ஹலோ With காம்கேர் -284 :  ஐம்பது வயதிலும் இந்த ஏக்கம் வருமா?

 

ஹலோ with காம்கேர் – 284
October 10, 2020

கேள்வி:  ஐம்பது வயதிலும் இந்த ஏக்கம் வருமா?

நேற்று என் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில் அவர் சொன்ன ஒரு விஷயம் நீண்ட நேரம் என் மனதை அழ வைத்துகொண்டிருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன தன் அப்பாவை பற்றி பேசும்போது அவர் கொஞ்சம் விரக்தியாகப் பேசினார்.

பொதுவாகவே ‘டோண்ட் கேர் மாஸ்டர்’ குணாதிசயமுள்ள அந்த பெண்ணின் பேச்சில் நேற்று விரக்தியையும் மீறி நெகிழ்ச்சி கலந்திருந்தது.

‘என் அம்மாவுக்கு கடைசி மகனைப் பிடிக்கும், அப்பாவுக்கு முதல் மகனைப் பிடிக்கும். என்னை மட்டும்தான் யாருக்குமே பிடிக்காது… இருந்துட்டுப் போறேன் போ… இந்த ஜென்மத்துல இப்படி, அடுத்த ஜென்மத்திலாவது அப்பா அம்மா இரண்டு பேருக்கும் பிடிக்கிற மாதிரி பிறக்கணும்….’

இப்படிச் சொன்னவருக்கு படித்து வேலைக்குச் செல்லும் மகள் இருக்கிறாள். வயதும் ஐம்பதைத் தொட இருக்கிறது.

என் கிளையிண்ட் ஒருவர் இதைவிட உருக்கமாக ஒரு தகவலை சொன்னார்.

‘பூனைகள் குட்டி போட்டதும் கொஞ்சம் நோஞ்சானாக இருக்கும் குட்டியை தானே சாப்பிட்டுவிடுமாம்… அப்படி என்னை செய்திருந்தால்கூட எனக்கு நிம்மதியாக இருந்திருக்கும்… உயிரோடு வைத்து காலம் முழுவதும் எங்கள் அடுத்த தலைமுறை குழந்தைகள்வரை பாரபட்சம் காண்பித்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறார்கள்… வேதனையாக இருக்கிறது… நாங்கள் நான்கு அண்ணன் தம்பிகள். கடைசி தம்பியைத் தவிர மற்றவர்களுக்கு பெண் குழந்தைகள். அதனால் தங்கள் குடும்ப வாரிசு என சொல்லி கடைசி தம்பியின் ஆண் குழந்தையை மட்டும் தலையில் தூக்கி வைத்துகொண்டு கொண்டாடுகிறார்கள். கொண்டாடிக்கொள்ளட்டும் அதற்காக எங்கள் பெண் குழந்தைகளிடம் பாரபட்சம் காண்பிக்க வேண்டுமா?’

இவற்றை எல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் பெற்ற குழந்தைகளிடம் பாரபட்சம் காண்பிக்கும் பெற்றோர்கள் அவர்களது செய்கையால் குழந்தைகள் எத்தனை பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்வதே இல்லை. அவர்கள் தாத்தா பாட்டி ஆன பிறகும், ஏன் அவர்களுக்குக் கொள்ளுப் பேரனோ பேத்தியோ பிறக்கும் வயதிலும் தன் மீது தன் பெற்றோர் காட்டிய பாரபட்சம் கஷ்டத்தைக் கொடுக்கும் என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா என புரியவில்லை.

மூன்று தலைமுறைகளாக இதை எடுத்து பார்த்தால் ஒரு விஷயம் தெரியவரும்.

இப்போது நாற்பது நாற்பத்தைந்து வயதில் இருப்பவர்களின் பெற்றோர் குழந்தையாக இருந்தபோது வீட்டில் ஆறு ஏழு குழந்தைகள் இருந்திருக்கும். அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் பாரபட்சம் காண்பித்தார்களா இல்லையா என்பதை விட அப்படியே அவர்கள் பாரபட்சம் காண்பித்திருந்தாலும் அந்த குழந்தைகள் அதை இயல்பாக கடந்திருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அன்றைய சூழல். குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்கும். அப்பா அம்மா இப்படித்தான் இருப்பார்கள் என்ற மனோநிலை குழந்தைகள் மனதில் படிந்திருக்கும். அதை மீறி அவர்கள் லாஜிக்காக சிந்தித்திருக்கவே மாட்டார்கள்.

அடுத்து அதே நாற்பது நாற்பத்தைந்து வயதில் இருப்பவர்கள் குழந்தைகளாக இருந்தபோது அவர்கள் பெற்றோர் பாரபட்சம் காண்பித்திருந்தால் மனதுக்குள் வைத்து மருகிக்கொண்டே இருப்பார்கள். வெளியே அதை சொல்லி அப்பா அம்மாவிடம் சண்டை போடவோ உணர வைக்கவோ தெரியாத மனநிலையில் இருந்திருப்பார்கள். அவர்கள் இறக்கும் வரை பெற்றோர் தன் மீது காட்டிய பாரபட்சத்தை நினைத்து நினைத்து வருந்துவார்கள்.

இப்போது நாற்பது நாற்பத்தைந்து வயதில் இருப்பவகளின் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

பெற்றோர் தங்களிடம் பாரபட்சம் காண்பித்தாலோ, பிற வீட்டுக் குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசி விமர்சித்தாலோ முகத்துக்கு நேராக பளிச்சென சொல்லி விடுகிறார்கள்.

‘என்னை இப்படி ஒப்பிட்டுப் பேசிக்கொண்டே இருந்தாலோ அல்லது பாரபட்சம் காண்பித்தாலோ என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. என்னால் என்னுடைய வாழ்க்கையை வாழ முடியவில்லை… தயவு செய்து ஒப்பிடாதீர்கள்…’

இந்த கருத்தை ஒவ்வொரு குழந்தையும் அவரவர் மொழியில் அவரவர் பாணியில் சொல்கிறார்கள். பாணிதான் மாறுகிறதே தவிர வெளிப்படையாக சொல்லி விடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இப்படி சொல்லிவிடுவதால் காலம் முழுவதும் மனதுக்குள் காயங்கள் தடம் பதிப்பதை தவிர்க்க முடியும்தானே.

நாம் என்னவோ குழந்தைகளை வழிநடத்துவதாய் நினைத்துக்கொண்டிருக்கிறோம். குழந்தைகளோடு குழந்தைகளாய் அவர்கள் மனதுக்குள் சென்று ஆத்மார்த்தமாய் பழகும்போது நாமும் கற்றுக்கொள்ள ஆயிரமாயிரம் விஷயங்கள் உள்ளன. ஆத்மார்த்தமாய் வாழவும், பாரபட்சமின்றி அன்பு செலுத்தவும் பழகுவோமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 13 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari