ஹலோ With காம்கேர் -353: ‘சாஃப்ட் கார்னரை’ உருவாக்கிக்கொள்வது அத்தனை சிக்கலா?

ஹலோ with காம்கேர் – 353
December 18, 2020

கேள்வி: ‘சாஃப்ட் கார்னரை’ உருவாக்கிக்கொள்வது அத்தனை சிக்கலா?

நம்முடைய ‘சாஃப்ட் கார்னர்’ மற்றவர்கள் பார்வையில் அது நம் வீக்னெஸ். பொதுவாகவே எந்த சாஃப்ட் கார்னருக்குள்ளும் நாம் சிக்காமல் இருப்பதே நமக்கு பாதுகாப்பு.

நம்மிடம் நண்பர்களைப் போல் பழகுபவர்கள் அத்தனை பேரும் நண்பர்களும் அல்ல. எதிரிகள் போல நமக்கு தெரிபவர்களும் எதிரிகளும் அல்ல.

நமக்கு ஆதரவாக பேசுபவர்கள் நண்பர்கள் போல தெரிவார்கள். நமக்கு ஆதரவாக பேசாமல் ஒதுங்கி இருப்பவர்கள் எதிரிகள் போல தெரிவார்கள். ஆனால் உண்மையில் உங்களுக்கு ஆதரவாக பேசுபவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு ஆதாயம் இல்லாமல் பேசப் போவதில்லை என்பதை உணர உங்களுக்கு சூழல் வாய்ப்பளிப்பதில்லை அல்லது நீங்கள் இயங்கும் பரபரப்பான சூழலில் உங்களால் யோசிக்க முடிவதில்லை. எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

அதிலும் குறிப்பாக ஒருவர் ஒரு துறையில் தனித்துவமாக வளர ஆரம்பிக்கிறார் என்றால் அவரை கீழே தள்ளிவிட காத்திருப்பவர்கள் அவர்கள் எதிரிகளாக காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

அவர்களுக்கு உதவுவதைப் போல, அவர்களின் நண்பர்களைப் போல, அவர்களின் நலன் விரும்பிகளைப் போல தங்களை நேர்மறையாகவே காட்டிக்கொள்வார்கள்.

அதுவும் அந்த சாதனையாளர் இளம் வயதினர் என்றால் கேட்கவே வேண்டாம்.

‘உங்கள் திறமைக்கு நீங்க எங்கேயோ இருக்கணும்…’

‘நீங்கள் என்ன வேணும்னாலும் என்னை அணுகலாம், தயங்காமல் உதவி கேட்கலாம்…’

‘திறமைசாலிகளை கைதூக்கிவிடுவதே என் இலட்சியம்… உங்கள் குறித்து அந்த மீடியாவில் சொல்லி வைத்துள்ளேன், இந்த பத்திரிகையில் சொல்லி வைத்துள்ளேன்… பேட்டி எடுப்பதற்காக பேசுவார்கள்…’

‘இப்படியா எளிமையா இருப்பது… பார்ப்பதற்கே கெத்தா இருக்க வேண்டாமா… இப்படி டிரஸ் பண்ணுங்க… மிடுக்கா இருங்க…’

இப்படிப்பட்ட அன்பான (?) ஆதரவான (??) வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் சொல்வதற்கெல்லாம் கட்டுப்பட்டு மனதுக்குள் ஒரு சாஃப்ட் கார்னரை உருவாக்கிக்கொண்டு பின்னால் அவஸ்தைகளுக்கு ஆளாபவர்கள் பலர்.

பொதுவாக ஏதேனும் ஒரு துறையில் தன் திறமையினால் முன்னேற விரும்புபவர்களுக்கு நான் கொடுக்கும் சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

உங்களுக்கு திறமை இருந்தால் அது தானாகவே வெளி உலகுக்கு தெரியப் போகிறது. தானாகவே மீடியாக்களும் உங்களை கொண்டாடப் போகிறது. பிறகு எதற்கு நலன் விரும்பிகள் என்ற போர்வையில் இடைத்தரகர்கள். இந்த வார்த்தையை சொல்வதற்கு மன்னிக்கவும். அவர்கள் அப்படி நடந்துகொள்வதால்தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது.

‘நீங்கள் உங்கள் திறமைக்கு எங்கேயோ இருக்கணும்..’ என்று சொல்லி சொல்லியே உங்களை தங்கள் வளையத்துக்குள் சிக்க வைப்பார்கள். நீங்கள் எங்கே இருக்க வேண்டும், இப்போது எங்கு இருக்கிறீர்கள் என்பதெல்லாம் உங்களை விட்டால் வேறு யாருக்கு தெரிந்துவிடப் போகிறது. உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள், அது என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுங்கள். மற்றவர்கள் உங்கள் இடத்தை தீர்மானிக்க இடம் கொடுக்காதீர்கள்.

யாரேனும் தன்னிச்சையாக முன்வந்து ‘உங்களுக்கு என்ன உதவின்னாலும் கேளுங்க, உங்களைப் போன்ற திறமைசாலிகளுக்கு உதவுவதே என் வாழ்நாள் குறிக்கோள்…’ என்று சொல்பவர்களை தள்ளியே வையுங்கள். உங்களுக்கு உதவுவதால் அவர்களுக்கு என்ன ஆதாயம் என்பதை யோசியுங்கள். உங்களுக்கான குறிக்கோள் திடமாக இருந்து திறமையும் இருந்து அதை வளர்த்துக்கொள்ளும் ஆர்வமும் இருந்துவிட்டால் பாதை தானாகவே உருவாகும். பிறகெதற்கு ரெகமெண்டேஷன்கள். உங்கள் திறமைகள் தனித்துவமானதாக இருந்தால் உங்கள் திறமையே உங்கள் அடையாளம். அதுவே உங்களை முன்னெடுத்துச் செல்லும்.

பண பலமும், ஆள் பலமும், அதிகார பலமும், அரசியம் பலமும் கொண்டவர்களில் பலருக்கு உங்கள் வளர்ச்சி கண்களை உறுத்தும். விதிவிலக்குகள் உண்டு. ஆனால் விதிவிலக்குகளை மட்டுமே வைத்துக்கொண்டு பாதுகாப்பாய் பயணிப்பது சாத்தியமில்லை தானே. அவர்களின் உறுத்தல்களுக்கு நீங்கள் பலிகடா ஆகாமல் இருக்க வேண்டுமேயானால் சிறு துரும்பையும் அவர்கள் வாயிலாக அனுபவித்து விடாதீர்கள். பின்னர் அதற்கு பிரதி உபகாரம் செய்வதற்கே உங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை இழக்க நேரிடலாம்.

உங்கள் திறமையினால் மட்டுமே முன்னேற அதிக காலங்கள் தேவைப்படலாம். ஆனால் நிம்மதியான பாதையில் பயணிக்க முடியும் என்கின்ற உத்திரவாதத்தை என்னால் கொடுக்க முடியும்.

ஒரே குறிக்கோள் என வைத்துக்கொள்ளாமல் உங்கள் குறிக்கோள்களுக்கு சிறு கிளைகளையும் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் ஒன்றில்லாவிட்டாலும் மற்றதில் கவனம் செலுத்து உயிர்ப்புடன் இருக்க முடியும். குறிக்கோளில் ஜெயிக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் உயிருடன் உயிர்ப்புடன் வாழ்வது.

எளிமையாக வாழ்வதை ஏழ்மையில் வாழ்வதாகக் கற்பனை செய்துகொள்ளாமல் பெருமையுடன் வாழ்வதாக உணரத் தொடங்குங்கள். படாடோபம், ஆடம்பரம் போன்ற போலியான வெளித்தோற்றத்திற்காக கடன் தொல்லையில் சிக்கி சின்னா பின்னமாகாமல் நிம்மதியாக வாழ முடியும்.

நான் இப்படித்தான் நான் இயங்கும் துறையில் இயங்கி வருகிறேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். வாழ்த்துகள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 15 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari