ஹலோ With காம்கேர் -322: வாழ்க்கையில் நம் பர்சனல் ஸ்பேஸில் மற்றவர்களை ஓர் அளவுக்கு மேல் அனுமதிப்பது சரியா?


ஹலோ with காம்கேர் – 322
November 17, 2020

கேள்வி: வாழ்க்கையில் நம் பர்சனல் ஸ்பேஸில் மற்றவர்களை ஓர் அளவுக்கு மேல் அனுமதிப்பது சரியா?

அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டு திருமண நிச்சயதார்த்தத்தை கொரோனா பிரச்சனை காரணமாக முக்கியமான சில உறவினர்களை மட்டும் அழைத்து ஒரு சிறிய கல்யாண மண்டபத்தில் செய்தார்கள்.

‘என்னை ஏன் அழைக்கவில்லை, உன்னை ஏன் அழைக்கவில்லை’ என்ற சாடும் குற்றச்சாட்டுகளுக்கு பயந்துகொண்டு நாங்கள் வீட்டுடன்தான் செய்தோம். அதனால்தான் அனைவரையும் அழைக்க முடியவில்லை என சொல்லி மழுப்பினார்கள்.

இப்படி பூசி மொழுகுவதை பொய் என சொல்ல முடியாது. உறவினர்களின் கேள்வியை எதிர்கொள்ள திராணியற்று அந்த நிமிடத்தில் அந்த சூழலில் இருந்து தப்பித்துக்கொள்ளும் சிறு முயற்சிதான் அது.

அது சிறு பொறி நெருப்பு. சும்மா விடுமா? எப்படியெல்லாம் அது பரவுகிறது என பாருங்களேன்.

அதோடு விட்டார்களா, யார் யாரையெல்லாம் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் போன் செய்து ‘நாங்கள் வீட்டில்தான் கொண்டாடினோம் என்று மற்ற உறவினர்களிடம் சொல்லி இருக்கிறோம். நீங்களும் அப்படியே சொல்லிவிடுங்கள்…’ என தாங்கள் முன்னெடுத்த சிறு பொய்யை மற்றவர்களையும்   சொல்லச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

உறவினர்கள் அனைவரும் ஒன்றுபோல் இருப்பார்களா என்ன?

எல்லோருக்கும் மனதில் உள்ளதை மறைத்துப் பேச தெரிந்திருக்காது. ஒருசிலர் விகல்பமாக பேச்சோடு பேச்சாக அந்த நிச்சயதார்த்த நிகழ்வு குறித்து வாய் தவறி பெருமையாகக் கூட சொல்லிவிடக் கூடும். இன்னும் ஒருசிலர் வேண்டுமென்றே தங்களை மட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்ததை தங்களுக்குக் கொடுத்த உயர்ந்த கெளரவமாகக் கருதி தற்பெருமை அடித்துக்கொள்வார்கள். ஒருசிலரோ தாங்கள் தங்கள் மொபைலில் எடுத்த போட்டோ வீடியோ போன்றவற்றை தங்கள் வாட்ஸ் அப் தொடர்பில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்வார்கள். அப்போது தவறுதலாக யாரையெல்லாம் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லையோ அவர்களுக்கெல்லாம் அவை பகிரப்படலாம்.

இப்படி ஒருசில புகைப்படங்களைப் பார்த்த உறவினர் ஒருவர் போன் செய்து ‘என்னவோ வீட்டில் நிகழ்ச்சி செய்ததாக சொன்னீர்கள். புகைப்படம் பார்த்தேன். அது வீடு போல தெரியலையே… ஏதோ மண்டம் போல் அல்லவா இருக்கிறது…’ என சொல்லி கேள்வி கேட்க மீண்டும் அடுத்த பொய்க்குத் தயார் ஆகிறார்கள் நிச்சயதார்த்தம் செய்த அந்த குடும்பத்தினர்.

‘அப்படியா… இருக்காதே… வீட்டு மொட்டை மாடியில் ஷாமியானோ போட்டு கொஞ்சம் டெகரேஷன் செய்தோம். அது மண்டபம் போல் தெரியுமாக இருக்கும்…’

இதற்குள் வீடியோ க்ளிப்பிங் பார்த்த மற்றொரு உறவினர் ‘வீடியோவில் கல்யாண மண்டபத்தின் பெயர் பலகை தெரிகிறது…’ என சொல்ல ‘அப்படியா, இருக்காதே… ஷாமியானோ வாங்கும்போது அவர்கள் வெயில் தெரியாமல் இருக்க சில ஷீட்டுகள் கொண்டு வந்தார்கள். அதில் உள்ள பெயராக இருக்கும்…’ என அடுத்தடுத்தப் பொய்கள் நீண்டுகொண்டே சென்றன.

இதற்குள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்களில் பெரும்பாலானோர் ‘யாருக்கும் சொல்லாதீர்கள், எங்களை மட்டும் நிச்சயத்துக்கு அழைத்திருந்தார்கள்…’ என தங்கள் நண்பர்களிடமும் நெருங்கிய உறவுகளிடமும் சொல்லி மகிழ அது எப்படியோ குடும்பம் முழுவதற்கும் பரவி நிச்சயதார்த்த நிகழ்வை விட அது கிளப்பி விட்ட புரளியும், அக்கப்போரும் பிரமாதமாய் விவாதக்களமாய் அமைந்து அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் உள்ள உறவினர்களிடம் இருந்தும் புகார்களும் கேள்விக்கணைகளும் பறந்து வர ஆரம்பிக்க திக்கித் திணறித்தான் போனார்கள் நிச்சயதார்த்தம் செய்த உறவினர்கள்.

ஏன் இப்படி பொறியில் மாட்டிக்கொண்ட எலியாய் திணற வேண்டும்?

‘கொரோனா காரணமாக இருவீட்டாரில் இருந்தும் முக்கிய நபர்களை வைத்துத்தான் மண்டபத்தில் நிச்சயதார்த்தம் செய்தோம். இது எங்களின் பாதுகாப்புக்காக மட்டும் அல்ல. உங்கள் அனைவரின் பாதுகாப்புக்காகவும்கூட. நீங்கள் அனைவரும் எங்களை புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எல்லாம் நல்லபடியாக நடந்து கொரோனாவும் முற்றிலும் நீங்கியிருந்தால் இன்னும் மூன்று மாதம் கழித்து நடக்க இருக்கும் திருமணத்துக்கு எல்லோருக்கும் அழைப்பு உண்டு. மணமகனையும், மணமகளையும் வாழ்த்துங்களேன்…’ எனச் சொல்லி குடும்பத்துடன் நிகழ்ச்சியில் எடுத்த ஒரு புகைப்படத்துடன்  குடும்ப வாட்ஸ் அப் குழுமத்தில் பகிர்ந்து கொண்டிருந்தால் எத்தனை நிம்மதியாக இருந்திருக்கும்.

சமாளிப்பதற்காக சொன்ன சின்ன பொய் பெரும்பொய்களாய் பல்கிப் பரவி கெட்ட பெயர் ஏற்பட்டதுடன் தீராத மன உளைச்சலையும் அல்லவா ஏற்படுத்தி விட்டது.

இந்த நிகழ்வு போல பலரும் தங்கள் சூழலை, தங்கள் நிலையை, தங்கள் மனநிலையை வெளிப்படையாகச் சொல்வதற்குத் தயங்கிக்கொண்டு மற்றவர்கள் மனம் நோகக்கூடாதே என சொல்ல ஆரம்பிக்கும் சிறிய பொய் பெரும் குடும்ப சண்டையாய் போய் நிற்கும்.

எனவே ஆரம்பத்திலேயே தெளிவாய் உண்மையை சொல்லும் மனப்பக்குவத்தை எல்லா விஷயங்களிலும் ஏற்படுத்திக்கொண்டால் நம் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் நல்லது.

இப்படி எல்லா விஷயங்களிலுமே உங்கள் சுபாவத்தை அணுகுமுறையை அமைத்துக்கொண்டால் உறவினர்கள் மத்தியில் ‘இவர்கள் இப்படித்தான்… பொய் சொல்ல மாட்டார்கள். இவர்கள் செய்தால் ஒரு நியாயம் இருக்கும்…’ என்ற அபிர்ப்பிராயம் ஏற்படும்.

நிச்சயம் புரிந்துகொள்வார்கள். சரி, அப்படியே புரிந்துகொள்ளாவிட்டால்தான் என்ன? உங்களுக்கான பர்சனல் ஸ்பேஸில் மற்றவர்களை ஓர் அளவுக்கு மேல் ஏன் மூக்கை நுழைக்க அனுமதிக்க வேண்டும். உங்களுக்கு எது சரி எனப்படுகிறதோ அதை தைரியமாக செய்யுங்கள். நிம்மதியான வாழ்க்கைக்கு அது ஒன்றே வழி.

நாங்கள் அப்படித்தான் வாழ்கிறோம். நீங்களும் முயற்சித்துத்தான் பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 5 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari