ஹலோ With காம்கேர் -293 : ‘இதுக்கு மட்டும் நேரம் இருக்கா…’

ஹலோ with காம்கேர் – 293
October 19, 2020

கேள்வி: ‘இதுக்கு மட்டும் நேரம் இருக்கா…’ என்று கேள்வி கேட்கும் மனோநிலை எத்தனை மோசமானது?

நேற்று ஒரு பெண்மணியுடன் போனில் பேசிக்கொண்டிருந்தேன். வயது 50+ இருக்கும். சமீபத்தில் கணவனை இழந்திருந்தார். அவ்வப்பொழுது கதை கவிதைகள் எழுதுவார்.

அவருடைய உறவினர்களில் ஒருசிலர் ‘உனக்கு கவிதை எழுத நேரம் இருக்கிறது, ஃபேஸ்புக்கில் போட்டு லைக் அள்ள தெரிந்திருக்கிறது, ஆனால் எனக்கு போன் செய்து பேச நேரம் இல்லை…’ என நேரடியாகவே சொல்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக்கொண்டார்.

‘நான் கவிதை எழுதுவது இரவு 10, 10.30 மணிக்கு மேல். என் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு பேரன் பேத்திகளை தூங்க வைத்துவிட்டு, மகன் மகளுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மன ஆறுதலுக்காக நாலு வரியை மடித்து மடித்து எழுதி கவிதை என்ற பெயரில் போஸ்ட் செய்வேன்… அந்த நேரத்தில் உறவினர்களுடன் போன் செய்து பேச முடியுமா? அத்துடன் சமீபத்தில்தான் என் கணவர் இறந்திருப்பதால் அந்த மன இறுக்கத்தில் இருந்துகூட நான் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை… யாருடன் பேசுவதற்குக் கூட பிடிக்கவில்லை… ஒருவித விரக்தியான மனநிலையில் இருப்பதைக் கூட புரிந்துகொள்ளாமல் நோகடிக்கிறார்கள்…’ என்று அவருடைய மனநிலையை அழகாக எடுத்துச் சொன்னார்.

இதை கேட்டு முடித்தபோது நம்முடைய நேரத்தை பொம்மலாட்டக் கயிறுபோல மற்றவர்கள் அவர்கள் கைகளில் வைத்துக்கொண்டு ஆட்டிப் படைப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.

அதிலும் குறிப்பாக நம்முடைய நேரத்தை மற்றவர்கள் நம் அனுமதி இன்றி எடுத்துக்கொள்வதைப் போல மோசமான மனோநிலை வேறெதுவாகவும் இருக்க முடியாது.

ஒரு சிலர் ஏதேனும் உதவி கேட்டுக்கொண்டோ அல்லது நேர்காணல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடனோ என்னை சந்திப்பதற்கு வருவதாக சொல்லி இருப்பார்கள். நான் காத்திருந்தால், அவர்கள் சொன்ன நேரத்துக்கு வராமல் ஒரு போன் செய்துகூட தகவல் கொடுக்காமல் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து நிற்பார்கள்.

இதற்குள் என் மனோநிலை மாறி இருக்கும். என் நேரத்தை மற்றவர்கள் சர்வ அலட்சியமாய் எடுத்தாளும்போது என் மனோநிலை இறுகி வெறுப்பாக மாறத் தொடங்கிவிடும்.

அவர்களின் தாமதத்துக்கு நேர்மையான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அதனை சம்மந்தப்பட்டவரை தொடர்புகொண்டு தெரிவிப்பதுதான் மனிதாபிமானமுள்ளவர்கள் செய்யும் செயல்.

ஏனெனில் நான் ஒருவரை சந்திப்பதற்காக ஒதுக்கிய நேரத்தில் எத்தனையோ முக்கியமான பணிகளை தள்ளி வைத்துவிட்டுத்தான் காத்திருப்பேன். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதே.

ஆனால் நம்மை சந்திக்க வரும் நபரோ சிரித்துக்கொண்டே ‘டிராஃபிக்’, ‘கிளம்பும்போது கெஸ்ட் வந்துட்டாங்க’, ‘கிளம்பும்போது ஆஃபீஸில் வேறு வேலை கொடுத்துட்டாங்க…’ அப்படி இப்படி என சர்வ சாதாரணமாய் காரணங்களை அடுக்குவார்.

இதுபோல என் நேரத்தை அலட்சியப்படுத்திய எத்தனையோ பத்திரிகை நேர்காணல்களை நானே உதறித் தள்ளி இருக்கிறேன்.

உங்கள் தாமதத்துக்கு எந்த காரணமாக இருந்தாலும் அடுத்தவர்களுக்கான நேரத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். முன்பே தகவல் கொடுக்க முடியாமல் ஏதேனும் விபத்து நடந்து மருத்துவமனையில் சேரும்படியான சூழல் ஏற்பட்டிருந்தாலே தவிர வேறு எந்த காரணமும் ஏற்கத்தக்கதல்ல.

ஒரு சிலர் என்னிடம் ஏதேனும் தொழில்நுட்ப ஆலோசனை கேட்டிருப்பார்கள்.  நான் அதை செய்து முடிக்க தாமதமானால் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

‘ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட நேரம் இருக்கிறது, டிவிட்டரில் ட்வீட் செய்ய முடிகிறது, ப்ரொஃபைல் படம் மாற்ற நேரம் இருக்கிறது… ஆனால் நாம் கேட்ட சின்ன ஆலோசனைக்கு பதில் சொல்ல நேரம் இல்லை… ம்…’ என்று அவர்கள் தங்கள் நட்புகளுக்குள் பேசிக்கொள்வதை அந்த நட்பு வட்டத்தில் உள்ள அவர்களுடைய  ‘ஆகச் சிறந்த விசுவாசி’ (!?) எனக்கு அதி முக்கியமாய் தனித்தகவலில் தெரிவிப்பார்.

ஃபேஸ்புக் டிவிட்டரில் ஸ்டேட்டஸ் போடுவதும் ப்ரொஃபைல் படம் மாற்றுவதும் மருத்துவமனை படுக்கையில் இருந்துகூட செய்யலாம் என்பதை மறந்துவிடுகிறார்கள். அந்த வேலைகள் எல்லாம் நம் உற்சாகத்துக்காக, தொடர் பணிகளில் இருந்து நம் மனதை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக என்பதையும் புரிந்துகொள்வதில்லை.

என்னைப் பொறுத்தவரை சமூக வலைதளங்களை எங்கள் நிறுவன தயாரிப்புகளின் மார்க்கெட்டிங்குக்காகவும் பயன்படுத்துகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னிடம் தொழில்நுட்ப ஆலோசனை கேட்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் ஆலோசனை சிறிய ஆலோசனை என்று தோன்றும். ஆனால் அது சிறியது அல்ல அதை புரிய வைக்க பல மணி நேரங்கள் ஆகும் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

உதாரணத்துக்கு ஒரு வேண்டுகோளை கவனியுங்களேன்.

‘எனக்கு எம்.எஸ்.வேர்டில் டைப் செய்ய தெரியும், இ-புத்தகம் வெளியிட டைப் செய்யத் தெரிந்திருந்தால் போதுமாமே, இ-புத்தகம் போடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?’

இந்த வேண்டுகோள் அவர்களைப் பொறுத்தவரை சிறியது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அது ஒரு பணி.

இ-புத்தகம் போட டைப் செய்யத் தெரிந்திருந்தால் போதும் என யாரோ ஒரு அரைகுறை சொன்ன யோசனையை வைத்துக்கொண்டு என்னை அதே மனோநிலையில் அணுகினால் என்ன செய்வது?

இ-புத்தகம் போடுவது சுலபமானதுதான். ஆனால் அவர்கள் நினைப்பதுபோல வாட்ஸ் அப்பில் தகவல்களை காப்பி பேஸ்ட் செய்து ஷேர் செய்யும் அளவுக்கெல்லாம் சுலபம் அல்ல. பல நிலைகளைக் கடந்து வரவேண்டும். அதையெல்லாம் எடுத்துச் சொல்ல பல மணி நேரங்கள் எடுக்கும். அதுவும் தொழில்நுட்பம் தெரியாதவர்களுக்கு இன்னமும் கூடவே நேரம் எடுத்துக்கொள்ளும்.

நித்தம் என் நிறுவனப் பணிகள், எழுத்து வேலை, வீடியோ எடிட்டிங், ஆடியோ ரெகார்டிங், சாஃப்ட்வேர் / ஆப் / அனிமேஷன் இம்ளிமெண்டேஷன்கள் இவற்றுக்கு இடையே எங்கள் காம்கேர் டிவி யு-டியூப் சேனல் நிகழ்ச்சிகளுக்கான ஷூட்டிங் என ஆயிரம் வேலைகள் வரிசையாக இருக்கும். இவற்றுக்கு இடையே நானே நேரம் ஒதுக்கித்தான் ஆலோசனை கொடுக்க வேண்டும்.

இதற்கிடையில் என் உடல் நலன் சரியாக இருக்க வேண்டும். அலுவலக பிரச்சனைகளினால் மனம் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும். இப்படி எத்தனை ‘வேண்டும்’-களை கடந்து வர வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவரை சந்திக்க வருவதாகச் சொல்லி / போன் செய்வதாகச் சொல்லி அந்த குறிப்பிட்ட நேரத்தில் செய்யாமல் தாமதம் செய்வது மற்றவரின் நேரத்தை களவாடுவதற்கு ஒப்பாகும்.

மற்றவர்களின் காசு பணத்தை, பொருட்களை அவருக்குத் தெரியாமல் எடுத்துப் பயன்படுத்துவது மட்டும் திருட்டில் வராது. இப்படி பிறருடைய நேரத்தை அவருக்குத் தெரிந்தே எடுத்து சொந்தம் கொண்டாடுவது திருட்டைவிட மோசமான செய்கை.

அதுபோல நீங்கள் கேட்பது நீங்கள் கேட்ட நேரத்தில் கிடைக்க வேண்டும் என நினைத்து மற்றவர்களை நெருக்கடி கொடுப்பதும் அடித்துப் பிடுங்குவதற்கு சமம். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மற்றவர்களின் நேரத்தை பலிகடா ஆக்காதீர்கள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 37 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon