ஹலோ with காம்கேர் – 294
October 20, 2020
கேள்வி: நல்ல விஷயங்கள் கூட போதை கொடுக்கும் தெரியுமா?
சமீபத்தில் ஆன்லைன் ரம்மியில் சுமார் முப்பது இலட்சங்களுக்கு மேல் இழந்து தன் மனைவிக்கு உருக்கமாக ஒரு ஆடியோ ஃபைலை அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி கேட்பவர்கள் மனதை உருக்க வைப்பதாக இருந்தது.
சொந்த பிசினஸில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தவர் ஆம்லைன் ரம்மிக்கு அடிமையாகி பணத்தை இழந்து, மரியாதையை இழந்து, மனைவி குழந்தைகளின் அன்பை இழந்து கடைசியில் தன்னையே வெறுத்து சமூகவலைதளத்தில் உள்ள இதுபோன்ற ஆப்களை எல்லாம் இழுத்து மூட ஏதாவது செய் அப்போதுதான் என்னைப் போல் அதில் மாட்டிக்கொண்ட அத்தனைபேருக்கும் விடிவுகாலம் கிடைக்கும் என்று புலம்பிவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுவிட்டார். தன்னுடன் தன் குழந்தையையும் அழைத்துச் சென்றுவிடலாம் என்றிருந்தாராம். நல்ல வேளையாக அதை செய்யாமல் விட்டாரே என்றுதான் தோன்றியது அந்த செய்தியை படித்தபோது.
நன்றாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் சிறிய தீப்பொறிபோல கெட்ட பழக்க வழக்கங்கள் பற்றிகொண்டு ஒட்டுமொத்த வாழ்க்கையையே சிதைத்து சின்னாபின்னமாகிவிடுவது பெரும் சோகம்.
நல்ல பழக்க வழக்கங்களை நமக்குள் கொண்டு வந்து நம்மை முறைப்படுத்தி நெறிப்படுத்தி வாழ்வதற்கு எத்தனை காலங்கள் ஆகிறது. ஆனால் ஒரு சின்ன கெட்ட பழக்கம் சட்டென நம்மை பற்றிக்கொண்டு நம்மை ஆட்டிப் படைப்பது விசித்திரமாகவே உள்ளது. அந்த அளவுக்கு வலிமையாக உள்ளது தீய சக்திகள்.
நல்ல விஷயங்கள் ஆழமாக வேர்விட்டு வளர வேண்டுமானால் அது தீய விஷயங்களின் வலிமையைவிட அவை பலமடங்கு வலிமையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் தீய சக்திகளை எதிர்க்கும் வல்லமை இருக்கும். இல்லையென்றால் இப்படித்தான் நல்ல விஷயங்கள் சட்டென வீழ்ந்துவிடும்.
நம் ஒவ்வொருவருக்குமே நம்முடைய வீக்னெஸ் என்ன என்று நன்கு தெரியும். அது கோபமாக இருக்கலாம், புகைக்கும் வழக்கமாக இருக்கலாம், மது அருந்தும் பழக்கமாக இருக்கலாம், மற்றவர்களை சீண்டிப் பார்த்து வேடிக்கை பார்ப்பதாக இருக்கலாம், எல்லா விஷயங்களுக்கும் எதிர்வினை ஆற்றிக்கொண்டே இருக்கும் மனோபாவமாக இருக்கலாம். அதை நமக்குள் தங்கவிட அனுமதித்தால் அது நிரந்தரமாக குடியேறிவிடும். வெளியேற்றுவது கடினம்.
சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்நாளில் பெரும்பாலான விஷயங்கள் ஆன்லைனிலேயே செய்துகொள்ளும் வசதி வந்துவிட்டதால் நல்லது கெட்டது அத்தனைக்கும் துணைபோகிறது.
கூகுள் வேகத்தில் நம் வங்கி அக்கவுண்ட்டில் உள்ள பணம் எதிராளி சுருட்டிக்கொள்வது எத்தனை கொடுமை. எதிராளி சுருட்டிக்கொள்வது என்று சொல்வதுகூட தவறுதான். ஆன்லைன் ரம்மி விஷயத்தில் தாங்களே விரும்பித்தானே பணத்தைக் கட்டுகிறார்கள்.
ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் என்றில்லை எல்லா விஷயங்களுமே இப்படி போதை தருவதுதான்.
நல்ல விஷயங்கள்கூட இப்படி போதை கொடுக்கும். ஆனால் நல்ல விஷயங்கள் கொஞ்சம் மெதுவாகவே நமக்குள் செல்லும். தயங்கித்தயங்கி வரலாமா வேண்டாமா என காத்திருக்கும். நாம் அதை வாரி அணைத்து வரவேற்றால் நம்மைவிட அதிர்ஷ்டசாலி வேறு யாராகவும் இருக்க முடியாது.
தீய விஷயங்கள் தயக்கம் காட்டாமல் நம்மிடம் அத்துமீறிக்கொண்டு உள்ளே சென்று அட்டகாசம் செய்ய ஆரம்பித்துவிடும். அத்துமீறிய தீய சக்திகள் அத்தனை ஆனந்தத்தைக் கொடுக்கும். ஏனெனில் அது முதலில் வீழ்த்துவது நம் மூளையை. மூளையை மழுங்கடிக்கச் செய்துவிட்டால் பிறகு அது தான் வந்த வேலையை காட்டுவது சுலபம் என்ற நுணுக்கம் அதற்குத் தெரியும்.
நல்ல விஷயங்கள் நம் மூளையை மழுங்கடிப்பதில்லை. மிகவும் சமர்த்துப் பிள்ளையாய் வேண்டுமென்றால் நீயே என்னை பற்றிக்கொள், நானாக வரமாட்டேன் என ஒதுங்கி நிற்கும். நாம் கொஞ்சம் புத்திசாலியாக இருந்து அதை பற்றிக்கொண்டால் நம் மனமும் உடலும் சுறுசுறுப்பாகும். இல்லை என்றால் தீயசக்திகள் நம்மை ஆட்கொள்வது உறுதி.
மனித வெடிகுண்டுகளாய் மாறி அழிவை ஏற்படுத்தும் அமைப்புகளை பார்த்து எப்போதுமே எனக்கு வியப்புதான். காரணம், தன் உயிரைப் பணயம் வைத்து தானும் இறந்து நூற்றுக்கணக்கான உயிர்களையும் அழிக்கும் வல்லமையை மனதுக்குள் ஏற்றி மனித வெடிகுண்டுகளாக மாற்றும் அவர்களின் திறமையின் (?) ஒரு சிறு அளவாவது நல்ல விஷயங்களை நமக்குள் அத்தனை தீவிரமாய் ஏற்றிக்கொள்வதில், கற்றுக்கொடுப்பதில், வழிகாட்டுவதில் இருந்துவிட்டால் வாழ்க்கை எத்தனை அழகாக இருக்கும்… இந்த உலகமும் மனிதர்களும் எத்தனை அற்புதமானவர்களாக இருப்பார்கள்?
அழிப்பதற்கு உதவும் மனித வெடிகுண்டுகளைப் போல, ஆக்குவதற்கு உதவும் மனித பூங்கொத்துக்களை ஏன் நம்மால் உருவக்க முடிவதில்லை.
நமக்கு ஏன் வம்பு, நாம் மட்டும் முன்னெடுப்பு செய்வதால் என்ன ஆகிவிடப் போகிறது, எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது, பெரும்பாலான மனிதர்கள் இப்படித்தான், நாம் மட்டும் ஏன் கெட்ட பெயர் எடுக்க வேண்டும், நம் வேலை முடிந்தால் சரி என்பது போன்ற சுயநலம் சார்ந்த சிந்தனைகள் ‘கேள்வி கேட்கும்’ மனோபாவத்தையே முற்றிலும் அழித்துவிட்டது எனலாம்.
சுயநலம் தேவைதான். அதில் கொஞ்சம் பொதுநலனும் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் மனித பூங்கொத்துக்கள் உருவாவது நிச்சயம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 29, 2020 வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/