றது.

நம் மனதை பக்குவப்படுத்தாமல் அதன் போக்கில் விட்டு வாழ்ந்துவந்தால் ‘ஓஹோ, இது நமக்கான இடம்போல’ என தீய எண்ணங்களும் ஆகாத சிந்தனைகளுமே ஆக்கிரமிக்கும். சின்ன சின்னதாய் ஸ்ட்ரெஸ்களும், சோகங்களும், கோபங்களும் நம் மனதை ஆக்கிரமிக்கும்போதே விழித்துக்கொண்டு அவற்றை விரட்ட நம் எண்ணங்களுக்குப் புத்துணர்வு கொடுக்க நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் இப்படித்தான் இடம் இருக்கிறது என நம் மனதில் தீய சக்திகள் குடி அமர்ந்துகொண்டு நம்மை சீரழிக்கத் தயாராகிவிடும்.

நம் மனதை கவனிக்காமல்விட்டு தீய சக்திகளுக்கு இடம் அளிப்பதும், தவறி நுழைந்துவிட்ட தீய சக்திகளை விரட்டாமல் இருப்பதும் ஒன்றுதான். இரண்டையுமே பெருமுயற்சி கொண்டு விரட்ட வேண்டும்.

நம்மைச் சுற்றிய உலகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை மாற்ற முடியாது. நல்லவற்றையே பார்ப்பதும், நல்லவற்றையே பேசுவதும், நல்லவற்றையே கேட்பதும் மட்டுமே நம்மால் செய்யக் கூடியது. நம் மனதை தெய்வீகமாக வைத்திருப்பதும், குப்பையாக வைத்திருப்பதும் நம் கைகளில்தான் உள்ளது. 

எனக்கு என் மனம் ‘மனமெனும் மாயசக்தி’. அப்போ உங்களுக்கு?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 18 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon