ஹலோ With காம்கேர் -204: இதயத்தால் பேச முடியுமா?

ஹலோ with காம்கேர் – 204
July 22, 2020

கேள்வி: இதயத்தால் பேச முடியுமா?

நேற்று முன்தினம் இரவு அப்பாவுக்கு தூக்கம் இல்லை. வழக்கமாக படுத்தவுடன் அரை மணியில் தூங்கிவிடும் அப்பா அன்று இரவு ஒரு மணி வரை தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். இரண்டு மணிக்கு மேல் தூங்கியதாகச் சொன்னார்.

காரணம் இரவு 8.30 மணிக்கு வந்த போன் அழைப்பு.

எங்கள் நெருங்கிய உறவினர் ஒருவர் போன் செய்திருந்தார். அப்பாவின் மாமா குடும்பத்து சொந்தம். வயதானவர். 80 வயது. சுறுசுறுப்பாய் இருப்பார். துறுதுறுவென வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். அவரும் அவரது கணவரும் அப்பா அம்மாவுடன் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தனர்.

பொதுவான விசாரிப்புகளுக்குப் பிறகு கொரோனா குறித்த பேச்சும் வந்திருக்கிறது.

அவர் சொன்ன ஒரு விஷயம் அப்பாவை அலைகழித்திருக்கிறது.

அதாவது, ‘ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்காமலேயே போய் சேர்ந்துவிடுவோமோ’ என்று அவர்கள் ஆதங்கப்பட்டுச் சொன்னது அப்பாவின் உறக்கத்தைக் கலைத்துவிட்டது.

மென்மையான சுபாவம் உள்ள அப்பா, தன் உறவினர்களுடன் பேசும்போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருப்பார். அவர்கள் அன்பிலும் பாசத்திலும் நனைந்து நீண்ட நேரம் அவர்கள் நினைவுகளுடனேயே வளைய வருவார்.

சுபாவத்திலேயே நெகிழ்ச்சியான அப்பாவுக்கு தூங்கும் நேரத்தில் இதுபோல பேசினால் எப்படி உறக்கம் வரும்.

கூடுமானவரை வயதில் பெரியவர்கள் தங்களுக்குள் இரவு நேரத்தில் போனில் பேசிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. அப்படியே முக்கிய செய்தியைப் பகிர வேண்டும் என்றாலும் வயதில் சிறியவர்கள் போன் செய்து வயதில் சிறியவர்களிடம் பகிரலாம். அவர்கள் பக்குவமாக சொல்ல வேண்டிய தகவல்களை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம் அல்லது தவிர்க்கலாம்.

வயதில் பெரியவர்களுடன் பகல் பொழுதில் போனில் தொடர்புகொள்ளலாம். பகிரும் தகவல்களில் ஏதேனும் பிரச்சனை என்றாலும் பகல் முழுவதும் அவர்களுக்கு டைவர்ஷன் இருக்கும். ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிறைய நேரமும் இருக்கும்.

இரவு 6 மணிக்கு மேல் வயதில் மூத்தோர்களை தொடர்புகொண்டு பேசாமல் இருப்பது உத்தமம். உறக்கம் வராமல் தவித்தல், உணர்ச்சி வசப்படுதல், நெகிழ்ச்சியினால் ஸ்ட்ரெஸ் லெவல் ஏறி இறங்குதல், இரத்த அழுத்தம் கூடிக் குறைதல், சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

அதுபோல அவர்களுடன் பேசுகின்ற அவர்களைவிட வயதில் சிறியவர்களும் பெரியவர்களுடன் பேசும்போது கொரோனா பற்றிய பீதியைக் கிளப்பும் செய்திகளைப் பகிராமல் இருக்கலாம்.

அக்கம் பக்கத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள், அறிந்தவர் அறியாதவர் தெரிந்தவர் தெரியாதவர் யாரேனும் கொரோனாவினால் இறந்திருந்தால் அவர்கள் குறித்தத் தகவல்களை பெரியவர்கள் காதுகளுக்கு கொண்டு செல்லாமலேயே இருக்கலாம்.

என் உறவினர் ஒருவர் 50+ வயது. வாரந்தோறும் அப்பா அம்மாவுக்கு போன் செய்து பேசிவிடுவார். அவர் பேசும்போது கொரோனா பற்றிய செய்திகளும் வரும். அவர் சொல்லாவிட்டாலும் அப்பா விசாரிக்கும்போது சொல்லித்தானே ஆக வேண்டும். ஆனால் அவர் பக்குவமாய் பேசும் பாங்கு என்னை வியக்க வைக்கும்.

‘மாமா, நமக்குத் தெரிந்தவர்களுக்கும் கொரோனா வருகிறது. நல்லபடியாக குணமாகிவிடுகிறார்கள். ஒன்றும் பயப்படுவதற்கில்லை….’ என்று நேர்மறையாக உள்ள சம்பவங்களை மட்டுமே பேசுவார்.

அப்பா அம்மாவிடம் பேசிவிட்டு என்னிடம் பேசும்போது அவர் அலுவலகத்தில் கொரோனாவினால் இறந்த இளம் வயது இன்ஜினியர்கள், அக்கம் பக்கத்து வீட்டு கொரோனா உயிர் இழப்புகள், தூரத்து உறவினர்களின் மரணம் குறித்தெல்லாம் விலாவாரியாக பேசுவார். அப்பா அம்மாவுக்கு டென்ஷன் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நீயும் சொல்லாதே என்ற நிபந்தனையுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்.

இந்தப் பக்குவத்துடன் பெரியவர்களை அணுகினால் மட்டுமே அவர்கள் உடல்நலத்தை காக்க முடியும். இல்லை என்றால் தூக்கம் கெடும். மனச்  சோர்வு ஏற்படும். உடல் சோர்ந்துவிடும்.

மனச் சோர்வு இன்னும் உடல் சோர்வை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது உடலில் உள்ள சின்ன சின்ன நோய்கள் பூதாகரமாக வாய்ப்புகள் உண்டாகும்.

சிலருக்கு டென்ஷன் அதிகமானால் இருமல் வரும். ஒருசிலருக்கு ஜூரம் வரும். இன்னும் ஒரு சிலருக்கு சர்க்கரை அளவு அதிகரிக்கும். இப்படி ஒவ்வொருவர் உடல்வாகும் ஒவ்வொருவிதமாய் இருக்கும். எனவே கூடுமானவரை பெரியவர்கள் காதுகளுக்கு கொரோனா இறப்புச் செய்திகளை கொண்டு செல்லாமலேயே தவிர்க்கலாம். குறைந்தபட்சம் மன நிம்மதியுடனாவது இருந்துவிட்டுப் போகட்டுமே.

கொரோனா வராமல் தவிர்க்க உணவில் இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஓமம், கடுக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள், கபசுர குடிநீர் குடியுங்கள், மாஸ்க் அணியுங்கள், கிளவுஸ் போடுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் என்பதுடன் ‘நேர்மறையாக மட்டுமே பேசுங்கள்’ என்ற விதிமுறையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியம் மனதுடன் சம்மந்தப்பட்டது. உடலை மனமே இயக்குவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதில் மனதுக்கும் நிறைய பங்கிருக்கிறது.

பேசுவதற்கு வாயைத் திறக்கும்போதே இதயத்தையும் திறந்து கொள்ளவும். இதயத்தால் பேச முயற்சிக்கவும். இம்சைகள் குறையும், பேசும் நமக்கும் நம் பேச்சைக் கேட்கும் எதிராளிக்கும்!

தற்போதைய கொரோனா காலத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டிய அதிமுக்கியமான விஷயங்களுள் இதுவும் ஒன்று.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 38 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon