ஹலோ with காம்கேர் – 354
December 19, 2020
கேள்வி: அதீத தன்னம்பிக்கை ஆபத்தானதா?
நான் தன்னம்பிக்கையானவள்(ன்) என்ற எண்ணம் ஆரோக்கியமானதுதான்.
ஆனால் நான் மிக மிக தன்னம்பிக்கையானவள்(ன்), என்னால் எந்த சூழலையும் சமாளிக்க முடியும், எனக்கு பயமே கிடையாது, யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது, என்னை யாரும் அத்தனை சுலபமாக காயப்படுத்த முடியாது, நான் எதற்குமே கவலைப்பட மாட்டேன், என்னைக் கோபப்படுத்தவே முடியாது, எனக்கு கோபமே வராது, என்னை எல்லாம் எதுவும் செய்ய முடியாது என்பதுபோன்ற அதீத கற்பனை கலந்த நம்பிக்கைகள்தான் அந்த எண்ணம் உடையவர்களை கீழே தள்ளிவிட்டு வேடிக்கைப் பார்க்கக் காத்திருக்கும்.
நான் அடிக்கடி சொல்வதைப் போல இந்த பிரபஞ்சத்தில் பிறக்கின்ற அத்தனை பேருமே தன்னம்பிக்கையானவர்கள்தான். தன்னம்பிக்கையை உயிருடன் கலந்தே இயற்கையும் இறைசக்தியும் நம்மை செதுக்கி வெளி உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன.
ஆனால் நான் மிக மிக தன்னம்பிக்கையானவள்(ன்) என்று நமக்கு நாமே ஒரு பட்டத்தைக் கொடுத்துக்கொண்டு அந்த பட்டத்தை சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு வாழ்பவர்கள்தான் ஒரு கட்டத்தில் தாமே தூக்கி சுமந்த அந்த இமேஜ் உடையும்போது தாங்கவே முடியாமல் தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.
கோபமே வராமல் இருக்கவோ அல்லது எந்த விஷயத்துக்குமே காயப்படாமல் இருக்கவோ அல்லது வருத்தமே படாமல் எல்லா விஷயங்களையும் லைட்டாக எடுத்துக்கொண்டு கடக்கவோ நாம் என்ன முற்றும் துறந்த முனிவர்களா என்ன?
அப்படியே முற்றும் துறந்த முனிவர்களுக்கே சோதனை காலங்கள் ஏற்பட்டுள்ளதை இதிகாச புராணங்கள் நமக்குப் பாடம் சொல்லிவிட்டுத்தானே சென்றுள்ளன.
எத்தனை உயரிய படிப்புகள் படித்திருந்தாலும், எத்தனை பட்டங்கள் பெற்றிருந்தாலும், எத்தனை நாடுகள் சுற்றி இருந்தாலும், எத்தனை இலக்கங்களில் சம்பளம் வாங்கி வந்தாலும், எத்தனை உயர் பதவியில் இருந்தாலும், எத்தனை பிரபலமாக இருந்தாலும் ‘நாமும் சாதாரண மனிதப் பிறவியே’ என்ற எண்ணத்தை மனதில் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் நமக்கு ஏற்படும் வலிகளை வலிகளாக நம்மால் உணர முடியும். அந்த வலியின் வேதனையை வெளிப்படுத்தத் தோன்றும். அந்த வலிகளைத் தாங்குவதாக நினைத்துக்கொண்டு வெளிப்படுத்தாமல் பொறுத்துக்கொண்டிருந்தால் மேலும் மேலும் சுமைகளை மனதில் அதிகரித்துக்கொண்டேதான் செல்ல வேண்டியிருக்கும். இதைத்தானே திருக்குறளும்,
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
என்று மிக அழகாக இரண்டே வரிகளில் சொல்கிறது.
நாமாக நமக்கு ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு பெரும்சுமையோடு உலா வரும்போது சின்ன துரும்பு கூட நம்மை அசைத்துப்போட்டுவிடும் என்பதை நினைவில் வையுங்கள்.
உங்களைச் சுற்றி இயங்கும் மனிதர்களை நன்கு கவனித்துப் பாருங்கள். சாதாரணமாக இயங்கும் மனிதர்களுக்குக் கிடைக்கும் ஆதரவுகூட நல்ல தைரியமானவர்களுக்கு தன்னம்பிக்கையின் ஐகானாக விளங்குபவர்களுக்குக் கிடைப்பதில்லை. காரணம் தைரியமானவர்களுக்கு வலிக்கவே வலிக்காது. எத்தனை அடித்தாலும் தாங்குவார்கள் என்ற தவறான நம்பிக்கை. ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்று போகிறப் போக்கில் அர்த்தமற்ற கருத்துக்களைச் சொல்வதைப்போல்தான் இதுவும்.
வலித்தால் வலிக்கிறது என சொல்லப் பழகுங்கள். வருத்தப்பட்டால் வருத்தத்தை வெளிக்காட்டுங்கள். கோபப்பட வேண்டிய சூழல் வந்தால் நாசூக்காகவாவது வெளிப்படுத்துங்கள். சந்தோஷத்தை மட்டும் கொண்டாட்டமாக வெளிக்காட்டிக்கொண்டிருப்பது மட்டும் நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் என்றாகாது. வருத்தங்களையும் கோபங்களையும் இயல்பாக அவ்வப்பொழுது வெளிப்படுத்த அறிந்திருப்பவர்களால் மட்டுமே சமநிலையான வாழ்க்கையை (Balanced Life) வாழ முடியும்.
சந்தோஷத்தை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டு வருத்தங்களையும் சோகங்களையும் மூடி மூடி மறைத்து வாழ்ந்துகொண்டிருந்தால் இக்கட்டான சூழலில் சாதாரண சின்ன சின்ன உதவிகள் கூட கிடைக்க வாய்ப்பில்லாமல் தவிக்க நேரிடலாம்.
தன்னம்பிக்கை என்பது நம் உயிருடன் கலந்து சுவாசிக்க வேண்டிய விஷயம். நான் தன்னம்பிக்கையானவள்(ன்) என்று அரிதாரம் பூசிக்கொண்டு வெளிப்படுத்த வேண்டிய விஷயம் அல்ல.
முன்னதை கடைபிடிப்பவர்கள் எப்படியும் வாழ்ந்து காட்டுவார்கள். பின்னதை கடைபிடிப்பவர்கள் அரிதாரம் கலையும் நிமிடத்தில் எந்த மோசமான முடிவுக்கும் செல்வார்கள்.
எனவேதான் சொல்கிறேன், தன்னம்பிக்கையுடன் வாழுங்கள். தன்னம்பிக்கையாக இருப்பதாக காட்டிக்கொண்டு வாழாதீர்கள். அப்படி வாழ்பவர்கள் தன்னம்பிக்கையே இல்லாதவர்களைவிட மிக பலவீனமானவர்கள். கவனம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software